ஆர்.சேஷாத்ரிநாதன் என்ற பெயர் எஸ்.எஸ்.எல்.சி. புத்தகத்திலும்பாஸ் போர்ட்டிலும் தான் பயன்படுத்தப்பட்டது. அனைவரும் அவனை
சேச்சா என்றுதான் அழைப்போம். சிலசமயம் ராமான்ஜு, சிலசமயம் எல்.பி.டபிள்யு என்று கூப்பிடுவோம். காரணம்1, கணக்கில் மிக கெட்டிக்காரன். 2: எப்போதாவது எங்களுடன் கிரிக்கெட் ஆட வரும்போது எல்.பி.டபிள்யு கொடுத்தால் ஒப்புக்கொள்ள மாட்டான்.
என் வாழ்க்கையும் அவன் வாழ்க்கையும் மூன்று முறை குறுக்கிட்டன.
ஸ்ரீரங்கத்தில் ஒன்றாகப் படித்தோம். நான் சௌரிராஜ ஐயங்கார் செக்ஷன். அவன் கே.என்.ஆர். செக்ஷன். அப்போதே அவனிடம் ஏழ்மையின் அடையாளங்கள் தெரிந்தன. ஒரே சட்டையை நனைத்து உலர்த்தி அணிவதால், கிட்ட வந்தால் ஒருவித முடை நாற்றம் வீசும். காலுக்குச் செருப்பில்லாமல் சித்திரை மாதத்து வெயிலில் நிழலோரமாக பதியப் பதிய நடந்து செல்வான்.
தீபாவளிக்கு நாலைந்து ஓலைப்பட்டாசும் ஒரே ஒரு கம்பி வாணமும் சுட்டுவிட்டு, நாங்கள் வெடிப்பதைக் கண்ணியமாகப் பார்த்துக்கொண்டு இருப்பான். சேச்சாவின் வீடு கீழச்சித்திரை வீதியில் எங்கள் வீட்டுக்கு எதிர் சாரியில் சவுகார் வீட்டுக்கும் சிரஸ்தார் ராமுவின் வீட்டுக்கும் இடையே புத்தகத்தில் அடையாளம் செருகினாற் போல ஒரு கூரை வீடு. அதன் வாசலில் அதிர்ஷ்டவச முனிசிபல் விளக்கின் வெளிச்சத்தில்தான் பாடம் படிப்பான்.
சேச்சா பிறந்த நான்காம் மாதம் அவள் தாய் விதவையானவள். அவன் தந்தை ரங்கசாமி ஐயங்கார் பொன்மலை ரயில்வே ரிப்பேர் தொழிற்சாலையில் அக்கவுண்ட்ஸில் இருந்தவர். படக்கென்று ஒருநாள் போய்விட்டார். ஃபேமிலி பென்ஷன் ஒன்றுதான் வருமானம். அதில் சிக்கனமாகக் குடித்தனம் செய்தாலும் மாசக் கடைசியில் பாட்டியிடம் காபிப்பொடி கடன் கேட்க வருவாள்.
சிவப்பான உடம்பு. விதவைகளுக்கென்று ஏற்பட்ட காவி கலர் புடவை, ரவிக்கையில்லாமல் போர்த்திக்கொண்டு, நெற்றியில் லேசாக சூர்ணம் அணிந்துகொண்டு பாட்டியுடன் தகாத இளமையில் தொண்டரடிப்பொடி ஆழ்வார் சந்நிதிக்கு பகவத் விஷயம் உபன்யாசம் கேட்கச் செல்வாள். அவள் வாழ்க்கை முழுவதுமே சேச்சாவைச் சுற்றி இயங்கியது. சேச்சா பள்ளியிலிருந்து வரக் கால் மணி தாமதமானாலும் பதறிப் போய்விடுவாள். கோட்டைக்குப் போனால் வீட்டுக்கு வரும் வரை வாசலையே பார்த்துக் கொண்டு இருப்பாள். என்னை எப்போது பார்த்தாலும் ‘நன்னா படிக்கிறயா’ என்று விசாரிப்பாள். தினம் சிறிய வெண்கலச் செம்பு எடுத்துக்கொண்டு காவேரிக்குப் போய் அதிகாலையில் ஈரப் புடவையுடன் வருவாள். பாட்டியிடம் அஞ்சு பத்து கைமாத்தாக வாங்க வரும்போது ”சேச்சா படிச்சு முன்னுக்கு வந்துட்டா என் கஷ்டம் எல்லாம் தீர்ந்துடும் மாமி.”
