பல வருடங்களுக்கு முன் “சோ” எழுதிய நகைச்சுவை கட்டுரையொன்று…!!!

choramasawamy-

எவ்வளவோ பேர் தினமும் தியானம் செய்வதாகக் கூறுகிறார்களே, நாமும்தான் செய்து பார்ப்போமே என்ற நல்லெண்ணம் ஒரு நாள் திடீரென்று எழுந்தது.

கூடவே, ‘உன்னால் முடியுமா…?’ என்று உள் மனம் கேள்வி கேட்டது.

‘அதிகமில்லை ஜென்டில்மேன்!- ஜஸ்ட் ஐந்தே நிமிடம் பண்ணித்தான் பார்க்கறேனே… என்று அதற்குச் சவால் விட்டு விட்டுக் காரியத்தில் இறங்கினேன்.

கண்கள் திறந்திருந்தால், கண் வழியே மனம் சென்று விடுகிறது. எனவே, கண்களை இறுக மூடிக்கொண்டு மனத்தைக் கட்டிப் போட்டேன். சனியனே! எங்கும் நகராதே. இங்கேயே நில்.

“மாநில செய்திகள் வாசிப்பது ஜெயாபாலாஜி. சட்டசபையில் நேற்று மீண்டும் அமளி ஏற்பட்டது. மத்திய அரசின் மீது முதல்வர் புகார் கூறியிருக்கிறார்…”

“அட சட்! கமலா அந்த ரேடியோவைக் கொஞ்சம் ஆஃப் பண்ணேன்.

ஒரே நியூஸை எத்தனை வருஷமாகக் கேக்கறது? ஒரு அஞ்சு நிமிஷமாவது தியானம் பண்ண விடு!”

ரேடியோ அணைக்கப்பட்டது. ஏன் கடவுள் காதுகளுக்குக் கதவு வைக்கவில்லை? உஸ்ஸ்… மனக் குரங்கே தேவையற்ற சிந்தனை வேண்டாம்.

ஒழுங்காகத் தியானம் செய்.

அமைதி. மின் விசிறியின் சப்தம் மட்டும்தான் கேட்கிறது. வாங்கிப் பத்து வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. மாற்ற வேண்டும். ஐந்நூறு ரூபாயாவது ஆகும்.

தியானம்… தியானம்… எங்கேயோ போகுதே.

கமலா வெங்காய சாம்பார் வைக்கிறாள் போலிருக்கிறது.  சூடாக இட்லியும் இருந்தால் நன்றாக இருக்கும்.                                        

சீ ! தியானம் செய்யும் போது இட்லி சாம்பாரைப் பற்றி என்ன நினைப்பு! இந்த அல்பமான மனத்தை வைத்துக் கொண்டு எப்படி நான் மகானாவது?

தியானம் செய்வது ஒன்றும் கஷ்டமான காரியம் இல்லை.அந்தக் காலத்தில் விஸ்வாமித்திரர் நூற்றுக் கணக்கான வருடங்கள் தவம் செய்திருக்கிறாரே. அவரால் எப்படி முடிந்தது.

பசியே எடுத்திருக்காதா?                                 

மனம் தவம் செய்தாலும் வயிறு சும்மா இருந்திருக்குமா? தவத்தைக் கெடுத்திருக்குமே! மடையா! முனிவருக்கும் உனக்கும் வித்தியாசம் இல்லை?

நீ ஐந்து நிமிடங்கள் மனத்தைக் கட்டுப்படுத்தினால் ஐம்பது வருடங்கள் தவம் செய்ததற்குச் சமம். எதைப் பற்றியும் நினைக்காதே. தியானம் செய்.

“ஸார் தியானம் பண்றார் போலிருக்கு. சரி, நான் அப்புறம் வரேன்!”

எதிர்வீட்டு ஆசாமியின் குரல் கேட்டது.

“இருங்க, பேப்பர்தானே? நான் எடுத்துத் தரேன்.

ஏங்க?… கொஞ்சம் எழுந்திருங்களேன். பேப்பர் மேலே உட்கார்ந்து  தியானம் பண்றீங்களே?”

கண்களைத் திறக்காமலேயே நகர்ந்து கொண்டேன்.

திறந்தால் தியானம் கெட்டுவிடும். கமலா பேப்பரை எடுத்து அவரிடம் கொடுத்து அனுப்பினாள்.

