தமிழ் நாட்டில் முதல் முறையாக கூட்டணி மந்திரிசபை அமையுமா….?

….
….

….

….

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் எப்படி இருக்குமென்று
நிறைய சர்வே ரிப்போர்ட்டுகள் வருகின்றன.

தமிழக அரசியலைப்பற்றி அரிச்சுவடி கூடத் தெரியாத
Times Now போன்ற மீடியாக்கள் கூட சகட்டுமேனிக்கு
சர்வே ரிப்போர்ட்டுகளை வெளியிடுகின்றன.

ஆனால் அனைத்துமே –
ஒன்றை மட்டும் மறக்கவில்லை –

” ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி 150 இடங்களுக்கு
மேல் பெற்று ஆட்சி அமைக்கும்….!!! ”

சர்வேக்கள் என்ன சொன்னாலும், களநிலவரம் வேறு மாதிரி
இருப்பதாகவே தெரிகிறது.

துவக்க காலங்களில், திமுக வெகு சுலபமாக வெற்றி பெற்று
ஆட்சியை கைப்பற்றும் என்று தோன்றினாலும், (எனக்கு கூட
அப்படித்தான் தோன்றியது….!!!) –

தேர்தல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்ததும், எடப்பாடியார்
ஸ்டாலினை (திமுகவை) திணற அடித்துக் கொண்டிருக்கிறார்
என்றே தோன்றுகிறது….

துரதிருஷ்டவசமாக ஸ்டாலின் பேச்சும், நடை, உடை
பாவனைகளும் மக்களை கவரும் விதத்தில் இல்லையென்றே
தோன்றுகிறது….முகத்தில் எந்தவித உணர்வுகளும் இல்லாமல்,
எங்கே போனாலும், எதைப்பற்றி பேசினாலும், மனப்பாடம்
பண்ணி ஒப்புவிக்கும் ஒரு மாணவனைப்போல பேசுகிறார்.
மக்களிடமும் சரி, கட்சிக்காரர்களிடமும் சரி –
ஒட்டாமலே பழகுகிறார். அவரைப்பார்க்கும்போது பல
சமயங்களில் ஒரு ROBOT இயங்குவது போன்ற
உணர்வு தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை.

கிட்டத்தட்ட கடந்த 4 வருடங்களாக ஸ்டாலின் –
ஒரே மாதிரி தான் பேசுகிறார்.

” வெகு சீக்கிரம் அதிமுக ஆட்சி தொலையும்.
திமுக ஆட்சியமைக்கும்….”

மேலும் – பக்கத்தில் துரைமுருகன், எ.வ.வேலு,
பொன்முடி, நேரு, டி.ஆர்.பாலு, கே.என். நேரு போன்ற –

திமுக ஆட்சியில் மந்திரிகளாக இருந்து, கொடிகட்டிப்பறந்து
கோடீஸ்வரர்களாக மாறிய ஊழல் மன்னர்களை
வைத்துக்கொண்டு, எடப்பாடியார் அரசின் மீது ஊழல் புகார்
சொல்வதை மக்கள் சீரியசாக எடுத்துக்கொள்வதாக
தெரியவில்லை.

இதற்கு நேர் மாறாக, எடப்பாடியார் மிகவும் எதார்த்தமான
மனிதராக இருக்கிறார்…. “பந்தா” என்பதே
அவரிடம் இல்லை; எங்கே போனாலும் –

மக்களிடம் மிகவும் சரளமாகப் பேசுகிறார்…. தான் சொல்வதை
அவர்களுக்குப் புரியும்படி சொல்கிறார். தங்கள் ஆட்சியில்
மக்களுக்குச் செய்த நன்மைகளைப்பற்றி பேசும்போது,

– கூடவே, திமுக ஆட்சியில் இருந்தபோது சாதாரண மக்கள்
எந்தெந்த விதங்களில் எல்லாம் தொல்லைப் படுத்தப்பட்டனர்
என்பதை நினைவுபடுத்துகிறார். மீண்டும் திமுக ஆட்சிக்கு
வந்தால், மக்கள் பழைய திமுக ஆட்சியின் அனுபவங்களை
மீண்டும் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதை
நினைவுபடுத்துகிறார். நடுவயதினரும், முதியவர்களும்
திமுக ஆட்சியின் அவலங்களை –
முக்கியமாக 18 மணி நேர பவர் கட் – கட்சியினரின்
ரவுடித்தனம் போன்றவற்றை அனுபவத்தில் உணர்ந்திருந்தாலும்
மறந்திருக்க வாய்ப்பு உண்டு. எடப்பாடியார் அதைப்
புரிந்துகொண்டு, இப்போது நினைவுபடுத்துகிறார்.

