
தென் ஆப்பிரிக்காவில் தொடர்ந்து கலவரம் நடைபெற்று வருகிறது…
கடைகள் சூறையாடப்படுகின்றன.
முக்கியமாக இந்திய வர்த்தகர்களின் சொத்துக்களின் மீது குறிவைத்து
தாக்குதல் நடத்தப்படுகின்றன.
இந்தியாவும், தென்னாப்பிரிக்காவும் நட்பு நாடுகள் தானே…?
பின் ஏன் இப்படி இந்தியர்களின் மீது குறிவைத்து தாக்குதல் என்று
நினைத்து விவரங்களைத் தேடினேன்….
கிடைத்ததை கீழே தந்திருக்கிறேன் –
தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா கைது
செய்யப்பட்டதை தொடர்ந்து, அவரது ஆதரவாளர்களால் அரசை எதிர்த்து
கலவரம் துவங்கியது.
ஆனால், தொடர்ந்து இந்தியர்களின் கடைகளை சூறையாடுபவர்களும்,
இந்திய வர்த்தகர்களை குறிவைப்பவர்களும், ஜூமாவின் ஆதரவாளர்கள்
இல்லை; வன்முறை பின்னணி கொண்டவர்களும், குப்தா சகோதரர்களின்
சுரண்டல் ஆதிக்கத்தை எதிர்க்கும் அரசியல்வாதிகளும், பொதுமக்களுமே
என்று தெரிகிறது….
முதலில் தற்போது சிறையில் இருக்கும் ஜேக்கப் ஜூமா பற்றி –

1963-ல் இனவெறிக்கு எதிராகப் போராடி பத்து வருடங்கள் சிறைத்தண்டனை
விதிக்கப்பட்ட ஜேக்கப் ஜுமா, சிறையிலிருந்து விடுதலையானவுடன், 1975-ல் வெளிநாட்டுக்குத்தப்பிச் சென்றார்.
வெளிநாடுகளில் இருந்தபடியே,
தென்னாப்பிரிக்க விடுதலைக்காக ஆயுதமேந்திப் போராடிய
‘ஆப்பிரிக்கன் நேஷனல் காங்கிரஸ்’ என்ற அமைப்பின்
உளவுப் பிரிவுத் தலைவராகவும் செயல்பட்டார். 1990-களின் தொடக்கத்தில்
தென்னாப்பிரிக்காவுக்குத் திரும்பிய ஜுமா, நெல்சன் மண்டேலாவுடன்
இணைந்து விடுதலைக்காகப் போராடியிருக்கிறார்.
பிறகு ஆப்பிரிக்கன் நேஷனல் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவராகவும்,
துணை அதிபராகவும், கடைசியாக நாட்டின் அதிபராகவும் உயர்ந்திருக்கிறார்.
ஒருகாலத்தில் புனிதராகப் பார்க்கப்பட்ட ஜேக்கப் ஜுமா, ஆட்சி, அதிகாரத்தில்
அமர்ந்த பிறகு ஊழலின் தலைமையிடமாக மாறிவிட்டதே இன்றைய
கலவரங்களின் அடிப்படைக் காரணம் என்று தெரிகிறது.
ஜேக்கப் ஜூமா துணை அதிபராக இருந்த 1999 காலகட்டத்தில், நாட்டுக்கு
ஆயுதம் கொள்முதல் செய்த விவகாரத்தில், பல கோடிகளை ஏப்பமிட்டு
விட்டதாக ஏற்கெனவே குற்றச்சாட்டு உள்ளது. இதை ஜுமா மறுத்திருக்கிறார்.
அதைத் தொடர்ந்து, அவர் அதிபராக இருந்த 2009 – 2018 காலகட்டத்தில்,
தன் பதவியைத் தவறாகப் பயன்படுத்தி ஊழலில் ஈடுபட்டார் என்றும் குற்றம்
சாட்டப்படுகிறது.
