” கோவில் அரசியல்வாதிகளின் கூடாரம்ஆகி விடக்கூடாது ” -என்று தான் ….!!!

கலைஞரின் பராசக்தி வசனம் நினைவிற்கு வருகிறது….

“கோவில் கூடாது என்பதல்ல. அது கொடியவர்களின் கூடாரமாகிவிடக்கூடாது”……

இப்போது அதை கொஞ்சம் திருத்திக்கொள்ள வேண்டி
இருக்கிறது.

“கோவில்கள் அரசியல்வாதிகளின் கூடாரமாகி
விடக்கூடாது ….”

இன்று ஒரு பின்னூட்டத்தில் விவரமாக சில
கருத்துகளை தெரிவித்திருந்தேன்… ஆனால்,
பின்னூட்டத்தில் எழுதுவதை விட – இடுகையாக பதிவு
செய்தால் தான் அதிக வாசகர்களிடம் சென்றடையும்
என்று தோன்றியது… எனவே இந்த இடுகை.

( பெரியார் ஈ.வே.ரா. அவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும்;.அவரது பல உரைகளை நான் நீண்ட தூரம் பயணித்து கேட்டுவிட்டு நடு இரவில் தனித்து வாகனமின்றி நடந்தே கூட திரும்பி இருக்கிறேன்….
ஆனால், அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை…!!!
ஏன் என்று சொல்ல தனியே பெரிதாக ஒரு இடுகை
தேவைப்படும்…சமயம் வரும்போது அதைச் செய்கிறேன்…!!! )

‘கடவுள் இல்லை. கடவுள் இல்லை.
கடவுள் இல்லவே இல்லை.
கடவுளை கற்பித்தவன் முட்டாள்.
கடவுளை பரப்பினவன் அயோக்கியன்.
கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி’ –

 • என்று சொன்ன பெரியாரை தங்கள் வழிகாட்டியாக
  ஏற்றுக் கொண்டுள்ள திமுகவைச் சேர்ந்த அமைச்சர்
  “பக்தி”யை பரப்ப வேண்டும், பக்தி மார்க்கத்தை செம்மையுறச்
  செய்ய வேண்டும் என்று தான் இந்த சீர்திருத்தங்களை
  செய்கிறோம் என்று சொல்வதை எப்படி ஏற்பது…?

எனவே, பக்தி மார்க்கத்தை செம்மைப்படுத்துவதற்காகவே,
திமுக இந்த சீர்திருத்தங்களை கையில் எடுத்துள்ளது
என்று நம்ப முடியவில்லை;

வரும்படி கொழிக்கக்கூடிய ஒரு புதிய சந்தை அவர்கள்
வசம் கிடைத்திருப்பதாகவும், அதை கட்சிக்காரர்களுக்கு
பயனுள்ள வகையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும்

நினைக்கிறார்களோ என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.


சில விஷயங்களில் என் கருத்து என்று சிலவற்றை –
தெளிவு படுத்த விரும்புகிறேன் –

ஹிந்து, கிறிஸ்தவம், இஸ்லாம் என்று
எத்தனை மதங்கள் இருந்தாலும், அந்தந்த
மதத்தைச் சேர்ந்தவர்கள் அவர்கள் விரும்பும்
கடவுளை, எந்த பெயரைச்சொல்லி –
எப்படி அழைத்தாலும் –

எந்த பெயரில் அழைத்தாலும் சரி,
எந்த உருவத்தில் வணங்கினாலும் சரி –

அனைத்தையும் படைத்த இறைவன்
ஒரே ஒருவராகத் தான் இருக்க முடியும்.
ஒவ்வொரு மதத்திற்கும் ஒரு கடவுள் என்று
இந்த உலகிற்கு ஏகப்பட்ட கடவுள்கள்
இருக்க முடியாது என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

எனவே, என் கடவுள் சிறந்தவரா…?
உன் கடவுள் சிறந்தவரா…?
-என்று சண்டை போடுகிறவர்களை விட
பெரிய முட்டாள்கள் இருக்க முடியாது.

