அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டவர்கள் -திமுக – வினரா….?

பத்திரிகைச் செய்தியிலிருந்து நேற்றைய
நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்த விவரம் –

// இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு
வந்தபோது, தமிழகத்தில் அங்கீகாரம் பெற்ற
அர்ச்சகர் பயிற்சி மையங்களின் எண்ணிக்கை
குறித்தும், சுதந்திர தினத்தன்று நியமிக்கப்பட்ட
15 அர்ச்சகர்களின் பயிற்சி மற்றும் தகுதி குறித்தும்,
நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த, அரசு தலைமை வழக்கறிஞர்,
தமிழகத்தில் –

ஆறு அங்கீகாரம் பெற்ற
அர்ச்சகர்கள் பயிற்சி மையங்கள் இருப்பதாகவும்,

சுதந்திர தினத்தன்று நியமிக்கப்பட்ட அர்ச்சகர்களில்
சிலர், அங்கீகாரம் பெற்ற மையங்களில் பயிற்சி
பெறாவிட்டாலும், (…. ஏன்…? )

மூத்த பட்டாச்சாரியார்களிடம்
முறையாக பயின்றவர்கள் என்றும் விளக்கம்
அளித்தார்……//

அங்கீகாரம் பெற்ற பயிற்சி மையங்களில்
பயிற்சி பெறாதவர்களையும் அர்ச்சகராக
திமுக அரசு நியமித்துள்ள செய்தியே இப்போது
தான், நீதிமன்ற நடவடிக்கைகள் மூலம்
தெரிய வருகிறது…

முறையாக பயிற்சி பெறாதவர்களை
நியமிக்க வேண்டிய அவசியம் என்ன….?

அப்படியானால், திமுக-வினருக்கும்,
திமுக ஆதரவாளர்களுக்கும் வேலை
கொடுக்கத்தான் இத்தனையுமா…..?

பல கோவில்களில் ஏற்கெனவே பணிபுரிந்து வந்த
அர்ச்சகர்கள் பலர் வெளியே அனுப்பப்பட்டு
விட்டதாக செய்திகள் வெளிவருகின்றன.

2-3 நாட்களாக திருச்சி மலைக்கோட்டை கோவிலில்
வேலை இழந்தவர்கள் குறித்து போராட்டங்கள்
நடந்து வருவதாகத் தெரிகிறது.
இது குறித்த செய்திகள் தொலைக்காட்சிகளில்
வராமல் பார்த்துக் கொள்ளப்பட்டிருக்கிறது.

அர்ச்சகர் நியமனம் குறித்த பல உண்மைகள்
மறைக்கப்படுவதாக சொல்லப்படுவது
நிஜம் தானா…?

அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியது இது –

அனைவரும் அர்ச்சகராகலாம் திட்டத்தில்
முறையாக பயிற்சி பெற்ற 58 பேர் கோயில்களில்
அர்ச்சகர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

( நீதிமன்றத்தில் அரசு சொல்லி இருப்பது
இதிலிருந்து மாறுபட்டிருக்கிறது….
முறையாக பயிற்சி பெறாத சிலரும் நியமிக்கப்பட்டு
இருப்பதாக அரசு நீதிமன்றத்தில் ஒப்புதல்
வாக்குமூலம் தந்திருக்கிறது….)

“எந்த கோயிலிலும் யாரும் பணி நீக்கம்
செய்யப்படவில்லை….”

தொடர்ந்து இந்த முரணான விளக்கமும் வருகிறது –

” 58 பேர் நியமனம் காரணமாக
யாரும் பணி இழந்திருந்தால் —- ?
(அரசுக்கு இது தெரியாதா…?)

எங்களிடம் தெரிவித்தால் —- ?
(இழக்கச் செய்ததே இவர்கள் தானே…? )

உரிய நடவடிக்கை எடுத்து
” மாற்றுப்பணி தரப்படும்…”

மாற்றுப்பணி தரப்படும் என்றால் என்ன பொருள்…?

ஏற்கெனவே அவர்கள் செய்து வந்த பணியில்
அவர்கள் மீண்டும் அமர்த்தப்பட மாட்டார்கள்
என்பது தானே … ?

இவையெல்லாம் உண்மையில் யாருடைய அஜெண்டா….?

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

13 Responses to அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டவர்கள் -திமுக – வினரா….?

 1. Subramanian சொல்கிறார்:

  அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக 56 பேருக்கு
  அரசாணையாம்.
  கண்டதேவியில் தேர் வடம் பிடித்திழுக்க,
  கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில்
  மண்டகப்படி கொண்டாட,
  சேலம் திரவுபதி அம்மனை வழிபட,
  தி.மு.க., எப்போது அரசாணை வெளியிடும்?

