
இந்தக் காணொலி அவரது 83-வது வயதில் –
அதாவது 2007-ல் அவர் தமிழக முதல்வராக
இருந்தபோது – எடுக்கப்பட்டது என்று தெரிகிறது…..
பத்திரிகை, தொலைக்காட்சி பேட்டியென்றால் கலைஞருக்கு
என்றும் ஆர்வம் உண்டு. முதல்வர் பதவியில் இருந்தாலும்,
உடை, ஸ்டேடஸ் பற்றிய சிந்தனைகள் இன்றி – லுங்கி கட்டிய
நிலையிலேயே தொலைக்காட்சி பேட்டி தருவதிலிருந்தே
அதை உறுதி செய்து கொள்ளலாம்.
கலைஞர் மிகச்சிறந்த உழைப்பாளி என்பது அனைவரும்
அறிந்த விஷயம்… வயது முதிர்ந்த நிலையில் கூட, தமிழ்நாடு
போன்ற பெரிய மாநிலம் ஒன்றின் முதல்வராகவும்,
மிகப்பெரிய கட்சியான திமுக-வின் தலைவராகவும் மிகவும்
உழைக்க வேண்டிய அவசியம் அவருக்கு இருந்தது…. அவற்றையும்
மிகச்சிறப்பாக கவனித்துக்கொண்டு, அவற்றைத் தாண்டி,
பொதுநிகழ்ச்சிகளில், விழாக்களில் அவர் எடுத்துக்கொண்ட
அக்கறையும் அவருக்கென்றே அபூர்வமாக அமைந்தவை.
திறமையும், உழைப்பும் – அவர் கூடப்பிறந்தவை.
உழைத்துக்கொண்டே இருந்தார் என்பது உண்மை…
ஆனால், அதற்கேற்ற பலன்களும்
அவருக்கு கிட்டின. அரசியலிலும், திரையுலகிலும்
மிகச்சிறந்த உயரத்திற்கு அவர் சென்றார்… நிறைய பெயரும், புகழும்,
பணமும் சம்பாதித்தார். எனவே அவரது உழைப்பும், திறமையும்
அவருக்கு நிறைய பலன்களை கொண்டு வந்து தந்தன.
ஆனால், இங்கே ஒரு கேள்வி எழுகிறது….
உழைப்பும், திறமையும் உடைய அனைவருக்கும் –
இந்த உயரமும், வசதியும், செல்வமும் கிடைப்பதில்லையே….. ஏன்…?
இங்கே – உழைப்பும், திறமையும் மட்டும் இருந்தால் போதாது….
கூடவே உரிய வாய்ப்பும் கிடைக்க வேண்டும்…. அந்த வாய்ப்புகளை
பயன்படுத்திக்கொள்ளும் சாமர்த்தியமும் வேண்டும்.
கடைசி மூச்சு உள்ள வரை உழைக்க அவர் விரும்பினாலும்,
அவரது விஷயத்தில் அது நடக்கவில்லை;
அவரது கடைசி சில ஆண்டுகள் கொடுமையானவை.
காது கேட்கும்… ஆனால் பேசமுடியாது…
சிந்தனைகள் செயல்படும்… ஆனால் எழுதவோ, தெரிவிக்கவோ இயலாது.
பல நிகழ்ச்சிகளில் பங்கேற்க விரும்பினாலும், நடக்க இயலாத நிலை…
உச்சகட்ட வசதிகள் இருந்தாலும் – எதையும் அனுபவிக்க
இயலாத ஒரு நிலை.
இவை எதைக் காட்டுகின்றன….?
சில விஷயங்கள்/நிகழ்வுகள் மனித சக்திக்கு அப்பாற்பட்டவை….
நம்புபவர்கள் – அதை விதி / கர்மவினை என்கிறார்கள்.
விதி /கர்மவினை என்றால் என்ன….?
நாம் செய்யும் நல்லது-கெட்டதுகளின் ஒட்டுமொத்த பலன்…
அது இந்த பிறப்பில் செய்ததாகவும் இருக்கலாம்.
முந்திய பிறப்புகளில் செய்ததாகவும் இருக்கலாம்….
முந்திய பிறப்புகள் இல்லையென்றால் –
பாவ, புண்ணியங்களின் விளைவுகள் இல்லையென்றால் –
ஒருவர் மிகப்பெரிய பணக்கார குடும்பத்திலும்,
மற்றொருவர் சாக்கடையோர சேரியிலும் பிறப்பது ஏன்…?
பிறப்பிலேயே ஒருவர் ஜீனியசாக பிறப்பது எப்படி…?
இளையராஜாவிற்கு – இந்த சங்கீத ஞானம் வந்தது எப்படி…?
இது முந்தைய பிறப்பின் தொடர்ச்சி அல்லவா…?
இந்த பிறப்பில் ஒரு பாவமும் பண்ணாதவர்கள் கூட,
வாழ்க்கையில் பல துன்பங்களை அனுபவிப்பது ஏன்….?
