இது முக்கியமாக – மட்டி ‘ துர்வாசர் ‘…மற்றும் அவரது பரமார்த்த ‘ குரு ‘ தெரிந்துகொள்வதற்காக ….

கோபத்திற்கு பெயர் பெற்ற துர்வாசரின் பெயரை புனைபெயராக சூட்டிக்கொண்டு, தனது அரைகுறை அறிவை தம்பட்டம் அடித்துக்கொள்ளும் ஒரு மட்டிக்கும்,

பத்திரிகை ஆசிரியராகிய அவரது ‘ குரு ‘நாதருக்கும், கீழடி என்னும் புதைந்து கிடக்கும் தமிழ் நாகரிகத்தை தெரிய வைப்பதற்காகவும் –

இந்த விவரங்கள் மண்டையில் ஏறிய பிறகாவது அவர்கள் தொடர்ந்து உளறுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காகவும் எழுதப்படுகிறது இந்த இடுகை.

இந்தியத் தொல்பொருள் ஆய்வுத் துறை 2013-14 ஆம் ஆண்டில்
வைகை நதிக்கரையில் ஓர் ஆய்வை மேற்கொண்டது.
வெள்ளிமலையில் தொடங்கி தேனி, திண்டுக்கல், மதுரை,
சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களின் வழியே 250 கி.மீ
தூரம் ஓடும் வைகை நதியின் இருகரைகளிலும் உள்ள
400 கிராமங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஓர் ஆண்டு முழுவதும் இந்த 400 கிராமங்களில் அலைந்து திரிந்து
மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் அவர்கள் 263 புதை மேடுகளையும்
90 வாழ்விடங்களையும் இனம் கண்டார்கள்.

அதில் வாழ்விடங்களான கீழடி, மாரநாடு, சித்தர் நத்தம்,
டொம்பச்சேரி, அல்லிநகரம், ராஜகம்பீரம், பாண்டிக்கண்மாய்,
அரசநகரி ஆகிய இடங்களைப் பரிசீலித்து அதில் கீழடி, மாரநாடு,
சித்தர் நத்தம் ஆகிய மூன்று கிராமங்களைத் தங்களின் அடுத்த கட்ட
ஆய்விற்கு இந்தக் குழுவினர் தேர்வு செய்தனர்.

கீழடி – கொந்தகை ஆகிய இரு கிராமங்கள் 13-ம் நூற்றாண்டில்
குந்திதேவி சதுர்வேதி மங்கலம் என்கிற பெயரால் அழைக்கப்பட்டது.
சதுர்வேதி மங்கலத்தின் கிழக்கு முனைதான் கீழடி என்று இன்று
அழைக்கப்படுகிறது, பின்னாள்களில் சதுர்வேதி மங்கலம் என்கிற
வார்த்தை மறுவி கொந்தகையாக மாறியது. கீழடி, கொந்தகை,
மணலூர் ஆகிய மூன்று கிராமங்களின் எல்லைகளுள் ஒரு
தொல்லியல் மேடு இருப்பதைக் குழுவினர் கண்டறிந்தனர்.
இந்தத் தொல்லியல் மேட்டின் பெயர்தான் பள்ளிச்சந்தைத் திடல்.
இந்தப் பள்ளிச்சந்தைத் திடலைத்தான் தங்களின் ஆய்வுக் களமாக
முடிவு செய்து இங்கே அகழாய்வை மேற்கொள்ள இந்தியத்
தொல்லியல் துறை முடிவு செய்தது.

கடந்த இரு நூற்றாண்டுகளாக வைகை நதிப்பகுதிகளில்
பல ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. 1888-ல் பரவை, அனுப்பானடி,
துவரிமான் பகுதிகள், 1976-ல் தே.கல்லுப்பட்டி, 1980-ல்
கோவலன் பொட்டல், 1986-ல் அழகன்குளம், 2007-ல் மாங்குளம்
என இந்த அகழாய்வுகளின் வழியே மிக முக்கியக் கண்டுபிடிப்புகள்
நிகழ்த்தப்பட்டுள்ளன.

வைகை நதிக்கரையில் 1950களில் முனைவர் கே.வி.ரமணா அவர்கள்
பல இடங்களில் ஆய்வுகள் செய்துள்ளார். 2006-ல் முனைவர்
கா.ராஜன் அவர்கள் மேற்கொண்ட ஆய்வுகளின் வழியேதான்
நமக்கு புலிமான்கொம்பை, தாதப்பட்டி நடுகற்கள் கிடைத்தன.

