எம்.ஜி.ஆரை ” டேய் ராமச்சந்திரா ” என்று அழைத்தஇயக்குநர் ….!!!

டி.ஆர்.ரகுநாத், அந்தக் காலத்தில் பிரபல இயக்குநர்.

இவர், எம்.ஜி.ஆரை, துணை நடிகராக சில்லரை பாத்திரங்களில்
நடித்துக்கொண்டிருந்த அவரது துவக்க காலத்திலிருந்து
பார்த்துக்கொண்டு வந்ததால், அவரை ‘டேய் ராமச்சந்திரா…’
என்றுதான் உரிமையுடன் அழைப்பார்.

இருவரும் சேர்ந்து பல படங்களில் வேலை பார்த்ததால்
எடுத்துக்கொண்டது அந்த உரிமை.

அப்போது ரகுநாத், எம்.ஜி.ஆரை வைத்து ‘மதுரை வீரன்’ படத்தை
இயக்கிக்கொண்டிருந்தார். படப்பிடிப்புத் தளத்தில், ‘ராமச்சந்திரா ரெடியா…
ஷாட் போகலாமா?’ என்று கத்திக் கேட்பாராம்.

“மதுரை வீரன்” காலத்திலெல்லாம், எம்.ஜி.ஆர், மிகப்பெரிய அளவில் கதாநாயகனாக புகழ் பெற்றிருந்தார்.
அவர் தி.மு.க கட்சியிலும் வளர்ந்துவிட்டார். அவருக்கு என பெரிய பெயர் வந்துவிட்டது. அப்போது அவர் எங்கு இருக்கிறார் என்பதைத்
தெரிந்துகொண்டு, வெளியூர்களில் இருந்து எல்லாம் ரசிகர்கள்,
அவரைப் பார்க்க வாடகைக்கு பஸ்களை எடுத்துக்கொண்டு அடிக்கடி
வருவார்களாம்.

ஒருமுறை அப்படி ‘மதுரை வீரன்’ படப்பிடிப்பு சமயத்தில் எம்.ஜி.ஆரைப்
பார்க்க வெளியூர்களில் இருந்து அவரின் ரசிகர்கள் வந்திருக்கிறார்கள்.
அவர்கள் இருக்கும் அந்தச் சமயத்தில், ரகுநாத் சிகரெட் பிடித்தபடி,
‘என்னடா ஷாட் ரெடியா? அந்த ராமச்சந்திரன் என்னடா பண்றான்?
வரச் சொல்லுடா அவனை’ என சத்தம்போட்டிருக்கிறார்.
அதற்கு அவரின் உதவி இயக்குநர் ஒருவர், ‘இப்ப வந்துடுவார் சார்.
ரசிகர்கள்கிட்ட பேசிட்டிருக்கார்’ எனச் சொல்லியிருக்கிறார்.
‘அதெல்லாம் ஷாட் முடிச்சுட்டுப் போய் பேசலாம்னு சொல்லு. முதல்ல
அவனை வரச் சொல்லுடா’ என்று சத்தம்போட்டு சொல்லியிருக்கிறார்.

ரகுநாத் சத்தம்போடுவது, எம்.ஜி.ஆரைச் சந்திக்க வந்த ரசிகர்களுக்குக்
கேட்டிருக்கிறது. உடனே ரசிகர்களில் ஒருவர், ‘யாருண்ணே,
உங்களையே `ராமச்சந்திரன்’னு பேர் சொல்லிக் கூப்பிடுறது? அவன்கிட்ட
சொல்லிவையுங்க. கை-கால உடைச்சிடுவோம்’ என்று எம்.ஜி.ஆரிடம்
கோபமாகச் சொல்லியிருக்கிறார். உடனே எம்.ஜி.ஆர்., ‘உஷ்… அப்படி
எல்லாம் பேசக் கூடாது. டைரக்டர். அவர் என் குரு’ என்று அந்த
ரசிகரை ஆசுவாசப்படுத்தி அனுப்பிவைத்திருக்கிறார்.

