சிவன் சொத்து மட்டும் தானா …..?

madurai temple

இந்து சமய அறநிலையத் துறையின் நிர்வாகம் திடீரென்று
மிகச்சிறப்பாகவும், துரிதமாகவும் செயல்படுவதாகவும், புதிய ஆட்சி
வந்த ஒரு மாத காலத்திற்குள் பல ஆக்கிரமிப்புகள் நீக்கப்பட்டு விட்டதாகவும் செய்திகள் வருகின்றன.

கோயில்களின் சொத்து விவரங்கள் அனைத்தும் விரைவில்
இணையதளத்தில் பதிவேற்றப்படும் என்றும் அதற்கான
பணிகள் விரைவாக நடைபெறுகின்றன என்றும் கூட தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


ஒவ்வொரு கோயிலைப்பற்றியும், கைவசம் ஏற்கெனவே
இருக்கிற ஆவணங்களை பதிவேற்றுவது என்பது மிகச்சாதாரணமாக
அதுவும் எப்போதோ நடந்திருக்க வேண்டிய விஷயம். ஓரளவு ஏற்கெனவே அது நடந்தும் இருக்கும்….இப்போது நடப்பது
அதை விரைவு படுத்தும் பணிமட்டுமே…

அதிகாரிகளை நீள்துயிலில் இருந்து எழுப்பி விரைவுடன் செயல்பட வைக்கும் என்கிற வகையில் அமைச்சரின் முயற்சிகள் பாராட்டத்தகுந்தவை.

ஆனால் இது எந்த விதத்திலும், கோயில்களில் நடக்கும் ஊழல்களை களைவதாகாது… ஊழல்களை களைய எடுக்கப்படும் நடவடிக்கைகள் என்னென்ன என்பதையும் மக்கள் தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள்.


அரசின் தகவல்களின்படி – தமிழக இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் மொத்தம்36 ஆயிரத்து 488 கோயில்கள், 56 திருமடங்கள், திருமடத்துடன்இணைந்தபடி 58 கோயில்கள் உள்ளன. இவை தவிர, 17 சமணக்கோயில்கள் உள்ளன. இந்தக் கோயில்கள் மற்றும் திருமடங்களுக்குச்சொந்தமாக நன்செய், புன்செய், மானாவாரி என்று 4 லட்சத்து 78ஆயிரத்து 348 ஏக்கர் நிலங்கள் உள்ளன.

இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் 22,600 கட்டிடங்கள்,33,665 கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இதுதவிர 1 லட்சத்து 23 ஆயிரத்து 729 பேருக்கு விவசாய நிலங்கள் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. இவை மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.58.68 கோடி வருவாய் கிடைக்கிறது.

( அவ்வளவு சொத்துகளுக்கு – வருவாய் இவ்வளவு தானா…? )

அண்மையில் வடபழனி கோயிலுக்கு சொந்தமான, ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த பல கோடி ரூபாய்கள் பெறுமானமுள்ள நிலங்கள்மீட்கப்பட்டதாக மிக பலத்த விளம்பரங்களுடன் செய்திகள்வெளியாயின…

ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது நல்ல செய்தி தான்….
ஆனால் அது மட்டும் போதுமா…?

இது குறித்து,
மக்கள் மேற்கொண்டு பல விவரங்களை எதிர்பார்க்கிறார்கள்…

எத்தனை வருடங்களாக அந்த நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்தன…?
அதை மீட்பதற்கு இதற்கு முன் செய்யப்பட்ட முயற்சிகள் என்ன…?
ஏன் மீட்க முடியவில்லை…?

இப்போது அவர்களிடமிருந்து நிலத்தை மீட்டது எப்படி…?
அதிகாரத்தை பயன்படுத்தி காவல் துறை உதவியுடனா…?
அல்லது நீதிமன்ற உதவியுடன் சட்டபூர்வமாகவா…? இதுபோன்ற விவரங்கள் எதுவும் வெளிவரவில்லை; ஏனோ…?