  ————புதிய தமிழகம் கட்சித்தலைவர்
  டாக்டர் கிருஷ்ணசாமி கேட்கிறார்.

  • Subramanian சொல்கிறார்:

   ஆணையிடும் துணிச்சல்
   திமுக அரசுக்கு உண்டா ?

   • புதியவன் சொல்கிறார்:

    திமுக அரசு இப்போது செய்வது, ‘பிராமண எதிர்ப்பு’ என்ற போர்வையில். அதனால் அது பெரும் எதிர்ப்புகளைச் சந்திக்காது என்று நம்புகிறது. அரசுக்கு ‘பசும்பொன் முத்துராமலிங்கனார்’ என்று சொல்லவே துணிச்சல் கிடையாது. முத்துராமலிங்கத் தேவர் என்றுதான் சொல்கிறது. அதனால் சாதிக்கு ஏற்றபடிதான் அதன் முடிவுகளும் இருக்கும். ‘இந்து’ என்ற போர்வையில் ஒன்று சேராத வரை, அரசு இந்துக்கோவில்களை அழிக்க நினைப்பதை யாராலும் தடுக்க முடியாது, கிறித்துவ வாக்குகளைக் குறிவைத்து திமுக இப்படிச் செய்கிறது என்றுதான் பலரும் சொல்கிறார்கள், எனக்கு அப்படித் தோன்றாத போதும்.

 2. Subramanian சொல்கிறார்:

  மேற்படி இடுகை தெரிவிக்காத
  இன்னும் சில விவரங்கள்:

  திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன்
  கோவிலுக்கு, புதுக்கோட்டை மாவட்டத்தைச்
  சேர்ந்த துரைராஜ் என்பவர் ஓதுவாராகவும்,
  பெரம்பலுாரைச் சேர்ந்த சதீஷ்குமார்,
  தவில் வாசிப்பவராகவும்,
  அருண்குமார் நட்டுவாங்கம் இசைப்பவராகவும்
  நியமிக்கப்பட்டுள்ளனர். தஞ்சை, பெரம்பலுார்
  மாவட்டங்களில் உள்ள பல்வேறு கோவில்களிலும்,
  வெளியூரைச் சேர்ந்த பலர் இவ்வாறு
  நியமிக்கப்பட்டுள்ளனர்.இந்த கோவில்களில்,
  ஏற்கனவே பணிபுரிந்த அர்ச்சகர்களிடம் இருந்து,
  வலுக்கட்டாயமாக சாவி உள்ளிட்ட பொறுப்புகள்
  பெறப்பட்டு, புதியவர்களிடம் ஒப்படைக்கப்படுகின்றன.

  திருச்சி சமயபுரம் மாரியம்மன்
  கோவில், வயலுார் முருகன் கோவில்,
  மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி
  கோவில்களில் புதிய பணியாளர்கள்
  நியமிக்கப்பட்டதாக ஆடியோக்கள்
  சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

  மலைக்கோட்டை கோவில், நாகநாதர் கோவில்களில்,
  காலையே புதிய பணியாளர்கள் வந்து பணியில்
  சேர்ந்து விட்டனர். நாகநாதர்கோவிலில் காலை சந்தி
  முடிந்தவுடன், சிவாச்சாரியாரை வெளியே
  அனுப்பி விட்டனர்.

  வயலுார் சுப்பிரமணியர் கோவிலிலும்,
  ஐந்து குருக்களை வெளியே அனுப்பி விட்டனர்.

  சமயபுரத்திலும் மூலவர், ஆதிமாரியம்மன்,
  பரிவார மூர்த்தி சன்னிதிகளிலும், குருக்களை
  வெளியேற்றி விட்டு, ஜே.சி., வந்து புதியவர்களை
  பணியமர்த்தி விட்டார்.

  விருதுநகர் மாவட்டம் சாத்துார் வெங்கடாஜலபதி
  கோவிலில் ரெங்கநாதன் பட்டர், பணிபுரிந்து வந்த
  நிலையில், இக்கோவிலுக்கு புதிய பட்டராக,
  துாத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் புதுாரைச்
  சேர்ந்த சீனிவாசன் நியமிக்கப்பட்டார்.
  ரெங்கநாதன் பட்டர் வேதனையுடன் அங்கிருந்து
  வெளியேறினார்.

 3. Raghavendra சொல்கிறார்:

  திமுகவினருக்கும், ஆதரவாளர்களுக்கும்
  வேலை வாய்ப்புகள், கடைகள்,
  காண்டிராக்டுகள், டெண்டர்கள், நிலகுத்தகைகள்
  என்று பல வாய்ப்புகளை உருவாக்க
  அறநிலய துறை மூலம் திட்டம்
  தீட்டப்பட்டிருக்கிறதோ ?

