கமல்ஹாசனின் அரசியல் ….

….
….

….

கரையேறுவாரா கமல்? என்கிற தலைப்பில்,
மின்னம்பலம் செய்தித்தளத்தில் வந்திருந்த ஒரு
செய்திக்கட்டுரை ஓரளவு நன்றாக இருந்தது….

நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்….

———————————————-

‘‘விதை விதைச்சவுடனே பழம் சாப்பிடணும்னு நினைக்க முடியுமோ…
இன்னிக்கு நான் விதைக்கிறேன். நாளைக்கு நீ பழம் சாப்பிடுவ… அதுக்கு
அப்புறம் உன் மகன் சாப்பிடுவான்… அப்புறம் அவன் மகன் சாப்பிடுவான்.
அதைப்பார்க்க நான் இருக்க மாட்டேன்… ஆனா, விதை நான் போட்டது!’’

இது தேவர் மகன் படத்தில் சிவாஜி பேசும் வசனம். அந்த வசனத்தை
எழுதியதும் கமல்தான். அதை அவரே மேடையில் சொல்லியிருக்கிறார்.

அரசியலில் கால் பதித்து, கட்சியைத் துவக்கியதும் தமிழக மக்கள்
நலனுக்காக நான் போட்ட விதைதான் என்றும் அவரே விளக்கியும்
இருக்கிறார். ஆனால் அவர் விதைத்த விதை, வளர்ந்து மரமாகி கனிகள்
தரும் அளவுக்கு வளருமா என்பதுதான் இப்போது சந்தேகமாக
இருக்கிறது. கட்சி துவக்கிய 15 மாதங்களில் கமல் சந்தித்த முதல்
தேர்தல் 2019 நாடாளுமன்றத் தேர்தல். அதிலேயே அவருடைய கட்சி 16
லட்சம் வாக்குகளைப் பெற்றிருந்தது. தமிழகத்தில் மொத்தம் 11
நாடாளுமன்றத் தொகுதிகளில் கமலின் கட்சி, மூன்றாவது இடத்தைப்
பிடித்தது. அவற்றில் கோவை, ஈரோடு, நீலகிரி, பொள்ளாச்சி, சேலம்,
திருப்பூர் ஆகிய ஆறு தொகுதிகளும் கொங்கு மண்டலத்தில் இருக்கும்
தொகுதிகள்.

அதிலும் கோவையில்தான் அதிகபட்சமாக ஒரு லட்சத்து 45 ஆயிரத்து
104 வாக்குகள் பெற்றிருந்தது. சென்னையில் உள்ள மத்திய சென்னை,
வட சென்னை, தென் சென்னை ஆகிய மூன்று தொகுதிகளிலும் மக்கள்
நீதி மய்யத்துக்கு மூன்றாமிடம் கிடைத்திருந்தது.

இதிலிருந்தே நகர்ப்புறத்தில் படித்த மக்கள் மத்தியில்தான்
கமல் கட்சிக்கு வாக்கு வங்கி இருக்கிறது என்பது தெள்ளத்தெளிவாகத்
தெரிந்து விட்டது.

ஆனால் அதிசயமான ஒரு முரண்நகை என்னவென்றால்,
தமிழகத்திலேயே கல்வியறிவு அதிகமுள்ள கன்னியாகுமரி
மாவட்டத்தில்தான் அக்கட்சி மிகக்குறைவான வாக்குகளைப்
பெற்றிருந்தது.

கோவையில் அதிகமான வாக்குகள் வாங்கிய நம்பிக்கையில்தான்,
கோவை தெற்கு தொகுதியை அவர் தேர்வு செய்திருக்கிறார். சென்ற 2019
நாடாளுமன்றத் தேர்தலில், மக்கள் நீதி மய்ய வேட்பாளர் மகேந்திரன்,
இந்தத் தொகுதியில் 23,800 வாக்குகள் பெற்றிருந்தார். தமிழகத்திலேயே
மிகவும் பாதுகாப்பான, வெற்றி வாய்ப்புள்ள தொகுதியாகக் கருதியே
இங்கு போட்டியிட கமல் முடிவு செய்துள்ளார். கோவை நகரில் அவர்
போட்டியிடுவதாக அறிவித்ததும் கோவை மக்களிடையே பெரு
மகிழ்ச்சியும், வரவேற்பும் ஏற்பட்டது.

