எதிர்பாராத இடத்திலிருந்து வந்திருக்கும் செய்தி …!!!

samna

shiv sena

” நேரு, இந்திரா காந்தியின் திட்டமிடலால்தான் இந்தியா
உயிர் பிழைத்திருக்கிறது ” : பாஜக மீது சிவசேனா சாடல்!

———————

நேரு-காந்தியால்தான் இந்தியா தற்போது தப்பிப்
பிழைத்திருக்கிறது எனகிறது சிவசேனா.

பிரதமர் நரேந்திர மோடியின் தவறான கொள்கையால்
சின்னஞ்சிறிய நாடுகளிடமெல்லாம் இந்தியா உதவி
வாங்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என்று
கடுமையாக சிவசேனா சாடியுள்ளது.

ஒரு புறம் நாட்டில் கொரோனா பரவலைத் தடுக்கமுடியாமல்
மத்திய அரசு திணறிக்கொண்டிருக்கிறது. மற்றொருபுறம்
புதிய பாராளுமன்ற கட்டிடம் தனது ஆட்சிக்காலம் முடிவதற்குள் கட்டி முடிக்கப்படவேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடி
தீவிரம் காட்டி வருகிறார்.

அதுவும் அடுத்த ஆண்டே பிரதமருக்கான புதிய வீடு கட்டி முடிக்கப்படவேண்டும் என்று பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

மக்கள் கொரோனா மருந்து, ஆக்ஸிஜன் இல்லாமல் திண்டாடிக்கொண்டிருக்கின்றனர். இந்தியாவின் நிலையைப்
பார்த்து பரிதாபப்பட்டு பாகிஸ்தான், நேபாளம், இலங்கை
போன்ற சின்னச்சின்ன நாடுகள் எல்லாம் உதவிப்பொருட்களைஅனுப்பிக்கொண்டிருக்கின்றன.

இது குறித்து சிவசேனா
கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.

அக்கட்சியின் பத்திரிக்கையான “சாம்னா”-வில் இது தொடர்பாக எழுதப்பட்டுள்ள தலையங்கத்தில், ‘நேரு-காந்தி உருவாக்கிய தெளிவான அமைப்பு முறைகளால்தான் இந்தியா பிழைத்து
நிற்கிறது என்பது தெளிவாக தெரிகிறது “…..

இப்போது இந்தியாவிற்கு சிறிய நாடுகள் எல்லாம் உதவி
செய்ய முன்வருகின்றன.

முன்பு பாகிஸ்தான், ருவாண்டா, இலங்கை, காங்கோ போன்ற நாடுகள் மற்றவர்களிடமிருந்து உதவிளைப் பெற்றன.

ஆனால் இன்றைய ஆட்சியாளர்களின் தவறான கொள்கையால் இந்தியா சிறிய நாடுகளிடமிருந்து உதவி பெறவேண்டிய நிலையில் இருக்கிறது. ஆனால் மோடி அரசு புதிய பாராளுமன்றம் கட்டுவதை மட்டும் நிறுத்தவில்லை.

நேரு, இந்திரா காந்தி, மன்மோகன் சிங் போன்ற முந்தைய
பிரதமர்கள் கடந்த 70 ஆண்டுகளில் உருவாக்கிய அமைப்பு முறைகளால் தான் தற்போதுள்ள கடினமான சூழ்நிலையிலும்
இந்தியா நிலைத்து நிற்கிறது.இந்தியாவில் பரவும் கொரோனா தொற்றால் உலக நாடுகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக யுனிசெப் (unicef ) அச்சம் தெரிவித்துள்ளது.

கொரோனாவை எதிர்த்துப் போராட உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவிற்கு உதவி செய்யவேண்டும் என்றும் யுனிசெப் கேட்டுக்கொண்டுள்ளது. பங்களாதேஷ், பூடான், நேபாள், மியான்மர்,

இலங்கை போன்ற நாடுகள் மருத்துவ உதவிப்பொருட்களை இந்தியாவிற்கு அனுப்பிக்கொண்டிருக்கின்றன.

இதற்காக இங்கே யாரும் வருத்தப்பட்டதாகத் தெரியவில்லை.

அவற்றை இந்தியா வாங்கிக்கொண்டிருக்கிறது. ஏழை நாடுகள் தாங்களாக முன்வந்து இந்தியாவிற்கு உதவுகின்றன.ஆனால் –
மோடி ரூ.20 ஆயிரம் கோடியில் புதிய பாராளுமன்ற கட்டிடம்
மற்றும் பிரதமருக்கான புதிய இல்லம் கட்டும் திட்டத்தை மட்டும் நிறுத்தமாட்டார்.

