“கருப்பை” – சாகித்ய அகாடமி விருது பெற்ற ஆதவனின் சிறுகதை….

Aadavan

( ஆதவனின் இயற்பெயர் கே.எஸ்.சுந்தரம் (1942-1987)
அறுபதுகளில் எழுதத் துவங்கி, தமிழ்ச் சிறுகதை உலகில்
பல குறிப்பிடத் தக்க சாதனைகளை நிகழ்த்தினார்.

பல வருடங்களுக்கு முன் ஆதவன் அவர்களை ஒருமுறை எதேச்சையாக பாண்டிச்சேரி India Coffee House-ல் நான் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்த அனுபவம் இன்னமும் லேசாக நினைவில் நிற்கிறது… )


பிரசாத் நகரில் ஒரு ஃப்ளாட் காலியாக இருப்பதாக நண்பனொருவன் சொன்னதன் பேரில் காலை ஆறு மணிக்கே வெறும் காப்பியைக் குடித்துவிட்டுக் கிளம்பியவன்தான். இப்போது நல்ல நடுப்பகல் வெய்யிலில்* வீடு திரும்பிக்-கொண்டிருந்தான். சோர்வு, பசி எரிச்சல்.
வீட்டு வாசலில் அவன் கண்டது எரிச்சலை அதிகப்படுத்தியது.

அவனுடைய ஒன்றரை வயதுப் பையன் தெரு மண்ணை ஆசையாக அள்ளித் தின்று கொண்டிருந்தான். பாய்ந்து சென்று குழந்தையைத் தூக்கி, பளார் பளாரென்று அறைந்து, கதறக் கதற அவன் வாய்க்குள் விரலை விட்டுக் குடைந்து மண்ணையெல்லாம் வெளியே எடுத்துப் போட்டு…
குழந்தையின் அலறல் அவனுடைய மனைவியை உள்ளேயிருந்து வாசலுக்கு இழுத்து வந்தது. “ஒரு நிமிஷம் காரியத்திலே கவனமா இருந்துட்டேன்… இதற்குள் வாசலுக்கு ஓடி வந்துட்டான்”.

“வந்துட்டான்னு சொன்னால் போதுமா?” என்று அவன் சிடுசிடுத்தான்.

“இங்கே வாசல் கதவை மூடுகிற வழக்கமும் கிடையாது. எப்பவும் ‘பே’ன்னு திறந்துதான் கிடக்கும்”.
“யாரு திறந்து வைக்கிறாளோ, அவாகிட்டே சொல்றது”.

இந்தக் கணை அம்மாவை நோக்கி. அவள்தான் எப்போதும் காற்று,
காற்று என்று எல்லாக் கதவுகளையும் திறந்து திறந்து வைப்பவள்.
“அம்மா எங்கே?” என்று கேட்டான். அவள் கொல்லையை நோக்கிக்கைகாட்டினாள்.

மகாதேவன் கொல்லையில் எட்டிப் பார்த்தான். அம்மா மல்லிகைச் செடிக்கு எதிரில் அமர்ந்து கரண்டிக் காம்பினால் செடியின் தண்டைச்சுற்றிக் கிளறிக் கொண்டிருந்தாள். அறையில் இல்லாத சமயங்களில் அம்மாவைப் பெரும்பாலும் கொல்லையில் பார்க்கலாம். முருங்கை, மல்லிகை,கறி வேப்பிலை, துளசி ஆகியவற்றுடன் குலாவிக் கொண்டிருப்பாள். “செடிகளிடம் இருக்கிற ஒட்டுதல் பேரனிடம் கிடையாது”,

என்ற அவனுடைய மனைவியின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது இல்லை.
அவளுடைய ஆதாரம் பொறுப்புகளைத் தவிர்க்க ஒரு சாக்குத்தானோ?
பேரன் உடைகளணிவதால் அவனைப் பூஜை முடியும் வரை தொடமுடியாது. ஆனால் செடிகள் உடைகளின்றிப் பிறந்த மேனியாக இருப்பதால் அவற்றை எப்போது வேணுமானாலும் தொடலாம். அதே போலத் தான் அவளுடைய சுவாமி படங்கள்…

அவனுடைய மனைவியின் மனத்தாங்கல் தொடர்ந்து
வார்த்தைகளாகக் குமுறித் தள்ளிக் கொண்டிருந்தது:


