ஒரு கொலைவழக்கை – இதைவிட மோசமாக குழப்ப முடியுமா…?

….

ramajayam-case

Ramajeyam

திருச்சியைச் சேர்ந்த திமுக முன்னாள் அமைச்சர் நேருவின்
தம்பி ராமஜெயம் …. ராமஜெயம் ஒரு தொழிலதிபர்,
ரியல் எஸ்டேட் அதிபர், பஸ் கம்பெனி நிறுவனர், முக்கியமான
அமைச்சரின் சகோதரர் என்று பல முகங்களில் அறியப்பட்டவர்.
2012-ல் அவர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டு,
அவரது உடல் கொள்ளிடக்கரையில் கண்டெடுக்கப்பட்டது.

பல நிபுணர் குழுக்களாலும், பல ஏஜென்சிகளாலும்,

இதுவரைபலமுறை வித்தியாசமான கோணங்களில் விசாரிக்கப்பட்டும்,
இந்த கொலைக்கான மர்ம முடிச்சு இதுவரை
அவிழ்க்கப்படவில்லை.

நக்கீரன் இதுகுறித்து ஒரு கதை வெளியிட்டுள்ளது.
விசாரணக் குழுக்களுடன் – பக்கத்தில் இருந்து பார்த்தது போலவும்

கூடவே இருந்து கேட்டது போலவும் பல விஷயங்களை
சொல்லி படிப்பவர்களை குழப்போ குழப்பென்று குழப்பி
இருக்கிறது. படித்து முடித்தபின், வாசகர்கள் எந்தவித
முடிவுக்கும் வந்துவிடக்கூடாது என்கிற விஷயத்தில் மட்டும்
எழுதியவர்கள் மிகத்தெளிவாக இருக்கிறார்கள்….

கதையை கீழே தந்திருக்கிறேன்….
உங்களுக்கு இறுதியாக எதாவது புரிந்தால் எனக்கும்
சொல்லுங்களேன்.

………………………………………………………

ராமஜெயம் கொலையில் சசிகலா? –
உடையும் உண்மைகள்…

முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் எப்படிகொல்லப்பட்டார் என்பதை ஆரம்பத்தில் திருச்சி மாநகர
போலீசார் ஆராய்ந்தனர். அடுத்ததாக சி.பி.சி.ஐ.டி. ஆராய்ந்தது.தற்பொழுது சி.பி.ஐ. ஆராய்ந்து கொண்டிருக்கிறது.

போலீசும் சி.பி.சி.ஐ.டி.யும் ஆராய்ந்தபோதெல்லாம் ஒரு பெரிய
தடை இருந்தது. சி.பி.ஐ.க்கு அந்த தடை எதுவும் இல்லாததால்ராமஜெயம் ஏன் கொல்லப்பட்டார், அவரை கொலை செய்தது
யார் என்பது பற்றிய தெளிவான விவரங்கள் கிடைத்துள்ளனஎன்கிறார்கள் சி.பி.ஐ. அதிகாரிகள்.

ராமஜெயம் கொல்லப்பட்டபோது அவரது உறுப்பு அறுக்கப்பட்டு,
வாயில் திணிக்கப்பட்ட கொடூர நிலையில் காணப்பட்டது.
28.03.2012ம் தேதி அதிகாலை ராமஜெயம் கடத்தப்பட்டார்.
ஆனால் அவரை அதிகாலைக்கு முன்பே பார்த்ததாக நீதிபதி
மணி என்பவர் சாட்சியமளித்தார். ராமஜெயத்துக்கு வேறு
தொடர்புகள் இருந்ததுதான் கொலைக்குக் காரணம் என
அவரது இறந்த உடல் கிடந்த ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்த
போலீஸ் அதிகாரி ஜெயச்சந்திரன் என்பவர் வாக்குமூலம் தரமுயன்றபோது, “இல்லை அது பொய், திசைதிருப்பும் செயல்’
என வாதாடினார்கள் ராமஜெயத்தின் உறவினர்கள்.

