அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளை நிர்வாகத்தில்நிலம் வாங்கியதில் ஊழல் நடந்ததா…?

ayothi ram temple

விகடன் செய்தி தளம் ஒரு ஊழல் புகாரை வெளியிட்டுள்ளது….
( https://www.vikatan.com/news/india/the-opposition-parties-accuse-ram-mandir-trust-of-land-scam-in-ayodhya)

அதன் விவரங்கள் கீழே –

அயோத்தி: 2 கோடி மதிப்புள்ள நிலம் 10 நிமிடத்தில் 18.5 கோடிக்கு வாங்கப்பட்டதா?! – பின்னணி என்ன?

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிகள் முழு வீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில், கோயிலுக்கு நிலம் வாங்கிய விவகாரத்தில் அறக்கட்டளை நிர்வாகம் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக எதிர்க்கட்சியினர் முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பாஜகவின் கனவுத் திட்டங்களில் ஒன்றான அயோத்தி ராமர் கோயிலுக்குக் கடந்த 2019-ல் உச்ச நீதிமன்றம் கிரீன் சிக்னல் காட்டியதைத் தொடர்ந்து உத்தரப்பிரதேசத்தில் முதல்வர் யோகி தலைமையிலான அரசு வரும் 2023-க்குள் முழுமையாகக் கட்டுமான பணிகளை முடிக்கத் தீவிரம் காட்டி வருகிறது.

கடந்த சட்டசபைத் தேர்தலில் பாஜக முன்வைத்த மிகமுக்கிய
தேர்தல் வாக்குறுதிகளில் அயோத்தி ராமர் கோயிலும் ஒன்றாகும்.

கோயில் கட்டுமான பணிகள் தொய்வின்றி நடைபெறுவதற்காக மாநில அரசு தனி கமிட்டி ஒன்றினையும் அமைத்தது. அதன் முழு பொறுப்பையும் 15 பேர் கொண்ட ராம ஜென்ம பூமி அறக்கட்டளையிடம் ஒப்படைத்தது. அந்த அறக்கட்டளையின் மேற்பார்வையின் கீழ் தான் கட்டுமான பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், ராமர் கோயில் கட்டுமான பணிக்காக நிலம் வாங்கப்பட்ட விவகாரத்தில் முறைகேடு நடந்துள்ளதாக காங்கிரஸ், சமாஜ்வாடி, ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சாடியிருப்பதுஅரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இது தொடர்பாக, உ.பி சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த பவன் பாண்டே கூறுகையில், “உள்ளூர் பாஜக தலைவர்கள் மற்றும் சில அறக்கட்டளை உறுப்பினர்களின் ஒப்புதலுடன் இந்த நில மோசடி ஒப்பந்தம் நடந்துள்ளது.

மார்ச் 18-ம் தேதி அந்த நிலம் 2 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் என்னிடம் உள்ளன.
அதேநிலம் 10 நிமிட இடைவெளியில் 18.5 கோடிக்கு ஸ்ரீராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையால் வாங்கப்பட்டதற்கான ஆவணங்களையும் நான் வைத்திருக்கிறேன். 10 நிமிடத்தில்
16.5 கோடி விலை உயரும் அளவுக்கு அந்த நிலத்தில் என்ன தங்கம் விளைந்துவிட்டதா என்று தெரியவில்லை.

ஒப்பந்தம், பத்திரப்பதிவு ஆகிய இரண்டிற்குமே அறங்காவலர்
அனில் மிஷ்ரா மற்றும் மேயர் ரிஷிகேஷ் ஆகியோர் சாட்சிகளாக இருந்திருக்கிறார்கள். அப்படியிருக்கும் போது முறைகேடு நடக்கவில்லை என்று மறுக்க முடியாது. 10 நிமிடத்தில் 16.5 கோடி ஊழல் செய்துள்ளனர். ராமர் கோயிலுக்கு நிலம் என்ற பெயரில் ராமரின் பக்தர்கள் ஏமாற்றப்படுகின்றனர்.

