கொரோனா தடுப்பூசிகள் தயாராகும் விதம் குறித்து பல தகவல்களைத் தரும் புதுடெல்லி, விக்யான் பிரச்சார், அறிவியல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த விஞ்ஞானி எழுதிய கட்டுரை ஒன்றை இணையதளத்தில் படித்தேன்…
அதிலிருந்து சில தகவல்களை –
நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியதால், முக்கிய பகுதிகளை…. கீழே தருகிறேன்…
உறை குத்தும் தயிரில் உள்ள‘லாக்டோபேசில்லஸ் அசிடோபில்ஸ்’(Lactobacillus acidophilus) எனும் பாக்டீரியா, பாலில் உள்ள
லாக்டோஸ் (lactose) எனும் சர்க்கரை பொருளை செரிமானம்
செய்து பல்கிப் பெருகுகிறது. இந்த நிகழ்வின் இறுதியில் பால் தயிராகிறது. அதுபோல பயோரியாக்டர் எனும் உயிரி
வினைகலத்தில் கரோனா வைரஸ் வளர்க்கப்படும். தயிருக்கு
உறை குத்துவது போல தேசிய வைராலஜி நிறுவனம் NIV-2020-770 கரோனா வைரஸ் விதையைப் பயன்படுத்தி கோவாக்சின் தயார் செய்யப்படுகிறது.
உயிரி வினைகலத்தில் வளரும் கரோனா வைரசை மட்டும் வடிகட்டி பிரித்து எடுத்து சுத்தம் செய்யப்படும். பின்னர் அதனை செயலிழக்க செய்து அட்ஜுவன்ட் சேர்த்து கிருமிகளில்லாமல் சுத்தம் செய்யப்பட்ட மருந்து குப்பிகளில் அடைக்கப்படும். இடையிடையே தடுப்பூசியின் தரத்தை சோதித்து தரக்கட்டுபாடு செய்யப்படும்.
உயிரி காப்பு நிலை 3 உற்பத்திக் கூடம்
மனிதர்கள் மீது கடும் நோயை ஏற்படுத்தவல்ல கரோனா வைரசை வளர்ப்பது தான் தடுப்பூசி உற்பத்தியின் முதல் கட்டம். இப்படி வளர்க்கப்படும் வைரஸ் அங்கே பணிபுரிபவர்கள் மீது தொற்றக் கூடாது, மேலும் வெளியே பரவிவிடக் கூடாது. அதற்கான பாதுகாப்பு நெறிமுறைதான் உயிரி காப்பு நிலை 3.
தொழிற்சாலையின் உயிரி காப்பு நிலை 3 பகுதிக்குள் முன்அனுமதி பெற்றவர்களைத் தவிர யாரும் நுழைய முடியாதபடி பாதுகாப்புடன் இருக்கும். நுழைவாயிலில் அடுத்தடுத்து இரண்டு கதவுகள் இருக்கும்.
முதல் கதவு வழியே உள்ளே சென்று அதனை மூடிய பிறகு தான் இரண்டாம் கதவு திறக்கும்படி அமைந்திருக்கும்.
மேலும்உயிரி காப்பு நிலை 3 அறை முழுவதும் எப்போதும் குறை காற்றழுத்த நிலையில்தான் இருக்கும். எனவே கதவு திறக்கும்போதுகூட அந்த அறையிலிருந்து காற்று வெளியே செல்லாது. அந்த அறைக்குள் குறை காற்றழுத்த நிலை உள்ளதால், உள் நோக்கிதான் காற்று புகும். அந்த அறைக்கு உள்ளே உள்ள காற்றை அடிக்கடி சுத்தம் செய்ய உயர் திறன் காற்றுத் துகள் வடிகட்டி அமைப்பு (hepa) இருக்கும்.
பாக்டீரியா வைரஸ் போன்றவற்றை வடிகட்டி அழிக்கும் தன்மை கொ ண்டதாக இந்தக் காற்று சுத்திகரிப்பான் இருக்கும். மேலும் அந்த அறையில் உருவாகும் கழிவுகள் வெளியே வராது. உள்ளேயே சுத்திகரிப்பு செய்ய அமைப்புகள் இருக்கும். மேலும் உள்ளே தயார் ஆகும் செயலிழந்த வைரஸ்களின் தரத்தைப் பரிசோதனை செய்ய தரக்கட்டுப்பாடு அமைப்புகளும் உள்ளேதான் இருக்கும். செயலிழந்த வைரஸ் மட்டுமே உள்ளிருந்து வெளியே வரும் படியாக அந்த அமைப்பு இருக்கும்.
உற்பத்தியைப் பெருக்க திட்டம்
அடிப்படையில் செயலிழந்த வைரசை உற்பத்தி செய்தால்தான் கோவாக்சின் தயார் முடியும். எனவே வேறு நிறுவனங்களில் இந்த தடுப்பூசியை உற்பத்தி செய்ய அங்கே உயிரி காப்பு நிலை 3 உற்பத்தி வசதி இருக்க வேண்டும்.
முழுமூச்சுடன் முனைந்தால் நான்கு மாதத்தில் இந்த வசதிகளைப் பொதுத்துறை தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களில் ஏற்படுத்திவிட முடியும் என நிபுணர்கள் கருதுகிறார்கள்.
புனேவின் மஞ்சரியில் உள்ள இன்டர்வெட் இந்தியா பிரைவேட் லிமிடெட்க்கு சொந்தமான தடுப்பூசி தொழிற்சாலையிலும் கோவாக்சின் தயாரிக்க முடியும்.
மூடிக்கிடக்கும் இந்த தொழிற்சாலையை பாரத் பயோடெக் நிறுவனத்தின் இணை நிறுவனம் பயோவெட் எடுத்துக்கொண்டு, அதனைப் பயன்படுத்தி கோவாக்சின் தயாரிக்க மகாராஷ்டிரா உயர் நீதிமன்றம் சமீபத்தில் ஆணை பிறப்பித்துள்ளது.
கூடுதல் உற்பத்தி வசதிகளை உருவாக்கி, வரும் செப்டம்பருக்குள் மாதம் பத்து கோடி டோஸ் கோவாக்சின் தயாரிப்பை உறுதிசெய்ய மத்திய அரசின் உயிரியல் தொழில்நுட்பத் துறை – ஏப்ரல் மாதத்தில் முடிவெடுத்தது.
இதன் அடிப்படையில் ஏற்கெனவே உயிரி காப்பு நிலை 3 உற்பத்தி வசதி வைத்துள்ள, பனேசியா பயோடெக் என்ற நிறுவனத்துடன் தடுப்பூசி உற்பத்தி செய்ய பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது.
மேலும் ஹாஃப்கின் பயோ பார்மாசூட்டிகல்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட், இந்தியன் இம்யூனோலாஜிகல்ஸ் லிமிடெட், பாரத் இம்யூனோலாஜிகல்ஸ் அண்ட் பயோலாஜிகல்ஸ் லிமிடெட் ஆகிய அரசுசார் பொதுத்துறை நிறுவனங்களிலும் உயிரி காப்பு நிலை 3 உற்பத்தி வசதி ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் பெங்களூரு தொழிற்சாலையில் உற்பத்திமேற்கொள்ள மத்திய அரசு ரூ.65 கோடிநிதியுதவி அளித்துள்ளது. இதேபோல கோவிஷீல்டு தயாரிக்க சீரம் நிறுவனத்துக்கும் இந்திய அரசு நிதி அளித்துள்ளது.