சாமியார்களும், சுஜாதா சாரும், நானும்…..!


poor1

சாமியார்களும், சுஜாதா சாரும், நானும்…..!
( தலைப்பு – ஒரு மலையாள சினிமா டைட்டிலின் பாதிப்பு …!)

எவ்வளவு தடவை எழுதினாலும்,
மீண்டும் மீண்டும் இந்த கார்பரேட் / போலி சாமியார்களின்
விளம்பரங்களை பார்க்கும்போதெல்லாம்-
இந்த எரிச்சல் கிளம்பி விடுகிறது.

————

சாமியார்களைப் பற்றிய என்னுடைய கருத்தை மீண்டும் ஒரு முறை
சொல்வதற்கு முன்னர், நீண்ட நாட்களுக்கு முன்னர் சுஜாதா
அவர்கள் எழுதியிருந்த ஒரு கட்டுரையையும் இதில்
சேர்க்க வேண்டுமென்று நினைத்திருந்தேன்.

அது இங்கே –

ஒரு கேள்வி பதில் வடிவில் “சாமியார்கள்” குறித்து சுஜாதா
தன் கருத்தைக் கூறி இருந்தார். முதலில் அவரது கருத்து –

————

கேள்வி : ரமண மகரிஷி, ராமகிருஷ்ணர், சத்யசாயி பாபா,
ஓஷோ, மாதா அமிர்தானந்தமயி என்று எந்த ஆன்மீக
அமைப்பை எடுத்துக்கொண்டாலும் உலகெங்கும் கிளைகள்.
படிக்காத மற்றும் படித்த டாக்டர்கள், இஞ்சினீயர்கள்,
வெளிநாட்டவர்கள் போன்ற லட்ச கணக்கான மக்கள் கூட்டம்.
இதென்ன… மாஸ் ஹிஸ்டீரியாவா அல்லது
மாஸ் ஹிப்னாடிஸமா?

பதில்: இவை அனைத்துக்கும் ஆதாரமாக இருப்பது
Domino effect என்ற சங்கதி அருகருகே இருக்கும்
டாமினோக்களில் ஒன்றை தள்ளிவிட்டால் மற்றது தொடர்ந்து
விழுமே… சைக்கிள் ஸ்டாண்டில் கூட பார்த்திருப்பீர்கள்.
அந்த வகைதான் இந்த இயக்கங்கள் பிரபலமடைவதும்!
யாரோ ஒருத்தர் தனக்கு நிகழ்ந்த நல்லதைச்சொல்ல,
அவர் மற்றொருவருக்குச் சொல்ல… மெள்ள மெள்ள
அது தேச அளவுக்கு ஏன், உலகளவுக்கு விரிகிறது.

இவற்றின் ஆதாரமான இயக்கு சக்தி மனிதன்.
என்னதான் இஞ்சினீயரோ, டாக்டரோ, வெளி நாடோ, உள் நாடோ,
தன் பிறப்பு ‍ இறப்பைப் பற்றி தெளிவில்லாமல் இருப்பதும் –

மரணத்துக்குப் பின் என்ன? என்கிற கேள்வி ‍ பதில்
அளிக்காமலேயே இருப்பதும்தான். இந்த uncertainity –
நிச்சயமின்மை அவனை இம்சிக்கிறது. ஏதாவது ஆணியில்
தன் நம்பிக்கையை மாட்டிவைக்க விரும்புகிறான்.
முழுக்க முழுக்க பகுத்தறிவு வாதமும் ஏன் ஏன் என்கிற
முடிவில்லாத கேள்விகளும் அவனுக்கு பிடிக்கவில்லை.
ஓர் எல்லைக்கு பிறகு, கேள்வி கேட்காமல் நம்பவே
விரும்புகிறான். அந்த எல்லை ஆளுக்கு ஆள் மாறுபடும்.
ஓர் எளிய மனதுக்கு தெருக்கோடி பிள்ளையாரில் துவங்கி,
அண்ட சராசரங்களையும் பிரபஞ்ச விசைகளையும் ஆராய்ந்த

ஐன்ஸ்டைனுக்கு இறுதியில் God என்ற ஓர் எளிய வார்த்தை
தேவைப்பட்டிருக்கிறது. ஸ்டீபன் ஹாக்கின் போன்றவர்கள் கூட
Determinism பற்றி பேசும் போது. ஆரம்ப கணத்தில்
ஓர் எல்லையற்ற சக்தியைச் சொல்ல வேண்டியிருந்தது.