நானே இன்னும் பேப்பர் படிக்கவில்லை. லீவு நாள்தானே,

தியானத்தை முடித்து விட்டுச் சாவகாசமாகப் படிக்கலாம் என்றிருந்தேன். அதற்குள் பேப்பரைப் பிடுங்கிக் கொண்டு போய் விட்டான் அந்த ஆள். சரி சரி… மனத்தைத் திருப்பு. தியான மார்க்கத்தில் போ.

தியானம் செய்தால் மனம் அமைதி பெறும்.

‘அமைதியான நதியினிலே ஓடம்…’ அருமையான பாட்டு.

சிவாஜி என்னமாய் நடித்திருந்தார்? அநாவசியமாய் அரசியலில் நுழைந்து வேண்டாத மனக் கஷ்டங்களை ஏற்படுத்திக் கொண்டார். சிவாஜி கணேசன் இல்லாத திரை உலகம் என்னவோ போலிருக்கிறது. ஏன் அவர் ஒரு படத்தை டைரக்ட் செய்யக்கூடாது? அடாடா தியானத்தை விட்டு விலகி விட்டோமே.

மனமே… ஏன் இப்படிச் சோதிக்கிறாய்?  அலையாமல் ஒரு இடத்தில் நில்லேன்!

ரமண மஹரிஷி மயக்க மருந்து போட்டுக் கொள்ளாமலேயே ஆபரேஷன் செய்து கொண்டாராம். அது அந்தக் காலம்.

இப்போது, மாத்திரை போட்டுக் கொண்டால்தான் பலருக்குத் தூக்கமே வருகிறது. உடல் வலியை உணராமல் இருக்க ரமணரால் மட்டும் எப்படி முடிந்தது?

உடல் வேறு, மனம் வேறு என்றால், உடல் அழிந்த பிறகு மனம் என்ன ஆகிறது, எங்கே போகிறது?

அடடச்சீ ! நமக்கு எதற்கு இந்த தத்துவ விசாரம்?

கமலாவுக்கும் அம்மாவுக்கும் நடக்கிற சண்டைகளுக்கே தீர்வு சொல்ல முடியாத நமக்கு இவ்வளவு பெரிய தத்துவங்கள் எல்லாம் எப்படிப் புரியும்? போதும் மனமே சும்மா இரு- ப்ளீஸ்… கொஞ்சம் ஒத்துழையேன்.

தியானம் முடிந்த பிறகு எதைப் பற்றி வேண்டுமானாலும் நினை. அலைபாய்ந்து கழுத்தறுக்காதே.

‘அலை பாயுதே கண்ணா…!  என் மனம் அலை பாயுதே..!’

கமலாவைப் பெண் பார்க்கப் போனபோது அவள் இந்தப் பாட்டைத்தான் பாடினாள். அப்படியும் நான் அவளையே கல்யாணம் செய்து கொண்டுவிட்டேன். ஒரு பாட்டுக்காக ஒரு பெண்ணை நிராகரிப்பது எனக்குச் சரியானதாகப்  படவில்லை.

அட, அடங்காப்பிடாரி மனமே! ஏன் இப்படி சண்டித்தனம் செய்கிறாய்?

ஒரு ஐந்து நிமிடம் அசையாமல் இரு. அப்புறம் எங்கே வேண்டுமானாலும் போய்த் தொலை.

இப்போதுதான் புரிகிறது. மனம் என்பது விலைவாசி மாதிரி. யாராலும் கட்டுப்படுத்த முடியாதது. தறிகெட்டு செல்லக் கூடியது. அதன் இஷ்டத்திற்கு விட்டு விட வேண்டியதுதான்.

ஆட்சிக்கு வருபவர்கள் அப்படித்தான் செயல்படுகிறார்கள். அதுதான் மரபு.

முடியாது. என்னுடைய மனம் என் பேச்சைக் கேட்க மறுப்பதா? எவ்வளவு நேரமானாலும் சரி,

ஒரு நிமிடமாவது மனத்தை அடக்காமல் விடுவதில்லை.

அட்டென்ஷன். பல்லைக் கடித்து மனத்தை நிறுத்தினேன்.

ஆபீஸரின் முகம் தேவையில்லாமல் நினைவுக்கு வந்தது. இந்த ஆள் இங்கே ஏன் வருகிறார்? போய்யா…

நாளைக்கு ஆபீஸுக்கு வந்து பார்த்துக் கொள்கிறேன். லீவு நாள்லகூட முகம் காட்டி எரிச்சலூட்டாதே!