என்னைப் பொருத்தவரை –
எல்லா மதங்களும் ஒன்றே…!
அனைத்து மதங்களும் அடிப்படையில்
ஒரே விஷயத்தை தான் போதிக்கின்றன.

அன்பு, கருணை, இரக்கம், நம்பிக்கை,
பிறருக்கு உதவி – என்று நல்ல விஷயங்களை
தான் போதிக்கின்றன.


நான், மத அடிப்படையில் யாரிடமும்,
எந்தவித வித்தியாசமும் காட்டுவதில்லை;

எந்த கோவில்களுக்கும், சர்ச், மசூதிக்கும் செல்ல
எனக்கு எந்தவித தயக்கமும் இல்லை; நிறைய தடவை
போயிருக்கிறேன்… இப்போதும் போய்க்கொண்டு தான்
இருக்கிறேன்.

அனைத்து மதத்தவரும் ஒற்றுமையாக
இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.
அதையே தான் இந்த தளத்திலும் நான்
தொடர்ந்து எழுதி வருகிறேன்.

யார் எப்படி அழைத்தால் என்ன….?
எப்படி வணங்கினால் என்ன….?
எந்த மொழியில் பிரார்த்தித்தால் என்ன….?

இத்தனை பெரிய உலகத்தைப் படைத்தவனுக்கு
நாம் உருவாக்கிய மொழிகளோ,
அழைப்புகளோ – புரியாதா என்ன… ?

ஊமைகள் எந்த மொழியில் பிரார்த்திப்பார்கள்…?
உள்ளம் உருகி, மனதார இறைவனை வேண்டுவதை விட
சிறந்த பிரார்த்தனை உலகில் உண்டா…?

எனவே, அழைப்பவருக்கு –

வணங்குபவருக்கும்,
அர்ச்சனை செய்பவருக்கும் – அந்த மொழி
புரிந்திருந்தால் போதுமானது…

எனவே, தமிழ்நாட்டில், தமிழில் அர்ச்சனை செய்வதை
நான் முழுமனதாக ஆதரிக்கிறேன்….

அதே சமயம், இந்த ஒரே காரணத்திற்காக
சம்ஸ்கிருத மொழி வழிபாட்டை ஒழித்துக் கட்டுவதை
நான் ஏற்கவில்லை;

நமது நாட்டின் மிக தொன்மையான மொழிகள்
தமிழும், சம்ஸ்கிருதமும் தான்.
எனவே, இதில் எதை இழந்தாலும்,
இழப்பு நமக்குத் தான்…

ஒன்றிற்காக மற்றொன்றை
ஏன் இழக்க வேண்டும்…?

இரண்டும் தொடர்வதில் நிஜத்தில் யாருக்கும்
பிரச்சினை இருக்க முடியாது; இருக்கவும் கூடாது. பிரச்சினைகளை கிளப்புபவர்கள் அரசியல்வாதிகளே….சுயநலவாதிகளே…

—————

அறநிலையத் துறையை வைத்துக்கொண்டு,
திமுக அரசியல் செய்கிறது என்கிற
கருத்து உருவாவது உண்மை தான். ஆனால்,
அதற்கு அவர்களே தான் காரணம்…

ஏற்கெனவே தமிழக கோவில்களில், தமிழிலும்
அர்ச்சனை செய்யும் வழக்கம் இருக்கத்தானே செய்தது…?

ஏதோ, இவர்கள் புதிதாக பழக்கத்தை மாற்றுவதை
போன்ற தோற்றத்தை ஏன் உருவாக்குகிறார்கள்…?
அதன் விளைவு தான் இந்த எதிர்ப்புகள்.

—————–

“அர்ச்சகர் பயிற்சி” திட்டம், 2007-ல் – தமிழக அரசால்
உருவாக்கப்பட்டது தான்…

அரசு இந்த திட்டத்தை கொண்டு வருவதற்கு முன்
ஆயிரமாயிரம் ஆண்டுகளாக கோவில்களில்
அர்ச்சகர்களாக பணிபுரிந்தவர்கள் எப்படி
தங்கள் பணியைச் செய்தார்கள்….?