தெருக்கோடி பிள்ளையாரா இல்லை க்வாண்டம்
இயற்பியலா இடையில் எத்தனையோ… மகான்கள்.
எல்லோருக்கும் பகுத்தறிவுக்கான எல்லை உண்டு.

என்னைப் பொறுத்தவரை இந்த நம்பிக்கைகளால்
நல்லது நிகழும்வரை போனால் போகிறது நம்பிவிட்டுப்
போகட்டும் என்று விட்டு விட வேண்டியதுதான்.

————-

நான் இதை வேறு கோணத்தில் பார்க்கிறேன்.

இவர்களை மூன்று விதங்களில் பார்க்கலாம்.

ரமண மகரிஷி, காஞ்சி முனிவர் போன்றவர்களை எல்லாம்
இந்த சாமியார்களுடன் சேர்த்து பட்டியல் போடுவது தவறு.
அவர்கள் முழுக்க முழுக்க ஆன்மிகவாதிகள். மனிதர்களின்
மனதில் உள்ள ஆசா பாசங்களை போக்கி, தூய வாழ்வு
வாழ்ந்து – பக்தி மார்க்கத்தில் ஈடுபடுத்த முயற்சித்த
பெரியவர்கள் – நிஜமாகவே – சகலத்தையும் துறந்த சந்நியாசிகள்.

ராமகிருஷ்ணர் முற்றிலும் பக்தி மார்க்கத்தில் மூழ்கியவர்.

ஆனால், அவரது சீடரான விவேகானந்தரோ,
ஆன்மிக வளர்ச்சியை விட சமுதாய நலத்தை முக்கியமென்று
நினைத்தார்.

பல நூற்றாண்டுகளாக அடிமைத்தளையில் வீழ்ந்து
சிக்கி, சின்னாபின்னமாகி, சீரழிந்து கிடந்த இந்திய சமூகத்தை –
மீண்டும் அதன் உன்னத நிலைக்கு கொண்டு வர அரும்பாடு
பட்டவர். மக்கள் நல்ல கல்வியறிவும், உடல் ஆரோக்கியமும்
பெற வேண்டும் என்பதை முதல் நோக்கமாக கொண்டு
நாடு முழுவதும் தன் குருநாதர் ராமகிருஷ்ணரின் பெயரில்
கல்வி நிறுவனங்களையும், மருத்துவ மனைகளையும்
நிறுவினார். அந்த வழியில், ராமகிருஷ்ணா மடங்கள்
இன்றும் நாடெங்கும் கல்வித்துறையில்
அருமையான முறையில் தொண்டாற்றி வருகின்றன.

இந்த முதல் இரண்டு வகை “சாமியார்” களாலும்
சமுதாயத்தில் அளப்பரிய முன்னேற்றம் ஏற்படுகிறது.
மக்களிடையே மனவளர்ச்சியும், கல்வியறிவும், உடல்நலமும்
பல்வேறு சமூகத்தினரிடையே ஒற்றுமை உணர்வும் வளர
இவை உதவியிருக்கின்றன – இப்போதும் உதவுகின்றன.
இவை வரவேற்கப்பட, போற்றப்பட வேண்டிய விஷயம்….