இது தொடர்பாக, தென்னாப்பிரிக்காவின் துணைத் தலைமை நீதிபதி ரேமாண்ட்
ஜோண்டோ தலைமையில் விசாரணை நடைபெறுகிறது. தென்னாப்பிரிக்க
அரசியலமைப்பு நீதிமன்றத்தின் மேற்பார்வையில் நடைபெறும் இந்த
விசாரணைக்கு ஆஜராகச் சொல்லி, பலமுறை சம்மன் அனுப்பியும் ஜேக்கப் ஜுமா ஆஜராகவில்லை.
பொறுமையிழந்த அரசியலமைப்பு நீதிமன்றம், நீதிமன்ற உத்தரவை
அவமதித்ததாக ஜேக்கப் ஜுமாவுக்கு 15 மாதச் சிறை தண்டனை விதித்து,
ஜூன் 29-ம் தேதி உத்தரவிட்டது. நீதிமன்றம் கடுமை காட்டியதால்,
வேறு வழியில்லாமல் ஜூலை 7-ம் தேதி சரணடைந்தார் ஜுமா.
இதைக் கண்டித்து அவரின் ஆதரவாளர்கள் வன்முறை வெறியாட்டத்தில்
குதிக்கவும், மொத்த நாடும் கலவரபூமியானது. ஜூலை 17-ம் தேதி நிலவரப்படி,
212 பேர் கலவரத்தில் பலியாகி யிருக்கிறார்கள்.
சுமார் 7,500 கோடி ரூபாய் பெறுமானமுள்ள பொருள்கள் சூறையாடப்பட்டும்
சேதப்படுத்தப் பட்டுமிருக்கின்றன. ஜேக்கப் ஜுமாவின் சொந்த ஊர்
அமைந்திருக்கும் குவாஜுலு நடால் மாகாணம்தான் பெரிதாக
பாதிக்கப்பட்டிருக்கிறது.
டர்பனிலிருக்கும் இந்தியர்களின் கடைகள் அடித்து நொறுக்கப் பட்டிருக்கின்றன.
ஜோஹன்னெஸ்பர்க், அலெக்ஸாண்ட்ரா நகரங்களும் சூறையாடப் பட்டிருக்கின்றன. இங்கெல்லாம்
ராணுவப் படைகளை களமிறக்கியும்,
அரசால் கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.
“இந்தக் கலவரங்கள் திட்டமிட்டு செய்யப்படுகின்றன.
இதை அடக்கும்வரை பின்வாங்கப்போவதில்லை. கலவரத்தில் ஈடுபட்ட
2,500 பேரை இதுவரை கைதுசெய்திருக்கிறோம். மக்கள் தைரியமாக இருக்க
வேண்டும்” என்கிறார் தற்போதைய தென்னாப்பிரிக்க அதிபர்
சிரில் ராமபோஸா.
குறிப்பாக, இந்தியர்களின் கடைகள் பெருமளவு குறிவைத்துத்
தாக்கப்பட்டிருக்கின்ற பின்னணியை ஆராய்ந்ததில், இதற்கு காரணமாக –
குப்தா சகோதரர்களின் அபார வளர்ச்சியையும், அதனால் மக்களுக்கு ஏற்பட்ட
கோபத்தையும்தான் இந்தியர்களின் கடைகள் குறிவைக்கப்படுவதற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது.

குப்தா சகோதரர்கள் பற்றி கொஞ்சம் விவரங்கள் –
உத்தரப்பிரதேச மாநிலம், சஹரான்பூர் நகரைச் சேர்ந்த அதுல் குப்தா
என்பவர், பிழைப்புத் தேடி 1993-ல் தென்னாப்பிரிக்காவுக்குச் சென்றிருக்கிறார்.
தொடக்கத்தில், ஜோஹன்னெஸ்பர்க் நகரில் ஷூ விற்று பிழைப்பு நடத்திய
அதுல் குப்தாவுக்கு அந்தத் தொழிலில் ஓரளவு வருவாயும் கிடைத்திருக்கிறது.
நகரின் பல்வேறு இடங்களில் ஷூ விற்றால், கூடுதல் வருவாய் கிடைக்கும் எனத் திட்டமிட்ட அதுல் குப்தா, தன் சகோதரர்களான அஜய், ராஜேஷைத்
தனக்குத் துணையாக தென்னாப்பிரிக்காவுக்கு வரவைத்தார்.