கீழடியில் அகழாய்வுக் குழிகளில் 1.5 மீட்டர் ஆழத்தில் களி மண்ணும்
அதற்குக் கீழ் 4.5 மீட்டர் ஆழம் வரை மணலும் இருக்கின்றன.
இந்த மணல் வைகை ஆறு இங்கே பாய்ந்ததற்கான சான்றாகவும்
பின்னர் ஆறு தனது பாதையை மாற்றியிருப்பதற்கான வாய்ப்புகள்
உள்ளன என்பதையும் உறுதிப்படுத்துகிறது.

இந்த அகழாய்வு இந்தியத் தொல்லியல் துறையில் தொல்லியல்
அறிஞர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்கள் தலைமையில்
தொடங்கியது. கீழடி மற்றும் அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த
தொழிலாளர்கள் அகழாய்வு நிபுணர்களின் மேற்பார்வையில்
புதைந்திருக்கும் அரிய பொக்கிஷங்களைக் கண்டெடுத்தார்கள்.
மூன்று ஆண்டுகள் இந்தியத் தொல்லியல் துறையும் அதனைத்
தொடர்ந்து தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறையும்
தொடர்ச்சியாகக் கீழடியில் அகழாய்வுகளை மேற்கொண்டு
வருகின்றன.

கீழடியில் அகழாய்வுகள் தொடங்கிய நாளில் இருந்தே நமக்கு
அந்த நிலம் ஆச்சரியங்களை வழங்கியபடி இருக்கிறது.
அங்கு கிடைத்த பொருள்களை வைத்து அங்கு வாழ்ந்தவர்கள்
ஒரு வேளாண் சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்பதும்,
அவர்கள் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டிருந்தார்கள் என்பதையும்
தெளிவுபடக் கூறலாம். அவர்களின் வசிப்பிடங்களில் பாவிக்கப்பட்ட
கட்டுமானப் பொருள்கள் நமக்குக் கிடைத்துள்ளன.
செங்கற்கள், சுண்ணாம்பு சார்ந்த கூரை ஓடுகள், சுடுமண்ணாலான
உறைகிணறுகள், இரும்பு ஆணிகள் கிடைத்துள்ளன.

கீழடியில் கிடைத்த பானைகளில் உள்ள கீறல் குறியீடுகள்,
தமிழி எழுத்துகள் சங்க காலத் தமிழர்களின் எழுத்தறிவை
நமக்குப் பறைசாற்றுகின்றன. ‘ஆதன்’, ‘உதிரன்’, ‘திசன்’,
‘குவிரன் ஆத(ன்)’ போன்ற பெயர்களைக் குறிப்பிடும்
தமிழி எழுத்துகள் பொறிக்கப்பட்ட மண்பாண்ட ஓடுகளும்
கிடைத்துள்ளன. தாமிரத்தாலான கண் மை தீட்டும் குச்சி,
இரும்பாலான அம்பு முனைகள், எழுத்தாணி, சுடுமண்
முத்திரைக் கட்டைகள் உட்பட பல்வேறு அரிய தொல்பொருள்கள்
கிடைத்துள்ளன.

அங்கு கிடைத்த சில கைவினைப் பொருள்கள், அவர்கள்
கைவினைத் தொழில்களில் தேர்ந்தவர்களாக இருந்தார்கள்
என்பதை நிறுவுகின்றன. தக்களிகள், எலும்பினாலான
கூர்முனைகள், அரவைக் கல், தந்தத்தினாலான சீப்புகள்,
நீள் கழுத்து நீர்க்குடுவைகள், மணி வகைகள் என ஏராளமான
பொருள்கள் அவர்களின் தொழில் சார் நடவடிக்கைகளையும்,
கைவினைப் புலமையையும், வாழ்வியலையும் நமக்கு உணர்த்துகின்றன.

கீழடியில் வாழ்ந்த பண்டைய மக்களின் வாழ்க்கை முறையை
அங்கு கிடைத்த மதிப்பான அணிகலன்களின் வழியே காண முடிகிறது.
தங்கத்தினாலான தொங்கட்டான், மணி, தகடு, வளையம்,
கண்ணாடி மணிகள் என அழகிய அணிகலன்கள் கிடைத்துள்ளன.

பண்டைய மக்களின் விளையாட்டுப் பொருள்களும் நமக்கு
அகழாய்வில் கிடைத்துள்ளன. பகடைக்காய்கள், வட்டச்சில்லுகள்,
ஆட்டக்காய்கள், தந்தத்தினாலான தாயக்கட்டை என நமக்கு
அங்கு பல முக்கியச் சான்றுகள் கிடைத்துள்ளன.