வரலாறு காணாத வகையில், இந்தத் தேர்தலில் கொங்கு மண்டலமே
தேர்தலில் முன்னிலைப்படுத்தப்பட்டு வரும் நிலையில், கமல் இங்கு
போட்டியிடுவது மேலும் கவனம் பெற்றுள்ளது. கமலின் சொந்த ஊர்,
ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பரமக்குடி. அவர் வளர்ந்தது வாழ்ந்தது
எல்லாம் சென்னையில். ஊட்டி, கொடைக்கானல் ஆகிய ஊர்களில் கூட,
படப்பிடிப்புக்காக மாதக்கணக்கில் கமல் தங்கியிருக்கிறார். ஆனால் சதி
லீலாவதி படத்தில் கொங்கு பாஷை பேசி நடித்ததைத் தவிர, கமலுக்கும்
கோவைக்கும் பெரிதாக எந்தத் தொடர்புகளும் இல்லை. அவர் தேர்தலில்
நிற்பதாக இருந்தால் மயிலாப்பூரில் நிற்பார் என்றெல்லாம் பேசப்பட்டது.

ஆனால், யாரும் எதிர்பாராதவிதமாக கோவை தெற்கை அவர்
தேர்ந்தெடுத்ததற்கு அவரே ஒரு காரணமும் தெரிவித்துள்ளார்.

‘‘கோயம்புத்துார் எனக்கு மிகவும் பிடித்தமான ஊர். கொங்கு செழித்தால்
எங்கும் செழிக்கும் என்பது பழமொழி. இன்றைக்கு நிலைமை
மாறிவிட்டது. கொங்கு ஊழலின் கோட்டையாக மாற்றப்பட்டிருக்கிறது.
அதை மாற்றுவதற்காகவே அங்கு போட்டியிடப்போகிறேன்!’’ என்று
கோவையில் போட்டியிடுவதற்கு ஒரு காரணத்தையும் கமல்
தெரிவித்தார். உண்மையில் இந்தத் தேர்தலில், அதிமுக, திமுக இரண்டு
கட்சிகளும் கொங்கு மண்டலத்தைத்தான் அதிகமாகக் குறி
வைத்துள்ளன. அதற்குக் காரணம், கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில்,
அதிமுக ஆட்சியமைக்கவும், திமுகவுக்கு அந்த வாய்ப்பு
நழுவிப்போனதற்கும் காரணம், கொங்கு மண்டலத்தில் இரண்டு
கட்சிகளுக்கும் கிடைத்த வெற்றி தோல்விகள்தான்.

அந்த ஒரே காரணத்தால்தான், ஜெயலலிதா இருக்கும்போதே, கொங்கு
மண்டலத்தைச் சேர்ந்த எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன்,
வேலுமணி, தங்கமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், கருப்பணன், உடுமலை
ராதாகிருஷ்ணன் என எல்லோருக்கும் மிகவும் பசையுள்ள துறைகளை
வாரி வழங்கினார். அவர் மறைந்த பின், அதே கொங்கு மண்டலத்தைச்
சேர்ந்த எடப்பாடி பழனிசாமி, அந்தப் பதவியைக் கைப்பற்றியதற்கும்
காரணம் அந்த பசைதான் என்பது ஊரறிந்த ரகசியம். இந்தத் தேர்தலில்
தமிழகத்தில் வேறு எந்தப் பகுதியில் தங்களுக்கு வெற்றி கிடைத்தாலும்
கிடைக்காவிட்டாலும் கொங்கு மண்டலத்தில் அதிகமான தொகுதிகளைக்
கைப்பற்ற முடியுமென்று அதிமுகவின் மிக முக்கியத் தலைகள்
நம்புகிறார்கள்.

அதேபோல, 2016 சட்டமன்றத் தேர்தலில் தங்களைக்
கைவிட்ட கொங்கு மண்டலத்தில் இந்த முறை பாதியையாவது
கைப்பற்ற வேண்டுமென்று திமுகவும் தீவிரமாகப் போராடுகிறது.

இவ்விரு கட்சிகளின் தலைவர்கள், தமிழகத்தின் மற்ற பகுதிகளை விட
கொங்கு மண்டலத்தில்தான் அதிகமாக பரப்புரை செய்கிறார்கள்.

இப்போது கமலும் இங்கு களம் இறங்கியிருப்பது, கொங்கு மண்டலத்தை
வைத்தே தமிழக அரசியல் பின்னப்படுகிறது என்பதை மீண்டும் உறுதி
செய்திருக்கிறது. ஆனால் இரண்டு கட்சிகளையும் தாண்டி கமலால்
இங்கு எந்தளவுக்கு வாக்குகளை வாங்க முடியுமென்ற கேள்வியும்
எழுந்திருக்கிறது. கல்வியிலும், பொருளாதாரத்திலும் மற்ற நகரங்களை
விட, பல அடிகள் முன்னே நிற்கும் கோவையில் கமலின் அரசியல்
வியூகம், எந்தளவிற்கு வெற்றி பெறுமென்பதை இப்போது கணிக்க
முடியவில்லை.

ஆனால் கமல் நினைப்பதைப் போல கோவை ஒன்றும்,
சாதியையும், மதத்தையும் முற்றிலுமாக மறுக்கிற முற்போக்குச்
சிந்தனைக்குரியவர்களைக் கொண்ட நகரம் என்று சொல்லிவிட
முடியாது.

