ஆக்சிஜன் செறிவூட்டிகள் பற்றிய செய்திகள் இப்போது
நிறைய வரத்துவங்கியுள்ளன. நமக்கு இது ஒரு புதிய,
தெரியாத விஷயம். எனவே, அது பற்றி புரிந்துக்கொள்ள – இங்கே அது குறித்த சில தகவல்கள்.
ஆக்ஸிஜன் செறிவூட்டி என்பது காற்றிலிருந்து ஆக்ஸிஜனைசேகரிக்கும் ஒரு இயந்திரம். இந்த ஆக்ஸிஜன் மூக்கு வழியாக ஒரு குழாய் மூலம் உடலுக்குள் செல்கிறது.
இதிலிருந்து வெளியாகும் ஆக்ஸிஜன் 90 முதல் 95 சதவிகிதம்
வரை சுத்தமானது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கைகளுக்காக மக்கள் அலைந்து திரிந்து, பலர் தெருக்களிலேயும், ஆம்புலன்சிலும் இறந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில், உயிரைக் காப்பாற்றுவதில் ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
கொரோனா காலத்தில், உயிர்களைக் காப்பற்றும் பொருட்டு, ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் குறுகிய காலத்திற்கு பயன்படுத்தப்[படும்
ஒரு மாற்று வழியாக பார்க்கப்படுகிறது.
“ஒருவரின் ஆக்ஸிஜன் அளவு குறைந்து கொண்டே போகிறது என்றால், நீங்கள் அவரை மருத்துவமனையில் அனுமதிக்கும் வரை ஆக்ஸிஜன் செறிவூட்டியை தற்காலிகமாக பயன்படுத்தலாம்,” என்று அப்போலோ மருத்துவமனையின் நுரையீரல் மருத்துவத்தின் மூத்த ஆலோசகர் ராஜேஷ் சாவ்லா கூறுகிறார்.
ஆக்ஸிஜன் செறிவூட்டி அதிக நோயுற்ற நோயாளிகளுக்கோ அல்லது ஐ.சி.யு நோயாளிகளுக்கோ பயன்படாது. ஏனெனில் அந்த நிலையில் உள்ள நோயாளிகளுக்கு, இந்த உபகரணம் உற்பத்தி செய்யமுடியும் அளவைக்காட்டிலும் பலமடங்கு அதிக ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது.
கொரோனா வைரஸ் மக்களின் நுரையீரலைத் தாக்கி, ஆக்ஸிஜன் அளவு குறையும் ஆபத்தை ஏற்படுத்துகிறது.
நாள்பட்ட நுரையீரல் தடுப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக ஆக்ஸிஜனை வழங்க ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன என்று உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது.
ஆக்ஸிஜன் செறிவூட்டியின் உதவியுடன் பலர் தங்கள் சிகிச்சையை வீட்டிலேயே செய்துகொள்ளலாம் என்றும் டாக்டர்கள் கூறுகின்றனர்.
நோயாளியின் ஆக்ஸிஜன் அளவு 90-ஐ விடக் குறைவாக இருந்தால், ஆக்ஸிஜன் செறிவூட்டியைப் பயன்படுத்துவது பற்றி சிந்திக்க வேண்டும்.
ஆனால், ஆக்ஸிஜன் செறிவூட்டியாலும் நோயாளியின் ஆக்ஸிஜன் அளவை 88 அல்லது 89 ஆக பராமரிக்க முடியாவிட்டால், அதை பயனுள்ளதாக கருத முடியாது என்றும் டாக்டர் சாவ்லா கூறுகிறார்.
ஒரு மணி நேரத்திற்கு ஐந்து லிட்டர் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் ஒரு செறிவூட்டியின் விலை சுமார் 50 ஆயிரம் ரூபாய் வரை இருக்கும் என்றும் மணிக்கு 10 லிட்டர் ஆக்ஸிஜனை தயாரிக்கும் உபகரணத்தின் விலை ஒரு லட்சம் ரூபாய் என்றும் மார்க்கெட்
செய்திகள் தெரிவிக்கின்றன.
வட இந்தியாவில், சில இடங்களில் ஆக்சிஜன் செறிவூட்டிகள்
மாதம் சுமார் 15,000 என்கிற அளவில் வாடகைக்கும் விடப்படுகின்றன என்று செய்திகள் தெரிவிக்கின்றன.