இந்த விவகாரத்தில் முறையான சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். கோடிக்கணக்கான மக்கள் ராமர் கோவிலுக்காக நன்கொடை வழங்கி வருகின்றனர். தங்களுடைய சேமிப்புகளிலிருந்து நன்கொடை வழங்கி வருகின்றனர். அந்த மக்களின் பணத்தில் நீங்கள் இவ்வாறு செய்வது அவர்களை அவமதிப்பதாகும்” என்று கோயில் அறக்கட்டளை நிர்வாகத்தைச் சாடினார்.

அதே போல், ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங் இது தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “பகவான் ராமரின் பெயரில் ஊழல் செய்வார்கள் என யாரும் நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் ஆவணங்கள் கோடிக்கணக்கில் மோசடி நடந்திருப்பதைக் காட்டுகின்றன.

நிலத்தின் விலை, விநாடிக்கு சுமார் 5.5 லட்சம் ரூபாய் அதிகரித்துள்ளது. இந்தியாவில் மட்டுமல்ல உலகில் எந்த நிலமும் ஒரு நொடியில் இவ்வளவு விலை உயர்ந்திருக்க வாய்ப்பில்லை. இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும்” என்றார்.

எதிர்க்கட்சிகள் விவகாரம் தொடர்பாகத் தொடர்ந்து கேள்வி எழுப்பி அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், கோயில் அறக்கட்டளை நிர்வாகம் குற்றச்சாட்டினை மறுத்திருக்கிறது.

இது தொடர்பாக விளக்க அறிக்கை வெளியிட்டுள்ள அறக்கட்டளை பொதுச்செயலாளரும், விசுவ இந்து பரிஷத்தை சேர்ந்தவருமான சம்பத் ராய், “அயோத்தியில் ஏற்கனவே உள்ள குழந்தை ராமர் கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளை விரிவுபடுத்துவதற்காக அறக்கட்டளை சார்பில் நிலம் வாங்கி வருகிறோம்.

போக்குவரத்து எளிதாக இருப்பதற்காக, கோயில் வளாகத்தைச் சுற்றியுள்ள நிலம் தேவைப்பட்டது. அதற்காக வீடுகளும், சிறு கோவில்களுமாக இருந்த அந்த நிலத்தை வாங்கினோம். அங்கு வசித்தவர்களை வேறு இடத்தில் குடியமர்த்துவதற்காக, அயோத்தியில் பாக் பிஜைசி என்ற இடத்தில் உள்ள 12 ஆயிரத்து 80 சதுர மீட்டர் நிலத்தை அறக்கட்டளை வாங்கியது. அந்த நிலத்துக்கு ரூ.2 கோடியே 16 லட்சம் விலை என்ற அடிப்படையில், 2017-ம் ஆண்டு
முதல்கட்ட ஒப்பந்தம் போடப்பட்டு இருந்தது. முன்பணமாக ரூ.92 லட்சம் கொடுக்கப்பட்டு இருந்தது.

அது, 2017-ம் ஆண்டின் சந்தை விலை அடிப்படையில் மதிப்பிடப்பட்ட விலை என்பதால் குறைவாக இருந்தது. அப்போது, ராமர் கோயில் கட்ட அனுமதிப்பதற்கான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரவில்லை.

அந்த தீர்ப்பு, 2019-ம் ஆண்டு நவம்பர் 9-ந் தேதி வெளியானது.அதன்பிறகு நிலத்தின் மதிப்பு ஏறக்குறைய 10 மடங்கு கூடிவிட்டது.

அதனால்தான், கடந்த மார்ச் மாதம் அந்த நிலத்தை ராமர் கோயில் அறக்கட்டளை வாங்கியபோது, விலை 9 மடங்கு அதிகரித்து விட்டது.

நிலத்தின் உரிமையாளர்கள் 2017-ம் ஆண்டே அதை வாங்கியவர்களுக்குக் கடந்த மார்ச் மாதம் தான் பத்திரப்பதிவு செய்து கொடுத்தனர். அடுத்த சிறிது நேரத்தில், ராமர் கோவில் அறக்கட்டளைக்கு நிலம் பதிவு செய்யப்பட்டது.