முட்டை ரவி என்கிற பிரபல ரவுடி என்கவுன்ட்டர் செய்து கொல்லப்பட்டான். அவனது சாவுக்கு ராமஜெயம்தான் காரணம்
என பேசப்பட்டது. முட்டை ரவியின் நண்பரான ரவுடி
சாமிரவியை கோடிலிங்கம் என்கிற ஆய்வாளர் பிடித்தார்.
சாமிரவிக்கும் ராமஜெயம் கொலைக்கும் ஏதாவது தொடர்பு
உண்டா என அவர் விசாரித்தார். வழக்கமாக கொலைவழக்கில்

தொடர்புடைய ரவுடியை பிடித்தால், போலீசார் அடித்து
கை, கால்களை உடைப்பார்கள். “அப்படி எதுவும்
செய்யக்கூடாது’ என கோடிலிங்கத்திடம் தமிழகம்
முழுவதுமிருந்து போலீஸ் அதிகாரிகள் பேசினார்கள். அதில்

முக்கியமானவர் ஜெயச்சந்திரன். அவர் சொல்வதை
கோடிலிங்கத்தால் மறுக்க முடியவில்லை. அதற்கொரு
வலுவான காரணம் இருந்தது. சாமிரவியும் ஜெயச்சந்திரனும்
ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அத்துடன் சசிகலாவின்
சொந்த தம்பியான திவாகரனின் சம்பந்தி இந்த ஜெயச்சந்திரன்.

“”ராமஜெயம் கொலை செய்யப்பட்டபோது நான் திருப்பதியில்
இருந்தேன்” என வாக்குமூலம் கொடுத்துவிட்டு போன சாமிரவி,
நேராக பயணித்த இடம் அமெரிக்கா.

சாமிரவியை இந்த வழக்கை விசாரிக்கும் சி.பி.ஐ. சமீபத்தில்
பிடித்து விசாரித்தது. அவர்களிடம், “”எனக்கும் ராமஜெயம்
கொலைக்கும் எந்தத் தொடர்புமில்லை” என லோக்கல்
போலீசிடமும் சி.பி.சி.ஐ.டி. விசாரணையிலும் சொன்னதையே

கிளிப்பிள்ளை போல சொல்லிவிட்டுப் போன சாமிரவியை
விடாமல் கண்காணித்தது சி.பி.ஐ. சாமிரவியிடம் உள்ள
பழக்கங்களில் ஒன்று எந்த “வேலை’ செய்தாலும் அதற்கான

கூலிப்படையை மதுரை மற்றும் திருநெல்வேலி, தூத்துக்குடி பகுதிகளிலுள்ள அடியாட்கள் மூலம்தான் செய்வான்.

இரண்டு முறை ராமஜெயத்தைக் கொல்ல சதி நடந்திருக்கிறது.

தென்மாவட்டங்களில் தீட்டப்பட்ட அந்தத் திட்டத்தை அறிந்த
ராமஜெயம், கார்களை மாற்றி பயணம் செய்து கொலைச்சதியில்
இருந்து தப்பினார். ராமஜெயத்தைக் கொல்ல தென்மாவட்டத்தை மையமாக வைத்து ஒரு கும்பல் சதி செய்ததை சி.பி.ஐ.கண்டுபிடித்திருக்கிறது. சாமிரவியின் தென்மாவட்ட
தொடர்புகளில் முதல் இடம் பெறுவது விளாத்திகுளம்
முன்னாள் எம்.எல்.ஏ. ரவிசங்கர். அவரது தம்பி இளஞ்செழியன்,

மூன்றாவதாக ரவிசங்கரின் பி.ஏ.வான சூரங்குடி கிராமம்
விளாத்திகுளம் தாலுகாவைச் சேர்ந்த குமார சக்கனாபுரம்
சேகர் ஆகியோர்.

1996-ல் வைகோவை 634 வாக்குகளில் தோற்கடித்து
எம்.எல்.ஏ.வாகி அனைவரின் கவனத்தையும் கவர்ந்தார்
சென்னையில் குவாரி தொழில் செய்து வந்த ரவிசங்கர்.
எம்.எல்.ஏ. பதவி முடிந்ததும் முழு நேர குற்ற தொழிலில்
ஈடுபடத் தொடங்கினார். வருமான வரித்துறை அதிகாரி
போல நடித்து கொள்ளையடிப்பது, இலங்கைக்கு போதைப்
பொருள் கடத்துவது என ஏகப்பட்ட குற்றங்களில் ஈடுபட்ட
ரவிசங்கரை 2003-ல் கிலோ கணக்கில் ஹெராயினுடன்
கைது செய்தது காவல்துறை. ரவிசங்கரும் அவரது தம்பி இளஞ்செழியனும் போதைப் பொருள் கடத்தலுக்கும்
ஆயுத கடத்தலுக்கும் புகழ்பெற்றவர்கள், இந்தியாவுக்கும்
இலங்கைக்கும் இடையே பறந்து கொண்டிருப்பவர்கள்.