உலகமே கொரோனாவை எதிர்த்துப் போராடிக்கொண்டிருக்கிறது. கொரோனா மூன்றாவது அலை இதைவிட மோசமாக இருக்கும் என்று கணித்துள்ளனர். ஆனால் ஆளும் பாஜக மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியை ஓரங்கட்ட முழு நேரத்தையும் செலவிடுகிறது.

மத்திய அரசு, அரசியல் பகையை கருத்தில் கொள்ளாமல்
அனைத்து கட்சிகள் அடங்கிய கமிட்டி அமைத்து கொரோனாவை ஒழிப்பது குறித்து ஆலோசிக்கவேண்டும்.

‘மத்திய சுகாதாரத்துறையை மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் கொடுக்கவேண்டும்’ என்று பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சுவாமி கோரிக்கை விடுத்துள்ளார். இதுவே
தற்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் ஒட்டுமொத்தமாக
தோல்வி அடைந்துவிட்டார் என்பதற்கு ஆதாரமாகும்.

கடந்த 10 நாட்களில் இந்தியாவில் அதிகபட்சமாக கொரோனா இறப்புகள் நடந்துகொண்டிருக்கிறது. ஒரு மணி நேரத்திற்கு இந்தியாவில்
150 பேர் கொரோனாவால் உயிரிழக்கின்றனர்.

இப்போது இந்தியாவைக் கண்டு உலகமே பயப்படுகிறது.
உலக நாடுகள் தங்களது நாட்டு மக்களை இந்தியாவிற்கு
வர தடை விதித்துவிட்டனர்.

நேரு, லால்பஹதூர் சாஸ்திரி,
இந்திரா காந்தி, நரசிம்மராவ், மன்மோகன் சிங் போன்றவர்கள் மேற்கொண்ட வளர்ச்சிப்பணிகள் மற்றும் திட்டங்களால் தான்
இந்தியா இப்போது பிழைத்து நிற்கிறது.

தற்போதைய பிரச்னையிலிருந்து நாடு வெளிவர வேண்டுமானால் பிரதமர் மோடி அரசியலுக்கு அப்பாற்பட்டு சிந்திக்க வேண்டும்’ என்று அந்த சாம்னா தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது…

( நேற்று – PTI வெளியிட்டுள்ள செய்தி இது ….. !!! )


.

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , . Bookmark the permalink.

24 Responses to எதிர்பாராத இடத்திலிருந்து வந்திருக்கும் செய்தி …!!!

 1. விவேகன் சொல்கிறார்:

  இயற்கையே மனமுவந்து நம்மை மன்னித்து விட்டாலொழிய , இந்த பெருந்தொற்றிலிருந்து நமக்கு விமோச்சனம் இல்லை.
  இதே போல் தான் , ஸ்பெயின்,இத்தாலி,அமெரிக்கா போன்ற நாடுகளும் சந்தித்தன.பிறகு இயற்கை மனமுவந்து விடுதலை கொடுத்துள்ளது.நாமும் அதற்காக இயற்கையை வேண்டுவோமாக…..
  முதல் அலை நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதே, இரண்டாம் அலை குறித்த எச்சரிக்கையை நிபுணர்கள் அரசாங்கத்திற்கு எடுத்துரைத்திருக்க வேண்டும்.

 2. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  நிபுணர்கள் அப்போதும் கொடுத்தார்கள்;
  இப்போதும் கூட தொடர்ந்து
  கொடுத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

  எனக்குத் தெரியாதா…?
  நீ யார் புத்தி சொல்ல ..?
  என்று ஒரு தலைமை இருந்தால் – எந்த எச்சரிக்கை தான்
  பயன்படும் ?

  • புதியவன் சொல்கிறார்:

   //எனக்குத் தெரியாதா…? நீ யார் புத்தி சொல்ல ..? என்று ஒரு தலைமை இருந்தால்//

   1. ஐந்து மாநிலங்களிலும் தேர்தல் நடத்தியிருக்கக்கூடாது. இருந்த அரசே, கொரோனா பிரச்சனை தீரும் வரையில் காபந்து அரசாகத் தொடர்ந்திருக்கவேண்டும். இதைச் செய்திருந்தால் எத்தனைபேர் ஆதரித்திருப்பார்கள் என்று யோசிக்கிறேன். (பத்திரிகை, தொலைக்காட்சிகள், ஆட்சியில் யார் இருக்கிறார் என்று பார்த்து அதற்கேற்ப செய்திகள் வெளியிடுகின்றன. கோவாலசாமி டாஸ்மாக்கைத் திறந்தைப் பற்றிக் கருத்துச் சொல்லாமல், 7 பேர் விடுதலை பற்றியே பேசுகிறார்).