இன்னும் சொல்லப் போனால், தென்மாவட்டங்களில் இருப்பதை விட
இங்கு சாதிய உணர்வு அதிகம். இப்போது கொங்கு மண்டலத்திலுள்ள
அமைச்சர்களில் உடுமலை ராதாகிருஷ்ணனைத் தவிர, மற்ற
அனைவருமே ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். அந்த
அமைச்சர்களில் பலருக்கு இருக்கும் சமுதாய உணர்வும், அதற்காக
அவர்கள் செய்துள்ள காரியங்களும் கொங்கு மண்டலத்தில் பல
விதமான சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் கிளப்பியிருப்பதும்
கமலுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

இதே கொங்கு மண்ணில்
இருக்கும் படித்தவர்கள், தொழில்முனைவோர் பலருக்கும், தற்போதுள்ள
அமைச்சர்கள் பலருடைய ஊழல் விவகாரங்களும், சொத்துக்குவிப்பும்
நன்றாகவே தெரியும். ஆனால் நம்முடைய ஆட்கள் அதிகாரத்தில்
இருக்கிறார்கள் என்பதால் அதைப் பற்றி பேசவே விரும்புவதில்லை.

இந்த அமைச்சர்களைக் குறி வைத்துத்தான் இப்போது கமல், ‘கொங்கு
ஊழலின் கோட்டையாக மாறிவிட்டது’ என்று சொல்லிக் கொண்டு அதை
மாற்றப்போவதாக கோவைக்கு வந்திருக்கிறார். கமல் சொல்வதைப்
போலவே, முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவங்கி, அமைச்சர்கள்
வேலுமணி, தங்கமணி என முக்கிய அமைச்சர்கள் அனைவரின் மீதும்
லஞ்ச ஒழிப்புத்துறையில் நிறைய புகார்களும் உள்ளன. பல்வேறு
வழக்குகள் உயர் நீதிமன்றத்திலும் விசாரணையில் இருக்கின்றன.

இவற்றில் பெரும்பாலான புகார்களையும், ஊழல் வழக்குகளையும்
தாக்கல் செய்திருப்பது திமுகதான். சென்னையை மையமாகக் கொண்டு
இயங்கும் அறப்போர் இயக்கமும் ஏராளமான தரவுகளைத் திரட்டி,
வழக்கு தொடுத்திருக்கிறது.

ஆனால் மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகள்
யாரும், அதிமுக அமைச்சர்கள் யார் மீதும் எந்த ஊழல்
குற்றச்சாட்டையும் தனிப்பட்ட முறையில் வைத்ததுமில்லை; அதற்கான
ஆதாரங்களையும் வெளியிட்டதில்லை. ஆர்டிஓ ஆபீசில் லைசென்ஸுக்கு
இவ்வளவு, தாசில்தார் ஆபீசில் சாதிச்சான்றுக்கு இவ்வளவு, வாரிசு
சான்றுக்கு இவ்வளவு என்று பட்டியல் வெளியிட்ட ‘கொங்கு ஊழலின்
கோட்டை’ என்பதற்கு எந்த ஆதாரத்தையும் ஏன் வெளியிடவில்லை
என்று கோவை மக்கள் கேட்கிறார்கள். அதுபோல வேலுமணியை
எதிர்த்து அவர் ஏன் போட்டியிடவில்லை என்றும் சமூக ஊடகங்களில்
சராமாரியாக கமலுக்குக் கேள்விகள் எழுப்பப்பட்டன.

அவர் கோவைக்கு வேட்புமனுத் தாக்கல் செய்துவிட்டு பேட்டி
கொடுத்தபோதும், அன்றிரவு பொதுக்கூட்டத்தில் பேசியபோதும் இதுபற்றி
எதையுமே அவர் தெளிவாகப் பேசவில்லை. வழக்கம்போலவே
அவருடைய பேச்சு, யாருக்கும் புரியாமல்தான் இருந்தது. கூட்டத்தில்
தெளிவாகப் பேசிய ஒரே நபர், பழ கருப்பையா மட்டுமே. அவரும்
அதிமுக ஆட்சியைப் பற்றியோ, அக்கட்சியின் ஊழலைப் பற்றியோ
அதிகம் பேசாமல், திமுகவையும் குறிப்பாக ஸ்டாலினையும்
தாக்குவதிலேயே அதிகமாகக் கவனம் செலுத்தினார்.