ரவிசங்கர் ராமஜெயத்தின் சமுதாயத்தைச் சேர்ந்தவர்.
இவருக்கு உதவியாளராக இருந்த சேகர் சாமிரவியின்
சமூகத்தைச் சேர்ந்தவர். இவரும் கடத்தலுக்கு புகழ் பெற்றவர்.
“இரண்டு கப்பல் இருக்கு. விற்கணும்’ என்பதுதான் இவரது
லேட்டஸ்ட் டயலாக். சேகர் மதுரை கீரைத்துறையைச் சேர்ந்த
தனது சமூகத்து அடியாட்களுடன் மிகவும் நெருக்கம்.
மதுரை தி.மு.க. பிரமுகர் பொட்டு சுரேஷை போட்டுத்
தள்ளியதில் இவர்கள் மீது போலீசின் கண்கள் பதிந்துள்ளன.

இவர்களுக்கு நெருக்கமான டேனியல் என்பவர் தயாரித்த வெடிகுண்டுகள்தான் அத்வானி ரதயாத்திரை நடத்தியபோதும் பெங்களூரு நகரில் ஒரு இடத்திலும் வைக்கப்பட்டன.

தென்மாவட்டங்களில் நடக்கும் அனைத்து குற்ற நிகழ்வுகள்
பற்றிய விவரங்களை அறிந்த சேகரை சந்தித்த சாமிரவி,
ராமஜெயம் கொலையைப் பற்றி அவனிடம் விவாதித்தான்.
இதைப் பற்றி தனக்கு நெருக்கமானவர்களிடம் பேசிக்
கொண்டிருந்த சேகரின் வாயிலிருந்து வந்த வார்த்தைகளை
உளவுத் தகவல்கள் மூலம் உறுதி செய்திருக்கிறது சி.பி.ஐ.

ராமஜெயத்தின் இந்தோனேஷியா நிலக்கரி சுரங்க வியாபார விவகாரத்தில் அவரது அண்ணன் நேருவுக்கும் மாற்றுக்
கருத்து இருந்துள்ளது. இதுபற்றி நிலக்கரி தொழில்
தொடர்பான கன்சல்ட்டிங் வேலைகளை செய்து கொண்டிருந்த பத்திரிகையாளரிடம் நேரு தெரிவித்திருந்தார். ஆனால்
ராமஜெயம் இந்தோனேஷியாவில் நிலக்கரி சுரங்கம்
வாங்குவதில் மிகவும் சீரியஸாக இருந்தார்.

ராமஜெயம் மற்றும் நடிகர் நெப்போலியனின் அண்ணன்
திவாகரன் ஆகியோர் சேர்ந்து முதலில் இந்தோனேஷியாவில்
வசிக்கும் சிந்தி இனத்தைச் சேர்ந்தவர்கள் சுரங்கத்தை
வாங்கினார்கள். அங்கிருந்து 60 கி.மீ. தூரம் ஆற்றில்
நிலக்கரியை கொண்டு வர வேண்டும் என்பதால்
அடுத்தகட்டமாக சுமத்ரா தீவில் ஜாம்பி என்ற இடத்தில்
இன்னொரு சுரங்கத்தை வாங்கினார். முதலில் வாங்கிய
சுரங்கத்தின் உரிமையாளரான சிந்தி இனத்தைச் சேர்ந்தவரின்
மனைவி நிலக்கரி வணிகத்தில் மிக திறமையானவர்.
தமிழ்நாடு, ஆந்திரா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில்
உள்ள மின்சார வாரியங்கள், மத்திய அரசு நிறுவனமான
எம்.எம்.டி.சி. என்கிற கம்பெனி மூலம் இந்தோனேஷியாவில்
இருந்து நிலக்கரி இறக்குமதி செய்யும். அதில்
இந்தோனேஷியாவில் இருந்து குறைந்த விலைக்கு
வாங்கிவிட்டு, அதிக விலைக்கு வாங்கியதாக கணக்கு காட்டி
கொள்ளை அடிப்பது வழக்கம். அதனால்தான் அ.தி.மு.க.
ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக இருந்த நத்தம்
விஸ்வநாதன் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருடன்
நிலக்கரி குவாரிகளை தனது மகன் அமரை வைத்து வாங்கி இன்றளவிலும் நிர்வாகம் செய்து வருகிறார்.

