
கதாசிரியர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், கவிஞர் கண்ணதாசனிடம்
மிக நீண்ட காலம் உதவியாளராக இருந்தவர் – பஞ்சு அருணாசலம்
அவர்கள் சொல்லும் ஒரு சுவாரஸ்யமான விஷயம் …..
நான் பரபரப்பாக எழுதிக்கொண்டிருந்த காலகட்டங்களில், தற்போது
இருக்கும் தி.நகர் பாகீரதி அம்மாள் தெரு வீட்டுக்குக் குடிவந்துவிட்டேன்.
மூசா தெரு வாடகை வீட்டைவிட இந்த வீடு வசதியாகவே இருந்தது.
ஆனாலும் நான் பாம்குரோவ் ஹோட்டல் அறையையும் தொடர்ந்தேன்.
அங்குதான் எழுதுவது, நண்பர்களைச் சந்திப்பது என்று இருப்பேன்.
மகேந்திரன் சார், கமல், ரஜினி, பாரதிராஜா… என்று பலரும் அங்கு
வந்து போவார்கள். அப்படி ஒருநாள் நான், இளையராஜா, மகேந்திரன் சார்
மூவரும் வேடிக்கையாகப் பேசிக்கொண்டிருந்தபோது எதேச்சையாக
எனக்கோர் எண்ணம் தோன்றியது.
‘ஃபாரீன்ல நடந்த குற்றவழக்குகளை வெச்சு, அங்கே நிறையப் படங்கள்
பண்ணிட்டிருக்காங்க. அப்படி நாமளும் இங்கு நடந்த ஒரு வழக்கை
எடுத்துக்கிட்டு திரைக்கதை அமைக்கலாமே’ என்று தோன்றியது.
அதற்கு ‘லெட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ பொருத்தமா இருக்கும்’
என நினைத்தேன். இங்கு உள்ள சீனியர்களுக்கு அந்த வழக்கு பற்றி
தெரிந்திருக்கும். அப்போது அந்த வழக்கு பெரும் பரபரப்பாகப்
பேசப்பட்டது. எம்.கே.தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன்
இருவரும் அப்போது சினிமாவில் பரபரப்பாக இருந்த நேரம்.
அந்தச் சமயத்தில் அவர்களைப் பற்றி லெட்சுமிகாந்தன் பரபரப்பாக
தன் பத்திரிகையில் எழுதியிருக்கிறார். தொடர்ந்து தங்களைப் பற்றி
நெகட்டிவான செய்திகள் வருவதைப் பார்த்து, இவர்களுக்கு வருத்தம்.
\ஒருகட்டத்தில், அந்த லெட்சுமிகாந்தன் கொலை செய்யப்படுகிறார்.
பாகவதர், என்.எஸ்.கே இருவரும் சேர்ந்துதான் லெட்சுமிகாந்தனைக்
கொலை செய்துவிட்டதாக வழக்கு.
இந்த வழக்கை வைத்து படம் எடுக்கலாம் என்று முடிவானதும்,
‘யாரை வெச்சு எடுக்கப்போறீங்க?’ என்று இளையராஜா கேட்டார்.
அப்போது நான் சிறிய யோசனைக்குப் பிறகு, ‘இதுல ஆர்ட்டிஸ்ட்
நடிச்சா ஒரிஜினாலிட்டி வராது. நாம நாமளாவே நடிப்போம்.
டைரக்டர் மகேந்திரன், கதாசிரியர் பஞ்சு அருணாசலம்,
இசையமைப்பாளர் இளையராஜா. நம்ம மூணு பேரும் அவங்கவங்க
துறைகள்ல முன்னுக்கு வந்துட்டிருக்கோம். இது பொறுக்காத ஒரு
பத்திரிகையாளர், நம்மைப் பற்றி தொடர்ந்து தப்பா எழுதிட்டே
இருக்கார். ‘என்ன இப்படி எழுதிட்டிருக்கான். நேர்ல பார்த்தேன்…
அவனைச் சும்மா விட மாட்டோம்’ என்று நாம நம் கோபத்தை
ஒரு பொது இடத்துல சொல்லியிருப்போம். இதற்கு இடையில்
அந்தப் பத்திரிகையாளரை யாரோ வேறொருவர் கொலை செய்துவிட,
அந்தப் பழி நம் மீது விழுது.
‘கதாசிரியர் பஞ்சு அருணாசலம், இசையமைப்பாளர் இளையராஜா,
இயக்குநர் மகேந்திரன் மூவரைப் பற்றியும் இவர் தொடர்ந்து விமர்சித்து
எழுதிவந்ததால் இவர்கள் கோபப்பட்டு அவரைக் கொன்றுவிட்டனர்’
என்று நம் மூணு பேர் மீதும் கொலை வழக்கு பதிஞ்சு, கைது பண்ணி
சிறையில அடைச்சுடுறாங்க. ‘மனசாட்சிப்படி நாம ஒண்ணும் பண்ணலை.