நேற்று வரை கசாப்பு கடைகளில் மாமிசம் வெட்டும்
பணியில் இருந்து பார்த்தவரை, இன்று கோவில்களில்
தமக்காக பூஜை, அர்ச்சனை செய்யும் பணியில் பார்த்தால் –
அந்த பக்தர்களின் மனம் அதை சுலபத்தில் ஏற்குமா…?

கோவில்களை, வேலை வாய்ப்புகளை உருவாக்கும் இன்னொரு அரசாங்க இலாகாவாக அரசு எப்படிக் கருதலாம்…..?

——————–

கோவில் நிலங்களில், கடைகளில் –
ஆக்கிரமிப்புகளை நீக்குவது மிகுந்த வரவேற்புக்கு
உரிய செயல்.

ஆனால், அதில் ஏன் வெளிப்படைத்தன்மை இல்லை..?

அது நாள் வரை அதை ஆக்கிரமித்திருந்தவர் யார்
என்றோ, ஆக்கிரமிப்பு எப்படி அகற்றப்பட்டது
என்றோ ஏன் வெளிப்படையாக
தெரிவிக்கப்படுவதில்லை…?

அதிகமாக வருமானம் உள்ள கோவில்களின்
உபரி வருமானம், அந்தந்த பகுதிகளின்,
கல்வி, மருத்துவம், சுகாதாரம் போன்றவற்றிற்காக
செலவழிக்கப்பட வேண்டும்.
அந்தந்த ஊர்களில் –
நல்ல பள்ளிகளும், மருத்துவ மனைகளும்
உருவாக்கப்பட வேண்டும்.
———————

கோவில் ட்ரஸ்டிகள் (அறங்காவலர்கள்) – அரசியல்
தொடர்பு இருக்கக்கூடியவர்களாக இருக்கக் கூடாது.
நிச்சயமான, ஊரறிந்த நன்னடத்தை உள்ளவராக
இருக்க வேண்டும். அவர் உள்ளூர் மக்களால் தான்
தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அரசியல்வாதிகளாலோ,
அரசாங்கத்தாலோ – அல்ல.

——————–

கோவில் வரவு-செலவுகள் அனைத்தும் மாதா மாதம்,
அந்தந்த கோவில்களில் அறிவிப்பு பலகை மூலம்
வெளிப்படையாக அறிவிக்கப்பட வேண்டும்.

——————–

வருடக்கணக்கில், சட்டத்தை மீறி
கோவில் சொத்துக்களை ஆக்கிரமிப்பு செய்திருப்பவர்களின்
பட்டியல், அந்தந்த கோவில்களில் வெளியிடப்பட வேண்டும்.

அதே போல், ஆண்டுக் கணக்கில் வாடகை பாக்கி,
குத்தகை பாக்கி வைத்திருப்பவர்களின் பட்டியலும்
அந்தந்த கோவில்களில் வெளியிடப்பட வேண்டும்.

—————–

முக்கியமாக, கோவில் சம்பந்தப்பட்ட பொறுப்புகளில்
நியமிக்கப்படுபவர்கள், கடவுள் நம்பிக்கை உள்ளவர்களாக
இருக்க வேண்டும்.

மேலே சொல்லப்பட்டுள்ள யோசனைகளை நிறைவேற்றுவதில், நடைமுறைப்படுத்துவதில் அரசுக்கு எந்த வித பிரச்சினையும் இருப்பதாக நமக்குத் தெரியவில்லை; ஆனால் செய்ய முற்படாதது ஏன்…?

மனம் இல்லையா…? கட்சிக்காரர்களுக்கு கிடைக்கக்கூடிய சலுகைகள் பறிபோய் விடுமே என்கிற யோசனையா….? அப்படி ஏதும் இல்லையென்றால் –

சீர்திருத்தம் பற்றி பேசுபவர்கள் முதலில் இவற்றைச்
செய்யட்டும்… அப்போது தான் இவர்கள் சொல்லும் மற்ற சீர்திருத்த முயற்சிகளில் மக்களுக்கு நம்பிக்கை வரும்.

