சாண்டோ சின்னப்பா தேவரும், எம்.ஜி.ஆரும்….

….thevar and mgr

சாண்டோ சின்னப்பா தேவர் தமிழ்த்திரைப்பட உலகில்
மிகவும் வித்தியாசமான ஒரு தயாரிப்பாளர்.

அவர் படங்களில் நடிக்கும் ஹீரோ, ஹீரோயின்
மற்றும் தொழில் நுட்பக்கலைஞர்கள் அத்தனை பேருக்கும் அவர்
மொத்தமாக பணமாகவே கொடுப்பார்.
யாருக்குமே செக் கொடுக்கும் பழக்கம் அவருக்கு
கிடையாது. முதல் முதலில் அவர் எடுத்த ஹிந்தி படத்தில்
நாயகனாக நடித்த ராஜேஷ் கன்னா-விற்கு,
கரன்சி கத்தைகளை மொத்தமாக ஒரு துணிப்பையில்
போட்டுக் கொடுத்ததை ஹிந்தி திரையுலகம் முழுவதும்
பேசியது.

அப்பேற்பட்ட தேவரும், எம்.ஜி.ஆரும் துவக்கத்தில்
மிகச்சாதாரண நிலையில் இருந்தபோதே நெருங்கிய
நண்பர்கள். இருவருமே வறுமையில் வாடிய நாட்கள் அவை.

அப்போது நடந்த சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றைப்பற்றி,
மூத்த கதாசிரியர், தயாரிப்பாளர் கலைஞானம் அவர்கள்
ஒரு கட்டுரையில் சொல்லி இருக்கிறார்….

கீழே -அவர் வார்த்தையிலேயே ….

———–

ஒருநாள் எம்.ஜி.ஆரின் தாயார் சத்தியா அம்மா, எம்.ஜி.ஆர்
வருகையை எதிர்பார்த்து வீட்டிற்கு வெளியே நின்று நான்கு
திசைகளிலும் பார்த்துக்கொண்டிருந்தார். அந்த வழியாக வந்த
சாண்டோ சின்னப்பத்தேவர் எம்.ஜி.ஆர் அம்மாவிடம்,
“என்ன ஆத்தா இங்க நிற்கிறீங்க?” எனக் கேட்டார்.
“சாப்பாட்டுக்கு ஒன்னும் இல்லடா… ராத்திரி வரும்போது
அரிசி வாங்கிட்டு வாடான்னு சொல்லியிருந்தேன்… இன்னும் ஆள
காணும்” எனக் கூறினார் எம்.ஜி.ஆர். அம்மா.

பின்னொரு காலத்தில் அத்தனை பேரின் பசியாற்றிய
வள்ளல் எம்.ஜி.ஆரின் ஆரம்பக்காலம் எப்படி இருந்துள்ளது
என்று பாருங்கள். உடனே தேவர், “ஒண்ணும் கவலைப்படாத
ஆத்தா… பத்து நிமிஷத்துல நான் வாரேன்” எனக் கூறிவிட்டு அவர்
வீட்டை நோக்கி வேகமாக நடக்க ஆரம்பிக்கிறார்.

தேவர் வீட்டு வாசலில் அவர் அம்மா வெளியே உட்கார்ந்து
பக்கத்து வீட்டு ஆட்களுடன் பேசிக்கொண்டிருக்கிறார்.
அவரைத் தாண்டி உள்ளே நுழைந்த தேவர்,
அவர் அம்மாவிற்கு சந்தேகம் வந்துவிடக் கூடாது என நினைத்து,
பித்தளை பானையில் தண்ணீர் குடிப்பது போல
பாவனை செய்கிறார். பின், சட்டையிலும் கொஞ்சம்
தண்ணீரை ஊற்றி நனைக்கிறார். நேரே அரிசி
வைக்கப்பட்டிருந்த மண்பானைக்கு அருகில் சென்று இரு
கைகளிலும் அரிசியை அள்ளி டவுசர் பையை நிரப்புகிறார். அதன் அளவு
எப்படியும் அரைப்படி இருக்கும்.

பின், அவர் அம்மாவிற்கு கேட்குமாறு பெரிய ஏப்பம்
விட்டுவிட்டு எம்.ஜி.ஆர் வீட்டை நோக்கி நடக்க
ஆரம்பிக்கிறார்.