”அவனுக்கென்னடி செல்லம், எட்டூருக்குப் படிப்பான்.” ”நன்னாத்தான் படிக்கிறான் மாமி. ஆனா, எதுத்து எதுத்துப் பேசறான். அரிசி உப்புமா நன்னால்லைன்னு அன்னிக்குப் பாருங்கோ தட்டத்தை வீசி எறிஞ்சான். தோசை வேணுமாம். உளுந்துக்கும் புழுங்கரிசிக்கும் எங்கே போவேன்?” ”நான் கேக்கட்டுமா?” ”வேண்டாம்… வேண்டாம். திருப்பதிப் பெருமாளுக்கு முடிஞ்சு வெச்சிருந்ததை எடுத்து தெற்கு வாசல்ல போய் கிருஷ்ணா கபேல வாங்கிச் சாப்ட்டுக்கோன்னு அனுப்பிச்சேன்.”
சேச்சா படிப்பைப் பற்றிய கவலை அந்தத் தாய்க்கு இல்லை. நான்காம் வகுப்பிலிருந்து பள்ளிஇறுதி வரையில் பள்ளியில் உள்ள அத்தனை ஸ்காலர்ஷிப் ஃப்ரீஷிப்புகளையும் அவன் பெற்றான். ஆண்டு விழாவில் படிப்பு சம்பந்தமான அத்தனை கோப்பைகளையும் அத்தனை டிரஸ்ட் பரிசுகளையும் ஆர்.சேஷாத்ரி, ஆர்.சேஷாத்ரி என்று மைக்கில் சொல்லி அலுத்து, ஸ்டேஜ் ஓரத்திலேயே அவனை நின்றுகொள்ளச் சொல்வார்கள். அடுத்தடுத்துப் பரிசு வாங்கி வகுப்பில் முதல், பள்ளியில் முதல், கல்லூரியில் முதல், மாகாணத்தில் முதல் என்று வரிசையாக அத்தனை முதல்களையும் கவர்ந்துவிட, ”உன் பிள்ளைக்கு என்னடி குறை, கலெக்டர் பரீட்சை எழுதச் சொல்லு, எட்டூருக்கு கலெக்டராவான்” என்றாள் பாட்டி. ”அதெல்லாம் வேண்டாம் மாமி. அவனை வெளிய எல்லாம் அனுப்பறதா இல்லை. பேசாம கோல்டன் ராக்லயே அவா அப்பா ஆபீஸ்லயே வேலை போட்டுக் கொடுப்பாளாம். அப்ரண்டிஸ் மனு போட்டிருக்கான். கெடைச்சுட்டா மேல அடையவளைஞ்சான்ல முறைப் பொண்ணு காத்துண்டிருக்கு. நப்பின்னைன்னு நம் குடும்பத்துக்கு அனுசரணையான, அடக்கமான பொண்ணு. கல்யாணத்தைப் பண்ணிடலாம்னு இருக்கேன் வர சித்திரைக்குள்ள.”