“இப்படி நான் ஒரு இடத்திலேயும் பார்த்தது கிடையாது… பூஜை பூஜைன்னு நாள் முழுவதும் நேரத்தை வீணடிச்சுண்டு, சுற்றி என்ன நடக்கிறது, குடும்பத்திலே என்னென்ன பிரச்சினைகள் என்பதிலெல்லாம் துளியும் சிரத்தை காட்டாமல் சதா தன்னுடைய சுவாமி படங்களைப் பார்த்து ஏதோ புலம்பிண்டு. சே! இங்கே நான் ஒண்டி ஆளாகச் சமையலைக் கவனிச்சுக்கணும், தண்ணீர் பிடிச்சு வைக்கணும், கறிகாய் வாங்கி வரணும், குழந்தையைப் பார்த்துக்கணும், வேலைக்காரியை மேல்பார்வை செய்யணும், இத்தனைக்கும் நடுவிலே வாசல் கதவை யாராவது திறந்து போட்டுவிட்டுக் கொல்லையிலே போய் உட்கார்ந்திருந்தால் அதற்கும் நான்தான் பொறுப்பாளி”.

“என்ன செய்யறது சொல்லு – அப்பா போனதிலிருந்தே அம்மா ஒரு மாதிரியாக ஆகிவிட்டாள்”.
“உங்கப்பா போய் எட்டு மாசந்தானே ஆச்சு? அதற்கு முன்னாடியும் உங்க அம்மா இப்படித்தான்”.


“பாவம் அந்தக் காலத்து மனுஷி… நம்முடைய எதிர்பார்ப்புகள்ங்கிற தராசிலே அவளை சதா நிறுத்திக் கொண்டிராமல், அவளை அப்படியே அவளுடைய குறைகளோடு ஏத்துக்க நாம முயற்சி பண்ணனும்… வேறே வழியே இல்லை”.

“அவளுடைய குறைகளோடு அவளை ஏத்துக்கணும்… உங்களுடைய குறைகளோடு உங்களை ஏத்துக்கணும்… என்னிடம் மாத்திரம் குறைகளே இருக்கக் கூடாது. மருமகளாச்சே! நான் மட்டும் குறைகளே இல்லாத குணவதியாய், பொறுமையிலே பூமாதேவியாய்…”

மகாதேவன் மேலே பேசவில்லை. சலிப்பாக இருந்தது. அந்த இருவர் (மனைவி, தாய்) பால் கொஞ்சம் அனுதாபமாகவும் இருந்தது. வீட்டின் நான்கு சுவர்களுக் கிடையில் இவர்கள் எவ்வளவோ மகிழ்ச்சியாகஇருக்கலாம். பிரச்சினையே இல்லாததையெல்லாம் பிரச்சினையாக்கிக் கொண்டு – சே!

அவன் உடை மாற்றிக் கொண்டு வந்தபோது அம்மாவும் கொல்லையிலிருந்து வீட்டுக்குள் நுழைந்தாள். “என்ன, காயா, பழமா?”

என்று அவனைப் பார்த்துக் கேட்டாள். அவளுடைய கேள்வி, அந்த வார்த்தைகள், அந்தப் பாணி, எல்லாமே அவனுடைய கோபத்தைத்தான் கிளறின. சில நிமிடங்களுக்கு முன் அவன் தன்னுடைய மனைவியிடம் உபதேசித்ததற்கும் இந்த உணர்வுகளுக்கும் சம்மந்தமேயில்லாமல் இருந்தது. (நம்மைப் பற்றியே நமக்கு எவ்வளவு குறைவாகத் தெரிகிறது!)

காயாம், பழமாம் – அந்த வார்த்தைகளிலும், இளஞ்சிரிப்பிலும் முகத்தின் எதிர்பார்ப்பிலும் தொனித்த பேதையையே அவனைக் காயப்படுத்திவிட்டது, உசுப்பி விட்டது. “எங்கேயாவது குடிசைதான் போட்டுக்கணும்” என்றான் வெறுப்புடன். “நம்முடைய எல்லா நிபந்தனைகளுக்கும் ஒத்து வரும்படியா ஒரு வீடு எங்கேயாவது கிடைக்குங்கிற நம்பிக்கையே போயாச்சு…”

“இப்ப போனாயே, அந்த வீடு”…
“அதுவும் மாடி வீடுதான். மாடி வீடுதான் உனக்குப் படாதே!…உலகமே மாடி வீடுகளிலேதானே இருந்துண்டிருக்கு. தண்ணீர் வரபோது குளிப்பார்கள், சமைப்பார்கள், பால்கனியிலே துளி இடத்திலே எல்லாத் துணியையும் உலர்த்திக் கொள்வார்கள். இருக்கிற இடத்திலே அவர்களும் அவர்களுடைய சுவாமியும் சந்தோஷமாக இருப்பார்கள்…

வாழ்க்கைங்கறதே வெறும் அட்ஜஸ்மெண்ட்தான்… நூறு வருஷத்துக்குமுன்னாடி இருந்த வாழ்க்கை இப்ப இல்லைன்னு புரிந்துகொண்டு அதற்குத் தகுந்தாற்போல நம்மை மாற்றிக் கொள்ளணும்”.