திடீரென்று நான் என்னை மறக்க ஆரம்பித்தேன்

ஓஹோ…இதுதான் தியானமா?

எவ்வளவு நேரம் அப்படி இருந்தேனோ தெரியவில்லை.

யாரோ என்னை உலுக்கி எழுப்பினார்கள். கமலாதான்.

“ஏங்க… எழுந்திருங்க! தியானம் பண்ணும்போது

குறட்டை என்ன குறட்டை?”  !!!!

.

———————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , . Bookmark the permalink.

4 Responses to பல வருடங்களுக்கு முன் “சோ” எழுதிய நகைச்சுவை கட்டுரையொன்று…!!!

  1. புதியவன் சொல்கிறார்:

    கா.மை.சார்…. இதையும் நான் நேற்றோ அல்லது அதற்கு முந்தைய நாளோ வாட்சப்பில் படித்தேன். அந்த க்ரூப்பில், ‘கமலா’ என்று இந்தக் கட்டுரையில் இருப்பதால் இதனை எழுத்தாளர் அகஸ்தியன் என்ற கடுகு எழுதியிருப்பார் என்ற சந்தேகம் வந்தது. இல்லை என்றால் பாக்கியம் ராமசாமி எழுதியிருக்கவேண்டும் என்று சொல்லியிருந்தனர். யாரும் துக்ளக் ஆசிரியர் சோ எழுதினது என்று சொல்லவில்லை. நான் எழுத்தாளர் கடுகு உறவினரிடம் செக் பண்ணி, இதனை எழுதியது கடுகு இல்லை என்று சொன்னேன். சோ எழுதியதா இது.. நன்றாக இருக்கிறது…. நிற்க…

    தியானம் என்பது சொல்ல சுலபம்…. நடைமுறையில் மனதைக் கட்டுப்படுத்துவது மிகக் கடினம். அதற்கான மிகச் சுலபமான வழியாக, மனதை ஒரே பொருளில் திருப்பச் சொல்கிறார்கள், அதாவது நம் மூச்சு எப்படி உள்வந்து செல்கிறது என்பதை. இன்னும் சிலர், அப்படி மனம் மூச்சில் நிலைபெற்றிருக்கும்போது கண் புருவத்தை நோக்கி இருக்கணும் என்கிறார்கள்.

    என்னுடைய யோகா மாஸ்டர் சொல்லித் தந்த பிறகு, நான் தியானத்தில் உட்கார ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் அரை மணி வருவதற்குள் கால் கஷ்டம் கொடுத்தது. கொஞ்சம் கொஞ்சமாக 3/4 மணி நேரத்திற்கு மேல் உட்கார முடிந்தது. மனது அலைபாயவிடாமல் கஷ்டப்பட்டாலும், டக் டக் என்று மனது எங்கெங்கோ போய்விடும். பிரயாணம், வேலை என்று வரும்போது குறைந்தபட்சம் 1/4 மணி நேரமாவது தியானத்தில் உட்காருவேன். யோகா மாஸ்டர் சொன்னதுபோல எந்த ஒளியும் தெரியவில்லை, ஸ்பெஷல் உணர்வும் அடையவில்லை. யோகா மாஸ்டர் சொன்னார், இதுதான் பாதை…தொடர்ந்து செல்… எப்போது வாய்க்கும் என்பது உன்னிடம்தான் இருக்கு. இந்த ஜென்மமோ இல்லை அடுத்ததுலயோ இல்லை பலப் பல ஜென்மங்கள் கழித்தோ என்பது தெரியாது..ஆனால் இதுதான் பாதை என்றார். 3 வருடங்கள் செய்ததில், ஒரு சில சக்கரங்களில் உணர்வு வருவது தெரியும் என்னவோ சட் என்று தியானம் பழகுவது நின்றுபோய்விட்டது. எப்போதாவதுதான் உட்கார முயல்கிறேன்.

  2. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    புதியவன்,

    உலகம் ஏற்கெனவே மிகவும் சுருங்கி விட்டது.
    அதை வாட்சப் மேலும் சுருக்கி விட்டது.
    கிட்டத்தட்ட எல்லா மெசேஜுகளும் எல்லாரையும்
    சென்றடைந்து விடுகின்றன. நான் எந்த வாட்சப்
    க்ரூப்பிலும் இல்லை; இருந்தாலும் தனிப்பட்ட
    முறையில் சில நண்பர்கள் அனுப்புகிறார்கள்…!!!