சேச்சா ஃபார்வர்டு கம்யூனிட்டியாக இருந்தாலும் இன்ஜினீயரிங், மெடிக்கல் இரண்டு ஸீட்டும் கொடுத்தே ஆக வேண்டியிருந்தது அவனுக்கு. என்ன படித்தான், எப்படி எதைத் தேர்ந்தெடுத்தான் என்று தெரியுமுன் எங்கள் குடும்பத்தில் மாறுதல்கள் ஏற்பட்டு, ஸ்ரீரங்கத்தைவிட்டு வெளியே வந்து, என் கவலைகள் திசை திரும்பிவிட்டதால் தொடர்பு விட்டுப்போய் பல வருஷங்கள் இடைப்பட்டு, நான் டெல்லிக்கு சிவில் ஏவியேஷனில் சேர்ந்து மாற்றலாகி மாற்றலாகி அலகாபாத், கல்கத்தா, பம்பாய் என்று பல ஊர்களில் வேலை பார்த்து –
சில ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் போஸ்டிங் ஆனபோது, ஒரு முறை கன்ட்ரோல் டவரில் போன் வந்திருப்பதாகச் சொன்னார்கள். போய்க் கேட்டால், ”ஞாபகமிருக்கிறதா ரங்கா? நாதன் பேசறேன்.” ”எந்த நாதன்?” ”சேஷாத்ரிநாதன், சேச்சா!” ”சேச்சா, வாட் எ சர்ப்ரைஸ்… இப்ப எங்க இருக்கே? அம்மா எல்லாம் சௌக்கியமா? உன்னை யாருக்கும் ‘நாதன்’னு தெரியாதே. ஸாரி, என்ன படிச்சே? இன்ஜினீயரிங்கா, மெடிக்கலா, ஐ.ஏ.எஸ்ஸா?” ”அதெல்லாம் இல்லைப்பா. ஐ.ம் எ டீச்சர். அம்மாவையும் திருச்சியையும் விட்டுட்டு வர முடியாதுன்னு பி.எஸ்ஸி., ஆனர்ஸ் சேர்ந்தேன். பிஸிக்ஸ் எடுத்துண்டேன். இப்ப அசிஸ்டென்ட் புரொபஸர் ஆஃப் பிஸிக்ஸ்” என்று நகரத்தின் பிரசித்தி பெற்ற இயேசு சபைக் கல்லூரியின் பெயர் சொல்லி, குவார்ட்டர்ஸில் இருப்பதாகவும் அம்மா என்னைப் பார்க்க விரும்புவதாகவும் சொன்னான்.
”கல்யாணமாய்டுத்தா?” ”ஆச்சு, அம்மாவுக்காக” என்றான். அடுத்த ஞாயிறு அவன் வீட்டுக்குச் சென்றபோது கோடம்பாக்கத்தில், அந்தக் கல்லூரி வளாகத்தில் காற்றோட்டமாக குவார்ட்டர்ஸ் கொடுத்திருந்தார்கள். சேச்சாவின் வாழ்க்கைத் தரத்தில் முன்னேற்றம் இருப்பது சந்தோஷமாக இருந்தது. தெரு விளக்குக்குப் பதில் சற்று அதிகப்படியாகவே குழல் விளக்குகள்! கட்டில், காத்ரெஜ் அலமாரி, பதினாலு இன்ச் டி.வி. நல்ல வீடு, அழகான மனைவி. செல்லம்மாள் அப்படியே இருந்தாள். மருமகளைப் பெண் போல அழைத்தாள். நப்பின்னை கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. கையில் மூன்று வயசுக் குழந்தை பெயர் ரங்கநாதன் அவ்வப்போது களுக் களுக் என்று சிரித்துக்கொண்டு இருக்க, சேச்சாவின் டேப் ரெக்கார்டரில் மாலியின் குழலிசை ஒலிக்க, ஏதோ ஒருவிதத்தில் நியாயம் நடந்துவிட்டதாகத் தோன்றியது.
வெண்ணெயும் வெல்லமும் வைத்து அடை சாப்பிட்டபோது, ”இந்த மாதிரியெல்லாம் டிபன் சௌகரியங்கள் இருக்குன்னா கல்யாணம் பண்ணிக்கலாம் போலத்தான் இருக்கு மாமி” என்றேன். நப்பின்னை களங்கமில்லாமல் கன்னம் சிவந்தாள். ”ஏன்டாப்பா, நீயும் பண்ணிக்க வேண்டியதுதானே?” ”அதுக்கென்ன மாமி, வத்சலாவுக்கு ஆகட்டும் முதல்ல” என்றேன். ”இப்ப ஊம்னு சொன்னா நப்பின்னை தங்கையே பெருந்தேவின்னு இருக்கா.” ”பேரை மாத்திண்டுட்டா சித்ரான்னு” என்றாள் நப்பின்னை.