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

7 Responses to ” கோவில் அரசியல்வாதிகளின் கூடாரம்ஆகி விடக்கூடாது ” -என்று தான் ….!!!

 1. கந்தவேல் சொல்கிறார்:

  ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்தாகி விட்டது.
  அர்ச்சகர்கள் அரசாங்க ஊழியம் ஆவதால் மேலும் நிறைய சீர்திருத்தங்களை எதிர்பார்க்கலாம்.
  விடுமுறை தினங்களில் கோவில்களும் மூடப்படலாம்.
  கிருத்துமஸ் போன்ற மற்ற மத பண்டிகை நாட்கள் கோவில்களில் விசேஷமாக கொண்டாடப்படும் என சட்டம் இயற்ற படலாம் , இதன் மூலம் சிறுபான்மையினரை திருப்தி படுத்தலாம்.
  கிருத்துவ, முஸ்லீம் களும் அர்ச்சகர்களாக நியமிக்க படலாம்.
  அசைவ பிரியர்களும் இட ஒதுக்கீடு அடிப்படையில் அர்ச்சகராக நியமிக்கப்படலாம்.
  ஒருவேளை அவர்கள் மது பிரியர்களாக இருந்தாலும் கவலை பட வேண்டாம்.

 2. bandhu சொல்கிறார்:

  தமிழில் அர்ச்சனை, எல்லா சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம், சமஸ்க்ருதத்தில் அர்ச்சனை செய்யவேண்டுமா என்ற கேள்விகளெல்லாம் distraction தான்! அடிப்படை பிரச்சனையை, இவற்றை செயலாக்க அரசுக்கு உரிமை இல்லை என்பதுதான். அரசு என்பது secular. மதத்தில் தலையிட அதற்கு உரிமை இல்லை. எல்லா மதத்திற்கும் அதே தான். இந்து மதத்தில் பணவிஷயங்களில் ஆடிட் பண்ணும் வேலை மட்டுமே அரசுக்கு உரியது.

  மற்ற எதைப்பற்றி பேசுவதும் distraction மட்டுமே.

 3. Subramanian சொல்கிறார்:

  K.M.sir,
  Wonderful Blog.
  Makes one think.
  Govt. only talks about improvements, reforms in hindu temples.
  But it looks that its intention is something else.

 4. Kamal சொல்கிறார்:

  சில சந்தேகங்கள்:
  1. புதிதாக நியமிக்கப்பட்ட அர்ச்சகர்களுக்கு என ஏதும் விதிமுறைகள் உள்ளனவா? உதாரணமாக சைவ உணவு, மதம் etc
  2. புதிதாக நியமிக்கப்பட்ட அர்ச்சகர்களின் குரல் ஊடகங்களால் பதிவு செய்யப்படுகிறதா? அவர்களின் இறை நம்பிக்கை, பெரியாரின் இறைமறுப்பு கொள்கைகள் தொடர்பாக அவர்களது கருத்துக்கள், அவர்களை இந்த அர்ச்சகர் பணிக்கு தூண்டிய காரணங்கள் etc

 5. பாலாஜி சொல்கிறார்:

  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு – வழிபாட்டு நிலையத்திற்க்கு பாதுகாப்பு, போக்குவரத்து ஒழுங்கு , கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துதல், சாதியால் கோயிலை ஒரு பிரிவினர் மட்டும் ஏற்று நடத்துவது எவ்வாறு சரி?

  கடவுள்தகளின் பெயர்களை வடமொழியாக மாற்றியது எப்படி? கருகாத்த அம்பிகை எப்படி கற்பகரஷகாம்பாளாக மாற்றப்பட்டார்?? முல்லைவன நாதர் எவ்வாறு வேதபுரீஸ்வரானார்?
  பெருவுடையார் எவ்வாறு பிரகதீஸ்வரர் ஆனார்?

  நாயன்மார்களும் ஆழ்வார்களும் தமிழில் பாடியிருக்க சமஸ்கிருதம் எங்கிருந்து வந்தது?
  வந்து எப்படி தமிழ் கடவுளர்க்கு மொழியானது?