   2. இதற்கு முன்பு, மத்திய அரசு கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தக் கொடுத்த guidelinesஐ நிறைவேற்றாமல் தங்கள் அரசியலுக்காக அதில் மாற்றங்களைக் கொண்டுவந்ததற்காக அவர்களை தேசத் துரோகிகள், இனி அரசியலில் இருக்கக்கூடாது என்று சொல்லமுடியுமா? ஒரு உதாரணம் மட்டும் சொல்கிறேன். Against Govt guidelines, Master படத்திற்காக 100 சதவிகித இருக்கைகளை அனுமதித்தது மோடியா இல்லை மாநில அரசா? முதலில் இந்தியத் தடுப்பூசி கூடாது என்று அதனை அரசியலாக்கியது மோடியா இல்லை எதிர்கட்சிகளா? இதுபோல ஒவ்வொரு மாநிலத்திலும் அவர்களுக்கு ஏற்றபடி செயல்பட்டுவிட்டு, இப்போது பிரச்சனை என்று வரும்போது மட்டும், மோடிதான் பொறுப்பை எடுத்துக்கொள்ளணும் என்று சொல்வது எப்படிச் சரியாகும்? மோடியா, கன்யாகுமரியில் போய் தண்டால் எடுத்து கூட்டத்தைக் கூட்டு என்று சொன்னது?

   3. மாஸ்க் அணியாமல் வெளியே யார் நடமாடியிருந்தாலும் குண்டர் சட்டத்தில் சிறையில் போட்டிருக்கணும். இப்போதுமே, மாஸ்க் அணியாமல் (முழுவதும் அணியாமல்) வெளியே நடமாடுபவர்களுக்கு 5000-50,000 ரூபாய் அபராதம் அல்லது 1 மாதம்-1 வருஷம் சிறை என்று சொல்லியிருக்கணும். டாஸ்மாக்கை முழுவதுமாக மூடியிருக்கணும். ஆனால் இந்த மாதிரி மக்களிடம் கேட்டுப்பாருங்கள், ‘எனக்குத் தெரியாதா? நீ யார் புத்தி சொல்ல என்று கேட்டிருப்பார்கள். கூடவே அரசாங்கம் என்ன செய்யணும் என்று ஆலோசனையும் சொல்லியிருப்பார்கள்.

   இப்போதுமே ஊரடங்கு என்று முடக்குவதன் காரணமே கொரோனா பரவலைத் தகர்க்கத்தான்.

   உடனே இதனை பாஜக ஆதரவு, மோடி ஆதரவு என்று எடுத்துக்கொள்ளாதீர்கள். அரசு எதனைச் சொல்லியதோ, அதனை நாம் கடைபிடிக்காவிட்டால், அரசைக் குறை கூறும் அருகதையை இழந்துவிடுகிறோம். இது காசுக்காக திமுக மேடையில் ஏறிய ஜெயரஞ்சன்களுக்கும் பொருந்தும்.

   மஹாராஷ்டிராவில், அரசு அலுவலகங்களை முழுவதுமாக முடக்கி, எல்லாத் தொழில்களையும் முற்றிலும் நிறுத்தி, உத்தவ் தாக்ரே கொரோனா பற்றி மட்டும் எல்லா அமைச்சர்களையும் செயல்படச் சொல்லியிருக்கிறார் என்றுதான் நான் படிக்க ஆசை.

   • mekaviraj சொல்கிறார்:

    (இது காசுக்காக திமுக மேடையில் ஏறிய ஜெயரஞ்சன்களுக்கும் பொருந்தும் )

    இங்க என்ன பேசுறாங்க? நீங்க என்ன வாந்தி எடுக்குறீங்க ?
    மனுஷனாய்யா நீயெல்லாம் ?

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    புதியவன்,

    வழுக்காமல், நழுவாமல், திசை திருப்பாமல்,
    விதண்டாவாதம் செய்யாமல் –
    இந்த ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில்
    சொல்லுங்கள் –

    20,000 கோடி செலவில் பாராளுமன்றத்திற்கு
    புதிய கட்டிடம் கட்டும் திட்டத்தை
    2 ஆண்டுகளுக்கு தள்ளி வைத்தால்
    யார் குடி முழுகப்போகிறது….?