சேச்சாவுக்கு காலேஜில் மிகப் பெரிய பெயர் என்றும், ஒரு ஃபோர்டு ஃபவுண்டேஷன் கிராண்ட்டில் அவனுக்கு மூன்று வருஷம் டாக்டரேட் படிக்கத் தாராளமான உபகாரச் சம்பளத்துடன் அமெரிக்கா போகச் சந்தர்ப்பம் கிடைத்திருப்பதும் தெரிந்தது. ”எப்ப போறே?” ”எப்படி அம்மாவையும் இவளையும் விட்டுட்டுப் போறது?” செல்லம்மாள்தான் சொன்னாள், ”நான் பார்த்துக்கறேன். எனக்குத் தைரியம் வந்துடுத்து. போய்ட்டு வாடான்னு சொன்னா கேக்க மாட்டேங்கறான். அது பெரிய பிரக்யாதி இல்லையா ரங்கு? இந்த மாதிரி இண்டியாவிலேயே ஒருத்தருக்குத்தான் கிடைச்சிருக்காம். போய்ட்டு வாடான்னா…”
”சேச்சா, ஒண்ணு பண்ணேன். அங்கேயே முயற்சி செய்தா வேலை கிடைச்சுடும். அம்மாவையும் ஃபேமிலியையும் அழைச்சுண்டு போய்டலாமே” என்றேன். ”அப்படி ஒரு சாத்தியம் இருக்கா என்ன?” ”உனக்கு இருக்கிற புத்திசாலித்தனத்துக்கும் திறமைக்கும் நிச்சயம் அந்த யூனிவர்சிட்டிலயே வேலை கொடுப்பான் தெரியுமா?”
”அதான் சொல்றேன், நீங்க போய்ட்டு வாங்கோ. நான் அம்மாவோட என் தம்பி நச்சு வந்து இருக்கேன்கிறான். அக்கம் பக்கத்தில் எல்லாம் ரொம்ப அனுசரணையா இருக்கா. தனியா இந்த கேம்பஸ்ல இருக்கிறதுல கஷ்டமே இல்லை. வருஷம் ஒரு தடவை வரலாம். போக வர சார்ஜு கொடுக்கறாளாம்.” ”எனக்கென்னவோ இந்த ஆஃபரை விட வேணாம்னு தோண்றது சேச்சா” என்றேன். சேச்சா அலட்சியமாகப் பேசினான்.
”அமெரிக்கா போனா முதல்ல சூட்டெல்லாம் போட்டுக்கணுமேப்பா.” ”இவரை ஒரு தடவைகூட நான் சூட்டு போட்டுப் பாத்ததில்லை” என்றாள் நப்பின்னை. ”காலேஜுக்கும் வேஷ்டிதான். பேன்ட்கூடப் போட்டுக்க மாட்டார்!” ”கல்யாணத்துல போட்டுக்கலை?” ”கல்யாணத்திலயும் வேஷ்டிதான்; காலேஜுக்கும் வேஷ்டிதான்! போட்டுக்க மாட்டேங்கறார். சொல்லுங்கோ நீங்க” என்றாள் நப்பின்னை. ‘
‘அடுத்த வருஷத்தில் இருந்து கிளாசுக்கு பஞ்சகச்சம் கட்டிண்டு குடுமியோட போலாம்னு இருக்கேன்.” ”பையன்கள்லாம் கலாட்டா பண்ண மாட்டாங்களா?” ”இல்லப்பா, லெக்சர் இன்ட்ரஸ்டிங்கா இருக்கிறதால தே டோன்ட் மைண்ட்” என்றான். கொஞ்சம்கூடப் பெருமை சேர்க்காமல் சரளமாக இதைச் சொன்னான்.
”அமெரிக்கா போறதுக்கு சூட்டு போட்டுண்டுதான் ஆகணும்னு கட்டாயம் இல்லை மாமி” என்றேன். ”இருந்தாலும் சின்னதிலேர்ந்து எனக்கு ஆசை. இவனுக்கு சூட்டு போட்டுப் பார்க்கணும்னு. இவப்பா கல்யாணத்துக்குத் தெச்சது. நல்ல அல்பாக்கா சூட்டு. அந்துப்பூச்சி கடிச்சுடுத்து. சின்னவங்களுக்கு ஆசை இருக்காதா என்ன? என்னவோ இப்பவே சன்யாசியாய்ட்ட மாதிரி.” ”அதெல்லாம் இல்லை” என்று சிரித்தான் சேச்சா.