 4. புதியவன் சொல்கிறார்:

  இதைப்பற்றி நிறைய எழுதலாம். அறநிலையத்துறை அமைச்சர், 60 வயது ஆகிவிட்டால் அவர்களை பதவியிலிருந்து எடுத்துவிட்டு, புதியவர்களை வேலைக்கு அமர்த்துகிறாராம். இவர்களுக்கு இது என்ன அரசு பதவியா? சட்டப்படியான சம்பளமும், ஓய்வூதியமும் உண்டா?, மாற்று மதத்தினருக்கு இந்துக்கள் கோவிலில் என்ன வேலை? கோவில் என்ன, திமுக ஆட்களைப் பணியமர்த்தும் பணிக்கூடமா? கோவில் குருக்கள் போன்றவர்களுக்கு சம்பளம் 10,000 கூடக் கிடையாது, ஆனால் மற்ற அலுவலர்களுக்கு 30,000 என்றெல்லாம் சம்பளம் நிர்ணயம் செய்திருக்கின்றனர், கோவில் பணத்தை பொதுமக்களுக்கு விநியோகம் செய்யும் செயலும் திமுக அரசு ஆரம்பித்திருக்கிறது. ஆகம விதிகளை மீறி, தமிழில்தான் அர்ச்சனை, இதுதான் தமிழில் அர்ச்சனை செய்யும் பாடத்திட்டம் என்றெல்லாம் திமுக செய்வது, கோவிலை முழுமையாக முடக்கி, மாற்று மதத்தினருக்கான செயல்களைச் செய்யத்தான் என்று பலர் சொல்கின்றனர். அதில் உண்மை இல்லாமல் இல்லை. கோவிலுக்கு என்று ஒருவர் நிலம் எழுதி வைத்தால், அந்த நிலத்தை மாற்று மதத்தினருக்குக் குத்தகைக்குக் கொடுத்து, மாற்று மதம் வளர அரசே முயன்று உழைக்கிறது. இதை ஏன் அரசு, சிறுபான்மையினருக்கும் செய்யக்கூடாது?

  60 வயது என்ற சட்டத்தை முதலில் அந்த அந்தக் கட்சிக்கு நிர்ணயம் செய்யட்டுமே.

  திமுக அரசு ‘இந்து எதிர்ப்பு’ அரசாக இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் அதற்காக கோவில்களை அழிப்பது, அதன் சொத்துக்களைச் சூறையாடுவது என்று திட்டம் போட்டுச் செயல்படுவதாகத்தான் பலர் எண்ணுகிறார்கள்.

  வக்ஃப் துறைக்கு ஏன் ஒரு இந்துவை தலைவராகப் போடுவதில்லை? அதுவும் அரசு கொடுக்கும் பதவிதானே. ஏன் மசூதிகளிலும் கிறிஸ்துவ ஆலயங்களிலும் தமிழ் மட்டுமே மொழியாக இருக்கவேண்டும் என்று சொல்வதில்லை? கடவுளுக்கு தமிழ் தெரியாதா என்று கேட்கவேண்டியதுதானே. திமுகவின் அஜெண்டா, கோவில்களை அழிப்பது, இந்துக்களுக்கு எதிராக இருப்பதன்மூலம் சிறுபான்மையினரின் வாக்குகளை முழுமையாக தங்களுக்கு வாங்குவது என்ற அரசியல். இத்தகைய அரசியல் நெடுநாள் கைகொடுக்காது என்றே நான் நம்புகிறேன்.

  திமுகவின் இத்தகைய செய்கைகள், முழுமையாக இந்துக்களை பாஜக வை நோக்கித் திருப்பும் என்றே நான் நினைக்கிறேன். அதிமுகவுக்கு சிறுபான்மையினர் வாக்குகள் போய்விடும் என்று வாளா இருந்தால், அது பாஜகவின் பெரும் வளர்ச்சியில் கொண்டுபோய் முடியும். அதிமுக தலைமை மிகப் பெரும் தவறு செய்கிறது. (அதே சமயம், பணியமர்த்தியவர்களில் சிலரின் தகுதியும் குறை சொல்வதற்கில்லை..ஓதுவார் பெண்மணி போன்று).

  தமிழகத்தில் திமுக மத அரசியல் செய்கிறது, பாஜக வைப் போல. அதிமுக இரண்டு பக்கமும் இல்லாமல் இருப்பதுபோலக் காட்டுகிறது. பிரச்சனை என்று வரும்போது யாருமே நடுநிலை எடுப்பதுபோல நடிக்க முடியாது. அதன் விளைவு வரும் காலத்தில் எப்படி இருக்கும் என்பது தெரியும்.