அதுவும் முந்தைய பிறப்பின் தொடர்ச்சி தானே….?
நல்லது செய்தால் – நல்லது கிடைக்கும்…
தப்பு செய்தால் – தண்டனை கிடைக்கும்….
அது இந்த பிறப்பிலேயும் இருக்கலாம்… அடுத்தடுத்த
பிறப்புகளிலும் இருக்கலாம்…
எனக்கு இந்த சிந்தனைகளில் நம்பிக்கை இருக்கிறது.
இந்த பிறப்பில் நான் ஒழுக்கம் உள்ளவனாக இருக்கிறேன்.
யார் குடியையும் கெடுத்ததில்லை;
என் குடும்பம், உறவுகளைத் தாண்டி – சமூகத்தில்
நிறைய பேருக்கு – நிறைய உதவிகள் செய்திருக்கிறேன்…
என் முடிவு எப்படி இருக்குமோ…. தெரியாது.
“சட்”டென்று செத்துப்போனால் – என்னிடம்
opening balance-ஆக பாவம் எதுவும் கிடையாது
என்று அர்த்தம்…
அவஸ்தைப்பட்டு தான் போனேன் – என்றால்
அது முந்தைய பிறப்புகளின் தொடர் விளைவு
என்று அர்த்தம்.
இது என் கருத்து… என் நம்பிக்கை…
இந்த நம்பிக்கை – நான் தொடர்ந்து நல்ல மனிதனாக வாழ உதவுகிறது.
இது தான் நமது தர்மத்தின் ஆணிவேர்.
//உழைப்பும், திறமையும் உடைய அனைவருக்கும் –
இந்த உயரமும், வசதியும், செல்வமும் கிடைப்பதில்லையே….. ஏன்…?
இங்கே – உழைப்பும், திறமையும் மட்டும் இருந்தால் போதாது….
கூடவே உரிய வாய்ப்பும் கிடைக்க வேண்டும்….//
வாய்ப்பு கிடைத்தவர்களெல்லாம் மேலே வந்துவிட்டார்களா? நெடுஞ்செழியனுக்கும் சம்பத்துக்கும் இன்னும் பலருக்கும் திறமை இருந்தாலும், திமுக தலைமை என்பது தொட்டுவிடும் தூரத்தில் இருந்திருந்தாலும், அந்த நாற்காலி கருணாநிதிக்குத்தான் வந்தது. தன் உழைப்பு, அகட விகட சாமர்த்தியங்கள் மூலம் அதனை ஸ்திரப்படுத்திக்கொண்டார். அவருக்கு மிகப்பெரிய சோதனை வைகோ மூலமாக வந்தது. ஆனால் அதனையும் தன் திறமையால் எதிர்கொண்டு, கடைசியில் வைகோவையே தன் வீட்டு வேலையாள் இடத்திற்குக் கொண்டுவரும் சாமர்த்தியம் அவருக்கு இருந்தது. பூர்வ ஜென்மப் புண்ணியங்களால் கிடைத்த பதவி…… இந்த ஜென்மத்தில் அதற்கு அதிகமான பாவங்களைச் செய்து தக்கவைத்துக்கொண்ட பதவி…. அதே சமயம் அதற்கான தண்டனைகளும் அவருக்குக் கிடைத்துக்கொண்டிருந்தன என்று நினைக்கிறேன். இன்றைக்கும் அரசியம் மாச்சர்யங்கள் இல்லாத பொது ஜனங்களிடம் கருணாநிதிக்கு நல்ல பெயர் இருக்காது, எம்.ஜி.ஆருக்கு மட்டுமே நல்ல பெயர் இருக்கும். (இதுபோலத்தான் அதிமுகவிலும். ஜானகி அம்மையார் பதவிக்கு வந்தாலும், முதல்வர் நாற்காலி என்பது ஜெ. வின் தலையெழுத்தாக இருந்திருக்கிறது)
அது சரி… ‘திறமை’ என்பது ஒரு பெரிய criteria அல்ல. கொடுப்பினை இருக்கவேண்டும்.
பொதுவாக இந்தப் பிறப்பில் செய்யும் புண்ணியங்கள், உடனே பலனளிக்கிறதா என்று கேட்டால், என் அறிவுக்கு எட்டியபடி.. இல்லை என்றுதான் சொல்லுவேன். புண்ணியங்கள், நமக்கு அகால மரணம் அடையவிடாமல் செய்கின்றன என்று நம்புகிறேன்.
உங்கள் கருத்தோடு நூற்றுக்கு நூறு உடன்படுகிறேன். செய்த நல்/தீ வினைகளுக்கு பலன் கிடைத்தே தீரும்! அது நிச்சயம் என்பது மட்டுமே நாம் உணரவேண்டியது. அது எப்போது என்பது ஈசன் முடிவு!