தேடலில் இருப்பவர்களுக்கு – (1)(குறையொன்றுமில்லை….)

kurai-2

kurai-1

ஒரு நண்பர் அமெரிக்காவிலிருந்து ….
இன்னொருத்தர் கனடாவிலிருந்து ….
இன்னொருவர் – திருச்சியிலிருந்து ….

நிதிவசதிகளிலோ, சௌகரியங்களிலோ
இவர்கள் யாருக்கும் குறையொன்றுமில்லை என்றாலும் கூட
இவர்கள் அனைவருக்கும் வேறு மாதிரி ஒரு குறை…..!
இவர்களில் இருவருக்கு வெளிநாட்டிலேயே தொடர்ந்து
வாரிசுகளுடன் இருக்க வேண்டிய நிலை…
மூன்றாமவருக்கு காடாறு மாதம்… நாடாறு மாதம்…

இவர்களைத் தவிர எனது வலைத்தளத்துக்கு அப்பாற்பட்ட
நண்பர்கள் சிலருக்கும் இந்த மாதிரி அனுபவங்கள் உண்டு.
பிள்ளை அல்லது பெண், திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டிலேயே செட்டில் ஆகி விட்டவர்கள்.

அவர்களுக்கு குழந்தை(கள்…) பிறக்கும்போது,
6 மாதம் பெண்ணின் பெற்றோர்களும், அடுத்த 6 மாதம்
பிள்ளையை பெற்றவர்களும், தங்கள் பேரக்குழந்தையை
பார்த்துக்கொள்ள வேண்டிய நிலையில் இருப்பவர்கள்.
எனவே இவர்கள் போய்க்கொண்டும், வந்துகொண்டும்
இருப்பார்கள்….!!!

இவர்களின் பொதுவான குறை, வார இறுதி நாட்களில்
மட்டுமே அவர்களுக்கு வாழ்க்கை….ஏனெனில்,
மற்ற நாட்களில் அவர்களால் தனியே எங்கும் போக
முடிவதில்லை; இவர்களால் வாகனங்களை ஓட்ட முடியாது;
இவர்கள் இருக்கும் இடங்களில் பொதுபோக்குவரத்து வசதிகள் குறைவு….

வீட்டில் நேரம் நிறைய இருக்கிறது…
ஆனால் சுவாரஸ்யமான பொழுதுபோக்கு இல்லை….
சில சமயங்களில் அங்கும் டிவி சீரியல்கள் கைகொடுக்கின்றன
என்றாலும் கூட, பலர் வேண்டாவெறுப்பாகவே அவற்றை
பார்க்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோருக்கு கணிணி
ஞானம் அதிகம் இல்லை; மெயில் பார்க்கவும், வீடியோ-பேசிகளில்
பேசவும் மட்டுமே கணிணி பயன்படுத்தும் நிலை.

அவர்களுடைய அமெரிக்க வாரிசுகளுக்கோ – தமிழ் ஞானம்
இல்லை; கான்வெண்டில் அல்லது CBSE -ல் பள்ளிப்படிப்பு, பிறகு எஞ்சினீரிங் காலேஜ்/ஐஐடி யில் கம்ப்யூட்டர் பட்டம், பின்னர் எம்.எஸ்.படிக்க அமெரிக்கா பயணம்.

அங்கேயே மேற்படிப்பை முடித்து, வேலை பார்த்துக் கொண்டு, திருமணமும் ஆகி, குழந்தைகளையும் பெற்றுக்கொண்டு…..
செட்டில் ஆனவர்கள்….!!!
இவர்களுக்கு தமிழ் பேச மட்டும் தான் தெரியும்.
படிக்கவோ, எழுதவோ தெரியாது;

எனவே எனது தொடர்பில் இருக்கும் இத்தகைய மூத்த குடிமக்கள் –
தங்களுக்கு நேரம் நிறைய இருக்கிறது. ஆனால் சுவாரஸ்யமான
பொழுதுபோக்கு இல்லை என்று தங்கள் குறையைச்
சொன்னார்கள். என் திருச்சி நண்பர் எனக்கு பல ஆண்டுகளாக
பழக்கமானவர். அவருக்கு மட்டும் விமரிசனம்-காவிரிமைந்தனை
நேரடியாகத் தெரியும்…

கடந்த முறை அவரை பார்த்தபோது சொன்னார்…
“என்னப்பா ப்ளாக் எழுதறே.. 10 நிமிஷத்துல படிச்சுடறேன்.
இன்னும் பெரிசா எழுதினா என்ன…?”
(அவர் லெவலில் இருப்பவர்களுக்கு – வலையில் என்னென்ன
இருக்கிறது… எங்கே, எது, எந்த வடிவில் இருக்கும்… அவற்றை
எப்படித் தேடி எடுப்பது போன்ற விவரங்கள் தெரியாது…)

அவருக்கு என் சிரமம் தெரியாது. 10 நிமிடங்களுக்கு மேல்
நான் எழுதினால், என் வலைத்தள நண்பர்கள் பொறுமை
இழந்து விடுவார்கள். இந்தக் காலங்களில் யாரும்
10 நிமிடத்திற்கு மேல் எதையும் தொடர்ந்து படிக்வோ,
பார்க்கவோ – விரும்புவதில்லை; சிலருக்கு பொறுமை இல்லை;
பலருக்கு நேரம் இல்லை;

எனவே, நான் பெரிய இடுகைகளை எழுதுவதை நீண்ட
நாட்களுக்கு முன்னரே நிறுத்தி விட்டேன்.

