‘சுப்பிரமணியன் சுவாமி, சிவசேனா ஆதரவு! –
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின்
தலைவராவாரா நிதின் கட்கரி?’
மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரியைதேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தலைவராக நியமிக்கவேண்டும் என்று பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
இக்கோரிக்கைக்கு சிவசேனா ஆதரவு தெரிவித்துள்ளது.
நாட்டில் பரவி வரும் கொரோனாவை மத்திய அரசு சரியாகக் கையாளவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக வெளிநாட்டுப்பத்திரிக்கைகள் நரேந்திரமோடி அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன. இதனால் மற்றொரு முழுமையான பொது முடக்கத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. ஆனால் பொது முடக்கத்தை அமல்படுத்தினால் சாமான்ய மக்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள் என்றும் பொருளாதாரமும் மோசமடையும் எனக் கருதி மத்திய அரசு பொதுமுடக்கத்தை அமல்படுத்த தயங்கிவருகிறது.
இதனால் தினம் தினம் கொரோனா தொற்று அதிகரித்துக்கொண்டே வருகிறது. எனவே ஆக்சிஜன் மற்றும் கொரோனா சிகிச்சைக்கான மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
சமீபகாலமாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கார்ப்ரேட் கம்பெனிகளிடம் தனக்கு இருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி கொரோனாவிற்கு தேவையான ஆக்சிஜன், மருந்து போன்றவற்றை ஏற்பாடுசெய்து தேவைப்படும் மாநிலங்களுக்கு கொடுத்துவருகிறார்.இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டும் கிடைத்துள்ளது.
அதோடு மகாராஷ்டிராவில் தினமும் 30 ஆயிரம் டோஸ் ரெம்டெசிவிர் கொரோனா சிகிச்சை மருந்து உற்பத்திசெய்ய ஏற்பாடு செய்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் வார்தாவில் இம்மருந்து தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. ஜெனிடெக் லைஃப் சயின்ஸ் என்ற கம்பெனி ரெம்டெசிவிர் மருந்தைத் தயாரிக்க ஆரம்பித்துள்ளது.
தினமும் 30 ஆயிரம் டோஸ் தயாரிக்கப்பட்டு வருவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். வார்தாவில் இக்கம்பெனி ரெம்டெசிவிர் மருந்தை உற்பத்திசெய்ய தேவையான அனுமதிகளை பெற்றுக்கொடுத்ததில் நிதின் கட்கரி முக்கிய பங்கு வகித்தார். இங்கு உற்பத்தியாகும் மருந்து மகாராஷ்டிராவின் விதர்பா பிராந்தியத்திற்கும் மாநிலத்தின் இதர பகுதிக்கும் பயன்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் நிதின் கட்கரியை கொரோனா மேலாண்மை தலைவராக நியமிக்கவேண்டும் என்று பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சுவாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா மூன்றாவது அலை குழந்தைகளை அதிகமாக பாதிக்கும் அபாயம் இருப்பதால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க முழு நேர பொறுப்பாளர் ஒருவர் தேவை என்றும் அவர் தெரிவித்துள்ளார். சுப்பிரமணியன் சுவாமியின் கோரிக்கைக்கு சிவசேனாவும் ஆதரவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான கிஷோர் திவாரி அளித்த பேட்டியில் –
தற்போதைய சூழ்நிலையில் கொரோனா முதல் அலையை விட இரண்டாவது அலையில் வட இந்தியாவில் இருந்து அதிகமாக பரவி வருகிறது. இரண்டாவது அலையில் இளம் தலைமுறையினர் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வரும் நாட்களில் தினத்தொற்று 40 லட்சமாக அதிகரிக்கலாம்.அதிகப்படியான மருந்து, படுக்கை, மருத்துவ வசதி, வென்டிலேட்டர்கள், ஆக்சிஜன் தேவையாக இருக்கிறது. எனவே இதனை கையாள முழு நேர பொறுப்பாளர் ஒருவர் தேவை. எனவே மிகவும் அனுபவம் வாய்ந்த நிதின் கட்கரி போன்றவரை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தலைவராக நியமிக்கவேண்டும் என்று தெரிவித்தார்.
(நன்றி – விகடன் )
.
