“பாதியில் போனால் ரத்தம் கக்கிச் செத்துவிடுவாய்” -மூர் மார்க்கெட் போயிருக்கிறீர்களா…?

இன்று இப்படி இருப்பது,

moore -new image

முன்பு இப்படி இருந்தது –

moore-market

இன்றைய மக்களில் “மூர் மார்க்கெட்”டை
பார்த்தவர்கள் எத்தனை பேர் இருப்பார்கள்…..??? !!!
36 வயதுக்கு உட்பட்டவர்கள் யாருக்கும் நிச்சயமாக
அந்த வாய்ப்பு இருந்திருக்காது….

அந்தக்கால மெட்ராஸி’ன் அழியாப்புகழ் பெற்ற மூர் மார்க்கெட்
இருந்த இடம் …….?

இன்றைய 10 மாடி, ” பார்க் ” புறநகர் ரெயில் நிலைய வளாகம்
(திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி தடங்களில் மின்சார ரெயில்
புறப்படும் நிலையம்……) SIAA மைதானம், இன்றைய நேரு ஸ்டேடியத்தின் முன் பக்கம்….ஆகியவற்றின் சில பகுதிகளை உள்ளடக்கிய இடம் தான் ஒருகாலத்தில் சென்னையின் புகழ்பெற்ற “மூர் மார்க்கெட்” இயங்கி வந்த இடம்…

1900-ஆம் ஆண்டில் பிரிட்டிஷார் காலத்தில் கட்டப்பட்ட இந்த மார்க்கெட், அன்றைய மெட்ராஸ் கார்பரேஷன் பிரிசிடென்ட்டான சர் ஜார்ஜ் மூர் என்பவரால் திட்டமிடப்பட்டு துவங்கப்பட்டது…. எனவே அவர்
பெயராலேயே மூர் மார்க்கெட் என்று அழைக்கப்பட்டது.

அந்தக்காலத்தில், இங்கே கிடைக்காத பொருட்களே கிடையாது
என்று சொல்வார்கள்….

முக்கியமாக – பயன்படுத்தக்கூடிய நிலையில் இருக்கும்
பழைய வீட்டு உபயோக சாமான்கள், சைக்கிள், ஆட்டோ,ஸ்கூட்டர்,
லாரி போன்றவற்றின் உதிரிபாகங்கள்… மற்றும்
உயிருள்ள – குரங்குகள், கிளிகள், பலவகை பறவைகள்,
வண்ணவண்ண மீன்கள், மீன் தொட்டிகள் -பழைய கிராமபோன்
இசைத்தட்டுகள், விதம் விதமான பழைய கிராமபோன்கள், பழைய
வானொலிப் பெட்டிகள், ஹார்மோனியம்-கள், இசைக்கருவிகள்….
ஸ்க்ரூ டிரைவரிலிருந்து சுத்தி வரை…..

தமிழிலும், ஆங்கிலத்திலுமாக எக்கச்சக்கமான பழைய புத்தகங்கள்.. சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், நவீன ஷாப்பிங் மால்கள்வராத காலத்தில், மூர்மார்க்கெட் தான் சென்னையின் நடுத்தர மக்களின்ஷாப்பிங் காம்ப்ளெக்சாக இருந்தது என்று சொல்லலாம்.

moore-4

moore-5

moore-6

பொழுதுபோகவில்லை என்றால், மூர் மார்க்கெட் வளாகத்திற்கு
சென்றால் போதும்… இங்கே கட்டிடத்திற்கு உள்பகுதியில்,
சுமார் 400 நிரந்தரக் கடைகள் இருந்தன….பள்ளி, கல்லூரி, மற்றும் பொழுதுப்போக்கு – புத்தகங்கள், நாவல்கள் என்று புதியதும், பழையதுமாக…

இங்கே பல ஆங்கில நாவல்கள் மிக சல்லிசான விலைக்கு கிடைக்கும்.
புத்தகங்களை விற்கலாம், வாங்கலாம், ஒன்றைக்கொடுத்து, இன்னொன்றாக மாற்றியும் கொள்ளலாம்.