சேச்சா அமெரிக்கா போனானா என்பதைத் தெரிந்துகொள்ளும் முன் என்னைத் தற்காலிகமாக ஹைதராபாத் பேகம்பேட்டைக்கு மாற்றிவிட்டதால், நான்கு மாதம் கடந்து திரும்பினதும்தான் அந்தக் கல்லூரிக்கு போன் செய்து கேட்டதில் அவன் அமெரிக்காவுக்குப் போய்விட்டதாகத் தெரிந்தது. அடுத்து சேச்சா நிச்சயம் அங்கே பிரபலமாகி அந்த மேல்நாட்டு சூழ்நிலையில் எதையாவது புதுசாகக் கண்டுபிடித்தான் என்ற செய்தியை எதிர்பார்த்தேன்.
அடுத்த முறை சேச்சாவின் வாழ்க்கையும் என் வாழ்க்கையும் குறுக்கிட்டது ஒரு விநோதமான சந்தர்ப்பத்தில். மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்தில் ஏர் இந்தியாவின் நேரடி விமானம் லண்டன், நியூயார்க்கிலிருந்து வந்து நின்றுகொண்டு இருந்தது. அப்போது நான் ஏட்டிஸி டியூட்டியில் இருந்தேன். இன்ஸ்பெக்ஷனுக்காக எங்கள் மேலதிகாரி ஒருவர் வருகிறார் என்று அரைவல் லவுஞ்சுக்குச் சென்றபோது கேவி என்னைப் பார்த்தான்.
அவனுடன் சேச்சாவின் மச்சினன் நச்சுவும் ஏராளமான கல்லூரி மாணவர்களும் பிளாஸ்டிக் நாற்காலிகளில் காத்திருந்தார்கள். என்னை அவசரமாகக் கூப்பிட்டு கேவி, ”உனக்கு கஸ்டம்ஸ்ல யாரையாவது தெரியுமா? ஏரோட்ரோம்லதானே வேலையா இருக்கே?” ”ஆமாம், என்ன வேணும்?” ”ஒரு கன்ஸைன்மென்ட்டைக் கிளியர் பண்ணணும்.” ”இதுதான் நச்சு, சேச்சாவோட மச்சினன்.”
”சேச்சா, இந்த ஃப்ளைட்ல வரானா?” ”ஆமாம்” அவன் கண்கள் கலங்கியிருந்ததை முதலில் கவனித்தேன். ”என்ன கேவி, எதாவது உடம்பு கிடம்பு சரியில்லையா?” ”இந்த ஃப்ளைட்ல சேச்சா வோட பாடி வருது!” ”ஐயோ, என்ன ஆச்சு?” என்றேன் பதறிப் போய். ”அமெரிக்காவில் எங்கயோ இடம் தெரியாம நியூயார்க்ல சுத்தப் போயிருக்கான். கைல டாலர் அதிகம் இல்லையாம். பட்டப் பகல்ல, அதென்ன சொல்வா, ‘மகிங்’காம் அவன்கிட்ட டாலர் இல்லைன்னு மண்டைல அடிச்சிருக்கான். அடி பலமா பட்டதுல செத்துப் போயிட்டானாம்.”
”மை காட்.” கார்கோ ஹோல்டிலிருந்து மெள்ள அந்தப் பெட்டி இறங்குவதைப் பார்த்தேன். எதிரே இடிந்துபோய் சேச்சாவின் அம்மாவும் நப்பின்னையும் உட்கார்ந்திருக்க, நிறைக் கர்ப்பமாக இருந்தாள். குழந்தை தாயின் மயிரைப் பிடித்து, இழுத்து விளையாடிக்கொண்டு இருந்தது. அடிக்கடி தாயின் கண்ணீர் புரியாமல் முகத்தைத் திருப்பித் திருப்பிப் பார்த்துக்கொண்டு இருந்தது.