அவனுடைய அம்மா பதிலேதும் சொல்லவில்லை. எப்போதுமே இப்படித்தான். இவ்வாறு அவன் பொறுமையிழந்து கத்தும் போதெல்லாம் அவள் பிடிவாதமாக மௌனம் சாதித்து விடுவாள்.

பிறகு இரண்டு நாள், மூன்று நாள், அல்லது ஒரு வாரம் கழித்து அவனுடைய மனைவி மூலமாக அம்மாவின் மறுமொழி அவனுக்கு வந்து சேரும். ஆனால்இப்போது, இந்தச் சந்தர்ப்பத்தில் கூடவா இப்படி? அவன் வேண்டுமென்று அலை அலையென்று அலைந்து கொண்டிருப்பது அவளுக்காகத்தானே.

அவளுடைய மடி, ஆசாரத்தைக் காப்பதற்கு நிறையத் தண்ணீர் வேண்டும். அவள் யாரையும் தொடாமலிருக்க வேண்டும். அவளுடைய துணிகளுக்காகத் தனியான கொடி வேண்டும். பூஜைக்காகப் பூவும் துளசியும் வேண்டும். ருசிக்காகக் கருவேப்பிலையும், முருங்கையும் வேண்டும். சில நாட்களில் வாழையிலை வேண்டும். கூப்பிட்டவுடன் காக்காயும் மாடும் ஓடிவர வேண்டும். இதெல்லாம் கீழ்வீட்டில்தான் சாத்தியம்.

மேலும் பஜனை, கோயில் என்று அடிக்கடி அவளுக்கு வெளியே போக வேண்டும். மாடி வீடாக இருந்தால் படியேறி இறங்குவது கஷ்டம்.

அவளைத் தேடி வருகிற ஸ்திரீகள் பலரும் அவளுடைய வயதுக்காரர்கள். அவர்களுக்கும் படியேறுவது சிரமமாக இருக்கும்.

இந்தப் பஜனைகள் நடக்கும் ஏரியாக்கள், இந்தக் கோவில்கள், இவற்றுக்கெல்லாம் எளிதில் அவளுக்கு பஸ் கிடைக்கக்கூடிய இடமாகஅவன் வீடு பார்க்க வேண்டும் என்பதும் ஒரு நிபந்தனை.

ஆம்! கீழ்வீடாக வேண்டும்; அதுவும் அம்மாவுக்குச் சௌகரியமானஏரியாவில் வேண்டும் என்று பார்ப்பதால்தான் இப்போதைய வீட்டிலிருந்து இதுவரை காலி செய்ய முடியவில்லை. வீட்டுக்காரனோ என்றால் அடிக்கடி ஆபிசுக்கு டெலிபோன் செய்து, வீடு எப்போது காலியாகும் என்று விசாரித்துக் கொண்டே இருக்கிறான். அவனுடைய மாப்பிள்ளைக்கு இங்கே மாற்றலாகப் போகிறதாம். அவனுக்காகத் தேவைப்படுகிறதாம். பொய்யாகத்தான் இருக்கும். யார் இப்போதெல்லாம் உண்மை பேசுகிறார்கள். பிறர் நலனை நினைக்கிறார்கள்? எங்கும் பொய்யும் புரட்டும்தான், சுயநலந்தான், சதியும் துரோகமும்தான்.
ஆபிசிலும் அப்படித்தான்.

வீட்டில் தனது மடி ஆசாரத்தைக் காப்பாற்றிக் கொண்டு தனது சாமியை வெகுளியாகக் கும்பிட்டுக் கொண்டு, தனது நம்பிக்கைகளின் சிறிய கோட்டையினுள் ஒளிந்து வாழும் இவளுக்கு வெளியுலகின் குரூரமான வழிமுறைகள், அங்கு உயிர் வாழப் பயில வேண்டிய தந்திரங்கள், விழுங்க வேண்டிய அவமானங்கள் பற்றியெல்லாம் எதுவும் தெரியாது.