ஆனால், சந்தை விலையை விடக் குறைவான விலையில் தான் அதை வாங்கி இருக்கிறோம். எனவே, நிலம் வாங்கியதில் எந்தமுறைகேடும் நடக்கவில்லை. அடுத்த ஆண்டு உத்தரப்பிரதேச சட்டசபைத் தேர்தல் நடக்கிறது. அதற்காக ஆதாயம் தேடவே எதிர்க்கட்சியினர் இதுபோன்ற பொய் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கின்றர் என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.



________________________________________________

இந்த புகார்களை விசாரித்து உண்மையை கண்டறிய பெரிய
பிரம்ம சூத்திரமோ, எஃப்.பி.ஐ.யோ, சி.பி.ஐ.யோ வேண்டியதில்லை;
சில சின்னச் சின்ன கேள்விகளுக்கு பதில் தெரிந்தாலே போதும்…

1) // அந்த நிலத்துக்கு ரூ.2 கோடியே 16 லட்சம் விலை என்ற அடிப்படையில், 2017-ம் ஆண்டு முதல்கட்ட ஒப்பந்தம் போடப்பட்டு இருந்தது. முன்பணமாக ரூ.92 லட்சம் கொடுக்கப்பட்டு இருந்தது. //

  • ராமர் கோயில் அறக்கட்டளை, 2019-ல் தீர்ப்பு வந்த பிறகுதான்
  • அமைக்கப்பட்டது என்கிற நிலையில், 2017-ல் அந்த நிலத்தை வாங்க
  • ஒப்பந்தம் செய்து அட்வான்சாக 92 லட்சம் பணமும் கொடுத்தது
  • யார்…?

எதாவது அமைப்பா..? அல்லது தனி நபரா…? அந்த
தனி நபருக்கும் தற்போது செயல்படும் அறக்கட்டளைக்கும் எதாவது
தொடர்பு உண்டா…? பிற்காலத்தில் இந்த நிலம் ராமர் கோயில்
அறக்கட்டளைக்கு தேவைபடும் என்பது அவருக்கு தெரிந்திருந்ததா…?
எப்படி…?

  • அந்த ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டது யார்…? இப்போது
    அறக்கட்டளையில் உறுப்பினராக உள்ள எவராவதா…?
  • 92 லட்சம் அட்வான்ஸ் கொடுத்து ஒப்பந்தம் போட்டபோது,எந்த
  • விலைக்கு வாங்குவதாக பத்திரத்தில் பதிவு செய்யப்பட்டது…?
  • எவ்வளவு நாட்களுக்குள் மீதி பணத்தை கொடுத்து பத்திரப்பதிவு
  • செய்ய வேண்டும் என்பது குறித்த ஒரு சரத்து/விதி நிச்சயமாக
  • அந்த அட்வான்ஸ் ஒப்பந்த பத்திரத்தில் இருக்க வேண்டும்.
  • அதில் குறிப்பிட்டுள்ள காலக்கெடு என்ன…? அந்த குறிப்பிட்ட
  • காலகட்டத்திற்குள் முழுத்தொகையை கொடுத்து கிரய பத்திரம்
  • செய்யா விட்டால், அட்வான்ஸ் ஒப்பந்தம் காலாவதியாகி
  • இருக்க வேண்டும்.
  • அந்த காலக்கெடுவுக்குள் மீதிபணத்தை கொடுத்து, நிலத்தை
    கிரயம் செய்யாதற்கான காரணம் என்ன…? குறிப்பிட்ட காலத்திற்குள்
  • மீதித் தொகையை கொடுத்து பத்திரத்தை இறுதிக்கிரயம் செய்து
  • கொள்ளா விட்டால், ஒப்பந்தம் ரத்து செய்யப்படாது – ஆனால்
  • நிலத்தில் விலையில் மாக்கெட் நிலவரத்திற்கு தகுந்தாற்போல்
  • மாற்றம் இருக்கும் என்று பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதா…?

