சட்டமன்றத் தேர்தல் முடிந்த கையோடு, ‘மக்கள் நீதி மய்ய’த்தை காலிசெய்துவிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும், பல்வேறு கட்சிகளில் அடைக்கலமாகிவிட்டனர். ஆனால், ‘தி.மு.க-வில் அறிவாளிகளுக்கு இடம் இல்லை’ என்ற ஆவேசக் குற்றச்சாட்டை வீசிச் சென்ற மூத்த தலைவரான பழ.கருப்பையா, தொடர்ந்து மக்கள் நீதி மய்யத்திலேயே மையம்கொண்டுள்ளார். அண்மையில், அந்தக் கட்சியின் அரசியல் ஆலோசகராக நியமிக்கப்பட்டிருக்கும் பழ.கருப்பையாவை
நேரில் சந்தித்தோம்… ( நன்றி -விகடன் தளம் )
“மக்கள் நீதி மய்யத்தின் அரசியல் ஆலோசகராக நியமிக்கப்பட்டிருக்கிறீர்களே…’’
(வெட்கத்தோடு சிரிக்கிறார்)
“கமல்ஹாசனாகப் பார்த்து இப்படியொரு பொறுப்பை எனக்கு வழங்கியிருக்கிறார். ‘பொறுப்பு இல்லை’ என்று சொன்னாலும் நான் வருத்தப்பட மாட்டேன்; ‘பொறுப்பு இருக்கிறது’ என்று சொன்னாலும் நான் மகிழ்ச்சியடைய மாட்டேன்!’’
“ம.நீ.ம-வில் உங்களுடைய பயணம் எப்படி இருக்கிறது?’’
“திராவிடக் கட்சிகள் மற்றும் பா.ஜ.க-வுக்கு மாற்றாகக் கட்சி இயங்குகிறதா
என்பதில் மட்டும்தான் என் கவனம் இருக்கிறது. மாநில உரிமை, மொழியுரிமை,
இந்துத்துவ எதிர்ப்பை வலியுறுத்துகிற ஓர் அமைப்பு இங்கே கட்டப்பட வேண்டும். இந்தக் கருத்துப்போக்கில் இயங்குகிற ஒரே கட்சியாக ம.நீ.ம மட்டுமே இருக்கிறது. இதிலிருந்து ம.நீ.ம மாறாதவரையில், என் கருத்துப்போக்கிலும் மாறுதல் இல்லை.”
“2021 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, ம.நீ.ம கலகலத்துப்போய்விட்டதே…
ம.நீ.ம-த்தின் முகங்களாக அறியப்பட்ட மகேந்திரன் உள்ளிட்ட பலரும் தி.மு.க-வில் இணைந்திருப்பது கட்சிக்கு இழப்பில்லையா?’’
“மகேந்திரன் எனக்கு நல்ல நண்பர்தான். ஆனாலும் அரசியலை ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையாகப் பார்க்கின்றனர். அரசியல் என்பது, ‘கொள்கைக்கானது’ அல்லது ‘பதவிக்கானது’ என இந்தப் பார்வை வித்தியாசப்படுகிறது.
ம.நீ.ம-லிருந்து யார் வெளியேறினார்கள், யார் உள்ளே வந்தார்கள் என்பதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும். 50 ஆண்டுகளாக ஊழலில் திளைத்துப் பெருச்சாளிகளாக இருக்கும் தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் கொள்கையற்ற கொள்ளைக் கூட்டமாக மாறிவிட்டன. அதனால்தான் அ.தி.மு.க-வில் அமைச்சராக இருந்து பெரும் கொள்ளையடித்துவிட்டு தி.மு.க-வுக்குப் போனவர்களுக்கு அங்கே அமைச்சர் பதவி தரப்படுகிறது. ஆக தி.மு.க-வுக்குக் கொஞ்சங்கூட வெட்கமில்லை.’’
“முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி எப்படி இருக்கிறது?’’
“மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நான் அறிவாலயத்தில் பலமுறை பேசியிருக்கிறேன். அப்போது, ஆதிசங்கரரால் ஒப்புக்கொள்ளப்பட்ட சமயம்தான் ‘திராவிட சமயம்.’ எனவே, நீங்கள் ஆட்சிக்கு வரும்போது, இந்து சமய அறநிலையத்துறை என்பது, ‘திராவிட சமய அறநிலையத்துறை’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும்’ எனக் கோரிக்கையும் வைத்திருந்தேன். ‘அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம்’
என்று சொல்லி, சம்ஸ்கிருத மொழியை தமிழனுக்குக் கற்பித்து, ஒன்றும் புரியாமல் அவனை உளறச் செய்வதைவிட, ‘தமிழில்தான் அர்ச்சனை செய்யப்படும்’ என்கிற நிலையைத் தமிழக அரசு உருவாக்க வேண்டும்!’’
