புல்லாங்குழல் தேடுகிறது – கவிஞர் எங்கேயென்று ….அரங்கத்தினுள் நிச்சயம் இருப்பார்…. சரியாகப் பாருங்கள்…!!!

kannadasan-msv -spl.

இந்தியன் எக்ஸ்பிரஸ் வலைத்தளத்தில் Priya Ghana என்பவர்
எம்.எஸ்.வி. மற்றும் கண்ணதாசன் பற்றி எழுதிய கட்டுரையொன்றை படித்துக் கொண்டிருந்தேன்….

அது என்னை, மேலும் சில விஷயங்களையும் –
யோசித்துப் பார்க்க வைத்தது…

மெல்லிசை மன்னரும், கவிஞரும் ஒரே நாளில் தான்
பிறந்திருக்கிறார்கள் என்கிற ஆச்சரியமான உண்மை….
ஆம் – 24 ஜூன் 1927….

ஆனால் கவிஞர் மறைந்தது மிக இளவயதில் – 17/10/1981(54 வயது)

எம்.எஸ்.வி.மறைந்தது – 14/07/2015-ல் (88 வயது)


கண்ணதாசன் என்கிற முத்தையாவை முதல் முதலில்,
தான் சந்தித்தது எப்படி …
தங்கள் கூட்டணியில் பல சூப்பர் ஹிட் பாடல்கள் உருவானது
எப்படி போன்ற பல சுவாரசியமான தகவல்களை,
மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் அவர்கள்
ஒரு இசையரங்கத்தில் பகிர்ந்துகொண்டதன் தொகுப்பு இங்கே –

“1946-ம் ஆண்டில் நான் செந்தில் ஸ்டுடியோவில், மற்ற இசையமைப்பாளர்களிடம் நோட்ஸ் வாங்கி அதனைக் கவிஞர்களிடம் கொடுத்து பாட்டு எழுதி வாங்கும் வேலையைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போதுதான், நெற்றியில் விபூதி, குங்குமம், நல்ல அங்கவஸ்திரம் அணிந்து முத்தையா என்பவர் பாட்டெழுத அந்த ஸ்டுடியோவிற்கு வந்தார்.

கண்ணதாசன் எப்போதும் சொந்தமா பாட்டு எழுதுவார். அதனால் சந்தத்துக்குப் பாட்டு வரலை. ஒரே டியூன் அதுவும் பல்லவி மட்டும்தான், அதையே மூன்று நாள்களாகத் தேய்த்துக்
கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில் எனக்குக் கோபம் வந்து
அவரிடம் சென்று, ‘எவ்வளவு நாள்தான் இப்படி யோசிச்சுட்டே இருப்பீங்க’ என்று கேட்டேன். வந்தது பாருங்க அவருக்குக் கோபம். ‘என்ன இப்போ பாட்டுதானே வேண்டும். இந்தா வெச்சுக்கோ
என்றுகூறி, “காரணம் தெரியாமல் உள்ளம் களிகொண்டே
கூத்தாடுதே…” என்றார்.

எனக்குக் கேட்டதும் கொஞ்சம்கூட பிடிக்கவேயில்லை. இது என்ன அசிங்கமா களி, கூத்துன்னு? நல்லாவே இல்லை. உடனடியாக வரிகளை மாற்றுங்கள் என்றேன். அவ்வளவுதான்….. எங்களுக்குள் பலத்த வாக்குவாதம் வர, அப்போது அந்த வழியாகச் சென்ற உடுமலை நாராயண கவி என்னைக் கூப்பிட்டு விசாரித்தார். அவரிடம் நடந்தவற்றைக் கூறிவிட்டு, முத்தையாவின் வரிகளையும் கூறினேன். நான் சொன்ன அதே விஷயத்தை அவரும் சொன்னார்.

பிறகு, முத்தையாவைக் கூப்பிட்டு என்னை கைகாட்டி, ‘இந்த பசங்களுக்கெல்லாம் களி, கூத்து என்று சொன்னால் புரியாது. இவங்களுக்கு ஏத்த மாதிரி கொஞ்சம் எழுதிட்டு போங்களேன்’ என்று சொன்னதோடு, “காரணம் தெரியாமல் உள்ளம் சந்தோஷம் கொண்டாடுதே…” என்று வரிகளை மாற்றியமைத்துச் சென்றார் நாராயணகவி. இப்படிதான் எனக்கும் கண்ணதாசன் அண்ணாவுக்கும் நட்பு ஆரம்பமானது.

அதன்பிறகு, ‘நான் படம் தயாரிக்க போறேன். அதுல 10 பாடல்கள் இருக்கு. நீதான் இசையமைக்கணும். நான்தான் எழுதுவேன்’ என்று சொன்னார். அப்படித்தான், மாலையிட்ட மங்கை – ‘செந்தமிழ் தேன்மொழியாள்..’ பாடல்கள் எல்லாம் உருவானது.