மேலும், 4 ஆண்டுகளாக பதவியில் இருந்தாலும் கூட
எடப்பாடியார் ஆட்சியின் மீது மக்களுக்கு எந்தவித
வெறுப்போ -எரிச்சலோ இருப்பதாகத் தெரியவில்லை.
பொதுவாக, தேர்தல் சமயங்களில் – ஆளும்கட்சிக்கு,
ஆட்சிக்கு எதிராக வீசக்கூடிய எதிர்ப்பு அலைகள்
எதையும் இப்போது காணவில்லை. இது அதிமுக-வுக்கு
ஒரு பெரிய advantage.

தற்போதைய கள நிலவரத்தைப் பார்க்கும்போது
கிட்டத்தட்ட இரண்டு கட்சிகளும் சம பலத்தில் இருப்பதாகவே
தோன்றுகிறது.

ஒரு பக்கம் பார்க்கும்போது, இரண்டு கட்சிகளுக்குமே
தனிப்பட்ட மெஜாரிடி பலம் கிடைக்காது என்று தோன்றுகிறது.

ஒன்று 100-105 அளவிலும், மற்றொன்று 105-110 அளவிலும்
பெறக்கூடும் நிலை உருவாகலாம்.

அப்படிப்பட்ட நிலையொன்று உருவானால்,
அதிமுக – பா.ம.க.வையும், இன்னும் உதிரிக்கட்சிகளையும்
சேர்த்துக்கொண்டு, கூட்டணி அரசை அமைக்கத் தயாராகவே
இருக்கும். எடப்பாடியார் அதற்கும் தயாராகவே இருப்பார்
என்பதில் சந்தேகமில்ல…

ஆனால், திமுக – கூட்டணி ஆட்சிக்கு தயாராக இருக்குமா…?
விசிக, மதிமுக, கம்யூனிஸ்டு கட்சிகள் ஆகியவற்றை
தனக்கு சமமாக – அமைச்சரவையில் சேர்த்துக்கொள்ள
ஸ்டாலின் தயாராக இருப்பாரா..?
அவரது ஈகோ அதற்கு இடம் கொடுக்குமா…?

இந்த தடவை தமிழக தேர்தல் முடிவுகள் கொஞ்சம்
வித்தியாசமாகவே இருக்குமென்று தோன்றுகிறது.
திமுக, அதிமுக – ஆகிய இரண்டு பெரிய கட்சிகளுக்குமே
தனிப்பட்ட மெஜாரிடி பலம் கிடைக்காமல் போகலாம்…

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் நண்பர்களே…?

.
———————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

10 Responses to தமிழ் நாட்டில் முதல் முறையாக கூட்டணி மந்திரிசபை அமையுமா….?

 1. Rehim சொல்கிறார்:

  நினைப்பதற்கு ஒன்றுமில்லை அய்யா..
  உங்கள் ஆராய்ச்சி உண்மை என்றால் ஈபிஎஸ் அமோக ஆதரவுடன் ஜெயிக்க வேண்டுமே ஏன் பாதியுடன் நிறுத்திவிட்டீர்கள்.
  உங்கள் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தியுள்ளீர்கள்.
  ரிசல்ட் வரும் நேரத்தில் தலையை காண்பிப்பீர்கள் என்று நம்புகிறேன்

 2. வணக்கம் தமிழா சொல்கிறார்:

  மெல்ல மெல்ல அசைந்து வரும் எடப்பாடியருக்கான ஆழி அலை சுழன்று அடிக்க தயாராகிக்கொண்டிருக்கிறதற்கான அறிகுறிகள் நாளுக்கு நாள் வந்த வண்ணமே இருக்கிறது.