நான் ”செல்லம் மாமி! என்னாச்சு?” அந்த இடத்து இரைச்சலில் அவள் அழுதது பெரிசாக யாருக்கும் கேட்கவில்லை. யாரோ வெளிநாடு சென்று திரும்பும் தலைவருக்கு மலர் மாலைகள் தொடர்ச்சியாக அணிவிக்கப்பட்டபோது, கரகோஷ ஆரவாரம் அவள் அழுகையைப் புதைத்தது. மெள்ள மெள்ள அந்தப் பெட்டி இறங்க நான் கஸ்டம்ஸில் ராசரத்தினத்திடமும் ஏர்போர்ட் ஹெல்த் ஆபீஸர் சங்கரமூர்த்தியிடமும் சொல்லி, ஃபர்மாலிட்டிகள் அனைத்தையும் சுருக்கி ஏர் இண்டியா மேனேஜரிடமும் சொல்லி விரைவிலேயே பெட்டியை விடுவித்து அவர்களுக்கு என்னால் ஆன உதவி செய்து தந்தபோது,
அந்தப் பெரிய பெட்டி நம் ஊர் ஆம்புலன்சுக்குள் நுழையாமல் வெளியே நீட்டிக் கொண்டிருக்க, பேருக்குப் பேர் ஆணை பிறப்பித்துக்கொண்டு இருந்தார்கள். நான் சேச்சா எதற்காகப் பிறந்தான். எதற்காக அத்தனை திறமையாகப் படித்து, எதற்காக அமெரிக்கா சென்று நியூயார்க் நகர வீதியில் விரயமாக ரத்தம் சிந்திச் செத்தான் என்பதை யோசிக்கையில், அப்போதே மலர் வளையங்களை வைக்கலாமா, வளாகத்துக்குச் சென்றதுமா என்பதை விவாதித்தார்கள். ”க்ரீன் கார்டு கெடைச்சதும் எல்லாருமா சேர்ந்து அமெரிக்கா போலாம்னு எழுதியிருந்தானே… நான் என்ன பாவம் செய்தேன்? இப்படிக் கண்காணாத தேசத்தில் சேச்சா… சேச்சா… இப்படிப் பண்ணிட்டியேடா!” ”தெருவில் அடிபட்டுச் சாகணும்னு என்ன நியாயம் இது!”
நப்பின்னை புழுதித் தலையும் திறந்த மார்புமாகப் பார்த்துக் கொண்டு இருந்தாள். அந்தப் பெட்டி மிகத் திறமையாக பேக் செய்யப்பட்டு இருந்தது. அதை எப்படி, எந்த உபகரணங்களைக்கொண்டு திறக்கலாம் என்பதற்குக் குறிப்புகள் ஒரு காகிதத்தில் பாலிதீன் பையில் வைக்கப்பட்டு இருந்தது. அதற்கான டூல்சும் சேர்ந்து, மார்ட்டின் அண்டு கம்பெனி எம்பாமர்ஸ் அண்டு ஃப்யுனரல் டிரக்டரஸ்’ என்று கார்டு வைத்திருந்தது.
முதலில் அலுமினியப் பெட்டி. அதைத் திறந்ததும் உள்ளே பளபளவென்று பாலிஷ் போட்டு தேக்கு மரப் பெட்டி. அதில் எங்கள் முகங்கள் தெரிந்தன. அதை சீலைப் பிரித்து மூடியை நெம்புவதற்கு கார்பென்ட்டரைக் கூட்டி வர வேண்டியிருந்தது. நச்சுதான் சொன்னான், ”அங்க இருக்கிற இண்டியன் அசோசியேஷன்ல இன்டர்நெட் மூலம் காண்டாக்ட் பண்ணி அவாள்லாம் ஒரே நாள்ல பணம் சேர்த்து முழுச் செலவையும் ஏத்துண்டாளாம்.” ‘
‘என்ன அருமையா பேக் பண்ணிருக்கான் பாருங்கோ, அமெரிக்கா அமெரிக்காதான்.”
பெட்டியைத் திறந்ததும் லேசாக ரோஜா வாசனை வீச, சேச்சா வெல்வெட் மெத்தையில் படுத்திருந்தான். ”வாடி, வந்து பாரு. உன் புருஷனை சூட்டு போட்டுண்டு பார்க்கணும்னியே, பாரு!”
நான் அதிர்ச்சியுற்று சேச்சாவின் முழு உடலையும் அப்போதுதான் பார்த்தேன். அவன் உடலில் உள்ள கெட்ட திரவங்கள் நீக்கப்பட்டு, நல்ல கலராக இருந்தது. தேகமும் கைகளும் கன்னத்தில் லேசாக ருஜ் தடவப்பட்டு வாய் லேசாகச் சிரிப்பது போல் ‘க்ளிப்’ வைக்கப்பட்டு இருந்தது. தலை மயிர் மிக சுத்தமாகத் தழைய, படிய வாரப்பட்டு –
சேச்சா அற்புதமான சூட் அணிந்துகொண்டு இருந்தான். .