இப்போது நிலத்தை மீட்டாகி விட்டது. சரி.
ஆனால் இத்தனை ஆண்டுகளாக அதை ஆக்கிரமித்திருந்தவர்கள்
மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது…?
கிரிமினல் நடவடிக்கைகள் எதாவது உண்டா…?

இவ்வளவு ஆண்டுகளாக, அவர்களது ஆக்கிரமிப்பால் கோயிலுக்கு
ஏற்பட்ட வருமான இழப்பை அவர்களிடமிருந்து வசூலிக்க
என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது…?

முக்கியமாக, ஆக்கிரமிப்பாளர்கள் யார் என்கிற விவரம் இன்னமும்
வெளியிடப்படாமல் மறைக்கப்படுவது எதனால்…?

சம்பந்தப்பட்டவர்கள் அந்தக்கட்சியாக இருந்தாலும் சரி,
இந்தக்கட்சியாக இருந்தாலும் சரி – எந்த கட்சியினராக இருந்தாலும்

இந்த விவரங்கள் பகிரங்கமாக வெளியிடப்பட வேண்டும்.


இன்னொரு முக்கியமான விஷயம் …
தற்போது துரிதமாக பணிகள் நடைபெறுவது – கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களின் பத்திரங்களை இணையதளத்தில் பதிவேற்றும் பணி மட்டும் தான்.

கோயில்களுக்குச் சொந்தமான கட்டிடங்கள், வீடுகள்,
வாடகைக்கு விடப்பட்டிருக்கும் கடைகள் போன்ற விவரங்களை
காண முடியவில்லை; அவை எப்போது பதிவேற்றப்படும் என்பது
பற்றிய எந்த பேச்சும் இல்லை;

கோயில் சொத்துக்கள் சம்பந்தமாக நடைபெறும் முக்கியமான
முறைகேடுகள் என்று எதைச் சொல்லலாம்….?

மிகக்குறைந்த தொகைக்கு,
மிக நீண்ட காலங்களுக்கு –
கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களை, கட்டிடங்களை குத்தகைக்கோ, வாடகைக்கோ விடுவது….

கோயில்களுக்கு சொந்தமான கடைகளை –
குறிப்பிட்ட நபர்களுக்கே
தொடர்ந்து, மிகக்குறைந்த வாடகைக்கு விடுவது….

அந்த குறைந்தபட்ச வாடகை, குத்தகைப் பணத்தைக் கூட
கொடுக்காமல் பலர், பல ஆண்டுகளாக ஏமாற்றி, அனுபவித்து வருவது போன்றவை….

ஏற்கெனவே அறநிலையத்துறை வசம் இருக்கும் ஆவணங்களை
ஸ்கேன் செய்து வலைத்தளத்தில் ஏற்றுவது எந்த வகையிலும்
ஊழல்களை ஒழிக்கும் வழியாகாது.

ஒவ்வொரு கோயிலுக்கும் சொந்தமான நிலங்கள், கட்டிடங்கள், மற்றும் கடைகள் – யார் பெயரில் குத்தகைக்கு அல்லது வாடகைக்குவிடப்பட்டிருக்கின்றன…?

உண்மையில் தற்போது அவை யார் வசம் இருக்கின்றன…?

அவற்றிற்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கும் குத்தகைத் தொகை
எப்போது, யாரால் – நிர்ணயிக்கப்பட்டது…?

தற்போதைய மார்க்கெட் நிலவரத்திற்கு இணையாக
அந்த தொகைகள் உள்ளனவா…?
குத்தகைதாரர்கள் ஒழுங்காக குத்தகைப்பணத்தை செலுத்துகிறார்களா..?

இதில் வாடகை / குத்தகைப்பணம் செலுத்தாமல் பாக்கி வைத்திருப்பவர்கள் எத்தனை பேர்…? அவர்களின் பெயர் விவரங்கள் என்ன…? மொத்தமாக அவர்களிடமிருந்து வரவேண்டிய பாக்கி தொகை எவ்வளவு…?

எவ்வளவு ஆண்டுகளாக, எத்தனை தொகை பாக்கி…?
அவற்றை வசூலிக்க இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன…?