அவர்கள் ரோமாபுரியுடன் கொண்டிருந்த வணிகத் தொடர்பை
உறுதிப்படுத்தும் வகையில் கீழடியில் அகேட் மற்றும்
கார்னீலியன் (சூதுபவளம்), ரெளலட்ட மட்கலன்கள் கிடைத்துள்ளன.
மனித சமூகத்தின் மிகத் தொன்மையான கலைவடிவமான
சுடுமண் உருவங்கள், புடைப்பு உருவங்கள் அங்கு கிடைத்துள்ளன.
13 மனித உருவங்களும், 3 விலங்கு உருவங்களும் அகழாய்வில்
கிடைத்துள்ளன. செம்பினால் செய்யப்பட்ட அரிய பொருள்களும்
நமக்கு அங்கு கிடைத்துள்ளன.

ஒரு நகரத்திற்கு நீர் வழங்குதலும் கழிவுநீர் அகற்றலும்
நாகரிக வளர்ச்சியின் முக்கிய அம்சங்களாகக் கருதப்பட்டன.
கீழடியில் சுடுமண் குழாய்களால் அமைக்கப்பட்ட கழிவுநீர்க்
கால்வாய் வசதியுடன் கட்டடங்கள் இருந்தன என்று
கண்டறியப்பட்டுள்ளது. மூன்று உறைகிணறுகள் வெவ்வேறு
மட்டங்களில் கிடைத்துள்ளன.

இதைப் பொறுத்து அந்தக் காலத்தில் இருந்த நீர் மட்டங்களின்
உயரத்தைக் கணிக்க முடிகிறது. நீர் மட்டம் குறைந்ததால்
அடுத்து அடுத்து இன்னும் கூடுதல் ஆழத்திற்கு உறைகிணறுகள்
அமைக்கப்பட்டதா என்பதை மண் பரிசோதனைகள் மூலம்
அறியலாம். அது மட்டும் அல்லாது இங்கு கிடைத்த செங்கற்கள்
நான்கு அளவுகளில் கிடைத்துள்ளன. 46, 38, 36, 34 சென்டிமீட்டர்
அளவுகளில் அவை இருப்பதால் இவை அனைத்தும் வெவ்வேறு
காலகட்டங்களைச் சார்ந்தவையாக இருக்கலாம் என்று
கணிக்கப்படுகிறது. சங்ககாலத்தில் கட்டடங்களே இல்லை
என்கிற இதுகாறும் நிலவிவந்த நம்பிக்கையைக் கீழடி அகழாய்வு
மாற்றியமைத்துள்ளது.

வரலாற்றின் தொடக்கக்காலத்தைச் சேர்ந்த கறுப்பு சிவப்பு
மண்பாண்ட ஓடுகள், வெள்ளை வண்ணம் பூசப்பட்ட கறுப்பு சிவப்பு
மண்பாண்டத் துண்டுகள், செம்பழுப்பு நிறக் கலவை பூசப்பட்ட
மண்பாண்டத் துண்டுகள் ஆகியவையும் கிடைத்துள்ளன.
தமிழகத்தில் செம்பழுப்பு நிற ரசட் (russet) கலவை
பூசப்பட்ட பாண்டங்கள் இதுவரை கொங்குப் பகுதியில் மட்டுமே
கிடைத்திருப்பதைக் கொண்டு இப்பகுதி கொங்குப் பகுதியுடனும்
வாணிபத் தொடர்பிலிருந்ததாகவும் அறிஞர்கள் கருதுகிறார்கள்.

கீழடியில் உள்ள கட்டடங்களின் தரைத்தளங்களும்,
நீண்டு செல்லும் மதில் சுவர்களும் நகர நாகரிகத்திற்கு வேண்டிய
அனைத்துக் கட்டமைப்புகளையும் இந்த நகரம் கொண்டிருந்தது எ
ன்பதை உறுதிப்படுத்துகின்றன.

2018ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட நான்காம் கட்ட அகழாய்வின்
போது சேகரிக்கப்பட்ட ஆறு கரிம மாதிரிகள், அமெரிக்க நாட்டின்
புளோரிடா மாகாணம் மியாமி நகரத்தில் அமைந்துள்ள பீட்டா
பகுப்பாய்வு சோதனை ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன,
ஆறு கரிம மாதிரிகளின் காலம் கி.மு 6-ஆம் நூற்றாண்டிற்கும்
கி.மு 3-ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்டதாகும்.

அதாவது, இன்றைக்கு சுமார் 2600 ஆண்டுகளுக்கு முந்தியவை
என்று சோதனைகள் உறுதிப்படுத்துகின்றன.