நிதின் கட்கரி ஒரு சிறந்த செயல்வீரர் என்பதை நாம் ஏற்கெனவே அனுபவத்தில் உணர்ந்திருக்கிறோம்…. எனவே இன்றைய தினம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளையும், நிவாரண உதவிகளையும் தீவிரமாக செயல்படுத்த கட்கரியை கொண்டு வருவது மிகவும் அவசியம்.
மத்திய அரசு இந்த கோரிக்கையை ஈகோ பார்க்காமல் – உடனடியாக ஏற்றுச்செயல்படுத்த வேண்டும்.
.
——————————————————————————————————
ஒரு ஒழுங்கான ஒருங்கிணைப்புக் குழுவை கூட
அமைக்கத் திறன் இல்லாத அரசுக்கு, சுப்ரீம் கோர்ட்
தான் அமைத்து உதவி இருக்கிறது.
கர்வம், அகம்பாவம், அலட்சியம் போன்ற
சத்குணங்களால் நிரம்பபெற்று மாநிலங்களின்
வெறுப்பை மத்திய தலைமை சம்பாதித்திருக்கும்
நிலையில்,
எப்போதும் புன்சிரிப்பும், இனிய சொற்களும்,
அனைவருடனும் நட்புணர்வுடன் பழகும்
இயல்பையும் கொண்ட –
செயல்திறன் மிக்க நிதின் கட்கரியிடம்
இப்பொறுப்பை ஒப்படைப்பது –
இன்றைய நிலையில் நாட்டுக்கும்,
நாட்டு மக்களுக்கும் நல்லது.
இது செய்தி –
ஞாயிறு 9 மே 2021
மாநிலங்களுக்கு ஆக்சிஜன் விநியோகம்: தேசிய சிறப்புப் படை!
மாநிலங்களுக்கு ஆக்சிஜனைப் பகிர்ந்தளிக்க 12 பேர் கொண்ட தேசிய சிறப்புப் படையை நியமித்து உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.
இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு நான்கு லட்சத்தைத் தாண்டி செல்கிறது. இந்த நெருக்கடியான சூழலில் பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை மிகப்பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. ஒவ்வொரு மாநிலங்களும் தங்களுக்கு சரியான அளவீட்டில் ஆக்சிஜன் ஒதுக்கப்படவில்லையென்றும், ஒதுக்கப்பட்ட அளவு விநியோக்கப்படவில்லை என்றும் புகார் தெரிவித்து வருகின்றன.
குறிப்பாக, டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையினால் அதிகளவில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களிலும் இதனால் உயிரிழப்பு ஏற்பட்டு வருவதை மறுக்க முடியாது.
இதுகுறித்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சந்திரசூட், எம்.ஆர்.ஷா அமர்வு விசாரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று (மே 8) மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநிலங்களுக்கு ஆக்சிஜனைப் பகிர்ந்து அளிப்பது தொடர்பாக 12 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. குழுவில் தமிழகம் முதல் டெல்லி வரை பல மாநில மூத்த மருத்துவர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 10 பேர் மருத்துவர்கள், 2 அரசு அதிகாரிகள் உள்ளனர்.
இந்தக் குழு நாட்டில் ஆக்சிஜன் தேவையையும் விநியோகத்தையும் மதிப்பிட்டு பரிந்துரை வழங்குவார்கள். ஆக்சிஜன் விநியோகம் தொடர்பாக சிறப்புப் படை பரிந்துரை வழங்கும் வரையில், தற்போது நடைமுறையில் இருப்பதுபோல மத்திய அரசு தொடர்ந்து ஆக்சிஜனை ஒதுக்கீடு செய்யலாம்.
தற்போதைய ஆக்சிஜன் இருப்பு, விநியோகம், எதிர்கால தேவை குறித்து சிறப்புப் படை பரிந்துரைகளைச் சமர்ப்பிக்கும். ஆக்சிஜன் தேவை, விநியோகம் தொடர்பாக அந்தந்த மாநிலங்களில் துணைக் குழுக்கள் அளிக்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் சிறப்புப் படை முடிவு எடுக்கப்படும். சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு ஆக்சிஜன் முறையாக சென்று சேர்ந்ததா என்பதையும் இக்குழு உறுதி செய்ய வேண்டும்.
சிறப்புப் படை, பரிந்துரைகளை நீதிமன்றத்திலும் அவ்வப்போது சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உடனடியாகப் பணியைத் தொடங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து, வழக்கு விசாரணை மே 17ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.