    ஏன் அந்த ஆலோசனையை ஏற்க மறுக்கிறார்கள்…?

    .
    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

    • Surya சொல்கிறார்:

     ஒரு வேளை புதிய கட்டிடம் கட்டும் கொத்தனார் குடி மூழ்கிடுமோ என்னவோ!

    • புதியவன் சொல்கிறார்:

     பாராளுமன்றக் கட்டிடம் கட்டுவதற்கும் கொரோனா பரவலைத் தடுப்பதற்கும் என்ன சம்பந்தம்? இதனை SC clear பண்ணி Project start 2020ல் ஆரம்பித்தது. இதைக் கேட்டால் உடனே பாஜக ஆதரவு என்று வந்துவிடுகிறார்கள்.

     புது அரசுகள் இந்த ஐந்து மாநிலங்களில் பதவி ஏற்காவிட்டால் என்ன குடி முழுகிவிடும்? கொரோனா பணி தவிர, மற்ற விமானப் போக்குவரத்தை முற்றிலும் நிறுத்திவிட்டால் என்ன குடி முழுகிவிடுமா? கல்விக்கான தேர்வுகள், புது வேலைகளுக்கான டெண்டர், Recruitments போன்றவற்றை கொரோனாவை முற்றிலும் ஒழிக்கும்வரை நிறுத்திவைத்தால் குடி மூழ்கிவிடுமா? இதுபோல கேள்விகள் கேட்டுக்கொண்டே போகலாம்.

     • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      மீண்டும் மீண்டும் விதண்டாவாதம் தான் இங்கே ….

      // பாராளுமன்றக் கட்டிடம் கட்டுவதற்கும்
      கொரோனா பரவலைத் தடுப்பதற்கும்
      என்ன சம்பந்தம்? //

      கண்களை மூடிக்கொண்டு, ஜால்ரா போடுவது,
      விதண்டாவாதம் செய்வது என்று ஆரம்பித்தால்
      எந்த சம்பந்தமும் இல்லை தான்….

      ஏற்கெனவே, தடுப்பூசி விலை பற்றி
      விதண்டாவாதம் நடந்தது.
      உச்சநீதிமன்றமே தவறு என்று சொன்ன பிறகு
      அதைப்பற்றிய பேச்சே இல்லை;

      ஆமாம் – அந்த 20,000 கோடி ரூபாயை கொரோனா
      தடுப்பு/நிவாரண பணிகளுக்கு இப்போது
      முன்னுரிமை கொடுத்து பயன்படுத்தக்கூடாதா…?

      எம்.பி.க்கள் இப்போது என்ன நடுத்தெருவிலா
      நின்று கொண்டிருக்கிறார்கள்….?
      புதிய கட்டிடத்திற்கு அப்படியென்ன அவசரம்
      என்பது தான் கேள்வி…. வேண்டாம் என்று யாரும்
      கூறவில்லை;

     • விவேகன் சொல்கிறார்:

      ஐயா,
      ஊடங்கங்கள் செய்தி வெளியிடுவது போல் 20000 கோடி பணமும் மொத்தமாக இதே மாதத்திலோ, வருடத்திலோ செலவு செய்யப்படுகிறதா, அல்லது பல தவணைகளாக கட்டுமான பணி நிறைவுகளுக்கு ஏற்ப பிரித்தளிக்க படுமா?. .அது சில வருடங்கள் ஆகும்.என்றே கணிக்கிறேன் .
      இவர்கள் சொல்லுவதை பார்த்தால் 20000 கோடி பணமும் ஒரே தவணையாக கொடுக்க பட்டு விட்டதை போல் செய்தியை பரப்புகிறறார்கள்.
      ஊடகங்களிலிருந்து நாம் விலகி இருப்பதே நமக்கு நல்லது.
      நாளை அவர்கள் இந்திய, சீன எல்லை பிரச்சினைக்களுக்காக செலவழிக்கப்படும் பணத்திற்கும் எதிப்பு தெரிவிப்பார்கள். ஏதாவது ஒரு தலையங்கத்தை போட்டு உணர்ச்சிகளை தூண்டி, அதன் மூலம் வியாபாரம் செய்ய முடியுமா என்பதே நமது ஊடகங்களின் நோக்கம்.