 5. புதியவன் சொல்கிறார்:

  When I say this, you would have seen photo of Tirupathi அர்ச்சகர்கள், in Stalin’s house, praying in Saskrit and giving Prasadam etc. அதைப்பற்றியும் ஒரு செய்தி இருக்கிறது.

 6. bandhu சொல்கிறார்:

  விநாச காலே விபரீத புத்தி!

 7. Ezhil சொல்கிறார்:

  வணக்கம் அய்யா.

  பயிற்சி இல்லாதவர்களையும் பணியில் அமர்த்திக்கிறதா அய்யா சொல்லிருக்கீங்க. இந்த முறைப்படி, பயிற்சி இல்லாத அய்யர்களையும் வெளிய அனுப்புறது சரியானதா? ஏன்னா முறையா பயிற்சி எடுக்காம கிட்டத்தட்ட 25 சதவிகிதம் பேர் இப்போ அர்ச்சர்களா பணியாற்றிக்கிட்டு இருக்காங்க.

  //யாரும் பணி இழந்திருந்தால் மாற்றுப்பணி தரப்படும்//
  மாற்றுப்பணி வழங்கப்படும்னு சொல்லிருக்கே அய்யா. நான் கேள்விப்பட்டவரை அப்படி எதுவும் நடக்கல. அவ்வாறு நடந்திருந்தால் கண்டிப்பாக அது தவறு தான். தற்காலிக பணியாளர்களுக்கு இது பொருந்துமா எனத்தெரியவில்லை.

  மேலும் புதியவன் சார் எழுந்திருக்க சில விஷயங்களால் தான் இப்போ தான் கமெண்ட் போட வந்தேன்.

  //60 வயது ஆகிவிட்டால் அவர்களை பதவியிலிருந்து எடுத்துவிட்டு, புதியவர்களை வேலைக்கு அமர்த்துகிறாராம்//
  ஏற்கனவே கோயில்களில் அர்ச்சகராக உள்ள யாரையும் வெளியேற்றும் திட்டம் எதுவும் இல்லை. எந்த கோயிலிலும் யாரும் பணி நீக்கம் செய்யப்படவில்லை என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

  மேலும் பல ஆண்டுகளாக பணிபுரிந்து வயது மூப்பிற்கு பிறகும் பலர் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களும் வெளியேற்றப்படவில்லை. தொடர்ந்து பணிபுரிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

  //ஆகம விதிகளை மீறி, தமிழில்தான் அர்ச்சனை, //
  தமிழில் அர்ச்சனை செஞ்சா தப்பா சார். உடனே நீங்க சர்ச்ல பண்றங்களா இல்ல மசூதில பண்றங்களானு கேப்பீங்க. நான் போறது கோவில் தான். அங்க போறப்போ எனக்கு புரிஞ்சு மொழில சொன்ன நல்லா இருக்கும்னு நான் நினைக்குறேன். அதுவும் தப்பா.

  நீங்க சொல்லுற மாதிரி பார்த்தாலும் இப்போ அர்ச்சகர்கள் ஆகியிருக்கிறது சக இந்துக்கள் தானே. இதுவும் தப்புனு சொல்லுரீங்களா சார். சிறுதெய்வ வழிபாடுகள் உள்ள கோவில்கள்ல இன்னமும் சாதாரண இந்துக்கள் தானே அர்ச்சர்களாகவும் பூசாரிகளாகவும் இருக்காங்க. அது சரி கிடையாதுன்னு சொல்லுறீங்களா.

  எங்க வீட்டில சாமிக்கு பூஜை பண்ணும்போது அம்மாவோ இல்ல மனைவியோ தமிழ்ல தான் பாட்டு பாடுறாங்க. இது சரின்னா அதுவும் சரி தானே.

  //திமுக அரசு ‘இந்து எதிர்ப்பு’ அரசாக இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் அதற்காக கோவில்களை அழிப்பது, அதன் சொத்துக்களைச் சூறையாடுவது என்று திட்டம் போட்டுச் செயல்படுவதாகத்தான் பலர் எண்ணுகிறார்கள்//

  மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடம் லஸ் கார்னரில் இருந்தது. அதில மதுபான பார் நடத்தியதை வெளிக்கொணர்ந்து யார் இப்போ நிப்பாட்டிருக்காங்க. இது தப்பில்லையா?