  தற்போது மிக வேகமா வைரல் ஆகிக்கொண்டிருக்கும் சமீபத்திய முக்கிய சம்பவங்கள் சில ………………………..
  *****************************************************************************************************************
  “1.ஆன்டிமுத்து ராஜாவின் கீழ்த்தர பேச்சி- நல்ல உறவில் சுக பிரசவம் ஸ்டாலின் , கள்ள உறவில் குறை பிரசவமாம் எடபடியார்
  2. ஆன்டிமுத்து ராஜாவின் கீழ்த்தர பேச்சி- ஸ்டாலின் போடும் செருப்பு எடப்பாடியரை விட ஒரு ரூபாய் விலை அதிகம் என்ற செருப்புடன் ஒப்புமை படுத்தியது.
  3. செந்தில் பாலாஜி வரும் முன் அதிகார பேச்சு- 11. மணி ஸ்டாலின் வந்த உடன் 11.05 க்கு மணல் அல்ல போகலாம் என்ற பேச்சு, அதிகாரிகள் தடுத்தல் அடுத்த நிமிடம் அவர் அங்கே இருக்க மாட்டார்.
  4. 259 தேர்தல் வாக்குறுதியும் , திருமாவின் திருப்திக்கும் அவர்களின் ஒட்டுக்கும் – ஏற்கனவே இருக்கும் சாதாரண கலப்பு (independent inter caste marriage)திருமணத்திற்க்கு ஊக்கத்தொகை 30,000 என்பதை மாற்றி அஞ்சுகம் அம்மாள் பெயரில் ஒரு குறிப்பிட்ட சாதியுடன் திருமணம் – இதற்க்கு கடுமையான விமர்சங்கள் எழுந்துள்ளதை பார்க்கிறோம்(ஆதிதிராவிடர் எவரும், பிற இனத்தவரை திருமணம் செய்தால் ரூ. 60,000 பணமும், 1 பவுன் தங்கமும் பரிசு (திமுக தேர்தல் அறிக்கை எண் 259).”
  *****************************************************************************************************************
  5. எடப்பாடி அவர்களின் ஆட்சியை விமர்சிப்பதை விட்டு விட்டு அவர் பல்லி போல தவாழ்ந்து வந்திட்டார், குறைப்பிரசவம், செருப்பு உதாரணம் , பாஜகவின் அடிமையாக இருக்கிறார் என்பதெல்லாம் இந்த முதலைச்சர் ரேஸுக்கு எப்படி வலுவாக அமையும் என்பது எல்லாம் thousand times questions. இன்னும் திமுக பழைய டாக்டிஸ் மாதிரியே பெர்சோனாலிட்டி டேமேஜ் பண்ணிட்ருந்தா(மலையாளி எம்ஜியார், மரமேறி காமராஜ்,யானைத்தோல் காமராஜ், இந்திராவின் மா-ரத்தம்….) மறுபடியும் கூப்பு தான். முக்கியமா ஆ ராசா வுக்கு கொழுப்பு குறைக்க எப்படா 2ஜி வரும்னு இருக்கு(ஏப்ரல் 4 தானே தீர்ப்பு ?)
  6. திமுகவினருக்கு இது புதுவிதமான தேர்தல். இந்துக் கடவுளர்களை திட்டுவதும், சிறுபான்மையினரை தாஜா செய்வதும் தான் அவர்களது இதுவரையிலான அரசியல்.
  இந்த தேர்தலில் இந்துக்களை தாஜா செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள் எனில், களம் வேறு மாதிரி உள்ளது என்பது வெளிப்படை………………………………………

  திமுகவில் அறிவுஜீவிகள் என்றெல்லாம் யாரும் தற்போது இல்லை. அவர்களது பிரச்சாரத்தில் லியோனி, ஆ.ராசா, உதயநிதி போன்றோர் பேசுவதைப் பார்த்தாலே இது தெரியும்ங்க . திமுகவிற்கு இனி தமிழகத்தில் இடம் இருக்காது. ஸ்டாலினுக்குப் பிறகு முற்றிலுமாக அந்தக் கட்சி செல்வாக்கை இழக்கும் அபாய அறிகுறிகள் வந்துவிட்டது என்றே நினைக்கிறேன். 10 வருட ஆட்சிக்கு பிறகும் neck to neck தேர்தல் ஒரு புதுமை தான். சாமி vs ஸ்டாலின் ரேஸ் இன்டரெஸ்டிங் !!!!!!!