ஒவ்வொரு கோயில் குறித்தும் –
இது போன்ற விவரங்கள் அனைத்தையும் ஒரு அறிவிப்புப்பலகையில் தெரிவித்து, சம்பந்தப்பட்ட கோயில்களின்
நுழைவாயில் அருகே பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட
வேண்டும்…. முக்கியமாக இந்த விவரங்கள் கோயிலுக்கு
வரும் உள்ளூர் பக்தர்களுக்கு தெரிய வேண்டும். இதில் முறைகேடுகள் இருந்தால், அவர்களால் தான் கண்டுபிடிக்க முடியும்.


மேலும், கோயிலுக்குச் சொந்தமான கடைகள் –
எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை வாடகைக்கு விடப்படுகின்றன…? அவை முறைப்படி பொதுவில் ஏலத்தில்
விடப்படுகின்றனவா…? ஏலம் எடுத்தவர்களிடம் முன்தொகை
உரிய முறையில் பெறப்பட்டிருக்கின்றனவா…?

கடை வாடகை பாக்கி வைத்திருப்பவர்கள் மீது உரிய முறையில்
நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றனவா…?

தொடர்ந்து ஏமாற்றுபவர்களின் கடைகளுக்கு ‘சீல்’ வைக்கவும்
அவற்றை காலி செய்யவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டனவா…?
இந்த விவரங்கள், அறிவிப்புப் பலகையில் இல்லையென்றாலும்,
அறநிலையத்துறை வலைத்தளத்தில் அவசியம் வெளியிடப்பட வேண்டும்.

சேலத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில், “தமிழக அரசு, 1985-86, 1986-87ஆம் ஆண்டுகளில் வெளியிட்டகொள்கை விளக்கக் குறிப்பேட்டில், தமிழகத்தில் உள்ள கோயில்களுக்குச் சொந்தமாக 5 லட்சத்து 25 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் இருந்ததாகக் குறிப்பிட்டிருந்தது.

2018-19, 2019-20ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட கொள்கை விளக்கக்குறிப்பேட்டில், 4 லட்சத்து 78 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதில் மீதமுள்ள 47 ஆயிரம் ஏக்கர் நிலம் என்னஆயிற்று… ஏன் இந்த வித்தியாசம் என்பதை கண்டுபிடிக்க உத்தரவிடவேண்டும் என்று கோரி….

உயர்நீதிமன்றம் அரசிடமிருந்து
இது குறித்து விளக்கம் கோரியுள்ளது…

குறிப்பிட்ட கால இடைவெளியில் (1985 முதல் 2019 வரையில்)
தமிழகத்தின் 2 முக்கிய கட்சிகளும் மாறி மாறி ஆட்சியில் இருந்திருக்கின்றன.
இந்த 47,000 ஏக்கர் நிலம் எப்போது, எப்படி – காணாமல் போனது
என்பதை தற்போதைய நிர்வாகம் கண்டுபிடித்து நீதிமன்றத்தில்
தெரிவிக்க வேண்டிய கட்டாயம் இப்போது நேர்ந்திருக்கிறது….

ஆனால், இந்த விஷயம் இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு இழுத்தடிக்கப்பட போகிறதோ….?


இந்து சமய அறநிலையத்துறை இணையத்தில் விவரங்களை
பார்க்கப் போனால் – ஒரு பொறுப்பு துறப்பு காணப்படுகிறது….

அதாவது, தளத்தில் இருக்கும் எந்த தகவலும்
சரியானது, உண்மையானது என்று துறை பொறுப்பேற்காதாம்…!!!

விஜய் ஒரு படத்தில் சொல்லும் டயலாக் நினைவிற்கு
வருகிறது…” நான் சொல்ற பேச்சை நானே கேட்க மாட்டேன்…”

அது போல் இவர்கள் பதிவேற்றும் ஆவணங்களின்
உண்மைத்தன்மைக்கு இவர்கள் பொறுப்பேற்க மாட்டார்களாம்…!!!