  இதுக்கு முன்னாடி எந்த அரசும் செய்யாத மாதிரி கோவில் சொத்துக்கள் எல்லாத்தையும் இணையத்தில் பதிவேற்றிருக்காங்க. கோயில்களுக்குச் சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்படுவது பற்றியும், ஆக்கிரமிக்கப்பட்டு மீட்கப்பட்ட கோயில்களுக்குச் சொந்தமான இடங்களில் கல்வி நிலையங்கள் அமைக்கப்படும்னும் சொல்லிருக்காங்க. இதுல இந்து எதிர்ப்பு வருதுன்னு நீங்க நம்புறீங்களா..

  //திமுகவின் இத்தகைய செய்கைகள், முழுமையாக இந்துக்களை பாஜக வை நோக்கித் திருப்பும் என்றே நான் நினைக்கிறேன்//

  கடவுள் பக்தி நம்பிக்கை வச்சு மட்டுமே ஒரு ஆட்சியையோ கட்சியையோ எடைபோடணும்னா அப்படி ஒன்னு தேவையேயில்லை. ஏற்கனவே அப்படி ஒன்னு நடந்துதான் வருடமா கஷ்டப்பட்டுட்டு இருக்கோம். இப்படிலாம் தொடர்ச்சியா சிலர் பேசுரனாலா தான் சாதாரண பொதுஜனம் கூட நம்ம மதம் அழிஞ்சிடுமோனு பயப்படுறான். அவனே கூடிய சீக்கிரம் அழிஞ்சிடுவான். எந்த மதம் அழியுறதா இருந்தாலும் அது அவனுக்கு அப்புறம் தான் நடக்கும்னு புரியாம. மதவெறி இல்லாம கடவுளை ஒரு கைத்துணையா எடுத்துக்கிட்டு வாழ்க்கையை கடக்கணும்னு நான் உறுதியா நம்புறேன்.

  தமிழ்ல தான் பேசுறோம். எழுதுறோம். தமிழை நேசிக்கிறோம். ஆனா தமிழ்ல மந்திரங்கள் சொல்லக்கூடாது சொன்னா அது கடவுளை அவமதிக்கிற மாதிரின்னு நீங்க சொன்னீங்கன்னா அதுக்கும் கிறிஸ்தவ பாதிரியார்கள் மக்களை மூளைச்சலவை செய்ய இந்து கடவுள்கள் சாத்தான்கள்ன்னு சொல்லுறதுக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது.

  புதியவன் சா,ர் திமுக எதிர்ப்பு நிலைக்காக, நிறைய விஷயங்கள் தெரிஞ்ச நீங்களே இப்படி சொல்லுவீங்கன்னு எதிர்பாக்கல. என் புரிதல் தவறாயிருப்பின் மன்னிக்கவும்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   எழில்,

   நண்பர் புதியவனிடம் நீங்கள் எழுப்பியிருக்கும்
   வினாக்களுக்கு, அவர் தான் விளக்கம் தர வேண்டும்.

   ஆனால் – என்னைப் பொருத்த வரை சில விஷயங்களை
   தெளிவு படுத்த விரும்புகிறேன் –

   ஹிந்து, கிறிஸ்தவம், இஸ்லாம் என்று
   எத்தனை மதங்கள் இருந்தாலும், அந்தந்த
   மதத்தைச் சேர்ந்தவர்கள் அவர்கள் விரும்பும்
   பெயரில் கடவுளை எப்படி அழைத்தாலும் –

   எந்த பெயரில் அழைத்தாலும் சரி,
   எந்த உருவத்தில் வணங்கினாலும் சரி –

   அனைத்தையும் படைத்த இறைவன்
   ஒரே ஒருவராகத் தான் இருக்க முடியும்.

   எனவே, என் கடவுள் சிறந்தவரா…?
   உன் கடவுள் சிறந்தவரா…?
   -என்று சண்டை போடுகிறவர்களை விட
   பெரிய முட்டாள்கள் இருக்க முடியாது.

   என்னைப் பொருத்தவரை –
   எல்லா மதங்களும் ஒன்றே…!
   நான் மத அடிப்படையில் யாரிடமும்,
   எந்தவித வித்தியாசமும் காட்டுவதில்லை;
   அனைத்து மதத்தவரும் ஒற்றுமையாக
   இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.
   அதையே தான் நான் இந்த தளத்திலும்
   தொடர்ந்து எழுதி வருகிறேன்.

   யார் எப்படி அழைத்தால் என்ன….?
   எப்படி வணங்கினால் என்ன….?
   எந்த மொழியில் பிரார்த்தித்தால் என்ன….?

   இத்தனை பெரிய உலகத்தைப் படைத்தவனுக்கு
   நாம் உருவாக்கிய மொழிகளோ,
   அழைப்புகளோ – புரியாதா என்ன….?