( பத்திரப்பதிவு முறைகளின்படி, இந்த இரண்டில் எதாவது ஒரு கண்டிஷன் அவசியம் அதில் இருக்க வேண்டும்…)

  • நிலத்திற்கு அட்வான்ஸ் கொடுத்து பத்திரம் போட்டவர்கள்,
    முழுப்பணத்தையும் எப்போது கொடுத்தார்கள்…?
  • 2017-ல் அட்வான்ஸ் வாங்கிய நிலத்திற்கான பத்திரப்பதிவு,
  • செய்யப்பட்ட நிலையில், கிரய ஒப்பந்தம் 2021-மார்ச் 18 – வரை
  • தள்ளிப்போடப்பட்டதற்கான காரணம் என்ன…?
  • மார்ச் 2021-ல் தான் அறக்கட்டளை நிலத்தை விலைக்கு
    வாங்கியது என்று கூறுகிறார்கள். அறக்கட்டளைக்கு நிலத்தை
    விற்றவர் அந்த நிலத்தை எப்போது கிரயப்படுத்தினார்…?
    என்ன விலைக்கு…?
  • அந்த ஆசாமியால் நிலம் வாங்கப்பட்டதும், அதே ஆசாமியால்
    அறக்கட்டளைக்கு விற்கப்பட்டதும் மார்ச் 2021-ல் ஒரே நாளில் தான்
    நடந்தது என்பது உண்மை தானா…?
  • மார்ச் 2021-ல் அந்த ஆசாமி தனக்கு விற்றவரிடமிருந்து
    பத்திரப்பதிவு செய்தது 2 கோடிக்கா…? அல்லது அன்றைய மார்க்கெட்
    விலைக்கா…?
  • 2 கோடிக்கு என்றால், இதில் அதை பதிவு செய்த ரிஜிஸ்டிராரும்
    ஊழலுக்கு உடந்தையாக இருந்திருக்கிறார் என்று பொருள்.
    மார்ச் 2021-ல் 18.5 கோடி ரூபாய் பெறுமானமுள்ள ஒரு நிலத்தை,
    2 கோடிக்கு பதிவு செய்திருக்கிறார் என்றால், உ.பி.அரசுக்கு
    வரவேண்டிய பத்திரப்பதிவு வரியிலும் மோசடி நடந்திருக்கிறது.
    16 கோடி வித்தியாசம் என்றால், 10% வரியென்றாலும் கூட,
    உ.பி.அரசிற்கு 1.6 கோடி வரி இழப்பு நிகழ்ந்திருக்கிறது.

ஒரே நாளில் ஒரே நிலத்தை, 2 கோடி என்று மதிப்பிட்டு
ஒரு பதிவும், மீண்டும் அதே நாளில், அதே நிலத்தை
18.5 கோடி என்று மதிப்பிட்டு இன்னொரு பத்திரப்பதிவையும்
அந்த ரிஜிஸ்டிரார் செய்திருந்தால் என்றால் இது நிச்சயமாக
ஊழல் தான்.

  • இத்தகைய செயல்கள், அரசு அதிகாரிகள், ஆளும் கட்சியைச்
  • சேர்ந்த அரசியல்வாதிகள், ட்ரஸ்டில் உள்ள சிலர் ஆகியோரின் கூட்டு
  • முயற்சி இல்லாமல் நடக்க வாய்ப்பில்லை.

குற்றச்சாட்டை மறுப்பவர்கள், மேற்கண்ட கேள்விகளுக்கு
உரிய பதில்களை அளித்தால், ஊழல் நடந்திருக்கிறதா இல்லையா
என்பது தெளிவாகத் தெரிந்து விடும்….

ஆனால் இப்போது நடப்பது அரைகுறையாக எதையோ
சொல்லி பூசி மழுப்பும் வேலைதான் என்றே தோன்றுகிறது.

சந்தேகங்கள் தீர வேண்டுமானால் – மேற்கண்ட அத்தனை
கேள்விகளுக்குமான பதில்கள் அவர்களது விளக்கத்தில் இருக்க
வேண்டும்.


——————-

( பின் குறிப்பு – உண்மையைச் சொல்ல வேண்டுமானால், எத்தனையோ கோடி ஊழல்களைப் பார்த்த பிறகு, இந்த பிசாத்து 16 கோடி ஊழலெல்லாம் ஒரு பெரிய ஊழலா என்ன என்றே தோன்றுகிறது ….