————————————————————————————————————-
இது போன்று எங்கு பிறந்தோம், எங்கு வளர்ந்தோம், எதற்கு இங்கு வந்தோம், இப்படி சீப்பாறுகிறோம்.. என்று நேற்று தான் நினைத்துக்கொண்டிருந்தேன்.. இப்போது இந்த கதை!
கண்ணில் நீர் முட்டுகிறது!
காலம் ஒவ்வொருவரையும், எங்கேயோ பிறக்க வைத்து, எப்படியோ இளமை வாழ்க்கை வாழ்ந்து, பிறகு எங்கேயோ கண்காணாத இடத்தில் வேலை பார்த்து நிறைய சம்பாதித்து, அப்போதும் வாழ்க்கையை அனுபவிக்க முடியாமல், எங்கேயோ சட் என்று தூக்கிப்போட்டுவிடுகிறது.
என்ன காரணம் என்று யோசித்தால் ஒன்றும் பிடிபடுவதில்லை.
bandhu,
புதியவன் –
இந்தக்கதை மிக யதார்த்தமான நடையில்
வாழ்க்கையை பிரதிபலித்துக்கொண்டே சென்று
இறுதியில் அதிர்ச்சி தரும் உண்மையையும்
சொல்கிறது…
நீங்கள் சொல்வது போல் எனக்கும் அனுபவங்கள்
உண்டு; இன்னும் சிலருக்கும் இருக்கலாம்.
நான் என் வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்களையும்
பகிர்ந்துகொள்ள பல சமயம் நினைத்திருக்கிறேன்.
ஆனாலும் இன்னும் தைரியம் வரவில்லை. முழுதாக
உண்மையை சொல்வதற்கு தைரியம் வேண்டுமல்லவா ?
இறுதி வருவதற்கு முன் எழுதிவிட வேண்டும்….
இது போன்ற நல்ல சிறுகதைகளை நான் தேடிக்கொண்டே
இருக்கிறேன்…
நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதற்காக….
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
நண்பர்கள் யாராவது தங்கள் சொந்த – அல்லது
தாங்கள் சம்பந்தப்பட்டிருந்த அனுபவங்கள் குறித்து
எழுத விரும்பினால் . அதற்கான இடம் இந்த தளத்தில்
எப்போதும் உண்டு. அவற்றை தனியான இடுகையாகவே
கூட பிரசுரிக்க நான் காத்திருக்கிறேன்….
.
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
கதை என்பதையும் தாண்டி…. பொதுவா வாழ்க்கைல, அதிலும் வெளிநாட்டுல வாழும் நிலை வரும்போது ரொம்பவே அலர்ட் ஆக இருக்கவேண்டும். நம் ஊரில் உள்ள rules வெளிநாட்டிற்குச் சரிப்படாது. எத்தனை எத்தனைவிதமான நாடுகளிலிருந்து வரும் அல்லது செட்டில் ஆன மக்களோ நமக்குத் தெரியாது. Basically என்ன என்ன follow பண்ணவேண்டும் என்று கேட்டால்,
1. பொதுவா மற்ற நண்பர்களை வீட்டில் அனுமதிக்கக்கூடாது. பொது இடங்களில் சந்திக்கலாம், அல்லது ஒரு occasionல் வீட்டில் சந்திக்கலாம். அதிலும் வேற்று நாட்டினைச் சேர்ந்தவர்களுடன் பழகும்போது ரொம்பவே முன்னெச்சரிக்கை தேவை.
2. நிறைய தகவல்கள் தெரிந்திருக்கணும். நான் ஒரு தடவை லண்டனில் இரவு 7 1/2க்கு ஒரு இடத்தை நடந்து cross செய்யும்போது, ஒரு ஆஃப்ரிக்கன் (நம்மூர் மாதிரி இல்லை. டீசண்ட் டிரெஸ்) ஒவ்வொருவரிடமும் ஏதேனும் பவுண்ட்ஸ் கொடுக்கும்படி கேட்டுக்கொண்டிருந்ததைப் பார்த்து சட் என்று அந்த இடத்தைவிட்டு விலகினேன்.