கட்டிடத்தின் பின்புறத்திலும், பக்கவாட்டிலும் பல தற்காலிக கடைகள்…
சில கூரையுடன், பல கூரையே இல்லாமல் –
பழைய சாமான்கள் விற்கும் கடைகள்… எவ்வளவு வேண்டுமானாலும்
பேரம் பேசி வாங்கலாம்….

ஆங்காங்கே பல்பொடி விற்பவர்கள், மூலிகைத்தைலம் விற்பவர்கள்
போடும் கூட்டங்கள்…காட்டும் வேடிக்கைகள்…

மோடி மஸ்தான்கள் கீரியையும், பாம்பையும் சண்டை விடப் போவதாக காலையில் இருந்து இரவு வரை போக்கு காட்டிக் கொண்டிருப்பார்கள். யாராவது நகர்ந்தால், “பாதியில் போனால் ரத்தம் கக்கிச் செத்துவிடுவாய்” என மிரட்டுவார்கள். ஆங்காங்கே பிக் பாக்கெட் கூட்டம் வேறு….பொதுவாக மூர்மார்க்கெட் பகுதியே –

ஏமாற்றுபவர்களுக்கும்,ஏமாந்த சோணகிரிகளுக்கும் புகல் அளிக்கும் அற்புதமான ஒரு இடமாக இருந்தது…

1980-வாக்கில், சென்னையில் புறநகர் ரயில் நிலையத்துக்கான
10 மாடிக் கட்டடத்தை அங்கே கட்ட முயற்சி துவங்கியபோது,அங்கு கடை நடத்தியவர்களை அப்புறப்படுத்தும் முயற்சியில் அரசு பலவருடங்களாக முயன்றும் வெற்றி பெறமுடியவில்லை;

மூர்மார்க்கெட்டுக்குப் பின்னால்தான் மாநகராட்சி நடத்திய
மிருகக்காட்சிசாலையான “ஜூ” (zoo) இருந்தது…
பலத்த முயற்சிகளுக்குப் பிறகு ஒருவழியாக, ஜூ’வைஅப்புறப்படுத்தி வண்டலூருக்கு இடம் பெயர்த்து விட்டனர்.

ஆனால், விலங்குகளை அப்புறப்படுத்தியது போல், அங்கிருந்த கடைக்காரர்களை அவ்வளவு சுலபமாக அகற்ற முடியவில்லை.

அவர்கள் காலி செய்யாமல் அடம்பிடித்துக் கொண்டிருந்த
காலத்தில், ஒருநாள் இரவு திடீரென்று அந்த மூர் மார்க்கெட் கட்டிடம் பற்றி எரிந்தது. (அது, திட்டமிடப்பட்டு, அரசு ஒத்துழைப்புடன் நடந்தது
என்றும் சொல்லப்பட்டது…)

தீ அணைக்கப்பட்ட பிறகு, சிதிலமடைந்த சுவர்களைத் தவிர,
அங்கிருந்த ஒரு பொருளும் மிஞ்சவில்லை…..

அந்த கடைக்காரர்களுக்கு உரிய நஷ்ட ஈடு, மாற்று இடம் கொடுக்கப்பட்டு, அரசு அந்த இடத்தை தன் வசப்படுத்திக்

கொண்டதற்குப் பிறகு, இன்றிருக்கும் 10 மாடி கட்டிடம் அங்கே
எழும்பியது.

moore-7

moore-10

moore-12

பின் குறிப்பு – நான் 70-களின் பிற்பகுதியில் ஒரு தடவை
இங்கே போயிருந்தேன்…. வாங்கி வந்தது என்ன தெரியுமா…?
நாங்கள் புதிதாக வாங்கியிருந்த, பழைய சினிமா ப்ரொஜெக்டர்
ஒன்றில் ட்ரயல் ரன் ஓட்டிப்பார்க்க – “பகடை ரங்கன்” என்கிற
டப்பிங் படம் ஒன்றின் 2 ரீல்கள் (22 நிமிடங்கள் ஓடும்…)…..!!!

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , . Bookmark the permalink.