பிறகு ‘பெரிய இடத்துப் பெண்’ திரைப்படத்தின்போது கண்ணதாசன்,
மற்ற எல்லோரும் அந்தப் படத்திற்கான பாடல்கள் டிஸ்கஷனில் இருந்தபோது, நான் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தேன்.
என் வீட்டிற்கு தொலைபேசியில் அழைத்தவர்களிடம், நான் உறங்கிக்கொண்டிருக்கும் விஷயத்தைக் கூறிவிட்டனர்.
இந்த வேகத்தில் அண்ணா எழுதிய பாடல்தான்,

“அவனுக்கென்ன தூங்கிவிட்டான் அகப்பட்டவன் நான் அல்லவோ…”

இப்படி அவருக்குள் நையாண்டியும், நக்கலும் அதிகம் கொட்டிக்கிடக்கும். அந்த வரிசையில், பாலச்சந்தர் படத்தில்
வேலை செய்தபோது அவர் எப்போதும் வித்தியாச மெட்டு போடச் சொல்லுவார்.
அவர் நினைத்ததைப்போல ஒரு டியூனும் போட்டாச்சு. அதற்கு எப்படியாவது கண்ணதாசனிடம் வரிகளை வாங்கிவிடவேண்டும்
என்கிற பொறுப்பு எனக்குக் கொடுக்கப்பட்டது. அண்ணா வந்ததும், ‘நாநானானானா’ என்று சந்தத்தை பாடி காட்டினேன்.
‘என்ன நா நா நா? எல்லாமே ‘நீ’ என்றால் நான் எதற்கு?’ எனக்கூறி வெளியேறினார் கண்ணதாசன்.

நானும் அவர் பின்னாடியே சென்று, அவரை கொஞ்சம் சீண்டினேன். “பேசுவது கிளியா இல்லை பெண்ணரசி மொழியா…”,
“வீடு வரை உறவு, வீதி வரை மனைவி, காடு வரை மனைவி…”
என ஒரே போன்ற வரிகளுக்கு எத்தனை டியூன் நான்
போட்டிருக்கேன். என்னுடைய ஒரு டியூனுக்கு உங்களால் எழுத முடியாதா? என்றுகூறி உசுப்பேத்தினேன்.
அவ்வளவுதான், ‘பெருசா டியூன் போட்டுட்டாராம். உட்காருடா.
டியூன் போடு’ என்றார். இந்த முறை ‘நா’ என்று சொல்லாமல் ‘லாலலலல’ என்று பாடினேன். அப்புறம் என்ன வெறும்
15 நிமிடங்களில் பாடல் ரெடி. அதுதான், “வான் நிலா நிலா அல்ல…’ என்கிற பாடல். இப்படி எங்களுக்குள் ஆரோக்கியமான போட்டி இருந்ததால்தான் அவ்வளவு அழகான பாடல்களை உருவாக்க முடிந்தது.

பிறகு, உடல்நிலை பாதிக்கப்பட்டு கண்ணதாசன் படுத்த படுக்கையாகிட்டார். அப்போதும், நாங்கள் பாட்டெழுதி, மெட்டிசைப்பதுபோலதான் புலம்பிக்கொண்டிருக்கிறார் என்று
எம்ஜிஆர் எனக்கு போன் செய்து சொன்னார்.
என்னைக் கண்ணதாசனை சென்று பார்க்கவும் வலியுறுத்தினார்.( கண்ணதாசன் அப்போது அமெரிக்காவில்
இருந்தார்….) ஆனால், என்னால் செல்ல முடியாத நிலை.
அதனால், எங்களுடைய வேடிக்கை நிகழ்வுகளை ஒரு கேசட்டில்
பதிவு செய்து அனுப்பினேன். ஆனால், அந்த கேசட் அவர் கைக்குக் கிடைப்பதற்குள், அவர் இறந்துவிட்டார் என்கிற செய்திதான் எனக்கு வந்தது.

அப்போது, ” நான் பல தவறுகள் செய்திருக்கிறேன்.
ஆனால், யார் குடும்பத்தையும் கெடுக்கவில்லை. என்னைத்தான் அழித்துக்கொண்டேன். அதனால், என்னை ஒரு 5 ஆண்டுகள்
விட்டுவை “என்றுகூறி அவர் யமனுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார்.

இந்தக் கடிதத்தை, கவிஞர் இறந்தபிறகு போஸ்டராக அடித்து
ஓட்டச் சொன்னார் எம்ஜிஆர். கண்ணதாசன் அண்ணாவின்
உடலுக்கு நான்தான் முதலில் கொள்ளி வைத்தேன். எனக்குப் பிறகுதான் அவருடைய மகன்கள் வைத்தனர்.

அவருக்கு உடல்நிலை மோசமாக இருந்த காலகட்டத்தில், என்னைக் கூப்பிட்டு, ‘நாம் இருவரும் எத்தனையோ பாடல்களைப் படைத்திருந்தாலும், எனக்கு மிகவும் பிடித்த பாடல், “புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே…” பாடல்தான்.

உனக்கு முன்பே நான் இறந்துவிடுவேன். அப்போது எனக்காக
நீ அந்த பாட்டை பாடவேண்டும். நீ பாடும்போது நிச்சயம் அந்த கும்பலில் ஒரு ஓரமாய் நான் உட்கார்ந்து கேட்டுக்கொண்டிருப்பேன்’ என்று கூறினார்” என்று உருக்கமாகப் பகிர்ந்துகொண்டார்
மெல்லிசை மன்னர்.

ஆயிரக்கணக்கான பாடல்கள் வந்தாலும், எந்த காலத்திற்கும் ஏற்றபடி மனிதனின் மனநிலையைப் பிரதிபலிக்கும் கருத்துக்களை மிகவும் ஆழமாகப் பதித்தவர் கண்ணதாசன். அவருடைய வரிகளை இசைமூலம் உயிர்கொடுத்து, எப்போதும் நம்மை முணுமுணுக்க வைத்தவர் விஸ்வநாதன்.

கண்ணதாசனின் பேனாவும் விஸ்வநாதனின் ஹார்மோனியமும் நமக்கு தொடர்ந்து இப்படி முடிவில்லா கதைகளைச் சொல்லிக்கொண்டே தான் இருக்கும். நாமும் ஆர்வத்தோடு கேட்டுக்கொண்டே தானிருப்போம்.

அமர வாழ்வு பெற்ற அற்புதக் கலைஞர்கள்….!!!

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , . Bookmark the permalink.