அல்லா கோவில் ….!!!

தஞ்சாவூர் அருகே இந்துக்கள் கொண்டாடிய
மொகரம் பண்டிகை –


Published on : 20th August 2021https://www.dinamani.com/tamilnadu/2021/aug/20/mogaram-festival-celebrated-by-hindus-near-thanjavur-3683443.html

பஞ்சா கரகத்துடன் பூக்குழியில் இறங்கிய பக்தர்கள்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே காசவளநாடுபுதூர்
கிராமத்தில் மத நல்லிணக்கத்தைப் பறை சாற்றும்
விதமாக மொகரம் பண்டிகையை இந்துக்கள் வெள்ளிக்கிழமை கொண்டாடினர்.

இஸ்லாமியர்களின் தொடக்க மாதமான மொகரம்
மாதத்தின் பத்தாம் நாளை மொகரம் பண்டிகையாக
இஸ்லாமியர்கள் கொண்டாடி வருகின்றனர். இத்திருவிழாவை பெரும்பாலும் இஸ்லாமியர்கள் மட்டுமே கொண்டாடுவர்.

இந்நிலையில், தஞ்சாவூர் அருகே இந்துக்கள்
பெரும்பான்மையாக வசிக்கும் காசவளநாடு புதூர்
கிராமத்தில் மத நல்லிணக்கத்தை பறை சாற்றும்
விதமாக ஆண்டுதோறும் மொகரம் பண்டிகையை
கிராம விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதன்படி, மொகரம் பண்டிகையையொட்டி,
இக்கிராமத்தில் இந்துக்கள் தங்களுடைய வேண்டுதல்
நிறைவேற 10 நாள்களுக்கு முன்பே விரதத்தைத் தொடங்கினர்.

அங்குள்ள அல்லா கோயிலில் ….

(எப்படி அழைத்தாலும்……!!! )

வியாழக்கிழமை முதல் மின் அலங்காரம்
செய்யப்பட்டிருந்தன. மேலும் ஒலிபெருக்கிகள்
மூலம் அல்லா பாடல்கள் ஒலிக்கப்பட்டன.
அக்கிராமமே விழாக்கோலம் பூண்டிருந்தன.

பஞ்சா கரகத்துடன் பூக்குழியில் இறங்கிய பக்தர்கள்.
மொகரம் பண்டிகையான வெள்ளிக்கிழமை பஞ்சா
எனப்படும் கரகம் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குத்
தாரை தப்பட்டையுடன் கொண்டு செல்லப்பட்டது.
ஒவ்வொரு வீட்டிலும் கரகத்துக்குத் தண்ணீர் ஊற்றி,

எலுமிச்சை மாலை மற்றும் பட்டு துண்டை சாத்தி
வழிபட்டனர்.

பின்னர், பஞ்சா கரகத்துடன் அங்குள்ள பூக்குழியில்
(தீமிதி) இறங்கி வழிபட்டனர். இவர்களுக்கு திருநீறும்,
எலுமிச்சையும் பிரசாதமாக வழங்கப்பட்டன.

மேலும், பெண்கள் புதிய மண் கலயம் அல்லது
புதிய பாத்திரத்தில் பானகம், அவல், தேங்காய், பழம்
வைத்து –

அல்லாவுக்கு படையலிட்டு வழிபட்டு,

பின்னர் பொதுமக்களுக்கும், உறவினர்களுக்கும்
வழங்கினர். இதற்காக வெளியூர்களில் வசிக்கும்
இக்கிராம மக்களும் ஊருக்குச் சென்று கொண்டாடினர்.

……………………….


பின் குறிப்பு – நேற்றிரவு நான் எழுதிய இடுகையில் உள்ள-

இருப்பது ஒரே இறைவன் தான்… அவரை எப்படி அழைத்தால் என்ன..? எப்படி வணங்கினால் தான் என்ன….?


-என்கிற கருத்துகளை உறுதி செய்கிறது – இன்று –
தினமணி நாளிதழில் வெளிவந்துள்ள இந்த செய்தி.

… இந்த “காசவளநாடு புதூர் கிராமத்தை”

அனைத்து மதத்தினரும் பின்பின்பற்றினால், மதச்சண்டைகள்,
கலகங்கள் எப்படி வரும் ….? அரசியல்வாதிகளும், சுயநலவாத மதவாதிகளும் தூண்டி விட்டாலன்றி ….???

