பொதுவாகவே நல்ல திரைப்பட பாடல்கள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும்… 8-9 வயதில் பிடித்துக்கொண்ட பழக்கம் இப்போதும் கூட தொடர்கிறது… நல்ல பாடல்களை கேட்க நேர்ந்தால், அப்படியே கொஞ்ச நேரம் நின்று ரசித்துவிட்டுத் தான் நகர்வேன். இப்போது அந்த வரிசையில், கர்நாடக மெல்லிசைப் பாடல்களும் சேர்ந்து கொண்டன.
நீண்ட காலம் வடக்கே இருந்ததால், தமிழைப்போலவே, ஹிந்தி திரையுலகமும் எனக்கு மிகவும் பரிச்சயம் தான். என் 8-10 வயதுகளில், நாங்கள் வசித்து வந்தது மஹாராஷ்டிராவில், புனாவிற்கு அருகே கர்க்கி என்கிற ஊரில். எனவே, அந்த சமயத்தில் எனக்கு ஹிந்தி படங்களை பார்க்கவும், ஹிந்தி பாடல்களை கேட்கவும் வாய்ப்புகள் அதிகமாக இருந்தன.
ரேடியோ அதிகமாக அறிமுகமாகாத காலம். நடுத்தர குடும்பங்களில் கூட ரேடியோ இல்லை; எனவே பாடல்களைக் கேட்க ஒரே வழி – ஓட்டல்கள், டீக்கடைகள் தான். 8-10 வயதுகளில் நான் கேட்ட பெரும்பாலான பாடல்கள் கர்க்கியில் இருந்த 2 பெரிய ஈரானி ஓட்டல்களின் வெளியே வாயிலருகே, பக்கத்தில் நின்றுகொண்டு கேட்டவை தான். என்னுடன் என் வயதையொத்த ஒன்றிரண்டு நண்பர்களும் இருப்பார்கள். ஒருவன் பெயர் ஆனந்த் ராவ், மற்றொருவன் கெய்க்வாட்…!!!(இது மட்டும் இன்னமும் நினைவிருக்கிறது…!)
இந்த ஓட்டல்களில் வெளியே சிறியதாக ஸ்பீக்கர் வைத்திருப்பார்கள். எனவே வெளியிலிருந்து வசதியாக கேட்கலாம். பாடல்களைக் கேட்பதற்காகவே நிறையபேர் அந்த மாதிரி ஓட்டல்களுக்கு வருவார்கள். எப்போதாவது கையில் காசு இருந்தால், ( ஒரு டீ -ஒரணா…) உள்ளே சென்று அரைமணிநேரமாவது அமர்ந்தும் கேட்போம்.
அப்போதெல்லாம் திரைப்பட பாடல்கள் என்றால் ரேடியோ சிலோன் மட்டும் தான். ஆல் இண்டியா ரேடியோ – தன்னை மிகவும் ஆசாரமாகவும் – திரைப்படங்களையும், திரைப்பட பாடல்களையும் “தீட்டு” என்றும் கருதி அவற்றை ஒதுக்கியே வைத்திருந்தது. ஹார்மோனியத்தையே தடைசெய்திருந்தார்கள் – உள்ளே கூட விட மாட்டார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்…!!!
இனி போகப்போக இந்த தலைப்பில் நான் பதிவிடும் இடுகைகளில், என் நினைவில் இன்னமும் இருக்கும் மிச்ச-சொச்ச அனுபவங்களையும் பகிர்ந்து கொள்கிறேன்…
இதில் துவக்கமாக – ஒரு இறைவாழ்த்துப் பாடல்.
“தூ ப்யார் கா சாகர் ஹை” ( இறைவனே நீ அன்பின் சாகரம்… கருணைக்கடல்….)
இந்த காட்சியில் தோன்றுபவர்களில் – முக்கியமானவர்கள் ஹிந்தி உலகின் அற்புதமான குணசித்திர நடிகரான பால்ராஜ் சஹானியும், நூடனும்… பால்ராஜ் சஹானி ஒரு ஆதரவற்றோர் இல்லத்தை நடத்தி வருகிறார். அங்கே நூடன், மனச்சிதைவு ஏற்பட்ட நிலையில், தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டிருக்கிறார். அவர் குணம் பெற வேண்டுமென்று இறைவனை வேண்டி ஆசிரமவாசிகள் பாடுகிறார்கள்.
படத்தின் பெயர் “சீமா” -இந்தப்படம் வெளியானது 1955-ஆம் ஆண்டு…..
பாடலை இயற்றியவர் – ஷைலேந்திரா இசையமைப்பு – ஷங்கர்-ஜெய்கிஷன் பாடியவர் – புகழ்பெற்ற பாடகர் மன்னா டே
கொஞ்சம் வித்தியாசமாக, இந்தப்பாடல் வீடியோவின் இறுதியில் இவர்கள் அனைவரின் புகைப்படங்களும் தோன்றுகின்றன.
இனி இந்த தலைப்பின் துவக்க பாடல் –
……………
……………
நேரம் கிடைக்கும்போதெல்லாம் இந்த தலைப்பில் நிறைய எழுதலாமென்று இருக்கிறேன். எனக்குப் பிடித்து, நான் ரசித்து எழுதக்கூடிய ஒரு தொடர்…..!!!
.
——————————————————————————————————–