சிரிப்பதா அல்லது கோபப்படுவதா என்று தெரியவில்லை;

____________________________________________________________________________

பாருங்களேன் –
( DISCLAIMER –

இந்த இணையதளத்தில் உள்ள தகவல்கள் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே ஆகும். அதை ஓர் முதன்மை / இரண்டாம்நிலை அல்லது உறுதியான ஆதாரமாக சமய நிறுவனங்களின் நலனுக்கு பாதகமாக பயன்படுத்த முடியாது.

பொதுமக்களின் பார்வைக்காக மட்டுமே இந்த தகவல்கள் தொகுத்து வழங்கப்படுகிறது. கோவில்களில் உள்ள பதிவேடுகளின் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ள இந்த பதிவுகள்,

வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ, முழுமை, துல்லியம், நம்பகத்தன்மை, பொருந்தக்கூடிய தன்மைக்கான எந்தவொரு உத்தரவாதத்தையும் இத்தகவல் அளிக்கவில்லை.

இவ்விணையத் தகவல்களை துறையின் அதிகாரப்பூர்வமான தகவலாக கருத இயலாது.



____________________________________________________________________________


வெறும் விளம்பரத்திற்காக அல்லாமல் நிஜமாகவே –

கோயில்களின் நிர்வாகத்தில்,
ஊழல்கள் களையப்படுமேயானால்,
ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமேயானால்,
வாடகை /குத்தகை பாக்கி ஒழுங்காக வசூலிக்கப்படுமேயானால்,
கடைகள், கட்டிடங்கள், நிலங்கள் ஆகியவை
ஏலம் விடுதல், குத்தகைக்கு விடுதல் போன்றவை
எந்தவித ஒளிவுமறைவும் இன்றி, வெளிப்படையாக
நடத்தப்படுமேயானால்,

பெண்களை அர்ச்சகர் ஆக்குவோம்;
திருநங்கைகளை அர்ச்சகர் ஆக்குவோம்;
என்பது போன்ற அபத்தமான யோசனைகளை மட்டுமே நம்பியிராமல்,

நிஜமாகவே நிர்வாகச் சீர்திருத்தங்கள் நடைபெறுமானால் –
அவற்றை அவசியம் வரவேற்போம்.

அந்த காலத்திற்காக காத்திருப்போம்…!!!

.


___________________________________________________________________________________

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to சிவன் சொத்து மட்டும் தானா …..?

  1. புதியவன் சொல்கிறார்:

    இப்படி ஒரு பதிவு நான் படித்தேன்…. அதுபோல வடபழனி நிலம் மீட்பு என்பது நாடகம் என்பதையும் படித்தேன்.

    வடபழனி கோவில் நிலம் மீட்பு என்பது திமுகவின் கண்துடைப்பு.?

    சிவன் கோவில் சொத்தான லயோலா கல்லூரி நிலத்தை மீட்க முடியுமா.?

    பதிவர்:-
    வ.சிவாஜி.
    ஒருங்கிணைப்பாளர்.
    புதிய பாரதம்.
    +917867890890.

    இந்துக்களின் விரோதி திமுக என்பது இந்துக்களின் குற்றச்சாட்டு;இதை சமாளிக்க வடபழனி கோவில் நிலம் மீட்பு என்ற பெயரில் அபாரமான நாடகத்தை திமுக நடத்தியுள்ளது.!

    வடபழனி கோவிலுக்கு சொந்தமான 5.5 ஏக்கர் நிலத்தில்,கொரானா காலம் என்பதால் சினிமா சூட்டிங் இல்லை இதனால் சினிமா வாகனங்கள் தற்காலியமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது இது தான் உண்மையான நிலவரம்.வடபழனி கோவில் நிலத்தில் சினிமா வாகனங்கள் நிறுத்துவதற்கு வாடகைக்கு விட்டு இருக்கலாம் இதில் வரும் வாடகையை வடபழனி சிவன் கோவில் மற்றும் பெருமாள் கோவிலை பராமரிப்பு பணி,அன்னதானம்,குருக்கள் குடும்ப செலவு கொடுக்கலாம் இப்படி செய்யாமல் விட்டது ஏன் என்ற கேள்வியை திரு. மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு முன் வைக்கிறேன்.!