 3. விவேகன் சொல்கிறார்:

  அய்யா,
  வளர்ந்த மேலை நாடுகளே கொரோனா விஷயத்தில் கோட்டை விட்டு விட்டன.அவர்களும் அசாதாரணமான உயிர் பலிகளை கண்டார்கள். எந்த திருநாடும் இதை அரசியலாக்க வில்லை (டொனால்டு டிரம்ப் ஆண்ட அமெரிக்கா உட்பட ).அமெரிக்க ஊடகங்கள் யாவும் இந்த பேரிடரை அரசியலாக்க வில்லை. ஆனால் நாம் மட்டுமே என்றென்றும் விதிவிலக்குகள்.இதிலும் அரசியல் ரீதியாக ஆதாயம் தேட முடியுமா என்றே எல்லாஊடகங்களும் வரிந்து கட்டி கொண்டு திரிவது நமது துரதிர்ஷ்டமே . இதில் ஒரு டீவீ சேனல் சுடுகாட்டில் இருந்தே நேரலையை ஒளிபரப்புகிறார்கள்.அங்கு குமியும் பிணங்களுக்கே நடுவே சென்று , ஆளும் கட்சி எதிர்ப்பை பதிவு செய்யமுடியுமா என்று பரிதவிக்கிறார்கள்.
  இன்றைய கட்டத்தில் நமக்கு தேவை அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு அளிப்பது மட்டுமே.அவர்கள் கூறும் ஒழுக்க விதிகளை பின்பற்றுவது மட்டுமே நமது கடமையாக கொள்ளுவோம்.விரைவில் இதிலிருந்து மீளுவோம்.பிறகு நமது காழ்ப்புணர்ச்சி அரசியலை கொண்டாடுவோம்.

 4. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  விவேகன்,

  “130 கோடி மக்களுக்கு ஏன் ஒரே தடுப்பூசி கம்பெனி …?
  “ஃபார்முலா”-வை பகிருங்களேன்…!!!

  என்கிற தலைப்பிலான இன்றைய இடுகையை
  படித்து விட்டு உங்கள் கருத்தை கூறுங்கள்…

  இந்தியாவில் எத்தனையோ மருந்து தயாரிப்பு கம்பெனிகள்
  உள்ள நிலையில், மற்ற கம்பெனிகளையும்
  தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபடுத்தாமல் இருப்பது ஏன்…?
  அரசுக்கு ஏன் இதில் நாட்டமில்லை….?

  .
  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

  • விவேகன் சொல்கிறார்:

   சில சமயம், நமது ஊடகங்கள் தவறான, தகவல்களையும் , திரிக்க பட்ட தகவல்களையும் பரப்புகிறார்கள்.சரியான தகவல்கள், மக்களை சென்று சேர விடாமல் தடுக்கிறார்கள்.அதை பிஜேபிக்கு எதிரான குற்றச்சாட்டுகளாக மாற்ற முயலுகிறார்கள்.இதற்க்கு ஏராளமான எடுத்து காட்டுகளை என்னால் காட்டமுடியும்.

   ஒரு சிறு உதாரணமாக – BEEF BAN (மாட்டிறைச்சி தடை)
   இதில் உண்மை தகவல் வெகு சாமர்த்தியமாக மறைக்க பட்டு, பிஜேபி முஸ்லீம்களை பலி வாங்கும் நடவடிக்கையாக காட்டும் முயற்சியே கடைசியில் மக்களை சென்றடைந்தது .
   இது சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதலின் பேரில் , கடைசியில் அரசாங்கம் கொண்டு வர முயன்ற இறைச்சி தயாரிக்கும் தொழிற்சாலை செய்தி மழுங்கடிக்க பட்டு , மத ரீதியாக மாற்ற பட்டது.ஊடகங்களில் வெளிவரும் இது போன்ற செய்திகளை கண்டு முதலில் நானும் கொதித்திருக்கிறேன். ஆனால் பிற்பாடு, நான் தனிப்பட்ட முறையில் நேர்மையான ஊடகங்களின் மூலம் நான் பஉண்மையை புரிந்து சொல்லும் சூழல் உருவான பொழுது, ஊடகங்களை நினைத்து வெட்கப்படுகிறேன்.

   நீங்கள் குறிப்பிடும் செய்திகளும் அது போன்ற திரிக்க பட்ட தகவல்களாக இருக்கலாம்.இதற்க்கு பின்புலமாக காப்பி ரைட் சார்ந்த பிரச்சினைகள் இருக்க கூடும்.நமது தேச பக்தி ஊடகங்கள் வழக்கம் போல அதை மறைத்து செய்தியை திரிக்கலாம் .நாம் தான் உண்மைகளை பொறுமையாக ஆராய வேண்டும்.
   ஒரு வேளை நீங்கள் குறிப்பிடுவது போல இதில் கோடிக்கணக்கான ஊழல் ஒளிந்திருக்கிறது என்றால், உண்மையில் பிஜேபியை கண்டிக்க வேண்டியது நமது கடைமையே. இதில் மாற்று கருது இல்லை.