353 செ.மீ ஆழத்தில் கிடைத்த இந்தக் கரிமத்தின் காலம்
கி.மு 6-ஆம் நூற்றாண்டு என்றும் 200 செ.மீ ஆழத்தில்
சேகரிக்கப்பட்ட மற்றொரு கரிமத்தின் காலம் கி.மு 3-ஆம்
நூற்றாண்டு என்றும் காலம் கணிக்கப்பட்டது.

கீழடி அகழாய்வில் ஆயிரக்கணக்கான பொருள்களை உறைந்த
நிலையில் காலம் பாதுகாத்து நம்மிடம் வழங்கியிருக்கிறது.

இவற்றை பத்திரமாக மீட்டு, வெளியே கொண்டுவந்து உலகிற்கு இந்த நாகரிகத்தை வெளிச்சம் போட்டு காட்ட வேண்டியது –

தமிழனின் கடமை மட்டுமல்ல….

இந்தியன் என்று பெருமையுடன் சொல்லிக்கொள்ளும் ஒவ்வொருவரின் கடமையும் கூட…!!!

நான் தமிழன், நான் இந்தியன் – எனவே, இந்த கீழடி நாகரிகம் குறித்து நான் பெருமிதம் கொள்கிறேன்…. இதை முழுவதுமாக வெளிக்கொண்டு வந்து உலகத்தோரின் பார்வைக்கு கொண்டு செல்ல இயன்றதனைத்தையும் நாம் செய்ய வேண்டுமென்று விரும்புகிறேன்.

இது குறித்து முழுவதுமாக அறியாமல், அறிந்துகொள்ள எந்தவித முயற்சியும் எடுக்காமல் பத்திரிகை கையில் இருக்கிறது என்பதற்காக கண்டபடி உளறும் பேர்வழிகள் இந்த கட்டுரையைப் படித்தபிறகாவது உளறுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். ” மேதாவி “ஆசிரியர்கள் தங்கள் இதழில் வெளிவரும் உளறல்களுக்கு தாமே பொறுப்பாளி என்பதை உணர வேண்டும்.

(நன்றி – தமிழக தொல்லியல் துறை )

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , . Bookmark the permalink.

3 Responses to இது முக்கியமாக – மட்டி ‘ துர்வாசர் ‘…மற்றும் அவரது பரமார்த்த ‘ குரு ‘ தெரிந்துகொள்வதற்காக ….

 1. Arul சொல்கிறார்:

  GURU VUM THURVAASAR peyaril eluthum RAMESH? shows their face….BLOOD IS THICKER THAN WATER…worst people

 2. atpu555 சொல்கிறார்:

  மிகவும் பயனுள்ள, அரிய தகவல்கள் நிறைந்த பதிவு! நன்றி.

 3. புதியவன் சொல்கிறார்:

  பதிவு வெளியானபோதே இது பற்றி எழுதவேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் எழுதுவதற்கான நேரமோ நினைவோ இல்லை. பதிவுக்கு எதிரான கருத்து என்றால் நிச்சயம் எழுத மறக்கக்கூடாது என்பது என் எண்ணம்,

  /கீழடி அகழாய்வில் ஆயிரக்கணக்கான பொருள்களை உறைந்த நிலையில் காலம் பாதுகாத்து நம்மிடம் வழங்கியிருக்கிறது. இவற்றை பத்திரமாக மீட்டு, வெளியே கொண்டுவந்து உலகிற்கு இந்த நாகரிகத்தை வெளிச்சம் போட்டு காட்ட வேண்டியது –//

  அகழாய்வு செய்யவேண்டியது அவசியம்தான். மற்ற மாநிலங்களுக்கு உள்ள உரிமையில் (அதாவது மத்திய அரசின் fund allocationல்) தமிழகத்துக்கும் அதே உரிமை உண்டு என்பதை மறக்கக்கூடாது.

  தமிழக அரசு, ‘கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன்’ ஆக பெரும்பாலும் (கடந்த 50-60 ஆண்டுகளாக) இருந்திருக்கலாம். அதற்காக, இருப்பதையே ஒழுங்காக வைத்துக்கொண்டு பராமரிக்கத் தெரியாதவனுக்கு, எதுக்கு வெட்டிச் செலவு என்று நினைத்து, கீழடியை அகழ்வாய்வு செய்வதில் சுணக்கம் காட்டக்கூடாது. இதனை தமிழக அரசின் பொறுப்பிலும் விடக்கூடாது. அவர்கள் தோண்டுவதை விட, அமுக்குவதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள் என்று பலர் பேசுவதிலும் அர்த்தம் உண்டு.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.