எம்.ஜி.ஆர் அம்மாவிடம் வந்து, “முறத்தை எடு ஆத்தா”
என்கிறார். அவரும் எதற்கு கேட்கிறார் என்பது புரியாமல்
குழப்பத்துடன் முறத்தை எடுக்கிறார். தேவர், தன்னுடைய
இரு பைகளிலும் உள்ள அரிசியை அள்ளி அந்த முறத்தில்
போடுகிறார். “ஏதுடா சின்னப்பா இவ்வளவு அரிசி” என
எம்.ஜி.ஆர் அம்மா கேட்க, “அதை விடு ஆத்தா… தம்பி வர்றதுக்குள்ள நீ

போய் சோறாக்கு” என்கிறார் தேவர்.
எம்.ஜி.ஆர் அம்மா சமைக்க ஆரம்பிக்கிறார். அன்று
எம்.ஜி.ஆரால் பணம் திரட்ட முடியாததால் அரிசி வாங்காத
சோகத்துடன் வீடு திரும்புகிறார்.

வீட்டுக்குள் எம்.ஜி.ஆர். நுழைந்ததும் அரிசி வேகும் வாசனை
கமகமன்னு வருது. “உனக்கு ஏதும்மா அரிசி வாங்க காசு” என
எம்.ஜி.ஆர் கேட்க, “சின்னப்பன்தான் கொண்டு வந்து
கொடுத்தான்” என எம்.ஜி.ஆர் அம்மா நடந்ததை விளக்கிக்
கூறுகிறார். உடனே தேவரை கட்டியணைத்து கண்ணீர்
வடிக்கிறார் எம்.ஜி.ஆர்.

அன்றைக்கு அரைப்படி அரிசி கொடுத்ததற்காக நன்றி மறக்காத
எம்.ஜி.ஆர், வாழ்நாள் முழுவதும் தேவருக்கு உடன்பிறப்பாக
இருந்து 16 படங்கள் நடித்துக் கொடுத்தார். சாதாரண
ஆளாகத்தான் தேவர் சென்னைக்கு வந்தார். அவர் சென்னை
வரும்போது அவரது நிலை என்னவென்று எனக்குத் தெரியும்.
அப்படி சாதாரண மனிதரை கோடீஸ்வரனாக்கி எம்.ஜி.ஆர் அழகு
பார்த்ததற்கு காரணம், அந்த அரைப்படி அரிசிதான்.

.
————————————————————————————————————

….

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், இணையதளம், எம்ஜிஆர், சினிமா, பொது, Uncategorized. Bookmark the permalink.

1 Response to சாண்டோ சின்னப்பா தேவரும், எம்.ஜி.ஆரும்….

 1. புதியவன் சொல்கிறார்:

  கலைஞானம் மற்றும் பலர் எழுதிய புத்தகங்களை (எம்.ஜி.ஆர் பற்றி) படித்திருக்கிறேன். யாரிடமும் எம்.ஜி.ஆர் கடன் பட்டதில்லை. செய்த உதவிக்குக் கைம்மாற்றாக பலமடங்கு உதவிகளைச் செய்திருக்கிறார்.

  எம்ஜிஆர் குண்டடி பட்டபோது ஆஸ்பத்திரிக்குச் சென்று கட்டுக் கட்டாக பணத்தை தேவர் கொடுத்திருக்கிறார். தேவரின் தம்பி திருஞானம்? அதைக் கேள்வி கேட்டார். திரும்ப எம்.ஜி.ஆர் வந்து நடிக்கவா போகிறார், எதுக்கு பணத்தை வீணாக்குகிறீர்கள் என்றதற்கு, நாம் சாப்பிடும் சாப்பாடு எம்.ஜி.ஆர் போட்ட பிச்சை, என் பணம் போனால் மயிரே போச்சு என்றாராம்.

  தன் நல்ல குணங்களால், தன்னைச் சுற்றியுள்ளவர்கள் அனைவரையும் கவர்ந்திருக்கிறார் எம்.ஜி.ஆர். அவரைப்பற்றி ஸ்டில் போட்டோகிராபர் நாகராஜன்?, கலைஞானம், மெய்க்காப்பாளர் இராமகிருஷ்ணன், அவருக்கு அமெரிக்காவில் உதவிய டாக்டர் பழனியப்பன்(? நினைவில்லை), வலம்புரிஜான் என்று பலர் எழுதியவற்றைப்படித்திருக்கிறேன்.

  அவருடைய நல்ல குணத்துக்குத்தான், அவர் ஆரம்பித்த கட்சி, நல்லவர்களின் கட்சி என்ற பிம்பத்தை பொதுமக்களிடையே பெற்றிருக்கிறது.

  புத்தகங்களில் படித்த பல சம்பவங்கள் மனதில் வந்துபோகிறது.

  வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
  மக்களின் மனதில் நிற்பவர் யார்

  என்ற பாடலுக்கு ஏற்றபடி வாழ்ந்திருக்கிறார் அவர். அதனால்தான் எம்.ஜி.ஆர் ஆட்சி அமைய ஆதரவு தாருங்கள் என்று அதிமுகவினரால் இன்றும் கேட்க முடிகிறது. அதே சமயம், திமுக, காமராஜ் ஆட்சியை அமைப்போம் என்றுதான் சொல்றாங்க. ஹாஹா.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.