இந்தச் சூழலில்தான், 1994-ல் தென்னாப்பிரிக்க நாடு ஜனநாயக முறைக்குத்
திரும்பியது. தேர்தல் நடைபெற்று நாட்டின் அதிபராக நெல்சன் மண்டேலா பொறுப்பேற்றார்.
அதுவரை ஆயுதமேந்திய தீவிரவாத இயக்கமாகப்
பார்க்கப்பட்ட ‘ஆப்பிரிக்கன் நேஷனல் காங்கிரஸ்’, அதன் பிறகு
ஆளுங்கட்சியானது. நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டுசெல்ல
விரும்பிய மண்டேலா, அரசாங்கத்தில் நிர்வாகச் சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொண்டார்.
நாட்டில் தொழில் தொடங்க விரும்புபவர்கள் யாராக இருந்தாலும்,
அவர்களுக்கு உடனடியாக அனுமதியளிக்கப்பட்டது. இதை தங்களுக்கு
கிடைத்த சரியான வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்ட குப்தா சகோதரர்கள்,
தாங்கள் ஷூ விற்ற பணத்தில் ‘சஹாரா கம்ப்யூட்டர்ஸ்’ என்ற
நிறுவனத்தைத் தொடங்கினார்கள்.
அதன் பிறகு, அவர்களின் சாம்ராஜ்ஜியம் மொத்த தென்னாப்பிரிக்காவிலும் விரிந்து அசுர வளர்ச்சியடைந்தது.
‘ஆப்பிரிக்கன் நேஷனல் காங்கிரஸ்’ கட்சித் தலைவர்களுடன் நட்புறவை
வளர்த்துக்கொண்ட குப்தா சகோதரர்கள், கனிமம், தொழில்நுட்பம், மீடியா,
மின்சாரம், விமான சேவை ஆகிய துறைகளிலும் கால்பதித்தனர்.
தென்னாப்பிரிக்க அரசியலில் குப்தா சகோதரர்களின் சாம்ராஜ்ஜியம் கொடிகட்டிப் பறந்தது. மே 2013-ல் குப்தா சகோதரர்களின் மருமகள்
வேகா குப்தாவுக்கும், ஆகாஷ் ஜஹாஜ்காரியா என்பவருக்கும்
தென்னாப்பிரிக்காவில் திருமணம் நடைபெற்றது.
திருமணத்தில் கலந்துகொள்ள இந்தியாவிலிருந்து விருந்தினர்களைச் சிறப்புத்
தனி விமானத்தில் அழைத்துவந்த குப்தா சகோதரர்கள், அவர்கள் வந்த
விமானத்தைத் தென்னாப்பிரிக்காவின் வாட்டர்க்லூஃப் ராணுவ
விமானதளத்தில் தரையிறக்கவைத்தனர். முக்கிய தேசத் தலைவர்களுக்கு
மட்டுமே இதற்கான அனுமதியளிக்கப்படுவது வழக்கம்.
குப்தா சகோதரர்களுக்காக ஜேக்கப் ஜுமா அரசு ராணுவதளத்தைப்
பயன்படுத்த அனுமதியளித்தது அப்போது சர்ச்சையானது. ஐந்து ராணுவ
அதிகாரிகளை இடைநீக்கம் செய்து விவகாரத்தை தற்காலிகமாக
ஆறப்போட்டது ஜுமா அரசு.
இந்தச் சம்பவத்துக்குப் பிறகும் ஜுமாவுக்கும், குப்தா சகோதரர்களுக்கும்
இடையேயான உறவு அறுந்துபோகவில்லை. அதெப்படி முடியும்….?
குப்தாக்களுக்குச் சொந்தமான நிறுவனத்தில் ஜுமாவின் இரண்டு வாரிசுகள் இயக்குநர்களாகப் பணியாற்றிய நிலையில் அது எப்படி முடியும்…?
மேலும் குப்தாக்களின் கனிம நிறுவனத்தில் ஜுமாவின் மனைவிகளுள் ஒருவரான போங்கி கேமா ஜுமா பணியாற்றினார்.
