

” இளமையெல்லாம் வெறும் கனவு மயம் –
இதில், மறைந்தது சில காலம்
தெளிவுமறியாது, முடிவும் தெரியாது –
மயங்குது எதிர்காலம் ….
பல காலம் வரை….
இந்த வார்த்தைகள் என் சிந்தையில் சுழன்றுகொண்டே இருந்தன.
15 முதல் 25 வயது வரை இருந்த அந்த காலங்களில் –
எதிர்காலம் எப்படி இருக்கப்போகிறதோ…
வாழ்க்கையில் எந்தவித உத்திரவாதமும் இல்லாத நிலையில்
எதிர்காலத்தை எப்படி சந்திக்கப்போகிறோம் என்கிற அந்த கவலை –
மனநிலை – அந்த காலத்து இளைஞர்கள் பலருக்கும் இருந்திருக்கும்….
SSLC -க்கு மேல் படிக்க முடியாமல், வேலையும் கிடைக்காமல்,
வீட்டில் தண்டச்சோறு பட்டம் வாங்கிக்கொண்டு லட்சக்கணக்கான
இளைஞர்கள் வேலை தேடி அலைந்து கொண்டிருந்த காலம் அது….
( முதலில், அவ்வளவு கவலையில் இருந்த நான் பிறகு SSLC
ரிசல்ட் வரும் முன்பே வேலை தேடிக்கொண்டு விட்டது
என் அதிருஷ்டம் …!!! படிப்பே தேவைப்படாத அந்த
என் முதல் வேலையில் என் மாதச் சம்பளம் அறுபது ரூபாய்…! )
இப்படி, பலரது வாழ்க்கைக்கு தொடர்புடைய விஷயங்களை
எல்லாம் தொட்டு விட்டு, கூடவே –
இந்த நிஜவாழ்க்கை சம்பந்தங்களையெல்லாம் தாண்டி –
கதையின் பாத்திரங்களை சரியாக உணர்ந்து,
கதையையும், ஆழமாக உள்வாங்கிக்கொண்டு,
கவிஞர் கண்ணதாசன் இயற்றி
எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் உருவாக்கிய இந்த பாடல் –
பலரது வாழ்க்கையில் மறக்க முடியாத பாடல் ….
கதைக்கும், காட்சிக்கும், அந்த காட்சியில் தோன்றும்
3 கதா பாத்திரங்களுக்கும் மிகவும் பொருத்தமாக
அமைந்திருக்கும் இந்தப்பாடலின் வரிகள்.
படத்தைப் பார்த்தவர்களுக்கு இது நன்றாகப் புரிந்திருக்கும்.
உற்சாகத்தையும், ஏக்கத்தையும் – ஒரே பாடலில்
குழைத்துத்தர மெல்லிசை மன்னரால் எப்படித்தான் முடிந்ததோ…!!!!
படம் – பாக்கியலக்ஷ்மி
வெளிவந்த வருடம் – 1961
சந்திரகான்ஸ் ராகம் .
பாடல் வரி , இசை , குரல் எல்லாம் அற்புதம் .
கண்ணதாசன் வரிகள் கேட்கும் போது ஸ்ரீ ஆண்டாள்
எழுதிய நாச்சியார் திருமொழி ஞாபகம் வரும்.
பி சுசீலா அவர்கள் மிக ஈடுபாட்டோடு பாடிய
அவருக்கு பிடித்த ஒரு பாடல் .
தோழி என்பதை பிசிறடிக்காமல் பாடியிருப்பார் .
பாடலில் ஒரு சில இடத்தில ஷெனாய் வருகிறது.
திரு ராமமூர்த்தி செய்த நகாசு வேலை !
சோகத்தை அப்படியே கொண்டு வருகின்றது .