இந்தத் தொழில் போட்டியில் தி.மு.க.வைச் சேர்ந்த
ராமஜெயமும் அ.தி.மு.க.வை சேர்ந்தவர்களும் மோதினார்கள்.
இதில் தமிழக மின்சார வாரியத்திற்கு கொண்டு வரப்படும்
நிலக்கரி வியாபாரத்தில் சசிகலாவுக்கும் ராமஜெயத்திற்கும்
மோதல் ஏற்பட்டது. ஜெ.வுக்கும் 2011-ல் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்ட நேரத்திலிருந்தே ராமஜெயம் மீது கடும் கோபம்.
அதனால் சசிகலா, ஜெ.வை திருப்திப்படுத்தும் வகையில்
செயல்பட விரும்பினார் என சாமிரவி, ரவிசங்கரின்
பி.ஏ.வான சேகரிடம் சொன்னார் என சேகர் தனக்கு நெருக்கமானவர்களிடம் சொன்னதை மோப்பம்
பிடித்திருக்கிறது சி.பி.ஐ.

2011 டிசம்பர் மாதம் போயஸ் கார்டனை விட்டு
வெளியேற்றப்பட்டு, 2012 ஏப்ரல் மாதம் போயஸ் கார்டனுக்கு
திரும்பி வந்த சசிகலா, தன் மீதான நம்பிக்கையை
அதிகப்படுத்தும் விதத்தில் ஜெ.வுக்கு பிடிக்காத ராமஜெயத்தின்
மீது கவனத்தைத் தீவிரமாகத் திருப்பினார். சசிகலா தம்பி
திவாகரனுக்கு அசைன்மெண்ட் கொடுத்துள்ளார். திவாகரன்
அந்த வேலையை டி.எஸ்.பி.யாக இருந்த தனது சம்பந்தியான
டி.எஸ்.பி. ஜெயச்சந்திரனிடம் கொடுத்தார். ஜெயச்சந்திரனோ,
தனது நண்பர் முட்டை ரவியை கொன்றதற்கு காரணம்
ராமஜெயம் என நம்பிக் கொண்டிருந்த சாமிரவியிடம்
ஒப்படைத்தார். சாமி ரவி அந்த வேலைக்கு உதவ
ரவிசங்கரின் உதவியாளரான சேகரை அணுக, மதுரை

கீரைப்பாளையத்தைச் சேர்ந்தவர்கள் மூலமாக ராமஜெயம் கொல்லப்படுகிறார். இதற்கு இன்னொரு காரணமும்
இருக்கிறது. திவாகரன், நடராஜன் ஆகியோருக்கு நெருக்கமாக
இருந்த ராமஜெயம் அ.தி.மு.க. ஆட்சி வந்தால் தன் மீதும்
தன் அண்ணன் மீதும் வழக்குப் போடக்கூடாது என டீல்
செய்திருக்கிறார். ஆனால் அதற்கு நேர்மாறாக, ஜெ. ஆட்சிக்கு
வந்ததும், நேரு மீது வழக்கு பாய்ந்து சிறையில் அடைக்கப்பட்டார்.

ராமஜெயம் மீதான குற்றப்பின்னணிகளும் தோண்டப்பட்டன.

இதன்பிறகுதான், ராமஜெயம் கொலை நடந்தது என்கிறது சி.பி.ஐ.வட்டாரம். ராமஜெயம் கொலையில் ஆரம்பம் முதல் திவாகரனின் சம்பந்தியான ஜெயச்சந்திரன் அந்த வழக்கை திசைதிருப்ப பல

முயற்சிகள் எடுத்துக் கொண்டார். இந்த கொலையின் முக்கியப் புள்ளியான ரவுடி சாமிரவியிடம், “”நான் கொலை நடந்தபோது

திருப்பதியில் இருந்தேன்” என ஒரு ஸ்டேட்மெண்ட்டை

வாங்கிக்கொண்டு தப்ப வைத்தார். கொலைக்குக் காரணம்
பெண் தொடர்புதான் என திசைதிருப்பவும் முயற்சிகள் நடந்தன
என சி.பி.ஐ. முடிவுக்கு வந்துள்ளது. சி.பி.சி.ஐ.டி. விசாரணையில்

ஜெயச்சந்திரனின் சமூகத்தைச் சேர்ந்த சண்முகவேலு என்கிற
அதிகாரி முழுவதுமாக வழக்கின் சாட்சியங்களை அழித்தார்.
ராமஜெயம் குடும்பத்தினர் மீதே விசாரணையை திருப்பி விட்டனர்.