 5. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  கீழே – இன்றைய தினமணி செய்தி

  புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு எதிர்ப்பு:
  எதிர்க்கட்சிகள் கடிதம்
  By DIN | Published on : 12th May 2021 08:10 PM |

  புதிய நாடாளுமன்ற கட்டடப் பணிகளைக் கைவிடக்கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்க்கட்சிகள் கூட்டாக கடிதம் எழுதி அனுப்பியுள்ளன.

  நாடாளுமன்ற கட்டுமானப் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சோனியா காந்தி, எச்.டி.தேவெ கௌடா, சரத் பவார், உத்தவ் தாக்கரே, மம்தா பானர்ஜி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 12 எதிர்க்கட்சித் தலைவர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

  புதிய நாடாளுமன்ற கட்டுமானப் பணிகளைக் கைவிட்டு நாடு முழுவதும் இலவச கரோனா தடுப்பூசிக்கு முகாம்களை தொடங்க வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  கரோனா ஊரடங்கால் வேலையை இழந்தவர்களுக்கு மாதம் ரூ.6 ஆயிரம் உதவித் தொகை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

  மேலும், ஆக்ஸிஜன், கரோனா தடுப்பு மருந்துகளை வாங்குவதற்கு பி.எம்.கேர்ஸ் போன்றவற்றிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்
  கரோனாவால் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் தேவைப்படுவோருக்கு இலவசமாக உணவு தானியங்களை வழங்க வேண்டும்

 6. விவேகன் சொல்கிறார்:

  புதிய பாராளுமன்றம் கட்ட 20000 கோடி படஜெட் என்பது எங்கிருந்து கிளப்பப்பட்ட தகவலோ ….
  நான் அறிந்த வகையில் 950 கோடி என்று தோராயமாக குறிப்பிடப்படுகிறது.
  மேலும் இது போன்ற அறிக்கைகள் இப்பொழுதான் எதிர் கட்சிகளால் திடீரென்று கிளப்பப்படுகின்றன.
  ஆனால் அதற்குள்ளாகவே , மத்திய அரசாங்கம் இதை சவால் விடுவது போல் செய்திகள் தேவை தானா .
  எங்கும் புரளிகள் , பிரச்சினைகள்…. உண்மையில் இத்தனை பிரச்சினைகளை உருவாக்கி கொண்டு தான் இருக்க வேண்டுமா, நமது ஊடகங்கள் ….
  காழ்புணர்ச்சிக்கு இந்த இக்கட்டான நேரத்திலும் விடுமுறை இல்லையோ …..

  • mekaviraj சொல்கிறார்:

   விவேகன் புதியவனோட மறு உருவமா?

   நாம ஒண்ணு கேட்டா நம்மள அசத்துறமாதிரி ஒரு பதில் சொல்றார்.

   “நான் அறிந்த வகையில் 950 கோடி என்று தோராயமாக குறிப்பிடப்படுகிறது.”
   இதை படிங்க விவேகன்
   https://thelogicalindian.com/fact-check/central-vista-project-25377

   நீங்க அறிந்தது மற்றும் இல்லை உண்மைன்னு ஒன்னு இருக்கு.

   • விவேகன் சொல்கிறார்:

    mekaviraj அய்யா,
    இணைய தலத்தில் உலா வரும் தகவல்களில் எது உண்மை என்று எவ்வாறு கண்டு பிடிப்பது. என்னாலயும் இது போன்ற ஆதாரங்களை காட்ட முடியும்.
    பிரச்சினை இதுதானா?
    எதிர் கட்சிகள் திடீரென்று இந்த கட்டிடம் தேவையில்லை என்று முடிவெடுத்து, ஊடகங்கள் வழியாக இதை பரப்புகிறார்கள். இதற்க்கு மத்திய அரசாங்கம் எதிர்ப்பு ஏதாவது தெரிவித்து, இந்த கட்டிடத்தை நாங்கள் தொடருவோம் , யாராலயும் தடுக்க முடியாது என்று ஏதும் பதிலளித்தது போல், ஏன் இந்த திடீர் கூக்குரல்.