    பெப்சி சங்கத்திடம் வாகனங்களை எடுக்க சொன்னீர்கள் அவர்கள் எடுத்து விட்டார்கள் இது எப்படி ஆக்கிரமிப்பு அகற்றம் என்று சொல்ல முடியும்.?

    தமிழ்நாடு வணிகர் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜாவின் மகன் விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் பிரபாகரன் ஒரு வாரமாக வடபழனி கோவில் நிலத்தை சுற்றி சுற்றியே வந்துள்ளார் எனவே திமுக வடபழனி கோவில் நிலத்தை ஏதோ செய்வதற்கு திட்டம் தீட்டுகிறது.!

    உண்மையிலேயே இந்து கோவில் நிலத்தை மீட்க வேண்டுமானால் 1. லயோலா கல்லூரி நிலத்தை மீட்டு காட்டுங்கள்,2.இந்து கோவில் நிலம் இந்துக்களுக்கே என்று சொல்லுங்கள்,3.இந்து கோவில் நிலத்தில் இருந்து கிருத்துவ மிசனாரி,இஸ்லாமிய ஜமாத்தை வெளியேற்றுங்கள்,4.இந்து கோவிலை சுற்றியும்,இந்துக்கோவில் நிலத்தில் கடை வைத்திருக்கும் இந்துக்கள் அல்லாதவர்களை வெளியேற்றுங்கள்,5.இந்து கோவிலில் பணியாற்றும் அந்நிய மதத்தினரை வெளியேற்றுங்கள் இது தான் உண்மையான ஆக்கிரமிப்பு அகற்றம்.!

    இ.அ.நி.து.அமைச்சர் சேகர் பாபு அவர்களுக்கு ஒரு கேள்வி.?வடபழனி குளத்தை ஏன் மீட்க வில்லை அதில் உள்ள ஆக்கிரமிப்பை ஏன் அகற்றவில்லை.?விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.பிரபாகரன் ஒரு கிருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.இவர் கிருத்துவ மிசனரி ஆக்கிரமித்துள்ள நிலத்தை மீட்க முடியுமா.?

    சென்னையில் மிகப்பெரிய நிலம் சென்னையின் மத்தியில் காலியாக உள்ளது வடபழனி கோவில் நிலம் மட்டுமே எனவே திமுகவின் வடபழனி கோவில் நிலம் மீட்பு என்பது இந்துக்களின் நெஞ்சை உறுத்துகிறது.!

    சென்னையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையை போக்க வடபழனி கோவில் நிலத்தில் நாட்டு மரங்களை நட்டு அதனுடன் கோசாலை அமைத்தால் என்ன?கோசாலை சாலையில் கிடைக்கும் பாலை அரசு குழந்தை பேறு மருத்துவமனைக்கு கொடுத்தால் என்ன.?

    பொறுத்திருக்கிறோம்,காத்திருக்கிறோம் இந்துக்கள், திமுக இந்து கோவில் உரிமைகளை எவ்வாறு பாதுகாக்கிறது என்று..

    இப்படிக்கு.
    வ.சிவாஜி
    புதிய பாரதம்
    +917867890890.

  2. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    புதியவன்,

    மேலேயுள்ள, நீங்கள் பதிப்பித்துள்ள வ.சிவாஜி’யின்
    பதிவை நான் இப்போது தான் பார்க்கிறேன்.

    நான் இடுகையை எழுதும்போது, இங்கே கூறப்பட்டிருக்கும்
    சில விவரங்கள் எனக்குத் தெரியாது.

    தெரியாமலே நான் எழுதியதே, சில உண்மைகளோடு
    ஒத்துபோகின்றன என்பதும் நான் எழுதியது சரியே என்றும்
    இப்போது தெரிகிறது.

    நன்றி.

    .
    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.