   எனவே, அழைப்பவனுக்கு – வணங்குபவனுக்கு,
   அர்ச்சனை செய்பவனுக்கு – அந்த மொழி
   புரிந்திருந்தால் போதுமானது…

   எனவே, தமிழில் அர்ச்சனை செய்வதை
   நான் முழுமனதாக ஆதரிக்கிறேன்….

   அதே சமயம், இந்த ஒரே காரணத்திற்காக
   சம்ஸ்கிருதத்தை ஒழித்துக் கட்டுவதை
   நான் ஏற்கவில்லை;

   நமது நாட்டின் மிக தொன்மையான
   மொழிகள் தமிழும், சம்ஸ்கிருதமும் தான்.
   எனவே, இதில் எதை இழந்தாலும்,
   இழப்பு நமக்குத் தான்.

   இரண்டும் தொடர்வதில் யாருக்கும்
   பிரச்சினை இருக்க முடியாது; இருக்கக்கூடாது.

   —————

   அறநிலையத் துறையை வைத்துக்கொண்டு,
   திமுக அரசியல் செய்கிறது என்கிற
   கருத்து உருவாவது உண்மை தான். ஆனால்,
   அதற்கு அவர்களே தான் காரணம்…

   ஏற்கெனவே தமிழக கோவில்களில், தமிழிலும்
   அர்ச்சனை செய்யும் வழக்கம் இருந்தது.
   ஏதோ, இவர்கள் புதிதாக பழக்கத்தை மாற்றுவதை
   போன்ற தோற்றத்தை உருவாக்குகிறார்கள்.
   அதன் விளைவு தான் இந்த எதிர்ப்புகள்.

   —————–

   அர்ச்சகர் பயிற்சி பற்றி கேட்டிருக்கிறீர்கள்.
   “அர்ச்சகர் பயிற்சி” திட்டம், தமிழக அரசால்
   உருவாக்கப்பட்டது தான்…

   அரசு இந்த திட்டத்தை கொண்டு வருவதற்கு முன்
   ஆயிரமாயிரம் ஆண்டுகளாக கோவில்களில்
   அர்ச்சகர்களாக பணிபுரிந்தவர்கள் எப்படி
   தங்கள் பணியைச் செய்தார்கள்….?

   நேற்று வரை கசாப்பு கடைகளில் மாமிசம் வெட்டும்
   பணியில் இருந்து பார்த்தவர், இன்று கோவில்களில்
   தமக்காக பூஜை, அர்ச்சனை செய்கிறார் என்றால்,
   அந்த பக்தர்களின் மனம் அதை சுலபத்தில் ஏற்குமா…?

   ——————–

   கோவில் நிலங்களில், கடைகளில் –
   ஆக்கிரமிப்புகளை நீக்குவது மிகுந்த வரவேற்புக்கு
   உரிய செயல்.

   ஆனால், அதில் ஏன் வெளிப்படைத்தன்மை இல்லை..?

   அது நாள் வரை அதை ஆக்கிரமித்திருந்தவர் யார்
   என்றோ, ஆக்கிரமிப்பு எப்படி அகற்றப்பட்டது
   என்றோ ஏன் வெளிப்படையாக
   தெரிவிக்கப்படுவதில்லை…?

   அதிகமாக வருமானம் உள்ள கோவில்களின்
   உபரி வருமானம், அந்தந்த பகுதிகளின்,
   கல்வி, மருத்துவம், சுகாதாரம் போன்றவற்றிற்காக
   செலவழிக்கப்பட வேண்டும்.
   அந்தந்த ஊர்களில் –
   நல்ல பள்ளிகளும், மருத்துவ மனைகளும்
   உருவாக்கப்பட வேண்டும்.
   ———————

   கோவில் ட்ரஸ்டிகள் (அறங்காவலர்கள்) – அரசியல்
   தொடர்பு இருக்கக்கூடியவர்களாக இருக்கக் கூடாது.
   நிச்சயமான, ஊரறிந்த நன்னடத்தை உள்ளவராக
   இருக்க வேண்டும். அவர் உள்ளூர் மக்களால் தான்
   தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அரசியல்வாதிகளாலோ,
   அரசாங்கத்தாலோ – அல்ல.
   ——————–

   கோவில் வரவு-செலவுகள் அனைத்தும் மாதா மாதம்,
   அந்தந்த கோவில்களில் அறிவுப்பு பலகை மூலம்
   வெளிப்படையாக அறிவிக்கப்பட வேண்டும்.

