

எதாவது ஒரு துறையில் பட்டப்படிப்பு பெற்ற இளைஞர்களை
(Bachelor Degree in any subjects)
இந்திய ராணுவத்தில், அதிகாரிகளாக எடுத்துக்கொள்கிறார்கள்.
குறைந்த பட்ச தகுதி – degree plus physical fitness மட்டுமே.
சுலபமாக யார் வேண்டுமானாலும் விண்ணப்பித்து சேர்ந்து கொள்ளலாம்.
ஆனால், ரெகுலர் நியமனத்திற்கு முன்பாக ஒரு வருடம்
பல விஷயங்களில் – முக்கியமாக உடல் தகுதி – பயிற்சி
கொடுக்கப்படுகிறது. சென்னையில் கூட ஓ.டி.எஸ். பயிற்சிப்பள்ளி
இருக்கிறது.
இங்கு கொடுக்கப்படும் பயிற்சி மிக மிகக் கடினமானது.
சுலபமாக ராணுவத்தில் ஆபிசராக முடிகிறதே என்கிற ஆர்வத்துடன்
சேரும் இளைஞர்களில் பலர் பயிற்சி துவங்கிய இரண்டு மாதங்களுக்குள்
பின் வாங்கி விடுகிறார்கள்….
பாதியில் விட்டு விட்டு, பாண்டு பத்திரங்களையும் மீறி ஓடி விடுகிறார்கள்.
அவ்வளவு கடுமையான பயிற்சி.
ஆனால், வெற்றிகரமாக பயிற்சியை முடித்து விட்டால் -அதன் பிறகு
அவர்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் தான்…. எடுத்த எடுப்பிலேயே
22-23 வயதிலேயே – ராணுவத்தில் அதிகாரியாக நியமனம். அதன் பிறகு
அநேகமாக 3 வருடத்திற்கு ஒரு முறை ப்ரமோஷன்……!!!
என் நண்பர் ஒருவரது மகன் B.Sc.முடித்து விட்டு
இதற்கு விருப்பப்பட்டு விண்ணப்பம் போட்டு சேர்ந்தான்..
பயிற்சியின் கடுமையை தாக்குப்பிடிக்க முடியாமல்,
6-வது வாரம், ஒரு சனிக்கிழமை இரவு சொல்லாமல் கொள்ளாமல்
வெளியேறி வீடு வந்து விட்டான்….
அந்தப்பையன் எனக்கு சிறுவயதிலிருந்தே பழக்கமானவன்.
அவனது படிப்பு சமயத்தில் நிறைய உதவிகள் செய்திருக்கிறேன்…
என்னிடம் அவனுக்கு மிகுந்த அபிமானம் உண்டு.
நண்பர் அவனை என் வீட்டுக்கு அழைத்து வந்தார்…
நண்பரைப் போகச்சொல்லிவிட்டு நான் அவனிடம் தனியாக
பேசினேன்… அவனது செயலில் விளைவுகள் எப்படி இருக்கும்
என்பதை விளக்கினேன்… அதே சமயம் வெற்றிகரமாக
இன்னும் 10 மாதங்கள் தாங்கிக்கொண்டால் –
அவனது எதிர்காலம் எவ்வளவு ஒளிமயமாக இருக்கும் என்பதை
விளக்கினேன்…. தேசத்திற்காக சேவை செய்கிறோம் என்கிற மிகப்பெரிய மனோ திருப்தியும் கிடைக்கும்….
மேலும், இதை விட்டுவிட்டால், வெளியே ஒரு நல்ல வேலை
கிடைக்க எவ்வளவு ஆண்டுகள் அவன் காத்திருக்க வேண்டியிருக்கும்
என்பதையும் விளக்கினேன். பையன் மனம் மாறி, உடனடியாக
டிரெயினிங்க் காலேஜுக்கு திரும்பி விட்டான்….
கிட்டத்தட்ட 15 வருடங்கள் கழித்து, நான் சென்றமுறை ஜம்மு சென்றபோது
அவனைப்பார்த்தேன்….அவன் ராணுவத்தில் ஒரு பிரிகேடியர் அளவிற்கு
உயர்ந்து விட்டான்… நல்ல இடத்தில் திருமணமாகி, மனைவி
மற்றும் 2 குழந்தைகளுடன் சகல வசதிகளுடன், கௌரவமான, இனிமையான வாழ்க்கை…..அவன் எனக்கு மிகுந்த நன்றி சொன்னான்…
அந்த பயிற்சிக் கல்லூரியில் அந்த மாணவர்களுக்கு
எந்த அளவு கடினமான பயிற்சி கொடுக்கப்படுகிறது என்பதைச்
சொன்னால் கூட புரியாது….. நேரில் பார்த்தால் தான் புரியும்… அந்தப்பையன் அங்கே இருந்தபோது நான் ஒருமுறை நேரில் சென்றிருந்தேன்.,
இந்த வீடியோக்கள் மிக மிக லைட்’டாக செய்தியைச் சொல்கின்றன இருந்தாலும் பயிற்சி பற்றி கொஞ்சம் ஐடியா கிடைக்கும் – பாருங்களேன்…!!!