ஆங்கிலத்தில் பார்க்க –
தமிழில்-
Tuesday, June 8, 2021, 19:46 [IST] சென்னை:
பிரதமர் நரேந்திர மோடி, நேற்று நாட்டு மக்களிடையே தொலைக்காட்சியில் தோன்றி உரையாற்றிய போது இந்தியாவில் தடுப்பூசி தயாரிப்பு மற்றும் பயன்பாடு பற்றி ஒரு விவரத்தைச் சொன்னார். அந்த பேச்சு தொடர்பாகதான் இப்போது சர்ச்சை எழுந்துள்ளது.
மோடி பேசுகையில், இந்தியாவில் தடுப்பூசி வரலாற்றை எடுத்துப்பார்த்தால், சின்னம்மை, ஹெபடைடிஸ் பி அல்லது போலியோ போன்றவற்றுக்கு தடுப்பு மருந்துகளை செலுத்த பல தசாப்தங்களாக இந்தியா வெளிநாடுகளில் நோக்கி எதிர்பார்த்துக் கொண்டிருந்த காலம் இருந்தது.
பிற நாடுகளில் தடுப்பூசிகளை போட்டு முடித்த பிறகுதான் நமது நாட்டுக்கு அந்த மருந்துகள் கொண்டுவரப்பட்டு நமது நாட்டில் தடுப்பூசி போடப்படும் நிலைமை இருந்தது என்று கூறினார் மோடி.
மோடி பேச்சில் உண்மையில்லை. தற்போதைய பாஜக அரசு காலத்தில்தான் இந்தியா உடனுக்குடன் தடுப்பூசிகளை பெறுகிறது அல்லது பிற நாடுகளை நோக்கி காத்துக் கொண்டு இருக்கும் என்ற பொருள்படும் வகையில் அவரது பேச்சு அமைந்து இருந்தபோதிலும் இதில் உண்மை இல்லை என்று பழைய தரவுகள் தெரிவிப்பதாக பிரபல ஆங்கில நாளிதழ் “தி இந்து” தெரிவித்துள்ளது.
சுதந்திரத்திற்கு முன்பே சுதந்திரம் பெறுவதற்கு முன்பாகவே உள்நாட்டில் தடுப்பூசிகளை தயாரிப்பதில் திறமை பெற்ற நாடு இந்தியா. உலகில் எங்கு தடுப்பூசிகள் புதிதாக கண்டறியப்பட்டாலும் இந்தியாவில் அதை அடுத்த ஒரு வருடத்திற்குள் உற்பத்தி செய்யும் வசதிகள் நம்மிடம் இருந்துள்ளன என்று வரலாற்று சான்றுகள் தெரிவிக்கின்றன என அந்த நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
சின்னம்மை தடுப்பூசி வரலாறு தடுப்பூசி கிடைப்பது பெரிய அளவுக்கு அப்போதெல்லாம் சிக்கலை ஏற்படுத்தியது கிடையாதாம்.
உதாரணத்துக்கு சின்னம்மை தடுப்பூசியை எடுத்துக்கொள்ளலாம். இந்திய மருத்துவ ஆய்வு இதழில் சின்னம்மை தடுப்பூசி பற்றி 2012 ஆம் ஆண்டு டாக்டர் சந்திரகாந்த் லகாரியா கூறுகையில், 1802 ஆம் ஆண்டு 3 வயது குழந்தைக்கு இந்தத் தடுப்பூசி இந்தியாவில் முதல் முறையாக செலுத்தப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். ஆங்கிலேய மருத்துவ வல்லுநர் எட்வர்ட் ஜென்னர் இந்த மருந்தை கண்டுபிடித்து வெறும் நான்கு வருடங்களில் அந்த தடுப்பு ஊசி இந்தியாவிலுள்ள குழந்தைக்கு செலுத்தப்பட்டு இருக்கிறது. அதுவும் 1800களின் துவக்கத்தில் என்றால் எந்த அளவுக்கு நாம் சரியான பாதையில் பயணித்துக் கொண்டு இருந்தோம் என்பது தெளிவாக தெரிகிறது.
1890-மாவது ஆண்டிலேயே தடுப்பூசி சேமிப்பு – 1850 ஆம் ஆண்டு வரை சின்னம்மை தடுப்பூசிகள் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டு கொண்டிருந்தன. ஆனால் அதன் பிறகு மருந்துகளை பாதுகாப்பாக சேமித்து வைப்பதில் உள்ள சவால்களை இனம் கண்டு தீர்வை நோக்கி பயணிக்க ஆரம்பித்தது இந்தியா.