400 கோடி ப்ராஜ்க்டுக்கு 16 கோடி என்றால், 4 சதவீதம் கூட இல்லை; 10 % எல்லாம் சர்வசாதாரணம் என்கிற நிலையில் இதெல்லாம் ஒரு ஊழலா என்ன…? இதைப்போய் பெரிய புகாரென்று எடுத்துக்கொண்டு வந்து விட்டார்களே…!!! )


____________________________________________________________________________________________                              

.

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , . Bookmark the permalink.

11 Responses to அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளை நிர்வாகத்தில்நிலம் வாங்கியதில் ஊழல் நடந்ததா…?

  1. புதியவன் சொல்கிறார்:

    சுல்தான் அன்சாரி என்பவர் 2017ல், குஷும் பதக் என்பவரிடமிருந்து 2 கோடி ரூபாய்க்கு நிலத்தை வாங்கினார். இதுக்கு அப்போதைய சந்தை மதிப்பு 5.7 கோடி ரூபாய் என்று சொல்கின்றனர். ஆனால் மார்க்கெட் விலை, வாங்கும் விலை, நிலச் சொந்தக்காரரைப் பொருத்து மாறும். நிலம் வாங்கிய எவருக்குமே இதுபற்றித் தெரியும்.

    தீர்ப்புக்குப் பிறகு ராம் மந்திர் அறக்கட்டளை 18.5 கோடி ரூபாய்க்கு வாங்கியிருக்கிறது.

    1. இப்போ லாபம் அடைந்தவர் யார்? ராம் மந்திரா இல்லை தீர்ப்பு இந்துக்களுக்குத்தான் இருக்க முடியும் என்று புரிந்துவைத்து புத்திசாலித்தனமாக வியாபாரம் பார்த்த சுல்தான் அன்சாரியா?

    2. ராம் மந்திருக்காக (அதன் சுற்றுப்புறத்திற்காக) என்று அரசு, நம் தமிழக அரசு விஜய்க்குச் சொந்தமான இடத்தை (அசோக் நகர்) எடுத்துக்கொண்டு அதற்கு equivalentஆக ஒரு இடம் கொடுத்த மாதிரியோ, இல்லை விஜயகாந்தின் திருமண மண்டபப் பகுதியை இடித்து மேம்பாலம் கட்டி, அதற்கு ஈடாக ரூபாயைக் கொடுத்துச் சரிக்கட்டின மாதிரியோ செய்திருக்க முடியுமா? விஜயகாந்தின் இடிக்கப்பட்ட இடத்திற்கு 2006ல், 8 கோடி ரூபாய் காம்பன்சேஷன் கருணாநிதி அரசால் கொடுத்ததாகச் சொல்லப்பட்டது. இடித்ததற்கு அரசியல் காரணம் என்று விஜயகாந்த் பரப்புரை செய்ததும் உங்களுக்குத் தெரிந்திருக்கும். அந்த இடத்தை (மொத்த இடத்தையும்) எத்தனை ரூபாய்க்கு விஜயகாந்த அப்போது வாங்கியிருப்பார்? இந்தப் பதிவில், ராமர் கோவிலைக் கட்டுவது அதன் அறக்கட்டளை என்று நினைக்கிறேன்.

    3. இந்த நிலப்பதிவிலேயே, discrepancy உள்ளது. சுல்தான் அன்சாரியின் பெயரில் அந்த இடத்தைப் பதிவு செய்தது மாலை 5.22 மணிக்கு (பத்திரப்பதிவின் நேரம்). ராம் அறக்கட்டளைக்கு விற்பனை பதிவு செய்யப்பட்ட நேரம் மாலை 5.11 மணிக்கு. இது பத்திரப் பதிவுத்துறை (உ.பி. ல உள்ள சட்டம் என்னன்னு தெரியலை) தாமதமாகப் பதிவு செய்திருக்கணும், இல்லைனா, இடத்தைத் தன் பெயரில் பதிவு செய்துகொள்ள (ஒருவேளை POA, விற்பவரிடமிருந்து கிடைத்திருக்கணும்) வெகுவாக சுல்தான் அன்சாரி தாமதப்படுத்தியிருக்கிறார். விற்பனை பேரம் படிந்த பிறகுதான், as part of registering process, he had submitted, registering in his name application followed by selling to Ram Mandir Trust. (ie should have submitted both applications together)

    இந்த விளக்கத்தையும் ஒரு இடத்தில் பார்த்தேன்.