3. ஆளரவம் இல்லாத சமயங்களில் இரயில் நிலையங்களில் (tube or metro) போவதைத் தவிர்க்கணும். எந்தக் காரணம் கொண்டும், யாருக்கும் ஏர்போர்ட்டிலோ அல்லது பயணத்தின்போதோ உதவி செய்வதில்லை. இந்தப் பையை வைத்திருங்கள், கையில் குழந்தை இருக்கிறது, வெளியில் வரும்வரை இதனைக் கொண்டுவரமுடியுமா என்ற எந்த உதவியையும், including conveyor beltல இருந்து இந்தப் பெட்டியை எடுத்துத் தாருங்கள் உட்பட.
4. எனக்குத் தெரிந்தவன், நாங்க எல்லாரும் சாதாரண background உள்ளவங்க, என்னைவிட நல்லா படித்து நல்ல வாய்ப்பு வந்து அமெரிக்கா சென்று நல்ல வேலை கிடைத்து, திடுமென ஆன்மா, சித்து இதில் ஆர்வம் காண்பித்து, கூடுவிட்டு கூடுபாயும் விதத்தில் முயற்சி செய்து கடைசியில் அவனது flatல் செத்துக்கிடந்திருக்கிறான். திருமணம் ஆகவில்லை. இதுக்குத்தானா இவ்வளவு முயற்சி செய்து நல்ல நிலைக்குப் போனது, என எனக்கு அப்போது தோன்றியது.
இதெல்லாம் மீறி, எனக்கு பயத்தை உண்டாக்கியவைகளும் நடந்திருக்கின்றன. தெரியாத நாட்டில், இரவில், தவறான exit மூலமாக வெளியில் வந்து, ஆளரவமே இல்லாமல், எப்படி திரும்ப நம் ஹோட்டலுக்குச் செல்வது என்பது போல…
I am sure இந்தக் கதை எழுத, அவருக்கு, அவர் கேள்விப்பட்ட நடந்த சில சம்பவங்கள் துணையாக இருந்திருக்கணும்.
புதியவன்.
பல சமயங்களில் பல்வேறு நாடுகளுக்கு
மேற்கொண்ட பயண அனுபவங்களின் பலன்
உங்கள் குறிப்புகளில் தெரிகிறது. தற்போது
வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கும் இனி
பயணம் செய்யக்கூடியவர்களுக்கும் உங்கள்
யோசனைகள் மிகவும் உபயோகமானதாக
இருக்கும்.
மிகுந்த அக்கறையோடு நீங்கள் இவற்றை
இங்கே எழுதியதை நான் நன்றியோடு
வரவேற்கிறேன்.
.வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
படிச்சிருக்கேன், இப்போவும் கண்ணீருடன் படிச்சேன்.
On this. author Paulo Coelho’s The Alchemist is somewhat interesting.It deals with a shepherd boy from Andulasia goes in search of buried treasure under a pyramid in Egypt and what happens. most of us are like him.Thiruvengadam Thirumalachari
Sir.
I had experience closer to this. It happened when I was in US for the first time.
I was going for a walk with my colleague and received a call from another friend who wants to talk to my colleague. I gave my phone and they finished conversation.
After the call I asked what happened to his mobile. He said that the area where we go for walk is notorious for snatching and so he avoided carrying mobile and wallet. But he never explained this to me when he invited me for walk. ( In US – if you do not know your living conditions it is your fault and there will be no warning from others – as I observed)
When we discussed next day in office about this scenario, many suggested me not to carry / wear any valuables but to have a 5 dollar note. If the snatcher notice that we do not have any, they will hit us for being worth less.
I read this story earlier also.
ரகுராமன்,
நான் கூட இந்த ‘mugging’ சம்பந்தமாக நிறைய
கேள்விப்பட்டிருக்கிறேன்… படித்திருக்கிறேன்…
துரதிருஷ்டவசமாக இதில் சிக்கிக்கொள்பவர்கள்
பெரும்பாலும், வெளிநாட்டு அப்பாவி மனிதர்களே
என்பது தான் வருத்தம் தருகிறது.
மனிதாபிமானமற்ற ஒரு கூட்டம்.
அக்கறையற்ற ஒரு அரசமைப்பு.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்