 3. வணக்கம் தமிழா சொல்கிறார்:

  இந்து மதத்திற்கு ஆன்மீக பணிகள் செய்ய காத்து இருக்கிறோம் – ஸ்டாலின்
  ஓ…! இந்த ஆளும் சங்கி தானா????!!!!!

  களம் மாறிவிட்டது என்பதற்கான ஆதார அறிகுறியில் ஒன்று.

 4. வண்ணக்கம் தமிழா சொல்கிறார்:

  ஸ்டாலின் திரும்பத்திரும்ப தங்களது கூட்டணி கட்சியினரை வெற்றிபெற செய்யவேண்டும் என்கிறார் எனில், அவங்களை எல்லாம் தோற்கடிங்க உபி-க்களே என சிக்னல் தருகிறார் என்று அர்த்தம்…!!!!!!
  திமுகவுக்கென ஓர் வரலாறு உண்டு……!!!! இதுவே திமுகவின் கூட்டணி தர்மம்.

 5. bandhu சொல்கிறார்:

  என்ன நிலவரம் என்று அயல் நாட்டில் இருப்பதால் தெரியவில்லை. தெளிவான ஒரு ரிசல்ட் வருமா என்றும் தெரியவில்லை. ஸ்டாலின் பேசுவதை / body language நீங்கள் சொன்ன மாதிரிதான் இருக்கிறது. ஆனால், நன்றாக பேசினால் மட்டும் போதுமா என்று தெரியவில்லை. எடப்பாடி நான்கு வருடமாக பதவியில் இருந்ததை சொல்லி ஓட்டு கேட்கலாம் என்பதே இந்த காலத்தில் பெரிய விஷயம்!

  குழப்பமாக இருக்கிறது!

 6. புதியவன் சொல்கிறார்:

  கா.மை சார்… நான் அரசியல் நடப்புகளைக் கூர்ந்து கவனித்து வருகிறேன். தலைவர்கள் பேச்சுக்களையும்தான்.
  1. எடப்பாடியார் மீது மக்களுக்கு வெறுப்பில்லை என்பது உண்மை.
  2. ஸ்டாலின் கவர்ச்சியான பேச்சோ, திறமையோ இல்லாமல் இருக்கிறார். சொந்தபாகச் சிந்திக்காமல் பிகே இழுத்த இழுப்புக்குச் செல்கிறார். அவரது குற்றச்சாட்டுகள் அர்த்தமில்லாதவை என்பதும் உண்மைதான். கூரை ஏறிக் கோழி பிடிக்க முடியாதவன் நிலைதான், அவர் சொல்லும், “ஸ்டாலின்தான் வர்றாரு விடியல்தான் தரப்போறார்” விளம்பரம்.
  3. பாஜகவிற்கு முஸ்லீம், கிறித்துவ எதிர்ப்பு 85 சதத்திற்கு மேல் இருக்கு. இதன் காரணங்களையும் பட்டியலிட முடியும். மதமாற்ற மற்றும் பிற பிஸினெஸ்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டதன் விளைவு இது. இந்துக்களிலும், தமிழக திராவிடச் சிந்தனையால், பாஜக ஒரு ஏலியன் கட்சியாக தமிழகத்துக்கு இருக்கு.
  4. பாஜகவுடன் அதிமுக கூட்டு வைத்ததால், அது நடுநிலை பொதுமக்களின் ஆதரவை இழக்கிறது. இது பத்து சதவிகிதம் வரையில் (அதற்குள்ள 45 சதவிகித்த்தில்) அதிமுகவுக்கு சேதாரத்தை உண்டுபண்ணுகிறது. தினகரன் தனியாக 5 சதவிகித சேதாரத்தைத் தருவார்.
  5. கூட்டணிகளைவிட கான்சப்ட்தான் இந்தத் தேர்தலின் முடிவைத் தீர்மானிக்கிறது.
  6. திமுக 150+, அதிமுக 40 என்றுதான் தேர்தல் முடிவு இருக்கும்.
  7. பாஜக, தனிப்பட்ட முறையில் களப் பணியாளர்களைக் கொண்டு வளர ஆரம்பித்துவிட்டது. இது இந்துக்களுக்கான வாக்குகளின் 20 சதவிகித்த்தையாவது எதிர்காலத்தில் பெறும் (அதாவது மொத்த வாக்குகளில் பத்து சதம். இது இப்போ அல்ல). நிச்சயம் தமிழகம் மத ரீதியான வாக்குகள் பிரியும் நிலைமைக்கு ஐந்து-பத்து வருடங்களில் செல்லும். இந்து மத்த்திற்கான ஒரு குரல் என்ற அளவில் மட்டும்தான் இதனை வரவேற்கிறேன்.
  8. பாஜக கூட்டணியில் இல்லாமலிருந்தால் அதிமுக அணி 70-80 வாங்கியருக்கலாம். ஆக மொத்தம் இந்தத் தேர்தல் திமுகவுக்கான வெற்றியைக் கொடுக்கும்.