ராமஜெயத்தின் உறவினரான வினோத் என்பவர் மீது குறிவைக்கும் நிகழ்வும் நடந்தது. சென்னையில் கொலை செய்யப்பட்ட முன்னாள்

எம்.எல்.ஏ. எம்.கே.பாலன் கொலை வழக்கு விசாரணையின்
போது, போயஸ் கார்டனிலிருந்து சசிகலா பேசினார் என
முதலில் கூறப்பட்டது. சசிகலா போனில் பேசியதாக கூறப்பட்ட அ.தி.மு.க.வின் வடசென்னை துணை மா.செ.வான பூங்கா நகர்

மாணிக்கத்திடம் வேறொரு பெண் மிமிக்ரி செய்து சசிகலா
போல் பேசியதாக பின்பு சொல்லப்பட்டது. அதுபோல ராமஜெயம்

கொலையிலும் சாட்சியங்களை மாற்றும் வேலை நடந்தது.
ராமஜெயம் வீட்டை விட்டு வெளியேறிய அதிகாலைக்கு
முன்பே “”நான் பார்த்தேன்” என கூறிய முன்னாள் நீதிபதி மணி

திவாகரன் சம்பந்தியான ஜெயச்சந்திரனுக்கு மிகவும்
நெருக்கமானவர் என பல தகவல்களை சி.பி.ஐ. பட்டியலிடுகிறது.

சி.பி.ஐ.க்கு தற்பொழுது கிடைத்துள்ள புதிய விவரங்களுக்கு
என்ன காரணம் என கேட்டபோது, “”சசிகலா தனது
கட்டுப்பாட்டில் இருந்த பல கோடி ரூபாய் சொத்துக்களை
தினகரன் பெயருக்கு பவர் ஆஃப் அட்டர்னி போட்டு கொடுத்து
விட்டார். அதை தட்டிக் கேட்ட திவாகரனை என் சகோதரர்
அல்ல என தள்ளி வைத்துவிட்டார். திவாகரனும்,
“”என்னை சசிகலாவுக்கு எதிராக பேச வைக்க வேண்டும் என
தினகரன் எதிர்பார்க்கிறார்” என்று சொல்லி, சசிகலாவை
முன்னாள் சகோதரி என அழைக்கிறார். அவரை தினகரனும்
“முன்னாள் மாமா’ என அழைத்து மோதலை விரிசலாக்கியுள்ளார்.
இந்த மோதலின் விளைவாக, திவாகரன் தரப்பு சசிக்கு எதிராக
பேச ஆரம்பித்துள்ளது. அந்த பேச்சில் அரசல் புரசலாக வெளியே
வந்ததுதான் ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பான ரகசியங்கள்”என்கிறார்கள் சி.பி.ஐ.யை சேர்ந்தவர்கள்.

இதைப் பற்றி கேட்டபோது ரவுடி சாமிரவியும், சேகரும்
தங்களுக்கு தொடர்பில்லை என மறுக்கிறார்கள். சசிகலா
தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியிடம் கேட்டபோது,
“”இது வடிகட்டிய பொய்” என்றார். திவாகரன் தரப்பில் நம்மிடம்

பேசியவர்களும் இந்த செய்தியை மறுக்கிறார்கள்.
அடுத்த கட்டமாக காவல்துறையிலிருந்து ஓய்வு பெற்ற ஜெயச்சந்திரனையும் விளாத்திகுளம் சேகரையும் ஆதாரத்துடன்

வளைத்துப் பிடிக்க முடிவு செய்துள்ள சி.பி.ஐ. ராமஜெயம்
என்ன காரணத்திற்காக கொல்லப்பட்டார் என்பது அவரது
அண்ணனான கே.என்.நேருவுக்கு இந்நேரம் நிச்சயம்
தெரிந்திருக்கும் என்பதோடு, அரசியல்-பணம்-அதிகாரப்போட்டி

சம்பந்தப்பட்ட இந்த கொலையில் சசிகலா குடும்பத்தின் நேரடி
தொடர்பு இருப்பதால்தான் திவாகரன், “”நான் மத்திய அரசோடுநெருக்கமாக இருக்கிறேன்” என பம்முகிறார் என்கிறது.