இவளுடைய தண்டிக்கும் மௌனங்கள், செல்லமாக மனத்தாங்கலை வெளிப்படுத்தும் பாணிகள், இவையெல்லாம் இன்று வெறும் புராதனச்சின்னங்களென்று தெரியாத பேதை – சே!

சாப்பிட்டான். காலையில் படிக்காத தினசரியை இப்போது படிக்க எண்ணி எடுத்துக்கொண்டு படுக்கையில் சாய்ந்தான். ஆனால் அப்போது அவனுடைய பையனும் தினசரியுடன் போட்டி போட்டுக்கொண்டுஅவனோடு வந்து ஒட்டிக்கொண்டான். மகாதேவனும் தினசரியை, வெளியுலகை ஓரமாக எறிந்து விட்டு குழந்தையின் உலகில் ஒண்டிக்கொண்டான். தனக்கும் – அம்மாவைப் போல – மாயை தேவையாகத்தான் இருக்கிறது என்று நினைத்தான்.

குழந்தைக்காக யானையாகவும், குதிரையாகவும், கோழியாகவும், காக்காயாகவும் மாறினான். வீட்டுப் பிரச்சினைகளில்லாத காட்டுக்குள் ஒளிந்தான். (“ஒரேஒரு காட்டிலே…) பிறகு ஏதோ ஒரு கட்டத்தில் குழந்தை தூங்குவதற்கு முன்பே அவன் தூங்கிப் போனான்.

மீண்டும் அவனுக்கு விழிப்பு வந்தபோது அறையில் இருள்

சூழ்ந்திருந்தது. மணி ஏழரையாவது இருக்கும். அல்லது எட்டா?
மேடை மீதிருந்த கைக்கடிகாரம் எட்டேகால் என்றது. ஒரு விடுமுறை நாள் முழுவதுமாக வீணாகிவிட்ட வருத்தத்துடன் அறைக்கு வெளியே வந்தான்.

“வாங்கோ” என்று மனைவி வரவேற்றாள்.
“அப்பவே எழுப்புவதற்கென்ன?”
“இரண்டு மூன்று தடவை எழுப்பினேன். நீங்க எழுந்திருந்தால்தானே?

மேலும் உங்கம்மாவும், தூங்கட்டுமடி, பாவம்னு என்னைத் தடுத்துட்டாள்… மாமியார் சொல்லைத் தட்ட முடியுமா?”
“முடியாதுதான்”
அவனுடைய அம்மா தன் பேரனுடன் ஞாயிறு மாலை திருப்புகழ் வகுப்புக்குச் சென்றிருப்பதாக அறிந்து, சட்டென்று மனைவியை இறுக

அணைத்துக் கொண்டு…
“சீ! என் மேலெல்லாம் ஒரே வியர்வை…” என்று அவள் திமிறினாள்.
“எனக்கு அதுதான் பிடிச்சிருக்கு”.
“ம்ம்ம்ம் … அப்பா! இந்த தொந்தி வேறே – நாளுக்கு நாள் தொந்தி பெரிதாகிக் கொண்டு வரது உங்களுக்கு”
“வயதாகிறதில்லையா”.
“உங்கம்மாவும் அப்படித்தான் சொல்லிக் கொண்டிருந்தாள் இன்றைக்கு”.
“அப்படியா?”

“ஆமாம். நீங்க அசந்து தூங்கறதைப் பார்க்கப் பார்க்க உங்கம்மாவுக்குத் தாளலே. பாவம் வரவர அவனுக்கு அலைச்சலே தாங்கறதில்லை …

வயயசாயிடுத்து இல்லையா … என்று சொல்லிக் கொண்டிருந்தாள்”.

“அதற்கு நீ என்ன சொன்னாய்?”
“ஒரு வயசுமில்லை. அவருக்குச் சோம்பேறித்தனம் அதிகமாயிடுத்துன்னு சொன்னேன்”.
“உம்?”
“வெளியே போகாத தினங்களிலே கூட அவுர் தூங்காமல்தான் இருக்காராக்கும்னு சொன்னேன்”.
“உம்?”
“ஆனால் உங்கம்மா ஒன்றையும் காதில் போட்டுக்கத் தயாராயில்லை. பாவம், பாவம்னு, சொல்லிண்டேயிருந்தா. பல நாட்களிலே

ஆபிசிலிருந்து வந்தவுடனே நீங்க படுக்கையிலே விழுந்துவிடுவதைச்

சொல்லிக் கொண்டிருந்தா. பாவம், அவனுக்கு உடம்பே சரியில்லைன்னு வருத்தப்பட்டுக் கொண்டாள்”.