  இதற்கு முதன்மைக் காரணம் தனிப்பட்ட தலைவர் இல்லாத்துதான். ஒருவேளை 50 வயது ரஜினியோ இல்லை அஜித்தோ, விஜயகாந்தோ (உதாரணத்துக்கு) புதிதாக களத்தில் தீவிரமாக இறங்கியிருந்தால், 15 சதவிகித(வாக்கு சதவிகிதம்) ஓரளவு லெவல்ஹெட்ட் பொதுமக்கள் திமுகவை விரும்பவில்லை என்பது கிளியராகத் தெரிந்திருக்கும். இது ஸ்டாலினுடைய லக் என்று நினைக்கிறேன்.

 7. புதியவன் சொல்கிறார்:

  Another thing worth mentioning is, குணசேகரன்கள் (திமுக சிந்தனை, கட்சி சார்பு ஆனால் நடுநிலை என்ற பெயரில்) பல்வேறு தொலைக்காட்சி பத்திரிகை இணைய ஊடகங்களில் ஊடுருவி, திமுக சார்பான செய்திகளை நிறைய பரப்புகிறார்கள், பாஜக, அதிமுக சார்பான செய்திகளைப் போடுவதில்லை, தங்கள் கருத்துக்களை, தங்களுக்கு fund பண்ணும் எஜமானர்களின் கருத்துக்களை, கட்டுரைகள் போல வெளியிடறாங்க. இதற்குக் காரணம் ஒருவேளை சிறுபான்மையினர் சார்பானவர்கள் இந்த மீடியாக்களில் அதிகமாக இருப்பதோ இல்லை ஓனராக இருப்பதோ காரணமாக இருக்கும்.

  ஓரளவு நடுநிலைச் செய்திகளை எதில் படிக்கலாம் என்பதில் குழப்பம் இருக்கிறது. பெரும்பாலும் ஆங்கில செய்தித் தளங்களுக்குப் போகவேண்டியிருக்கு. தமிழில் உங்களுக்குத் தெரிந்து ஏதாவது ஓரளவு நடுநிலையான செய்தித்தளம் இருக்கிறதா?

 8. காவிரி கோயிந்தன் சொல்கிறார்:

  ஏன் சுற்றிவளைத்து எழுதுறீங்க. நேரடியாகவே நம்ம அதிமுக-தான் 234 தொகுதிகளிலும் ஜெயிக்கும்னு எழுதலாமே.

 9. Sithalapakam Velan சொல்கிறார்:

  வழக்கமாக ஆதாரங்களை வைத்து நடுநிலைமையாக எழுதக்கூடியவர்தான் கா.மை அவர்கள்.
  இந்த இடுகை அவ்வாறு தெரியவில்லை.

  கட்சி சாராமல் தென் சென்னை சித்தாலப்பாக்கத்தில் சமூகசேவையில் உள்ளேன். அதனால் மக்களுடன் நெருக்கம்.
  பெரும்பாலும் புதியவன் சொன்ன கருத்துக்கள்தான் எதிரொலிக்கிறது.