1890ஆம் ஆண்டில் ஷில்லாங் நகரத்தில் முதல் முறையாக விலங்குகளுக்கான தடுப்பூசி டெப்போ உருவாக்கப்பட்டது. உலகத்தின் எந்த மூலையிலாவது தடுப்பூசி கண்டு பிடிக்கப்பட்டு விட்டால் உடனடியாக இந்தியாவுக்கு கொண்டு வருவதில் எப்போதுமே சிரமங்கள் இருந்தது கிடையாது. அதே நேரம் அந்த தடுப்பூசி தேவையா என்பதை பார்த்து தான் பொதுமக்கள் போட்டுக்கொண்டனர் என்பதால் பரவலாக சில தடுப்பூசிகள் போடப்படாமல் இருந்திருக்கலாம். சில தடுப்பூசிகள் மீது பயம் காரணமாகவும் போடப்படாமல் இருந்திருக்கலாம்.
மற்றபடி சப்ளையில் இந்தியா எப்போதுமே பின்னடைவான நாடாக இருந்தது கிடையாது. நிறைய தடுப்பூசி உற்பத்தி 1944 மற்றும் 1945 – ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் மிக அதிகமாக சின்னம்மை நோய்பரவல் ஏற்பட்டது. இரண்டாவது உலகப் போர் முடிவடைந்ததும் இந்தியாவில் சின்னம்மை தடுப்பூசிகளை அதிக அளவில் போட முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. இதன் காரணமாக சின்னம்மை வேகமாக கட்டுப்படுத்தப்பட்டது என்று டாக்டர் சந்திரகாந்த் லகாரியா தெரிவித்துள்ளார்.
1947ஆம் ஆண்டு சின்னம்மை தடுப்பூசி வகைகளை உற்பத்தி செய்வதில் இந்தியா தன்னிறைவு பெற்ற நாடாக இருந்தது என்றும் அவர் தனது கட்டுரையில் தெரிவித்துள்ளார்.
போலியோ இல்லாத நாடு இந்தியா இளம்பிள்ளை வாதம் என்று அழைக்கக் கூடிய போலியோ நோய்க்கான, தடுப்பூசி தயாரிப்பில் இந்தியா முன்னணியில் இருந்துள்ளது. வாய்வழியாக போலியோ தடுப்பு மருந்து செலுத்துவது மற்றும் ஊசி மூலமாக செலுத்துவது ஆகிய இரண்டு வகை மருந்துகளையும் இந்தியாவில் உற்பத்தி செய்துள்ளனர்.
2011ம் ஆண்டில் போலியோ அற்ற நாடாக இந்தியா மாறி சாதனை படைத்தது.
சென்னையில் தடுப்பூசி நிறுவனம் 1897 ஆம் ஆண்டில் மும்பை கிராண்ட் மருத்துவக் கல்லூரியில் வால்டெமர் ஹாஃப்கின் என்பவரால் பிளேக் நோயை ஏற்படுத்தும் பாக்டீரியாவிற்கு எதிரான தடுப்பூசி தயாரிக்கப்பட்டது, அவர் முதலில் தன் மீதும், பின்னர் பைக்குல்லா சிறைச்சாலையின் கைதிகள் மீதும் தடுப்பூசியை போட்டு பரிசோதித்தார். பிளேக் ஆய்வகம் 1899 இல் அமைக்கப்பட்டது, 1925இல் ஹாஃப்கைன் நிறுவனம் என்று அது பெயர் மாற்றப்பட்டது.
சென்னையின் கிண்டியில் உள்ள 1948 பி.சி.ஜி (காசநோய்க்கான) ஆய்வகம் உட்பட நாட்டின் பல்வேறு மாகாணங்களில் பல தடுப்பூசி நிறுவனங்கள் அப்போது செயல்பட்டன. இந்த நிறுவனங்கள் 1940க்கு முன்னர் இந்தியாவில் டிப்டீரியா, பெர்டுசிஸ் மற்றும் டெட்டனஸுக்கான தடுப்பூசி தயாரிக்க உதவியது.
தடுப்பூசிக்காக காந்திருந்தது இல்லை.