——

ஆனால், தங்களது பேச்சாற்றல்,
பெரும் கூட்டத்தை திரட்டி தன்வசப்படுத்தும் ஆளுமை,
பெரிய அளவில் அடியார் கூட்டம் –

இவற்றைக் கொண்டு, தனித்தனியே கார்பொரேட்
நிறுவனங்களைப் போன்ற ஆசிரமங்களை உருவாக்கிக் கொண்டு
மேலும் மேலும் தங்கள் செல்வத்தையும், செல்வாக்கையும்
வளர்த்துக் கொள்வதை மட்டுமே முதல் நோக்கமாக
கொண்டு செயல்படும் “சாமியார்கள்” – மூன்றாம் வகையினர்.
இவர்களைக் கொண்டாடுவது – பெரும்பாலும் சமூகத்தின்
மேல்தட்டு மற்றும் நடுத்தட்டு மக்களே. அதற்கு காரணம்,
மேலே சுஜாதா அவர்கள் கூறியுள்ளவை தான்.

சுஜாதா அவர்கள் கூறியது போல் –

” இந்த நம்பிக்கைகளால் நல்லது நிகழும்வரை
போனால் போகிறது நம்பிவிட்டுப் போகட்டும்
என்று விட்டு விட வேண்டியதுதான் ” –

என்று சொல்லி விட்டு, கடந்து சென்று விட என் மனம்
ஒப்பவில்லை.

இத்தகைய சாமியார்களை எந்த விதத்திலும்,
நிஜமானவர்கள் என்று என்னால் ஏற்க முடியவில்லை.
தங்களது சுயநலத்திற்காக,
தங்களது சுயமுன்னேற்றத்திற்காக,
தங்களது செல்வத்தையும், செல்வாக்கையும்,
அடியார் திருக்கூட்டத்தையும் –
பெருக்கிக் கொள்வதற்காக,

இவர்கள் தங்களிடம் உள்ள “திறமை” களை ( skills )
பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
சுஜாதா அவர்கள் கூறியது போல் “பல்வேறு பலவீனங்களை
உடைய மக்களை ” இவர்கள் கவர்ந்திழுத்து தங்கள்
வசப்படுத்திக் கொள்கிறார்கள். “ஆன்மிகமா” “யோகாவா”
எதாக இருந்தாலும் சரி – இவர்களில் யாராவது
காசு வாங்காமல் மக்களுக்கு சேவை செய்கிறார்களா ?
எதையாவது கற்றுக் கொடுக்கிறார்களா ?

என்ன செய்தால் இவர்களை ஏற்றுக் கொள்ளலாம்….?
ஆறு மாதத்திற்கொரு தடவையாவது –

poor-1

poor-3

சமுதாயத்தின் அடித்தட்டு மக்கள் வாழும் சேரிகள்,
குடிசைகள், காலனிகள் இவற்றை ஒவ்வொன்றாக
தத்தெடுத்துக் கொண்டு, அங்கு குறைந்த பட்சம்
ஒரு மாதமாவது “முகாம்” இட்டு –
அந்த இடங்களை தூய்மைப்படுத்தி,
அந்த மக்களுக்கான அடிப்படை சுகாதார வசதிகளை
பாத்ரூம், நல்ல குடிதண்ணீர் வசதிகளை – ஏற்படுத்திக் கொடுத்து,
அங்குள்ள குழந்தைகளுக்கு, சிறுவர் சிறுமிகளுக்கு
அடிப்படைக் கல்விக்கான வசதிகளை உறுதிப்படுத்தி,
அவர்கள் உடல்நலனும், மனநலனும் மேம்பட
தேவையான “பயிற்சி” களையும் சொல்லிக் கொடுத்து விட்டு –

– பிறகு வழக்கம் போல் நடுத்தர, மேல்தட்டு மக்களிடம்
தங்களது வியாபாரத்தையும் தொடரட்டும் என்று –
விட்டு விடலாம்….!

( வேறு வழி …? )
பெரும்பான்மை மக்களின் கல்வி, சுகாதாரம், இருப்பிடம்,
வாழ்க்கை நிலை, மற்றும் அவர்களின் முன்னேற்றம் பற்றி
கவலை கொள்ளாத யாருக்கும் “சிறப்பு அந்தஸ்து ” கொடுக்க
மனம் மறுக்கிறதே…!

 

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized and tagged , , , , . Bookmark the permalink.