  அதிமுக மேல் கடும் கோபம் இல்லாவிட்டாலும் பாஜக மேல் உள்ளது. ஸ்டாலினை இன்னும் நம்பிக்கையுடன் பார்பதாகவே படுகிறது. தமிழ் மக்கள் என்ற தனித்துவ அடையாளம் இன்னும் கொண்டாட படுகிறது. பாஜக இதை இன்னும் விளங்கவில்லை. அதிமுக ஒருவேளை துணிச்சலோடு தனியாக நின்றிருந்தால் அதை மக்கள் வரவேற்றிருப்பார்கள்.

 10. Selvadurai Muthukani சொல்கிறார்:


  ஸ்டாலின் அவர்களின் தேர்தல் பிரச்சார பேச்சை முழுவதும் கேளுங்கள். ஏற்கனவே நாட்டை பலவருடங்கள் ஆண்ட ஒரு கட்சியின் தலைவர் தற்போது ஆளும் கட்சியின் மீதான விமரிசனங்களை அள்ளி வீசுவதைத் தவிர வேறு எந்த புதிய கருத்தையும் இவர் தெரிவிக்கவில்லை. இவர் ஆட்சிக்கு வந்தால் புதியதாக நாட்டுக்கு என்ன செய்வார் என்கின்ற ஒரு விளக்கமும் இவர் உரையில் இல்லை. வெறும் வேட்டிப்பேச்சு மட்டுமே காணப்படுகிறது. அதிமுகவினர் பேசும்போதும் கூட இவர்களின் ஆட்சியின் போது நடந்த வண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏற்றுவார்கள். ஒருவர் மீது ஒருவர் சேற்றை வாரி இறைப்பது மட்டுமே இவர்களின் தேர்தல் பிரச்சாரம். இவர்கள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் முன்வைக்கும் விமரிசனங்களைகேட்கும்போது விவரமான எவருக்கும் இருவரின் மீதும் அருவருப்பு மட்டுமே ஏற்படும். தமிழ்நாட்டு மக்கள் இவர்கள் இருவரையுமே தயவு தாட்ச்சண்யம் இல்லாமல் தூக்கி எறியவேண்டும். புதியவருக்கு வாய்ப்பு அளித்து இவர்களுக்கு புத்தி புகட்டவேண்டும். தற்போது களத்தில் இருப்பவர்களில் சீமான் ஒருவர் மட்டுமே தெளிவான முன்னோக்குப் பார்வையுடன் இருக்கிறார். இவருக்கு ஒரு வாய்ப்பளிப்பதே தமிழ்நாட்டுக்கு நன்மை பயக்கும் என்பது என் கருத்து. அவருடைய செயல்பாடு சரியில்லையெனில் அடுத்தமுறை வாய்ப்பளிக்காமல் அவரையும் தூக்கி எறிந்துவிட்டு அப்போது களத்தில் இருக்கும் வேறு ஒரு புதியவருக்கு வாய்ப்பளிக்கலாம். தமிழ்நாடு மிகவும் பலமான ஒரு மாநிலம். யாரும் அவ்வளவு எளிதில் இதனை நிலைகுலையச்செய்துவிட முடியாது. ஐம்பது ஆண்டுகளாக நம்மை ஆண்டவர்கள் சுயநலத்துக்கே முன்னுரிமை கொடுத்து நம்மை தலைகுனிய வைத்துவிட்டார்கள். ஆலமரம்போன்று கால் ஊன்றிவிட்ட இவர்களை இன்னும் தாமதித்தால் அகற்றமுடியாத அளவுக்கு வலுப்பெற்றுவிடுவார்கள். இப்போதுதான் நல்ல சந்தர்ப்பம், இவர்களை கூண்டோடு கைலாசம் அனுப்ப. ஒவ்வொருவரும் சுய அறிவோடு சிந்தனை செய்து தகுதியான ஒரு புதியவரை தேர்வு செய்து இந்த சுயநல வாதிகளை அதிகாரம் பெறாமல் விரட்டி அடிக்கவேண்டும் என்பதே எனது தாழ்மையான வேண்டுகோள். மாற்று சிந்தனை உள்ள உறவுகள் அறிவார்ந்த தங்களின் கருத்தை பதிவு செய்தால் தேர்தல் காலத்தில் இளைய தலைமுறைக்கு ஒரு வெளிச்சம் கிடைக்கும் என்பது என் கருத்து.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.