  சமஸ்கிருதமும் பழமையானது என்றால் அரேபியமும் ரோமானியமும் பழமையானதுதான்? வழிபாடு மொழியாக வைக்கலாமா?

  தென்னாடுடைய சிவனுக்கு வேறு மொழி என்றால் வடமொழி மட்டும் எதற்க்கு? அரங்கனுக்கும்/மாயோனுக்கும் முருகனுக்கும் எதற்க்கு அயல் மொழி??

  உயிர்கள் அனைத்திற்க்கும் கடவுள் என்றால் மொழி பேதமில்லை என்றால் அசைவ உணவு உண்பவனுக்கும் அவன் தானே கடவுள்??

  மனம் தானே காரணம்….

  அரசிடம் கேள்விகள் கேட்கலாம் பல பழங்கோயில்களை மேம்படுத்த சொல்லலாம். வரவு செலவு காட்ட சொல்ல வேண்டும் , முழுமனதாக ஏற்கிறேன்.

  அதேகேள்வியை

  • புதியவன் சொல்கிறார்:

   //நாயன்மார்களும் ஆழ்வார்களும் தமிழில் பாடியிருக்க சமஸ்கிருதம் எங்கிருந்து வந்தது?// ஆழ்வார்களின் பாசுரங்களுக்கு சமஸ்கிருத மொழியில் இருந்த வேதமும், புராணங்களும் அடிப்படை. இதனை தமிழ் வேதம் என்றே சொல்லுவர். கான்சப்ட் வடமொழி, அதிலிருந்து தமிழில் பாடப்பெற்றவை. கம்பரின் இராமகாதையில், தமிழ் கலாச்சாரத்திற்கு ஏற்றவாறு நயமான மாறுதல்கள் செய்திருப்பார்.

   உங்கள் கேள்விகளை சரியான முறையில் நல்ல புரிதலோடு அடுக்கினால், யோசித்து நான் நினைப்பதை எழுதுகிறேன். விதண்டாவாத கேள்விகளுக்கு பதில்கள் கிடைக்காது. மனம்தான் காரணம் என்றால் எதற்கு உடை அணிய வேண்டும், பள்ளிக்குச் செல்லும்போது ஏன் கைலியில் செல்லக்கூடாது, ஆசிரியர்கள் ஏன் பெர்முடாஸில் வந்து பாடம் நடத்தக்கூடாது? அப்படி நடத்தினால் மாணவர்களுக்குப் புரியாதா, சொல்லும் கருத்துதானே முக்கியம் என்றெல்லாம் வித விதமாக விதண்டாவாதம் செய்யலாம். ஆனால் இதனை மற்ற மதத்தினரைப் பார்த்து ஆள்பவர்களோ இல்லை ‘தமிழ்’ எங்கள் உயிர் என்று படம் காட்டுபவர்களோ கேட்கமாட்டார்கள்,

   நீங்க இந்தக் கேள்விகளோடு, தமிழ் கலாச்சாரத்தில் மற்ற மதத்தினருக்கு இடமில்லை என்பதையும் சேர்த்தே கேட்பீர்கள் என்று நம்புகிறேன்.

   • புதியவன் சொல்கிறார்:

    வடமொழியை எதிர்க்கிறோம் என்று சொல்பவர்கள் பெரும்பாலும், அவர்களது குழந்தைகளுக்கு (ஏன் அவர்களுக்கே… ஆனால் அந்தப் பெயரை வைத்தது தன் அப்பா என்று சொல்லித் தப்பித்துக்கொள்வார்கள்) வடமொழிப் பெயரைத்தான் வைக்கிறார்கள். அதுதான் புதுமை, தமிழ்ப் பெயர்கள் என்பது மாடர்ன் ஆக இல்லை, காட்டுமிராண்டி மொழி என்று நினைக்கிறார்களோ என்னவோ…. எழில் போன்ற தமிழ்ப் பெயர் வைப்பவர்கள் சிறுபான்மை என்பதே நான் கண்டது.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.