மனைவியின் நைச்சியத்தைப் புரிந்து கொண்டு மகாதேவன் பெரிதாகச்சிரித்து விட்டான். அம்மாவின் மீதிருந்த கோபம் இப்போது மறைந்து போயிற்று. பாவம் அம்மா. தாய்ப்பாசத்துக்கு பழசு, புதிசு, ஆசாரம், நவீனம் என்று எதுவும் கிடையாது.
அம்மாவின் அன்பு தனியானது தான்.

நாலுநாள் கழித்து அம்மாவின் பதில் வந்துவிட்டது. மனைவியின் வாயிலாக.
“அந்த பிரசாதநகர் வீட்டையே முடிவு பண்ணிடலாம்கிறா அம்மா”.
“அது இரண்டாவது மாடியாச்சே!”
“உங்களுக்குப் பரவாயில்லைன்னா அவளுக்கும் பரவாயில்லைங்கிறா”.
மகாதேவனுக்கு அம்மாவின் மீத அனுதாபம் அதிகமாகியது.

“இரண்டாவது மாடின்னா உனக்குக் கஷ்டமாச்சே!” என்று அம்மாவிடம் வந்தான்.


“என்னைப் பற்றிக் கவலைப்படாதேடா” என்றாள் அம்மா. “என் சௌரியங்கள் அவ்வளவு முக்கியமில்லை. ஆனா நீ தினம் ஆபீஸ் போக வேண்டியவன். எங்கெங்கோ அவசியமாக வெளியே போக வேண்டியவன். அடிக்கடி மாடி ஏறி இறங்கிறது உனக்குக் கஷ்டமாக இருக்காதே, அதைப் பார்த்துக்கோ”

“எனக்கென்ன கஷ்டம்” என்று அவன் சிரித்தான். அவன் அம்மா பேசவில்லை. அவனும் அவளுடைய சௌகரியத்தைப் பற்றி அதற்கு மேல் கவலை தெரிவிக்கவில்லை. அவனுக்கு வெட்கமாக இருந்தது.

தன் மேலேயே வெறுப்பாக இருந்தது. “குழந்தைக்காக” என்று சமாதானம் செய்து கொண்டான். கீழ்வீடுகளில் இருக்கும் வரை குழந்தையின் மண் தின்னும் வழக்கம் போகாது.

அடுத்த ஞாயிறும் அவனுக்கு வீணாயிற்று. புதிய வீட்டுக்கு சாமான்களையும் குடும்பத்தினரையும் கொண்டு சேர்த்து, முக்கியமான சில பொருள்கள், உடையக் கூடிய பொருள்கள் போன்றவற்றை மேலே கொண்டு சேர்க்கப் பலமுறை படியேறி இறங்கி ….

திடீரென ஒரு கட்டத்தில் அவனுக்கு மூச்சடைப்பது போலிருந்தது. கை, கால்கள் படபடத்தன. அப்படியே தரையில் உட்கார்ந்து விட்டான். புதிய வீட்டின் தரை. சற்றுத் தூரத்தில் அவனுடைய அம்மா, அவனை அனுதாபத்துடன் பார்த்த வண்ணம். ‘உனக்கும் வயதாகிவிட்டது’ என்று அந்தப் பார்வை சொல்லுகிறதோ?

அவனுக்கு ஓடிச் சென்று அவள் மடியில் தலையைச் சாய்த்துக் கொள்ளலாம் போலிருந்தது. இப்படிச் செய்ய முடியாத தாபந்தான் அவ்வப்போது கோபமாக மாறியதோ? இந்தச் சோர்வு, இந்த மூச்சு வாங்கல் – கைகால்களில் கனக்கும் வருடங்கள்…

திறந்திருந்த ஜன்னல் வழியே தூரத்தில் தெரிந்த மரங்கள், கட்டிடங்களின் உச்சிகள், அருகில் வந்துவிட்டது போன்ற வானத்தின் நீலம் ஏற்படுத்திய வெறுமை உணர்ச்சி …

அவன் திடீரென அநாதையாக, அகதியாக உணர்ந்தான்.

.

—————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , . Bookmark the permalink.