-தாமோதரன் பிரகாஷ், ராம்கி, ஜெ.டி.ஆர்., மகி

( https://www.nakkheeran.in/special-articles/special-article/-involved-ramajeyam-murder-breaking-facts?amp&amp_js_v=0.1&usqp=mq331AQHKAFQArABIA== )

.

——————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல். Bookmark the permalink.

3 Responses to ஒரு கொலைவழக்கை – இதைவிட மோசமாக குழப்ப முடியுமா…?

  1. புதியவன் சொல்கிறார்:

    அப்போ செய்திகளில் அடிபட்டது…. யாருடைய மனைவியை ராமஜெயம் கண் வைத்ததனால்தான் (அல்லது அடைந்துவிட்டதால்தான்) ராமஜெயம் அனுப்பப்பட்டார். பணம் ஒருவனிடம் அளவுக்கு அதிகமாக இருந்தால் மது மாது சூது. மதுப் பழக்கம் இல்லாத அரசியல்வாதிகளே அபூர்வம். அதனால் அதற்கு அடுத்ததான “மாது” தான் திருச்சி சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகளின் வேலையாக இருந்துவந்துள்ளது. அதில் ‘அறம்’ மீறியதால்தான் இது நிகழ்ந்தது என்று படித்தேன்.

    இதனை எப்படியோ திசைதிருப்பவேண்டிய நிர்ப்பந்தத்தில் நக்கீரன் இருக்கிறது போலும். அதனால் கொக்கு தலையில் வெண்ணெய் வைத்துப் பிடிப்பதுபோல சசிகலாவை ராமஜெயம் வழக்கில் தொடர்புபடுத்த முயன்றிருக்கிறது. எவ்வளவு கை மாறியதோ..யாருக்குத் தெரியும்?

    ஆஸ்திரேலியாவில் நிலக்கரிச் சுரங்கத்தைக் கைப்பற்றினார் அதானி என்று கொத்தடிமைகள் சொல்லிக்கொண்டே இருப்பர். லோக்கல் ராமஜெயம், இந்தோநேஷியா நிலக்கரிச் சுரங்கம், ஜெகத்ரட்சகன் இலங்கையில் 26,000 கோடி முதலீடு….இந்த மாதிரிச் செய்திகள் வரும்போதும், தன் சொந்த உபயோகத்திற்காக 400 கோடி ரூபாய் செலவழித்து ஸ்டாலின் ஹெலிகாப்டர் வைத்திருக்கிறார் என்றெல்லாம் வரும்போது இந்தக் கொத்தடிமைகள் பதுங்கிக் கொள்வர். இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் கா.மை. சார்?

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      புதியவன்,

      எதைச் சொன்னாலும் நம்புகிற கூட்டம் இருக்கிற
      வரைக்கும் இவர்கள் பிசினஸ் நன்றாகவே நடக்கும்.

      மூடிய அறைக்குள் முதல்வரும், துணை முதல்வரும்
      அமர்ந்து தமக்குள் பேசியதாக, அப்படியே வார்த்தைக்கு
      வார்த்தை போடுகிறார்கள். 2 பேர் ஒரு மூடிய அறைக்குள்
      பேசியது 3-வது நபருக்கு எப்படி தெரியும்… அதுவும்
      வார்த்தைக்கு வார்த்தை…?
      ஆனால் இவர்கள் கூடவே இருந்தது போல் எழுதுகிறார்கள்.

      அதை மக்களில் பெரும்பாலானோர் இவர்களுக்கு அது
      எப்படி தெரிந்திருக்க முடியும் என்று கொஞ்சமும்
      யோசிக்காமல் அப்படியே நம்புகிறார்கள்.

      எனவே, அப்படிப்பட்ட மக்கள் இருக்கும் வரையில்,
      இவர்களும் எழுதிக்கொண்டே தான் இருப்பார்கள்.
      நாம் பார்த்து சிரித்துக்கொண்டே போக வேண்டியது
      தான்….!!!!

      .
      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

      • Peace சொல்கிறார்:

        Popular cellphone and a Bluetooth headset can be used as a listening device. The person doesn’t have to be in the room. If he is outside the room, within Bluetooth range he can hear the conversation. I am sure the young reporters know these things.
        In the old days there was a mole planted in Mrs Gandhi’s house. Old fashioned way. Many years later it was in the newspaper.
        Cellphones, TVs can listen to our conversation. There is nothing we can do about it. Turned off Samsung tv can listen to conversations in the house. This news was from 2014.

        Happy to see you write !

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.