இருந்தாலும், இத்தகைய மூத்த நண்பர்களுக்கு ( இவற்றில்
பெண்களும் அடக்கம்…) நான் எந்த விதத்தில் உதவிசெய்ய
முடியுமென்று யோசித்துக் கொண்டிருந்தேன்…. இப்போது
ஒரு தீர்மானத்திற்கு வந்திருக்கிறேன்.

தகவல் தொழில்நுட்பம் – இண்டர்னெட் என்பது
மனிதகுலத்திற்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வரப்பிரசாதம்.
அதை சரியாக பயன்படுத்திக்கொண்டால், நமது வாழ்க்கை
மிகச் சுலபமாகி விடும்…. சுவாரஸ்யமாகி விடும்…!!!.

வலைத்தளங்களும், காணொலிகளும், யூ-ட்யூபும் மிகப்பெரிய
அளவில் நமக்கு உதவுகின்றன. அளவிட முடியாத அளவிற்கு
மிகப்பெரிய, மிக ஆழமான ஒரு சுரங்கம் இது…
இதில் என்னென்ன இருக்கிறது என்பதை முழுமையாகப்
பார்த்தவர்கள் யாருமே இருக்க முடியாது. நான் கடந்த
10-12 வருடங்களுக்கு மேலாக பார்த்தது அந்தச் சுரங்கத்தின்
1000-ல் ஒரு பகுதியாக கூட இருக்க முடியாது என்பது
என் அபிப்பிராயம்.

எனவே, அந்தச் சுரங்கத்தினுள் என்னால் முடிந்த வரையில்
தேடுதலில் இறங்கி, இத்தகைய நண்பர்களுக்கு பிடிக்கக்கூடிய
விஷயங்களை எடுத்து வந்து, “தேடலில் இருப்பவர்களுக்கு…”
என்கிற தலைப்பில் இங்கே தருவது என்பது என் உத்தேசம்.

இதில் நேரக்கணக்கு இருக்காது; அநேகமாக எல்லாமே
பெரிதாக /நீண்டவையாக இருக்கும்; எனக்குப் பிடித்ததை
எல்லாம் நான் வரிசையாக இங்கே கொண்டு வந்து தருவேன்;
நண்பர்கள் தங்களுக்கு பிடித்ததை எடுத்து பார்க்கலாம்;
படிக்கலாம்; கேட்கலாம்…

சில – மீண்டும் மீண்டும் பார்க்கக்கூடியதாக இருக்கும்.
அந்த பதிவுகளை குறித்து வைத்துக்கொள்ளுங்கள்…
பிறகு மீண்டும் பார்க்க வேண்டுமென்று நினைக்கும்போது
உதவும்.

அவர்களுக்கு –
சுவாரஸ்யமாகவும், இனிமையாகவும் – தங்கள் நேரத்தை
செலவிட இது உதவியாக இருக்க வேண்டும் என்பது மட்டுமே
எனது நோக்கம்.

இந்த பகுதி இன்றே துவங்குகிறது….இனி –

“குறையொன்றுமில்லை” –

ராஜாஜி அவர்களால் (தமிழறிஞர் மீ.ப.சோமு அவர்களின்
உதவியுடன்) இயற்றப்பட்ட இந்தப் பாடல் 1967-ல் கல்கி
வார இதழில் வெளிவந்தது. இந்தப்பாடலுக்கு இசை வடிவம்
தந்தவர் கடையநல்லூர் வெங்கட்ராமன் அவர்கள்.

திருமதி எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி அவர்களால் 1979-ல் முதலில்
பாடப்பட்ட இந்தப்பாடல், பிற்பாடு இசையுலகில் மிகவும்
பிரபலமானது….

……………

சிவாஜியும், எம்.ஆர்.ராதாவும் நினைவுக்கு வருகிறார்களா….?


கொஞ்சம் சிரிக்கலாமா …..?


அடுத்த பதிவில் மீண்டும் சந்திப்போம்….!!!

.

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

3 Responses to தேடலில் இருப்பவர்களுக்கு – (1)(குறையொன்றுமில்லை….)

  1. Hariharan P. சொல்கிறார்:

    Mr.Kaveri Mainthan

    I very gladly welcome your idea.
    I am one of the few friends from USA
    you have mentioned above.
    I thank you a lot for the efforts & care
    you are taking on the others.
    I wish you all the best.

    Hariharan

  2. atpu555 சொல்கிறார்:

    உங்களுடைய சேவை எண்ணம் மிகவும் பாராட்டத்தக்கது. பலர் பனடைவார்கள் என்று நம்புகிறேன்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.