   ——————–

   வருடக்கணக்கில், சட்டத்தை மீறி
   கோவில் சொத்துக்களை ஆக்கிரமிப்பு செய்திருப்பவர்களின்
   பட்டியல், அந்தந்த கோவில்களில் வெளியிடப்பட வேண்டும்.

   அதே போல், ஆண்டுக் கணக்கில் வாடகை பாக்கி,
   குத்தகை பாக்கி வைத்திருப்பவர்களின் பட்டியலும்
   அந்தந்த கோவில்களில் வெளியிடப்பட வேண்டும்.

   —————–

   முக்கியமாக, கோவில் சம்பந்தப்பட்ட பொறுப்புகளில்
   நியமிக்கப்படுபவர்கள், கடவுள் நம்பிக்கை உள்ளவர்களாக
   இருக்க வேண்டும்.

   ———–

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

  • புதியவன் சொல்கிறார்:

   எழில் சார்… நீங்க எழுதியுள்ளதை நான் வரவேற்கிறேன். நானும் பெண் ஓதுவார் போன்ற சிலர் தகுதியானவர்கள் என்று குறிப்பிட்டிருக்கிறேன்.

   தமிழில் அர்ச்சனை செய்வது என்பதை நான் குறை சொல்லவில்லை. என் மொழியும் தமிழ்தான்.

   இதற்கு பதில் எழுதுகிறேன்.

   • புதியவன் சொல்கிறார்:

    //ஏன்னா முறையா பயிற்சி எடுக்காம கிட்டத்தட்ட 25 சதவிகிதம் பேர் இப்போ அர்ச்சர்களா பணியாற்றிக்கிட்டு இருக்காங்க//

    //மாற்றுப்பணி வழங்கப்படும்னு சொல்லிருக்கே அய்யா.//

    //எந்த கோயிலிலும் யாரும் பணி நீக்கம் செய்யப்படவில்லை என்று//

    இதெல்லாம் நீங்க நம்பறீங்களா? நான் நம்பவில்லை. அரசு உள்நோக்கத்துடன் செயல்படுகிறது. (உதாரணமாக, இந்த அர்ச்சகருக்கு 65 வயதுக்கு மேல் ஆகிவிட்டது. அதனால் இவரை நியமிக்கிறேன். அந்த அர்ச்சகரை விரட்டவில்லை. அவர் இன்னொரு சன்னிதியில் இருந்துகொள்ளலாம், ஆனால் அரசாங்கம் அவருக்கு சம்பளம் வழங்காது என்பது எப்படி உள்நோக்கமில்லாதது? எதற்காக ஓய்வு வயது என்று ஒன்று இருக்கிறது? அரசியலுக்கு இல்லையா?) இவர்களுக்கு இந்து மத நம்பிக்கை கிடையாது. தங்களது கொள்கைகளைத் திணித்து, கோவில் வழிபாட்டைக் குலைக்க அரசு முயல்கிறது என்று நம்புகிறேன். ஹிட்லரும், ஜெர்மானியர்களின் வேலை வாய்ப்புகளையும் வசதிகளையும் யூதர்கள் பறித்துக்கொள்கிறார்கள் என்று சொல்லித்தான் அவர்களைக் கொன்றது.

    //இப்போ அர்ச்சகர்கள் ஆகியிருக்கிறது சக இந்துக்கள் தானே.// – இவர்கள் ஆகக்கூடாது என்பது என் வாதம் இல்லை. வேலை செய்யும் ஒருவனை டிஸ்மிஸ் செய்துவிட்டு, அந்த இடத்தில் இன்னொரு மனிதனைத்தான் வேலைக்கு வைக்கிறார்கள். அப்புறம் ஏன் டிஸ்மிஸ் ஆனவர்கள் சார்பாக சங்கங்கள் செயல்படுகின்றன? யோசித்துப் பாருங்கள்.

    இறைவனை, நான் எப்படி வழிபடணும் என்பது என் விருப்பத்தைச் சார்ந்தது. அதனை அரசு சொல்ல முடியாது. அரசு, மதச்சார்பாக இருக்கிறது என்றால், கிறிஸ்துவ, இஸ்லாமிய நூல்களும் தமிழில்தான் இருக்கவேண்டும், அரசு அச்சடிக்கும் வழிபாட்டைத்தான் அவர்களும் மேற்கொள்ளவேண்டும், அங்கும், அரசாங்கத்தில் பயிற்சி பெற்றவர்கள்தான் பொறுப்பு ஏற்கவேண்டும், அவர்களுக்கு ஓய்வூதியம் உண்டு என்றெல்லாம் அரசு செய்தால், அதில் நியாயம் உண்டு.