தி.மு.க செய்வது பித்தலாட்ட அரசியல்! – பழ.கருப்பையா ….
“ ‘பெண்களின் இடுப்பு மடிப்பு பற்றி பேசிய லியோனியை, தமிழ்நாடு பாடநூல்
நிறுவனத்துக்குத் தலைவராக நியமிக்கலாமா?’ என பா.ம.க கடுமையாக
விமர்சித்துள்ளதே?’’
“பா.ம.க-வின் கருத்து பற்றி எனக்குத் தெரியாது. ரொம்பவும் கீழ்மட்டத்தில்
இருப்பவர்கள் உயர் பதவிகளுக்கு வந்துவிடுகிறார்கள் என்பதுதான் பா.ம.க-வின்
குற்றச்சாட்டாக இருந்தால் அவர்களுக்கு என் பதில் இதுதான்…
லியோனியைவிட தரமானவர்கள் தி.மு.க-வில் எங்கே இருக்கிறார்கள்?
இந்தத் தரத்தில்தான் அங்கே எல்லோரும் இருக்கிறார்கள். லியோனிக்கும் கீழே
இருப்பவர்கள்தான் அங்கே மந்திரியாகவே இருக்கிறார்கள். ஒரு காலத்தில்
அண்ணாவுக்கு நிகராக அடுத்தகட்டத் தலைவர்களில் ஈ.வி.கே.சம்பத் உள்ளிட்ட
அறிவார்ந்த தலைவர்கள் தி.மு.க-வில் இருந்தார்கள்தான். ஆனால், இன்றைக்கு
தி.மு.க என்பது அறிவியக்கமாகவா இருக்கிறது?”
“நீட் தேர்வு விலக்கு சாத்தியம் இல்லை என்பது தெரிந்திருந்தும், தி.மு.க
பொய்யான வாக்குறுதி கொடுத்து மக்களை ஏமாற்றிவிட்டது என்கிறார்களே?’’
“ ‘நாங்கள் வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்தால், நீட் தேர்வை ரத்துசெய்வோம்’
என்று தி.மு.க சொன்னது ஒரு பித்தலாட்டம்! இந்தப் பித்தலாட்ட அரசியல்
தி.மு.க-வில் எப்போதுமே உண்டு. நீட் தேர்வை மாநில அரசு எப்படி ரத்து செய்ய
முடியும்… அந்தச் சட்டம் எப்படிச் செல்லும்? இதெல்லாம் மு.க.ஸ்டாலினுக்கும்
முன்னமே தெரியும். அதனால்தான் இப்போது சாக்கு சொல்வதற்காக கமிஷன்
நியமித்து காலம் கடத்துகிறார்கள்.’’
“ `பா.ஜ.க-வோடு கூட்டணி அமைத்ததால்தான் அ.தி.மு.க தோற்றுவிட்டது’
என்று சி.வி.சண்முகம் சொல்கிறாரே?’’
(சிரிக்கிறார்) “கண்டிப்பாக… இதிலென்ன சந்தேகம்? அதனால்தான் ‘காலைச் சுற்றிய பாம்பை உதறுங்கள்… இல்லையென்றால், கடைசியில் இது உங்களை பாதிக்காமல் விடாது!’ என்று நான் நான்கைந்து வருடங்களாகவே சொல்லிவந்தேன். ஆட்சிப் பொறுப்பில் இருக்கும்போது, ‘நாம் செய்கிற தவறுகளை மைய அரசின் பலத்தோடுதான் மூடிமறைக்க முடியும்’ என்று பா.ஜ.க-வினரின் தயவில் இருந்தது அ.தி.மு.க. இப்போது ஆட்சி அதிகாரம் கையைவிட்டுப் போய்விட்ட பிறகும்கூட, ‘மைய அரசின் தயவு இருப்பதுதான் நல்லது’ என்று நினைக்கிறார்கள். அதனால்தான் பா.ஜ.க-விடம் தொங்குகிறார்கள்!’’
“தமிழ்நாட்டு அரசியலில், ‘கொங்கு நாடு’ என்ற புதிய கோரிக்கையை பா.ஜ.க-வினர் முன்வைத்து வருகிறார்களே… கவனித்தீர்களா?’’
“தமிழ்நாட்டு அரசியலில், பா.ஜ.க என்பது ஒரு நச்சு சக்தி! மகாத்மா காந்தியால்,
மொழிவழி இனங்களாக இந்தியா உருவாக்கப்பட்டதால்தான் இந்தியாவின் ஒருமைப்பாடு நிலைத்தது. எனவே இந்தியா ஒரு நாடு அல்ல… அது நாடுகளால் ஆன நாடு.