    சென்னையில் நான் வசிக்கும் பகுதியை சுற்றியும் சுமார் மூன்று பிரம்மாண்டமான பாலங்கள் , பல நூறு கோடி செலவில் இந்த கொரான சமயத்தில் தான் கட்டி கொண்டு இருக்கிறார்கள். மேலும் சாலை விரிவாக்கத்திற்காக பல கட்டிடங்களையும் தகர்த்து கொண்டு தான் இருக்கிறாரார்கள்.
    இதையும் நாம் மோடி , இந்த பல கோடி மதிப்பிலான பாலங்களை கட்டுவதை நிறுத்த சொல்லி போராடலாமே .
    பல நூறு கோடி நமக்கு மிச்சமே.இந்தியா முழுவதும் கணக்கிட்டால், பல ஆயிரம் கோடி நமக்கு லாபமே.

    ஊடங்கங்கள் பிரச்சினையை கிளம்பினாலும் நாம் தான் ,எது உண்மையான விமரிசனம் என்பதை புரிந்து செயலாற்ற வேண்டும்.

    இதில் எனக்கு பட்டம் வேறு கொடுத்து மகிழ்ச்சி அடைய வேண்டுமா. எல்லாரும் ஊடகங்களை ஒரே விதமான ஆறாவது அறிவுடன் தான் அணுக வேண்டும் என்று சட்டம் ஒன்றும் இல்லையே.

 7. அய்யாக்கண்ணு சொல்கிறார்:

  ” விவேகன் புதியவனோட மறு உருவமா? ”

  ஒரு புதியவனே 10 பாஜகவுக்கு சமம்.
  அப்படி இருக்கையில் புதியவனுக்கு
  இன்னொரு வடிவம் வேறுஏன் ?

  • விவேகன் சொல்கிறார்:

   ஊடங்களை எவ்வாறு நாம் அணுக வேண்டும் என்பதை நாம் தான் வரையறை படுத்தி கொள்ள வேண்டும்.இவர்கள் வரையும் கட்டுரைகள் யாவும், காழ்ப்புணர்ச்சி கொண்டவை மற்றும் பார்வையாளர்களை ஈர்பதற்க்காக தீட்டப்படுபவை.

   உதாரணமாக, பிரபல நடிகர் ஒருவர் , தனது வீட்டிற்கு மிக அருகில் இருக்கும் ஓட்டு சாவடிக்கு , காரில் செல்லாமல் சைக்கிளில் சென்றார்.நான் பார்த்த வரையில் இது ஒரு சாதாரண சம்பவமே. ஆனால், இதையும் திரித்து அந்த குறிப்பிட்ட நடிகர் மத்திய ஆளும் கட்சிக்கு , பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காகவே இவ்வாறு சைக்கிளில் அதிரடியாக வலம் வந்தார் எனவும், இதனால் இவர் திமுக வை மறைமுகமாக ஆதரிப்பதாகவும் , செய்தி வெளியிடுகிறார்.இதற்கு பல ஆயிரக்கணக்கான likes…

   செய்தியை திரிப்பது ஒரு கலை . பொழுது போகாமல் வீட்டில் திரிந்து கொண்டு இருக்கும் நாம் இவர்களின் விட்டில் பூச்சிகள்.

   • அய்யாக்கண்ணு சொல்கிறார்:

    ஆக இவ்வளவு நாட்களாக
    காவிரிமைந்தன் சார்
    புத்தி கெட்டுப்போய் இங்கு பதிவுகள்
    போட்டு வருகிறார் என்கிறீர்கள் ?

   • mekaviraj சொல்கிறார்:

    விவேகன்,

    கொஞ்சமும் அர்த்தம் இல்லாமல் பெரிய பெரிய comment பண்ணிகிட்டே இருக்கீங்க.
    கொஞ்சமாவது நான் share பண்ணை link பார்த்தீங்களா ?

    இது உண்மையல்ல

    யாரும் கிளப்பல.

    இதுல என்னய்யா சவாலு ?

    950 சரியான தகவல் அல்ல.

    காழ்புணர்ச்சிக்கு இந்த இக்கட்டான நேரத்திலும் விடுமுறை இல்லையோ …..
    -> என்ன பேசுறீங்க ?