    கட்சி என்பது எப்படி வேண்டுமானாலும் நடக்கும். அதில் கட்சி உறுப்பினர்கள் எல்லோருக்கும் சம உரிமை கிடையாது. எங்கள் நிறுவனங்களில் அந்த உரிமை கிடையாது. ஆனால் எங்களுக்குச் சம்பந்தமில்லாத கோவில்களில் நாங்கள் சொல்வதுபோல எல்லாம் மாற்றப்படவேண்டும் என்று சொல்வது எப்படி ஏற்கத்தக்கதாக இருக்கும்?

    நீங்கள் கோவிலுக்கு உங்கள் நிலத்தை எழுதிவைக்கிறீர்கள். அதனை அரசாங்கம், கிறிஸ்துவ மதத்தை வளர்ப்பதற்காக இன்னொருவருக்குக் கொடுத்தால் (உடனேயே), கோவிலுக்குக் கொடை கொடுத்தவரின் மனநிலை எவ்வாறு இருக்கும்? இதனையெல்லாம் யோசியுங்கள். கேள்வி கேட்க ஆளில்லை (கொடை கொடுத்தவர்) என்பதற்காக அரசு (நான் இந்த அரசை மட்டும் குற்றம் சொல்லவில்லை) தங்கள் இஷ்டப்படி அரசியல் செய்கின்றன.

    • புதியவன் சொல்கிறார்:

     //தமிழ்ல மந்திரங்கள் சொல்லக்கூடாது சொன்னா அது கடவுளை அவமதிக்கிற மாதிரின்னு // – இதுவும் உங்கள் assumptionதான்.

     கோர்ட்டில் ஒரு வழக்கு போடவேண்டும் என்றால் அதற்கு உரிய ஃபார்மட் இருக்கிறது. அது வெவ்வேறு மொழிகளில் (கோர்ட் அனுமதிக்கின்ற.. ஆனால் கடவுள் வழிபாட்டில் அப்படிக் கிடையாது) இருக்கலாம். கோவிலிலும் அந்த அந்த கோவில்களின் ஆகமத்திற்கேற்ற வழிபாட்டு முறைகள் உண்டு. அதனை மாற்ற யாருக்கும் அதிகாரம் கிடையாது. தமிழிலும் அர்ச்சனை செய்யப்படும் என்று எனக்குத் தெரிந்து எல்லாக் கோவில்களிலும் அறிவிப்பு பல வருடங்களாகப் பார்க்கிறேன். ஆனால், அரசு, ‘இதுதான் வழிபாட்டுக்கான தோத்திரம், இப்படித்தான் அர்ச்சனை செய்யவேண்டும்’ என்று புத்தகம் போட முடியாது. அரசு, கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் அப்படிச் செய்ய முயலுகிறதா என்று யோசியுங்கள். கோவில் பணிகளில் எதற்காக மாற்று மதத்தினரை வேலைக்கு வைக்கிறது, கோவில் நிலங்களில், கடைகளில் எதற்காக மாற்று மதத்தினருக்கு வியாபாரம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது என்றும் யோசியுங்கள். அனைவரும் மனிதர்கள்தான் என்று புதிய வாதத்தை வைக்காதீர்கள்.

     By the by, என்க்குத் தெரிந்து அனேகமாக பல ஆலயங்களில் தமிழ், சமஸ்கிருதம் ஆகிய இரண்டு மொழிகளிலும் வழிபாடுகள் உண்டு, அதிலும் குறிப்பாக தமிழ் மிக அதிகமாக உண்டு. இந்த சப்ஜெக்ட் பற்றி நிறைய எழுதலாம்.

     //சிறுதெய்வ வழிபாடுகள் உள்ள கோவில்கள்ல இன்னமும் சாதாரண இந்துக்கள் தானே// – இந்துக்கள்ல, சாதாரண, அசாதாரண இந்துக்கள் இருப்பதாக நான் நம்பவில்லை. பக்தியுடையவர்கள், பக்தியில்லாதவர்கள் என இருவர்தான் இருக்க முடியும். ஒவ்வொரு சமூகக் கோவில்களுக்கும் ஒவ்வொரு நடைமுறை. கிராம தேவதைகள் கோவில்களில் உயிர்ப்பலி, சில கோவில்களில் சாராயம், சுருட்டு போன்றவைகளையும் படைப்பது உண்டு. அது அந்த அந்த கோவில்களின் வழிமுறை. ‘உயிர்ப்பலி கூடாது’ என்று PETAவோ,இல்லை ஜெ. அவர்கள் செய்ததுபோல ‘ஆடு வெட்டக்கூடாது’ என்று அரசாங்க சட்டமோ போட்டால், செல்லுபடியாகுமா? யோசியுங்கள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s