வட இந்திய மீடியாக்கள் இதைப்பற்றி நிறைய கதை’க்கத் துவங்கி
விட்டன….”யோகி-ஜி-க்கும், மோடிஜி-க்கும் ஒத்து வரவில்லை;
உத்திரப்பிரதேச முதல்வரை மாற்றும் திட்டத்தில் பாஜக தலைமை
இறங்கி இருக்கிறது” என்றெல்லாம்….!!!
ஆர்.எஸ்.எஸ். தலைமையின் ஆதரவில் தான் யோகிஜி, உ.பி.
முதல்வர் பதவியில் அமர்ந்தார். அதன் ஆதரவு இருக்கும் வரை,
பாஜக மத்திய தலைமையைப் பற்றி தான் கவலைப்படத்
தேவையில்லை என்கிற எண்ணத்தில் யோகிஜி இருப்பதாக
செய்திகள் கூறுகின்றன.
தங்களை மதிக்காத யோகிஜியை பதவியிலிருந்து அகற்ற
தேவையான நடவடிக்கைகளை -மோடிஜி, அமீத்ஜி தலைமையிலான
பாஜக எடுக்கத் துவங்கி விட்டது என்றும் அந்த செய்திகள்
கூறுகின்றன….
சுருக்கமாக –
யோகிஜியின் அமைச்சரவையில் மொத்தம் 47 அமைச்சர்கள்
இருக்கின்றனர். இவர்களில் 3 துணை முதலமைச்சர்களும் உண்டு.
ஆனால், யோகிஜி – தன்னுடைய நிர்வாகத்தை, ஆட்சியை –
பெரும்பாலும் தனக்கு நம்பிக்கையான, IAS அதிகாரிகளின்
உதவியோடு தான் நடத்துகிறார். அமைச்சர்களுக்கு அதிகம்
அதிகாரமோ, சுதந்திரமாக செயல்படக்கூடிய வசதியோ
கிடைக்கவில்லை என்கிறார்கள்…. அதனால் இதர மாநிலங்களில்
அமைச்சர்களுக்கு கிடைக்ககூடிய வழக்கமான வசதிகளோ,
வருமானங்களோ கிடைக்காதவொரு சூழ்நிலை; அமைச்சர்கள்
அதிருப்தியோடு இருக்கிறார்கள்;
இந்த நிலையில் பாஜக மத்திய தலைமை, உ.பி.அரசியலில்
ஒரு புதிய முகத்தை நுழைத்து, அவருக்கு முக்கியத்துவம்
கிடைக்கச்செய்து, பரபரப்பை உண்டு பண்ணி இருக்கிறது.
உ.பி. பாஜகவில் யோகிஜி மீது அதிருப்தியோடு இருக்கும்
அமைச்சர்கள், இதர தலைவர்களின் துணையோடு, யோகிஜிக்கு
மாற்றாக அவரை மத்திய பாஜக கொண்டுவர முயற்சி
செய்கிறதோ என்று பலருக்கும் சந்தேகம்…
அரவிந்த் குமார் சர்மா என்பவர், ஒரு முன்னாள் ஐஏஎஸ்
உயரதிகாரி…. குஜராத் பிரிவைச் சேர்ந்தவர். பிரதமர் நரேந்திர மோதியிடம் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியவர். மோடிஜிக்கு
மிகவும் நெருக்கமானவர். அவரது நம்பிக்கைக்கு உகந்தவர்.
கடந்த ஜனவரி 11-ந்தேதி, இவர் அரசுப்பணியிலிருந்து
ஓய்வு பெற்றிருக்கிறார்.
அடுத்த 3 நாட்களிலேயே உத்தர பிரதேச பாரதிய ஜனதா கட்சியில் இவர் தன்னை இணைத்துக் கொண்டார். அதைத்தொடர்ந்து
பாஜக மேலிட ஆசியோடு மாநில சட்ட மேலவை உறுப்பினராகவும் அவர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
திடீரென கட்சிக்குள் சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிக்கு
அடுத்த சில நாட்களிலேயே மேலவை உறுப்பினர் பதவி வழங்கி அழகு பார்த்த பாஜக மத்திய தலைமையின் நடவடிக்கை, மாநில பாஜகவினர் பலரையும், குழப்பத்திலும், அதிருப்தியிலும் ஆழ்த்தி இருப்பதாக செய்தி.
முக்கியமாக, முதலமைச்சர் யோகி ஆதியநாத்-ஜி-யோடு
கலந்தாலோசிக்காமலே இவையனைத்தும் நிகழ்ந்திருப்பதாக
கூறப்படுகிறது.