    ஊடங்களை எவ்வாறு நாம் அணுக வேண்டும் என்பதை நாம் தான் வரையறை படுத்தி கொள்ள வேண்டும்.இவர்கள் வரையும் கட்டுரைகள் யாவும், காழ்ப்புணர்ச்சி கொண்டவை மற்றும் பார்வையாளர்களை ஈர்பதற்க்காக தீட்டப்படுபவை.
    -> பொய்யான உலகத்தால் நீங்க வாழறீங்க சார்

    உதாரணமாக, பிரபல நடிகர் ஒருவர் , தனது வீட்டிற்கு மிக அருகில் இருக்கும் ஓட்டு சாவடிக்கு , காரில் செல்லாமல் சைக்கிளில் சென்றார்.நான் பார்த்த வரையில் இது ஒரு சாதாரண சம்பவமே. ஆனால், இதையும் திரித்து அந்த குறிப்பிட்ட நடிகர் மத்திய ஆளும் கட்சிக்கு , பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காகவே இவ்வாறு சைக்கிளில் அதிரடியாக வலம் வந்தார் எனவும், இதனால் இவர் திமுக வை மறைமுகமாக ஆதரிப்பதாகவும் , செய்தி வெளியிடுகிறார்.இதற்கு பல ஆயிரக்கணக்கான likes…
    -> இப்ப எதுக்கு சார் அங்க போறீங்க ?

    செய்தியை திரிப்பது ஒரு கலை . பொழுது போகாமல் வீட்டில் திரிந்து கொண்டு இருக்கும் நாம் இவர்களின் விட்டில் பூச்சிகள்.
    -> கலை, பொழுபோகளை விட்டில் பூச்சி.

    நல்லா வருவீங்க விவேகன் 🙂

    • விவேகன் சொல்கிறார்:

     mekaviraj அய்யா,
     இணையத்தில் உலா வரும் ஆதாரமற்ற தகவல்களையெல்லாம் நம்பும் நிலையில் நான் இல்லை( இதில் 2G scam – 1,70,000 கோடி மதிப்பானது என்ற கற்பனை உட்பட) .
     நீங்கள் குறிப்பிட்ட Link ஐ , ஏற்கெனவே நான் பார்த்ததுதான்.
     பாஜக எதிர்ப்பு ஊடகமான THEHINDU உட்பட, இதன் மதிப்பு 950 கோடி என்றே குறிப்பிடுகிறார்கள்.
     அரசாங்கம் சார்ந்த தளங்களில் 20000 கோடி என்று குறிப்பிட்டால், நம்பி ஏற்று கொள்ளலாம்.உண்மையில் ஊழல் செய்யும் அரசாங்கம் மிக அதிகமாகவே தொகையை வெளியுலகத்திற்கு தெரிவித்து மீதியை சுருட்டிக்கொள்ளுவார்கள்.இது தான் எதார்த்தம்.
     ஆனால் நீங்கள் குறிப்பிடுவதை பார்த்தால், அரசாங்கம் மிகவும் குறைவாக வெளியுலகத்திற்கு தெரிவிக்கிறார்கள் என்றும், ஆனால் அதன் மொத மதிப்பு 20000 கோடி என்றும் கூறுகிறீர்கள்.
     ஒரு வேளை ஊழல் செய்ய விருப்பம் இல்லாத அரசாங்கம் என்று குறிப்பிடுகிறீர்களோ?

 8. அய்யாக்கண்ணு சொல்கிறார்:

  மேகவிராஜ்

  அவுரு விவேகன் இல்லீங்க –
  வேற ஒருத்தரோட பதிப்பு.

  • விவேகன் சொல்கிறார்:

   அய்யா கண்ணு ,

   “அவுரு விவேகன் இல்லீங்க –
   வேற ஒருத்தரோட பதிப்பு.”

   தயவு செய்து , தனி மனித விமரிசங்களை தவிர்த்து , செய்தி குறித்த உங்கள் பார்வையை வெளிப்படுத்தினால் , உண்மை தன்மையை பொறுத்து நிச்சயம் ஏற்று கொள்ளுகிறோம்..
   ஆதாரமில்லாத குற்றச்சாட்டுக்களை பொதுவெளியில் வைக்கும் பொழுது, நிச்சயம் அதற்க்கு எதிரான கருத்துக்களும் பகிரப்படும். சகிப்பு தன்மை இணையத்தில் நிச்சயம் தேவை.
   மத்திய அரசாங்கத்திற்கு எதிரான ஊழல்களை வெளிப்படுத்துங்கள். நிச்சயம் எல்லோரும் ஆதரிப்பார்கள்.ஆனால் அதற்காக, நின்றாலே குற்றம், உட்கார்ந்தால் குற்றம் என்ற வகையில் செய்திகள் திரிக்க படுவது , அதிலும் மத ரீதியாக செய்திகள் திரிக்க படுவது , துரதிருஷ்டவசமானது.
   எதை செய்தாலும் முஸ்லீம் களுக்கு எதிரானதாக மக்கள் நம்ப வைக்க படுகிறார்கள்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.