    4. சதுர அடி 500 ரூபாய்க்கு 2005ல் இருந்த இடம் இப்போ 20,000 ரூபாய் (பெங்களூரில்). Bangalore Development Authorityயிடமிருந்து வாங்கும் நிலம் சதுர அடி 1000 ரூபாய் என்று இருக்கும், வாங்கியவர் இரண்டாம் வருடத்தில் விற்கும்போது 5000 ரூபாய்க்கு மேலேயே நில விலை உயர்ந்திருக்கும். அதனால், நிலத்தின் விலை உயர்வு என்பது பல்வேறு காரணிகளுக்கு உட்பட்டது.

    5 பத்திரப் பதிவுத் துறையின் யோக்கியதாம்சங்களைப் பற்றி, இடத்தைப் பதிவு செய்தவர்கள், நிலத்தை அளந்தவர்கள், பட்டா வாங்குபவர்கள் போன்றவர்களிடம் கேட்டுத் தெளிந்துகொள்ளலாம்.

    For you to know. 60களில் (அதற்கு முன்போ), கமலஹாசனின் தந்தை (காங்கிரஸில் முக்கியப் பொறுப்பில் இருந்தவர்), பரமக்குடியில் தேசிய நெடுஞ்சாலை வரப்போகும் இடத்தை முன்பே தெரிந்துகொண்டு, பெருமளவு இடத்தை வாங்கி, அதனை பல்வேறுபட்டவர்களையும் வாங்கச் சொல்லி, பிறகு தேசிய நெடுஞ்சாலை வந்ததும், வாங்கிய ஒவ்வொருவருக்கும் கொள்ளை லாபம் கிடைத்தது, என்று சாருஹாசன் அவரது புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார். அரசியல்வாதிகள், திட்டங்களை முன்கூட்டியே தெரிந்துகொண்டு இடங்களை வாங்குவதும், கூட்டணி வைப்பதற்கு ஒரு சலுகையாக, தேசிய நெடுஞ்சாலை தன்னுடைய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் இடத்திற்கு அருகாமையில் செல்லவேண்டும் என்று வற்புறுத்திப் பெற்றுக்கொள்வதும் (இதுவும் பத்திரிகைகளில் வந்ததுதான்) சகஜம்தானே. Whoever is smart, makes lot of money in Real Estate. மருத்துவர் அன்புமணி அவர்கள் ‘தொழில்’ என்ற இடத்தில் Real Estate என்று தேர்தலுக்கு நிற்கும் விண்ணப்பப் படிவத்தில் போட்டிருந்தார் எனவும் பத்திரிகைச் செய்திகளில் வந்ததுதானே.

  2. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    புதியவன்,

    நான் எழுப்பிய வினாக்கள் ஒன்றுக்கு கூட
    உங்கள் விளக்கத்தில் விடையேதும் ..
    இருப்பதாகத் தெரியவில்லையே….!!!

    .
    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

    • Karthikeyan Palanisamy சொல்கிறார்:

      அது ஒன்னும் இல்லை .. ஊழல் நடந்திருக்கு ஆனா அதனோட பலன் அன்சாரி என்கிற முகமதியருக்கு போயிருக்குன்னு சொல்லுறார்

      • புதியவன் சொல்கிறார்:

        எந்த நில வியாபாரத்திலும் மிடில்மென் இல்லாமல் இருக்காது, இடைப்பட்டவர்கள் லாபம் சம்பாதிக்காமல் இருக்கமாட்டார்கள். நம்மவீடு, வாடகைக்கு இருக்கிறவர் என்று இருந்தாலும் இருவரையும் அவ்வப்போது இணைப்பவர் லாபமடைவது தவிர்க்க முடியாது.