இந்தியாவின் பெரும்பாலான தடுப்பூசிகளை உற்பத்தி செய்த பல பொதுத்துறை தடுப்பூசி யூனிட்கள், பல்வேறு சந்தர்ப்பங்களில், மூடப்பட்டன, அல்லது அவற்றின் திறன்கள் குறைந்துவிட்டன. இதனால் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா மற்றும் பாரத் பயோடெக் போன்ற நிறுவனங்கள் வளர வாய்ப்பு ஏற்பட்டன. எனவே மோடி கூறியதை போல இந்தியா முன்பு தடுப்பூசிக்காக பல காலம் காத்திருந்தது இல்லை, எனக் கூறியுள்ளது அந்த நாளிதழ்.
குழந்தைகளுக்கான தடுப்பூசி பற்றி மோடி இதேபோல தனது உரையில் பிரதமர் நரேந்திர மோடி 2014 ஆம் ஆண்டுக்கு பிறகு அதாவது பாஜக, மோடி தலைமையில் ஆட்சி அமைத்த பிறகு இந்திரதனுஷ் என்ற தடுப்பூசி திட்டம் அமல்படுத்தப்பட்டதாகவும், அதுவரை 60 சதவீதம் அளவுக்கு செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் அளவு 90 சதவீதம் என்ற அளவுக்கு அதிகரித்ததாகவும் தெரிவித்தார்.
ஆனால் தேசிய குடும்ப நலத் துறை வெளியிட்டுள்ள சமீபத்திய தகவல் அடிப்படையில் பார்த்தால் (17 மாநிலங்கள் பற்றிய டேட்டாதான் அதிலும் வெளியிடப்பட்டது) ஒரு மாநிலம் கூட 90% தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்தவில்லை. மோடி குறிப்பிட்ட இந்த தடுப்பூசி திட்டம் என்பது பிசிஜி வேக்சின் தொடர்பானது.
காசநோய் என்று அழைக்கப்படும் டிபி தாக்காமல் தடுப்பதற்காக செலுத்தப்படும் தடுப்பூசி இதுவாகும். புள்ளி விவரம் வேறு இமாச்சல பிரதேசம், கர்நாடகா, மேற்கு வங்காளம், கோவா மற்றும் சிக்கிம் ஆகிய 5 மாநிலங்கள் மட்டும்தான் 80 சதவீதம் அளவுக்கு இந்த தடுப்பூசிகளை செலுத்தியுள்ளன என்கிறது சுகாதாரத்துறை அமைச்சக புள்ளிவிபரம். ஆனால் பிரதமர் நரேந்திர மோடி, நாடு முழுக்க குறிப்பிட்டு 90 சதவீதத்துக்கு மேல் தடுப்பூசி செல்லப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
———————–
ஹிந்து நாளிதழ் ஏன் இதை அபூர்வமான செய்தி போல்
பாவித்து எழுதுகிறது என்று நமக்கு புரியவில்லை…
நமக்கு இதெல்லாம் புதிதா என்ன…? நாம் ஏற்கெனவே கடந்த சில
வருடங்களாக இது போன்ற செய்திகளைக் கேட்டு அனுபவித்து,
பழக்கப்பட்டு விட்டோம் தானே…!!!
—————————————————————————————
//இந்தியாவின் பெரும்பாலான தடுப்பூசிகளை உற்பத்தி செய்த பல பொதுத்துறை தடுப்பூசி யூனிட்கள், பல்வேறு சந்தர்ப்பங்களில், மூடப்பட்டன, அல்லது அவற்றின் திறன்கள் குறைந்துவிட்டன.//
இதைப்பற்றியும் விளக்கமாக ஹிந்து ராம் எழுதியிருக்கலாமே… வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறிவிடும் என்ற பயமா?
மற்ற தடுப்பூசிகளெல்லாம் , இந்தியாவில் காப்புரிமை படி தயாரிக்க பட்டவை என்று கூறுகிறார்.
ஆனால் கோவாக்ஸின் என்பது நமது விஞ்ஞானிகளே உருவாக்கியதே.
கோவிஷியல்ட் போன்றவை காப்புரிமை பெறப்பட்டு அதை இந்தியாவில் தயாரிக்கிறோம்.
எனவே நமது சாதனைகளை நாம் மெச்சிக்கொள்வதில் தவரென்னவோ?
மெச்சி கொள்ளுவது மோடியோ ? அப்பொழுது நம் மதச்சார்பின்மைக்கு இழுக்கு.இதில் ஐயம் இல்லை.
இதுவே காங்கிரஸ் இதுபோல் மெச்சி கொண்டிருந்தால் நமக்கு பங்கமில்லை.