எனவே குப்தா சகோதரர்களுக்கும், ஜேக்கப் ஜூமா’வுக்குமான நெருக்கம் பிரிக்க முடியாததாகி விட்டது.
ஜுமாவுக்கும் குப்தாக்களுக்கும் இடையேயான உறவைக் கிண்டலடித்து,
‘ஜுப்தா’ ( ஜூ(மா) + (கு)ப்தா = ஜூப்தா ) என்ற அடைமொழியில்
தென்னாப்பிரிக்கப் பத்திரிகைகள் தலையங்கம் எழுதின. ஆனால், இதற்கெல்லாம் அதிபர் ஜேக்கப் ஜுமா அசரவில்லை.
2016-ம் ஆண்டு, அரசின் முக்கியப் பதவிகளில் தங்கள் ஆதரவு
பெற்றவர்களை குப்தா சகோதரர்கள் அமர்த்துகிறார்கள். இதற்காகக்
கோடிக்கணக்கில் பணம் கைமாறுகிறது என்ற விவகாரம் வெடித்தபோதும்,
ஜுமா கண்டுகொள்ளவில்லை.
இச்சூழலில்தான், குப்தா சகோதரர்களின் இமெயில்கள் 2017-ல் லீக் ஆகின.
அவர்களுக்குப் பல்வேறு உதவிகளை ஜேக்கப் ஜுமா அரசு சட்டவிரோதமாகச் செய்துகொடுத்திருக்கும் தகவல்கள் அந்த மெயில்களில் இருந்ததால்,
நாடு முழுவதும் ஜேக்கப் ஜுமாவுக்கு எதிராகப் போராட்டங்கள் வெடித்தன.
ஜேக்கப் ஜுமாவை பதவி விலகச்சொல்லி அவரது கட்சியான ‘ஆப்பிரிக்கன்
நேஷனல் காங்கிரஸ்’ கட்சியே உத்தரவிட்டது. தொடர்ந்து அதிபராக நீடித்தால்,
நம்பிக்கையில்லா தீர்மானத்தால் விரட்டப்படுவோம் என்று அஞ்சிய ஜுமா,
தன் பதவியை 2018-ல் ராஜினாமா செய்தார்.
ஜூமா பதவி விலகியவுடன், குப்தா சகோதரர்கள், தென்னாப்பிரிக்காவை விட்டு, தப்பியோடி – துபாயில் தஞ்சம் புகுந்தனர்.
புதிதாகப் பதவியேற்ற சிரில் ராமபோஸா, ஜேக்கப் ஜுமா ஆட்சிக்காலத்தில்
நடைபெற்ற பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க உத்தரவிட்டார்.
மொத்தம் 12 ஊழல் குற்றச்சாட்டுகள் ஜுமா மீது தொடுக்கப்பட்டிருக்கின்றன.
குப்தா சகோதரர்கள்மீது ‘ரெட் கார்னர் நோட்டீஸு’ம் தென்னாப்பிரிக்க
அரசால் வழங்கப்பட்டிருக்கிறது….!!! ( இவை எதுவுமே நமக்கு புதிதில்லையே…!)
நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் 32.6 சதவிகிதத்தை எட்டியிருக்கும் நிலையில், ஓர் இந்தியக் குடும்பம் மட்டுமே தொழில் வளர்ச்சியிலும்
வளத்திலும் உச்சத்தை எட்டியதைத் தென்னாப்பிரிக்கர்கள் ரசிக்கவில்லை.
நாட்டைச் சுரண்டிய வெள்ளையர்களின் அடக்குமுறைக்கு எதிராகப் போராடி
ஜனநாயகத்தை மீட்டெடுத்த தென்னாப்பிரிக்கர்களால்,
அதே ஜனநாயகத்தைக் காரணமாகக் காட்டி, குப்தா சகோதரர்கள் நாட்டைச்
சுரண்டியதை ஏற்க முடியவில்லை. குப்தா சகோதரர்கள், இந்திய அரசின்
உதவியை நாடியும் காய்நகர்த்தி வருவதாகக் கூறப்படுகிறது.