        கடவுளைத் தொழச் செல்லும் நமக்கு அந்தச் சிறு நேரத்தில் இருக்கும் பக்தி, அங்கேயே கிடந்து உழல்பவர்களுக்கும், தொழிலாக எண்ணுபவர்களுக்கும் இருக்காது.

        இதை ஊழல் என்று சொல்வதில் அர்த்தமில்லை என்பது என் கருத்து. உங்களைக் கொஞ்சம் விட்டால், சில பல நிமிடங்களுக்கு ஒருமுறை அவருடைய சொந்தத் தொலைக்காட்சியில் அரசு செலவில் எப்படி மாஸ்க் அணிவது என்று விலாவாரியாகப் பேசும் விளம்பரத்தை வெளியிட்டு, காசு அள்ளுவதை, மக்களுக்கான அறிவிறுத்தல் என்று பாசிடிவ் ஆக எண்ணாமல், ஊழல் என்று சொல்லிவிடுவீர்கள் போலிருக்கிறதே.

        • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

          புதியவன்,

          உங்கள் நீதிக்கும் –
          வாதத்திறமைக்கும் …….

          தலை வணங்குகிறேன்….!!!!!!!!!!

          .
          -வாழ்த்துகளுடன்,
          காவிரிமைந்தன்

        • Karthikeyan Palanisamy சொல்கிறார்:

          சகோ
          இது தான் (தொலைக்காட்சி விளம்பரம்) விஞ்ஞான முறையில் ஊழல் செய்வதென்பது

  3. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    // எந்த நில வியாபாரத்திலும் மிடில்மென்
    இல்லாமல் இருக்காது, இடைப்பட்டவர்கள்
    லாபம் சம்பாதிக்காமல் இருக்கமாட்டார்கள் //

    லாபம் சம்பாதித்த அந்த மிடில்மென் யார்
    என்பது தான் இப்போது கேள்வியே….!!!

    அல்லவா …..?

    • புதியவன் சொல்கிறார்:

      As of NOW, இதில் ஊழல் இருக்காது என்பது என் கருத்து. ஒரு நிலத்தை யாரிடம் வாங்குவது, யாரை தொடர்புகொள்வது என்றெல்லாம் ரியல் எஸ்டேட் ப்ரோக்கர்களுக்குத் தெரியும். இது பெரிய amount என்பதால் கமிஷன் அதிகமாக இருந்திருக்கலாம் (பொதுவாக 1-2 சதம் கமிஷன்). இது 10க்கு 10 சதுர அடி நிலம் வாங்கினாலும், வீடு விற்பதானாலும் அதேதான்.

      • புதியவன் சொல்கிறார்:

        சமீபத்தில் படித்த, கேள்விப்பட்ட செய்திகள், நில மதிப்பில் பல்வேறு வித்தியாசங்கள் இருப்பதைக் காண்பிக்கின்றன. அருகில் உள்ள நிலத்துக்கு 8 கோடி, சிறிது தள்ளி உள்ள நிலத்திற்கு 18 கோடி என்று. விவகாரம் சூடுபிக்குமா என்பது வரும் வாரங்களில் தெரியும். செய்தி கிடைத்தால் இங்கு எழுதுகிறேன்.

      • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

        புதியவன்,

        //As of NOW, இதில் ஊழல் இருக்காது
        என்பது என் கருத்து. //

        As of Now, இதில் ஊழல் நிச்சயம் இருக்கிறது
        என்பது என் கருத்து…

        பயன் பெற்றவர்கள் யார் யார் என்பது தெரிய
        கொஞ்சம் நாளாகலாம்… அதனால் தான்
        இப்போதைக்கு இதை மேற்கொண்டு தொடராமல்,
        தொடரும் ….. போட்டு, விட்டு விடுகிறேன்.

        .
        -வாழ்த்துகளுடன்,
        காவிரிமைந்தன்

  4. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    விஷ்வ ஹிந்து பரிஷத் வெளியிட்டுள்ள
    அறிக்கையிலேயே பல ஓட்டைகள்
    இருக்கின்றன…. பொறுத்திருந்து பார்ப்போம்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.