அன்று ஷூட்டிங் முடிந்த பிறகு, இயக்குநர் ரகுநாத்தை, எம்.ஜி.ஆர்
தனியாக அழைத்துபோய், ‘அண்ணே… நான் சொல்றேன்னு தப்பா
எடுத்துக்காதீங்க. உங்க நன்மைக்காகத்தான் சொல்றேன். தெரிஞ்சோ,
தெரியாமலோ மக்கள் என்னை பெரிய இடத்துல கொண்டுபோய்
வெச்சுட்டாங்க.

ரசிகர் மன்றங்களும் நிறைய ஆகிப்போச்சு. நீங்களும் நானும் தனியா
இருக்கும்போது என்னை எப்படி வேணும்னாலும் கூப்பிடுங்க.
‘ராமச்சந்திரா’னு கூப்பிடுங்க, ‘டேய்’னு கூடக் கூப்பிடுங்க.
எல்லா உரிமையும் உங்களுக்கு இருக்கு.

ஆனா, என் ரசிகர்கள் இருக்கும்போது அப்படிக் கூப்பிடாதீங்கண்ணே.
என் மரியாதைக்காக இதை நான் சொல்லலை. நாளைக்கு நீங்க
எங்கேயாவது கார்ல தனியா போகும்போது கல்லை விட்டு
எறிஞ்சாங்கன்னா நல்லாவா இருக்கும்? உங்க நன்மைக்காகத்தான்
சொல்றேன்’ என்று சொல்லியிருக்கிறார்….!!! ( ஒரே கல்லில் -2 மாங்காய்…? )

‘ஆமாம்பா… நீ சொல்றது சரிதான். இதை நான் யோசிக்கவே இல்லை.
இனி அப்படி நடக்காதுப்பா’ என ரகுநாத்தும் சொல்லியிருக்கிறார்.
ஆனால், மறுநாள் படப்பிடிப்பில் அவரை அறியாமலேயே
‘டேய் ராமச்சந்திரா’ என்று கூப்பிட்டுவிட்டார். ‘ஐயய்யோ…
பழக்கதோஷத்துல வந்துடுச்சே!’ என நாக்கைக் கடித்துக்கொண்டாராம்.

தயாரிப்பாளர் லேனா செட்டியாரிடம் போய் விஷயத்தைச் சொல்லி,
‘அவன் சொல்றதுலயும் நியாயம் இருக்கு. அதனால நாளையில இருந்து
இந்தப் படத்தை நான் டைரக்ட் பண்ணலை’ எனச் சொல்லியிருக்கிறார்.
லேனா செட்டியார் பதறிவிட்டார். ‘இதெல்லாம் பெரிய விஷயமா சாமி.
பழக்கம்தானே, மாத்திக்கலாம் சாமி’ என்று சமாதானப்படுத்தியிருக்கிறார்.

‘இல்லை இல்லை… அவன் நல்லவன். ஆனா, சென்சிபிள் பெர்சன்.
என்னை அறியாமல் நான் சொல்லிட்டேன்னா, நான் ஏதோ வேணும்னே
சொல்றதா நினைச்சு அவன் எரிச்சலாக வாய்ப்பு இருக்கு. அதனால இந்தப்
படத்தை இனி நான் பண்ணலை’ என்று கூறி தன் முடிவில் உறுதியாக
இருந்தார். பிறகு அவரே, தன் அசிஸ்டன்ட் யோகானந்தை வைத்து
‘மதுரை வீரன்’ படத்தை முடித்திருக்கிறார்.

மதுரை வீரன் எம்.ஜி.ஆருக்கு பிரம்மாண்டமான வெற்றியைத் தந்த படம். பல ஊர்களில் 25 வாரங்கள் வரை ஓடியது….
(ஒரு கட்டுரையில் பஞ்சு அருணாசலம் அவர்கள் எழுதியிருப்பதிலிருந்து ….)

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s