அதனால்தான், தி.மு.க-வினர் அதை ‘ஒன்றிய அரசு’ என்று மிகச்சரியாகக்
குறிப்பிடுகிறார்கள். இதற்கு பதிலடியாகத்தான் ‘கொங்கு நாடு’ என்பதை
பா.ஜ.க-வினர் கையிலெடுக்கிறார்கள். ‘இந்தியாவில், மொழிவழி இன உணர்வு என்பதே யாருக்கும் இருக்கக் கூடாது; அதை அழித்து, இந்தியாவை இந்துக்களின் நாடாக மாற்ற வேண்டும்’ என்பது மட்டுமே பா.ஜ.க-வின் நோக்கம். சாதி அல்லது மதத்தை வைத்து மக்களைப் பிரித்து அரசியல் செய்வதுதான் அவர்களது குறிக்கோள்.
ஆனால், தமிழ்நாட்டில், ‘தமிழ் இன உணர்வு-அடையாளம்’ திராவிட இயக்கத்தால், 70 ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் மனதில் ஆழமாக ஊன்றப்பட்டுவிட்டது. அதை அழித்தொழிக்கத்தான் இந்த ‘கொங்கு நாடு’ என்ற விஷயம்… இதில் அவர்கள் வெற்றிபெற்றால், தமிழினம் அழிந்தேபோகும்!’’
பின் குறிப்பு – எல்லாரும் ஒட்டுமொத்தமாக வெளியேறியபோது, என்னை எப்படியாவது தக்கவைத்துக் கொள்ளவேண்டும் என்பதற்காக கமலஹாசன் என்னை “அரசியல் ஆலோசகர்” பதவியில் நியமித்தார்… ஆனால் அது வெறும் அறிவிப்போடேயே நின்றது.
எந்தவொரு விஷயத்திலும், கமல் ஹாசன் என்னை கலந்தாலோசித்தது இல்லை; நானாகச் சொன்னதையும் கேட்டதில்லை; எதையும் தன்னிச்சையாகவே முடிவெடுக்கிறார்…
பின் இப்படி ஒரு பதவியை வைத்துக் கொண்டு நான் ம.நீ.மய்யத்தில் நீடிப்பதில்
என்ன அர்த்தம்….?
இது “மக்கள்” நீதி மய்யம் அல்ல – வெறும் “கமல்” விளம்பர மய்யம். எனவே நான் பதவியை தூக்கியெறிந்து விட்டு ம.நீ.ம.வை விட்டு வெளியேறுகிறேன் என்று எதிர்காலத்தில் ஒரு நாள் அறிவித்து விட்டு, பழ.கரு. அடுத்த கட்சிக்கு
தாவும் வரை அவரது மேற்படி கொள்கை பிரகடனங்கள் நீடிக்கும் என்று நம்பலாம்…… !!!!
பாவம் பழ.கருப்பையா. அவர் கனவுலகில் இருக்கிறார். விரைவில் அடுத்த ஹோட்டலில் (ஏனென்றால் எதுவும் அவருக்கு நிரந்தர கட்சியோ கொள்கையோ இல்லை) இடம் பார்க்க ஆரம்பிப்பது நல்லது.
//இந்தியா ஒரு நாடு அல்ல… அது நாடுகளால் ஆன நாடு.// – இந்த பாயிண்ட் சரிதான். அது பல நாடுகளை உள்ளடக்கியது (அதில் தமிழ்நாடு கிடையாது. பாண்டிய நாடு, சேர நாடு, கொங்குநாடு, சோழநாடு, பல்லவநாடு என்று பல உண்டு). பாண்டிச்சேரி தனியாக இருப்பதால் தமிழ் அழிந்துவிட்டதா?
//சாதி அல்லது மதத்தை வைத்து மக்களைப் பிரித்து அரசியல் செய்வதுதான்// – தமிழகத்தில் இந்தக் குறிக்கோளில்தானே அரசியல் கட்சிகள் 60 ஆண்டுகளாக இயங்கிக்கொண்டிருக்கின்றன.
//‘மைய அரசின் தயவு இருப்பதுதான் நல்லது’// – அப்படி என்றால், எது திமுகவை காங்கிரஸோடு இருக்க வைக்கிறது? உதறித்தள்ள முடியவில்லை? எப்போதுமே தேசியக் கட்சியின் ஆதரவு மாநிலக் கட்சிக்கு இருப்பது நல்லது, அதிலும் பாஜக ஆளும் கட்சியாக இருப்பதால். ஆனால் என்னைப் பொறுத்தவரையில், அதிமுக சரியான நேரத்தில் பாஜகவை கழற்றிவிட வேண்டும். அதிமுகவின் கொள்கைகள் வேறு, பாஜகவின் கொள்கைகள் வேறு. தமிழகத்திற்கு பாஜக கட்சி சரிப்படாது என்பதுதான் என் எண்ணம்.