விதிப்படி நடக்கட்டும்’னு ஜெயில்ல உட்கார்ந்துட்டு அடுத்த படம் பற்றி
பேசுறோம். நீங்க அந்தப் படத்துக்கான பாடல்களுக்கு ட்யூன் போடுறீங்க.
நான் பாட்டு எழுதுறேன். வெளியில நம்ம வழக்கு பரபரப்பா
நடந்துட்டிருக்கு. ஆனால், நாம அந்த வழக்கு எதையும் மனசுல
வெச்சுக்காம, ஜெயில்ல நம்ம வேலையைத் தொடர்ந்து பார்த்துட்டே
இருக்கோம்.
இதற்கு இடையில நம் தரப்பு வக்கீலா கமல்கிட்டயும், அரசு தரப்பு
வக்கீல் கேரக்டருக்கு ரஜினிகிட்டயும் கேட்போம். ஒருகட்டத்தில் அந்த
வழக்கில் அவர்கள் இருவரும் சேர்ந்து உண்மையான குற்றவாளியை
எப்படிக் கண்டுபிடிக்கிறாங்க என்பதை பரபரப்பான ஒரு க்ளைமாக்ஸுடன்
முடிப்போம்’ என்று அந்தக் கதையைப் பற்றி விளக்கமாகச் சொன்னேன்.
மகேந்திரன், இளையராஜா இருவருக்குமே அந்தக் கதை பிடித்திருந்தது.
அந்தப் படத்தில் மூவரும் நடிப்பதாக உறுதியானது. பிறகு,
‘லெட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ பற்றி பல்வேறு இடங்களில்
பேசி, ஒட்டுமொத்தத் தகவல்களையும் சேகரித்து திரைக்கதை
எழுதிக்கொண்டிருந்தேன்.
இதற்கு இடையில் நாங்கள் மூவரும் இணைந்து பங்கேற்ற
போட்டோஷூட் நடத்தினோம். அந்தப் படங்களுடன் நாளிதழ்களுக்கு
முழுப்பக்க விளம்பரம் கொடுத்தோம். அந்த விளம்பரத்தைப்
பார்த்துவிட்டு சினிமாவில் இருந்த பலருக்கு அதிர்ச்சி, ஆச்சர்யம்.
பல பேர் வாழ்த்தினார்கள். சிலர், ‘உங்களுக்கு ஏன்யா இந்த வேண்டாத
வேலை? உங்க வேலையைப் பாருங்க. ராஜாவுக்கு 10 படங்கள்
போயிட்டிருக்கு. உங்களுக்கு ரஜினி, கமல் படம் இருக்கு. மகேந்திரனும்
பரபரப்பா இருக்கிறவர். ‘நடிகர்களா நம்மை நிரூபிச்சே ஆகணும்’னு
நினைக்க ஆரம்பிப்பீங்க. அப்புறம் ஏற்கெனவே நீங்க பண்ணிட்டிருக்கிற
வேலைகள்ல உங்க கவனம் போயிடும். அறிவிப்போட நிப்பாட்டிடுங்க’
என்று அறிவுரை கூறினார்கள்.
எங்களுக்குக் குழப்பம்… யோசிக்க ஆரம்பித்தோம். அந்தச் சமயத்தில்
வந்துகொண்டிருந்த 95 சதவிகிதப் படங்களுக்கு இளையராஜாதான் இசை.
அவர்கள் சொல்வதுபோல இந்த முயற்சி பலரையும் சிரமப்படுத்தும்
எனத் தெரிந்தது. ‘நாமதான் ஆரம்பிச்சோம். நாமளே முடிப்போம்’
என்று நினைத்து, அந்தப் படத்தை அறிவிப்போடு
நிறுத்திக்கொண்டோம்!
சுவையான செய்தி! இந்தக் கதையை வேறு எவராவது திரைப்படமாக எடுத்தார்களா?
atpu555,
இல்லை.
யாருக்கும் அந்த துணிச்சல் வரவில்லை;
கமர்ஷியலாக ஓடக்கூடிய அளவிற்கு
அந்தக்கதையில் விஷயமில்லை என்பதால்,
எடுத்திருந்தால் கூட, வெற்றிகரமாக
ஓடியிருக்க வாய்ப்பு குறைவே.
அவர்கள் கைவிட்டதே நல்லது தான்.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
இந்தத் தலைப்பில் எடுக்காவிட்டாலும் பாகவதருடைய கதையாக எடுத்திருக்கலாம். புகழின் உச்சியிலிருந்து வீழ்ந்தவரல்லவா அவர். அதுவே பலருக்கு ஒரு படிப்பினையாக அமைந்திருக்கும்.
தியாகராய பாகவதர் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்கும் கனவு எனக்கும் இருக்கிறது. ஆனால், திரைத்துறையில் என்னால் நுழைய முடியவில்லை. சொந்தமாக எடுக்கும் அளவுக்கு பணவசதியும் இல்லை.
ஜஸ்டின்,
திரையுலகம் என்பது பெரும்பாலானாருக்கு
கனவாகவே இருக்கிறது….
உங்கள் கனவை வேறு விதங்களில்
செயல்படுத்த முயற்சி செய்யுங்கள்.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்