    தியானம் குறித்து உங்கள் அனுபவங்களைச்
    சொல்லி இருக்கிறீர்கள்…. அவை ஒவ்வொருவருக்கும்
    ஒவ்வொரு மாதிரி அமையும்… எனக்கு சிறந்ததாகப்
    பட்டது – கண்களை மூடிக்கொண்டு அமைதியாக
    தொடர்ந்து மூச்சை கவனிப்பது.

    என் சொந்த அனுபவத்தில்
    ஒரு ஆலோசனை சொல்வேன். தியானம் செய்யும்போது,
    ஆசான்கள் சொல்லிக்கொடுப்பது போன்ற
    posture -ல் தான் உட்கார வேண்டும் என்பது
    அவசியமில்லை. நமக்கு எப்படி உட்கார்ந்தால்
    சௌகரியமாக உணர்கிறோமோ அப்படி உட்கார்ந்தால்
    போதுமானது. இல்லையென்றால் மனம் உடல் வலியிலேயே
    செல்லும்.

    .
    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

  3. விவேகன் சொல்கிறார்:

    அய்யா
    நீங்கள் கூறுவது சரியானது. ஆனால் நமக்கு தியானத்தை கற்று கொடுப்பவர்கள் அதை ஏதோ மிகவும் புனிதமானது போன்று கற்று கொடுக்க முயலுகிறாரகள். காலையில் எழுந்த வுடன், காலை கடன்களை எல்லாம் முடித்து விட்ட பின்னர் , குளித்து பிறகு புத்துணர்ச்சியுடன் அமர்ந்து தியானம் செய்ய சொல்லுகிர்ரகள். உண்மையில் இது போன்று நம்மை புத்துணர்ச்சி அடைந்த நிலையில் தியானம் செய்தால், மனம் நிச்சயம் அடங்காது. அதற்கு பதிலாக, காலையில் நாம் படுக்கையை விட்டு எழுந்த உடனேயே, ஒருவித தூக்க கலக்கத்தில் நாம் உள்ள நிலையிலேயே, நாம் வசதியாக சாய்ந்து அமர்ந்து கொண்டு, கண்களை மூடிக்கொண்டாலே தூக்க கலக்கத்தில் உள்ள மனது மேற்கொண்டு சிந்திக்காமல் நமக்கு உடதவி புரியும்.இது எனது அனுபவம்.

    • புதியவன் சொல்கிறார்:

      1. எழுந்த உடனே தியானம் செய்யலாம் (படுக்கையிலேயே)
      2. வயிறு சுத்தம் ஆனபிறகு செய்யலாம் (இதுல நமக்கு முதுகு நேராக உட்காருவது சௌகரியமாக இருக்கும். (அதிகாலைல)
      3. மதியம் 3-4 மணிக்கு, வெறும் வயிற்றில் இருக்கும்போதும் தியானத்துக்கு உட்காரலாம்.

      நான், விமானப் பயணத்தின்போதும், சுகாசனத்தில்/அர்த் பத்மாசனத்தில் இல்லாவிடினும், செய்வேன். ஆனால் அப்போது பெரும்பாலும் தூங்கிவிடுகிறேனோ என்றும் சந்தேகம் வந்துவிடும்.

      /மிகவும் புனிதமானது போன்று// – எந்தக் கலையும் புனிதமானதுதான். அததற்குரிய புனிதத்தை நாம் maintain செய்யணும். கழிவறையிலும் (இப்போல்லாம் வெஸ்டர்ன்..சுத்தமான பாத்ரூம்) நாம் புத்தகம் படிக்கலாம், அது பக்திப் புத்தகமாகவும் இருக்கலாம். ஆனாலும் எதை எப்படிச் செய்யணும் என்பது இருக்கு என்பதால் இந்த மாதிரி கொஞ்சம் ‘புனிதப்’படுத்துகிறார்கள் என்பதுதான் என் எண்ணம். உடையும் சௌகரியமாக இருக்கணும். தியானத்துக்கும் பக்திக்கும் சம்பந்தம் இல்லை. சிலர் கண்ணைத் திறந்துகொண்டும் தியானம் செய்வார்கள், கடல் நீர்/அலைகளைப் பார்த்துக்கொண்டும் செய்யலாம். சிவலிங்கத்தைப் பார்த்துக்கொண்டும் செய்யலாம். மனம் ஒருமுகப்படணும். அவ்வளவுதான் விஷயம்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.