ஜேக்கப் ஜுமாவுக்கு ஆதரவாக இந்தக் கலவரங்கள் ஆரம்பித்திருந்தாலும்,
ஓர் இந்தியக் குடும்பத்தின் மீதிருக்கும் கோபத்தால், ஒட்டுமொத்த
இந்தியர்களின் கடைகளும் சூறையாடப்பட்டிருக்கின்றன. இந்தியர்களின்
பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டுமென இந்திய வெளியுறவுத் துறை, தென்னாப்பிரிக்க அரசிடம் பேசியிருக்கிறது.
உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா, உண்மையிலேயே ஜனநாயகத்தை மதிப்பதாக இருந்தால் –
குப்தா சகோதரர்களுக்கு அடைக்கலம், ஆதரவு தரவோ,
எந்தவித உதவியையும் செய்யவோ கூடாது
என்று தென்னாப்பிரிக்கா நினைக்கிறது.
அரசியல் ஆதரவு இல்லாமல் வளர்ந்த, அரசியல் cut கொடுக்காத ஒரு தொழிலதிபர் பெயர் சொல்லுங்களேன். கேடி பிரதர்ஸ், அம்பானி, டாட்டா, அதானி…. லிஸ்டுதான் நீளும்.
சாதாரண வணிக செயினாக இருந்தவரை குப்தா பிரதர்ஸ் ஓகே. பெரும்பாலும் நம்மவர்கள் செய்யும் மிகப் பெரும் தவறு (மாநில அல்லது மத வணிக நிறுவனங்களும்), தங்கள் ஆட்களை மட்டும் பணிக்கு வைப்பது. வெளிநாட்டில் கடை வைத்திருக்கிறோமே..அந்த நாட்டவர்களுக்கும் வேலை வாய்ப்பு கொடுக்கணும் என்று நினைக்காமலிருப்பது. இந்த மாதிரி பிரச்சனை லுலு, மற்றும் பெரும்பான்மையான நிறுவனங்களிலும் உண்டு. ஆனால் வியாபாரம் மட்டும் மற்றவர்களோடு, அதாவது கஸ்டமர்கள் மற்ற மாநிலக்காரங்கள், மற்ற நாட்டினவர், மற்ற மதத்தினவர்.
ஒரு நேரத்தில் வணிக ஆதாயத்துக்காக, அரசியல் தொடர்புகள் அளவுக்கு அதிகமாகும்போது, மக்களின் எதிர்ப்பை இத்தகைய வணிக நிறுவனங்களும் சந்திக்கத்தான் வேண்டும்.
அதானியுடன் ஒப்பிடுவதை வன்மையாக கண்டிக்கிறேன். அதானி ஒரு புனிதர் எனபதாலே தமிழக மாவட்டங்களின் ஒன்றியத்தில் தொழில்துவங்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தை எங்கள் தமிழக மாவட்ட ஒன்றிய தலைவர் போட்டுள்ளார். அம்பானி மற்றும் டாட்டாவுடன் ஒப்பிடவும். 😂
– இப்படிக்கு
பாண்டியநாட்டு தமிழன்
குப்தா சகோதரர்கள் ஊழல் சாம்ராஜ்யம் அதிபரை தாண்டி நிதி அமைச்சர் .. மற்ற அமைச்சர்களை நியமிப்பது வரை நீண்டிருந்தது. இந்தியா இவர்களுக்கு எந்த உதவியும் செய்யக் கூடாது. அப்படி செய்தால் மல்லையா போன்றவர்களுக்கு உதவும் மற்ற நாடுகளை நாம் எப்படி குற்றம் சொல்லமுடியும்?
உண்மைதான். குப்தாவை இன்னொரு நாட்டுக்காரராகத்தான் மத்திய அரசு பார்க்கணும். அவர்கள் குற்றம் செய்திருந்தால் அந்த நாட்டுச் சட்டப்படி நடவடிக்கை எடுப்பார்கள். நம் அரசுக்கு இதில் எந்த வேலையும் இல்லை. குப்தா சகோதரர்கள் நம் நாட்டுக்குத் தப்பி வந்துவிட்டால், அவர்களை உடனடியாக அந்த நாட்டுக்கு அனுப்பிவிடவேண்டும். பார்ப்போம்..எப்படிச் செயல்படுகிறது என்று