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to அல்லா கோவில் ….!!!

  1. K. Ganapathi Subramanian சொல்கிறார்:

    K M Sir. எல்லா மதத்தினரும் அவ்வாறு நினைத்தால்….. நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.
    ஆனால், அதே தஞ்சாவூரில், சுவாமி ஊர்வலம் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்த வேற்று மதத்தவர் இருக்கிறார்கள்.
    பெரம்பலூரில் ஒரு கிராமத்தில் இஸ்லாமியர் பெரும்பான்மை உள்ளனர். உள்ளூர் கோவில் திருவிழாவை எதிர்த்து நீதி மன்றம் சென்ற செய்தி பார்த்தோம்.
    அரசியல் வாதிகளும், குறிப்பாக, தமிழகத்தில், மற்ற மத பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிப்பது, இந்து மத பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்கக் கூடாது என்ற உறுதியான நிலைப் பாடு..
    சிறு பான்மையினருக்கு கண்மூடித்தனமான ஆதரவு. பெரும்பான்மையினரின் உணர்வுகளை மதிக்காத போக்கு.
    இவை மத நல்லிணக்கம் ஏற்பட முக்கியமான தடைகள்.
    என் கடவுள் மட்டுமே கடவுள் என்று சனாதன தர்மம் ஒரு போதும் சொல்வதில்லை.
    அன்புடன்
    கணபதி சுப்ரமணியன்

  2. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    கணபதி சுப்ரமணியன்,

    நீங்கள் சொல்வதை நான் ஏற்கிறேன்.

    நான் சொல்லும் கருத்துகள் அனைத்து
    மதத்தினருக்கும் சேர்த்து தான்.

    தாங்கள் மட்டும் விட்டுக்கொடுத்தால்,
    அது இளிச்சவாய்த்தனமாகி விடும்
    என்று பலர் நினைப்பதால் தான் –
    மத சச்சரவுகள் நீடிக்கின்றன.

    இதில் முக்கிய கவனம் செலுத்த வேண்டியவர்கள்
    – முன் வந்து செயல்பட வேண்டியவர்கள் –

    அந்தந்த மதத்தை சேர்ந்த மதபோதகர்கள்,
    ஆன்மிகப் பெரியோர்கள் போன்றவர்கள் தான்.

    “மத நல்லிணக்கத்’தை முன்னின்று போதிக்க
    வேண்டியதும், மக்களை நல்வழிப்படுத்துவதும்
    தான் அவர்களின் முக்கிய பணியாக
    இருக்க வேண்டும்.

    இந்த விஷயத்தில் மறைந்த காஞ்சி மகான்
    முன்னுதாரணமாகத் திகழ்ந்தார். அது எந்த
    மதமாக இருந்தாலும் சரி …மத மாற்றம்
    செய்வது அபத்தம்… அது கடவுளையே
    அவமதிப்பதற்கு சமம் – என்று வலியுறுத்திச் சொல்லி
    வந்தார். இஸ்லாமியர்களுக்கு அவர் மீது
    பெரும் மதிப்பு இருந்தது.

    தனிப்பட்ட மனிதர்களிடையே,
    மத விரோதமின்றி பழகும் பல மனிதர்களை
    நான் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன்.

    பல சமயங்களில், மற்ற மதத்தினர் செய்யும்
    விவகாரங்களே, இவர்களையும் மாற்றி விடுகிறது
    என்பதும் எனக்கு புரிகிறது.

    இதில் அரசியல்வாதிகளுக்கும் பெரும் பங்கு
    இருக்கிறது. சில அரசியல்வாதிகளே
    பல சமயங்களில், மதக்கலவரங்களுக்கு
    காரணமாகி விடுகிறார்கள். சிறு துளியை
    ஊதிப் பெரிதாக்கி, பெரிய அளவில்
    கலவரங்களுக்கு வித்திடுகிறார்கள்.
    அரசியல் கட்சிகள், அரசியல்வாதிகள் –
    மத விஷயங்களில் தலையிடுவதே தவறு.

    மத நல்லிணக்கம், பிற மதங்களை வெறுக்காமல்
    தூஷிக்காமல் இருப்பது – போன்றவற்றைப்பற்றி
    நான் எழுதுவது, இந்து மதத்தினருக்கு மட்டுமானதல்ல –
    இது கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய சமயங்களைச்
    சேர்ந்தவர்களுக்கும் சேர்த்து தான்.

    .
    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.