ஒரு மூத்த ஐஏஎஸ் அதிகாரி பதவி ஓய்வுக்கு பிறகு,
இத்தனை வயதிற்கு பிறகு, எந்தவித அரசியல் முன் அனுபவமும் இல்லாமல்,மாநில அரசுக்குள் நுழைவதும் அவருக்கு மேலவை உறுப்பினர் பதவிவழங்கப்பட்டிருப்பதும் அவரை வேறு ஒரு உயர் பதவிக்கு தயார்படுத்துவதற்காகவோ என்று உத்தர பிரதேச அரசியலை கவனித்து வரும் அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.
மாநிலத்தில் தன்னிச்சையாக முதல்வர் யோகி செயல்படுவதால், அவரது அதிகாரத்தை குறைக்கும் விதமாக ஒரு முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியை தங்களின் பிரதிநிதியாக மாநில அரசியலுக்குள் நுழைய விட்டிருக்கிறார்கள் பிரதமர் மோஜியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் என்று ஒரு தரப்பு அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
அர்விந்த் குமார் சர்மா-வை, அமைச்சரவையில் சேர்த்துக்கொள்ளுமாறு, முதல்வர் யோகி ஆலோசனை கூறப்பட்டார் என்றும் –
ஆனால், தனக்கு போட்டியாக வரக்கூடும் ஆசாமி என்பதால்,
யோகிஜி அந்த யோசனையை ஏற்க தயவுதாட்சண்யமின்றி
மறுத்து விட்டார் என்றும் இது, பிரதமர் மோதி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அதிருப்திக்குள்ளாக்கியிருக்கிறது
என்கிறது செய்தி.
இப்போது உத்திர பிரதேச பாஜகவில் இரண்டு கோஷ்டிகள்
உருவாகி இருக்கின்றன – ஒன்று முதல்வர் யோகி-ஜிக்கு
ஆதரவானது; மற்றொன்று மோடிஜி, அமீத்ஜி தலைமையிலான
மத்திய பாஜகவுக்கானது.
யோகிஜி-க்கு ஆர்.எஸ்.எஸ்.ஸின் பலமான ஆதரவு இருக்கிறது
என்றும், அதனால், பாஜக மத்திய தலைமை நினைத்தாலும்,
யோகிஜியை அகற்ற முடியாது என்றும் கூறுகிறது அரசியல் களம்.
ஆர்.எஸ்.எஸ். முன்மொழிந்து உ.பி. முதல்வராக உருவான யோகியை பலவீனப்படுத்த – திடீரென மத்தியில் இருந்து பாராசூட் மூலம் குதித்திருக்கும் ஒரு முன்னாள் IAS அதிகாரியான அரவிந்த் குமார் சர்மாவை, ஆதரிக்க ஆர்எஸ்எஸ் தலைவர்கள் தயாராக இல்லை என்று தெரிகிறது.
அடுத்த (2022) பிப்ரவரியில், உ.பி.மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல்கள்
நடைபெறவிருக்கின்றன. உ.பி.யில் ஆட்சியை தக்கவைத்துக்
கொள்வது பாராளுமன்றத்தில் பாஜகவின் பலத்திற்கு இன்றியமையாதது….
எனவே – அடுத்த தேர்தல் வரை யோகிஜி முதல்வர் பதவியில் நீடிப்பாரா…? பாஜக தலைமை அரவிந்த் குமார் சர்மாவை
எதற்காக உ.பி.அரசியலில் நுழைத்திருக்கிறது – என்பதெல்லாம்
வட இந்திய ஊடகங்களில் இப்போதே பரபரப்பாக பேசப்படத்
துவங்கி விட்டது.
மேற்கண்ட இடுகையில் கூறப்படும் செய்திகளை
உறுதிப்படுத்தும் விதமாக
இன்று மாலை வெளியாகியிருக்கும் செய்தி –
https://www.dinamalar.com/news_detail.asp?id=2780390
உத்தர பிரதேச பா.ஜ., டுவிட்டர் பக்கத்தில்
இருந்து மோடி, நட்டா படங்கள் நீக்கம்
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர்
அமித்ஷா, பா.ஜ., தேசிய தலைவர்
ஜே.பி.நட்டா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள்
டுவிட்டர் பக்கத்தில் யோகி ஆதித்யநாத்திற்கு
வாழ்த்து தெரிவிக்கவில்லை.
மேலிடத்திற்கும் யோகி ஆதித்யநாத்திற்கும்
இடையே அதிருப்தி நிலவுவது கிட்டத்தட்ட
உறுதியானது. இதை உறுதிப்படுத்தும் விதமாக
உ.பி., மாநில பா.ஜ., அதிகாரப்பூர்வ டுவிட்டர்
பக்கத்தின் முகப்பு படத்தில் மோடி, நட்டா
உடன் இருக்கும் படத்தை நீக்கி அவர்கள்
இல்லாத புதிய படம் பதிவேற்றப்பட்டது….