‘‘காதில் இருப்பதைப் பறித்துக்கொள்வான் அதிமுகக்காரன்; காதோடு
அறுத்துவிடுவான் திமுகக்காரன். இரண்டு திராவிடக்கட்சிகளுக்கும்
இடையில் கொள்ளையடிப்பதில் ரகசிய ஒப்பந்தம் இருக்கிறது. அதிமுக
ஆட்சியில் இருந்தால் தொடைக்கறி அவர்களுக்கு; எலும்புக்கறி
திமுகவினருக்கு. அதுவே திமுக ஆட்சிக்கு வந்தால் தொடைக்கறி
திமுகவினருக்கு; எலும்புக்கறி அதிமுகவினருக்கு. சாராய ஆலைகள்
நடத்தும் 10 அதிபர்களில் ஐந்து பேர் அதிமுகவினர்; ஐந்து பேர்
திமுகவினர். ஆட்சி மாறும்போது எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் மட்டும்
மாமூல் கொடுப்பார்கள்!’’

– என்று திராவிடக்கட்சிகளைப் பின்னிப்
பெடலெடுத்த பழ கருப்பையா , கமலை எதிர்த்துப் போட்டியிடும் வானதி
சீனிவாசனையும் வாங்கு வாங்கென்று வாங்கினார். ‘‘வானதியால்
டெபாசிட் கூட வாங்க முடியாது; பாரதிய ஜனதா நிற்கும் 20
இடங்களிலும் தோற்கும்’’ என்று ஆவேசம் காட்டி விட்டு
அமைதியாகிவிட்டார். அதிமுக அமைச்சர்களைச் சீண்டவே இல்லை.

அப்துல் கலாமின் ஆலோசகராக இருந்த விஞ்ஞானி பொன்ராஜ்,
சமீபத்தில் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்து அக்கட்சியின்
துணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் மட்டுமே அதிமுகவின்

ஊழல் பற்றித் தெளிவாகப் பேச்சைத் துவக்கினார். ஜெயலலிதா

இருக்கும்போது அவர் கேட்டுக்கொண்டபடி, ‘விஷன்–2023’ திட்டத்தைத்

தயாரித்துக் கொடுத்தது பற்றியும், அதுபற்றி அமைச்சர்கள்,

எம்எல்ஏக்களுக்கு வகுப்பு எடுத்தது பற்றியும் விளக்கிவிட்டு, ‘‘அந்த

திட்டங்களை செயல்படுத்துவதற்கு சிறப்புத் திட்டங்கள் அமலாக்கத்துறை

என்ற துறையை உருவாக்கச் சொன்னதும் நான்தான். அந்தத்துறைக்கு

வேலுமணியை அமைச்சராக்கினார் ஜெயலலிதா. அவர் மிக்ஸி,

கிரைண்டர், மின்விசிறிகளுக்கு 40 பர்சண்டேஜ் கமிஷன் வாங்கி,

கமிஷன் துறையாக மாற்றிவிட்டார்’’ என்று கமலின் குற்றச்சாட்டுக்கான

விஷயங்களை விளக்க ஆரம்பித்தார்.

ஆனால் அதற்குள் கமல் வந்துவிட்டதால்
அவருடைய பேச்சை அப்படியே நிறுத்திவிட்டனர்.

அதற்குப் பிறகு கமல் பேசியதும், அதற்கான அருஞ்சொற்பொருள்
புரியாமல் கோவை மக்கள் குழம்பியதும் மைக்கேல் மதனகாமராஜன்
குழப்பங்களை மிஞ்சுபவை.

கோவையில் ஏன் போட்டியிடுகிறீர்கள் என்று
நிருபர்கள் கேட்ட கேள்வியையும் அவரே கேட்டுக்கொண்டு,
‘ஏன் கூடாது என்பதுதான் என் பதில்’ என்றார் கமல்.

தமிழ்ச்சினிமாவை மாற்றுவதாக
22 வயதில் சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றியது போல, கோவை
தெற்கு தொகுதியையும், தமிழகத்தையம் மாற்றி அமைப்பேன் என்று
அவர் சொல்ல வந்ததும் ரொம்ப நேரத்துக்குப் பின்புதான் புரிந்தது.

தனிப்பட்ட தாக்குதலில் அவர் ஈடுபடவில்லை என்பது மெச்சத்தக்க
விஷயமாகத்தான் தெரிந்தது. ஆனால் அவருடைய பேச்சில் எதையோ
எதிர்பார்த்து கூடிய கூட்டத்துக்கு எந்த மெசேஜூம் கிடைக்கவேயில்லை.
இத்தனைக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அதே தேரடித்திடலில்
கூடிய கூட்டத்தை விட, கமலுக்கு அதிகமான கூட்டமே கூடியிருந்தது.
இன்னும் சொல்லப் போனால், முதல்வரின் கூட்டத்துக்கு தலைக்கு 200
ரூபாய் என்று ஆட்களைத் திரட்டி வந்தது எல்லோருக்குமே தெரிந்த
சேதியாக இருந்தது. கமலின் கூட்டத்துக்கு வந்தவர்கள் அனைவருமே
தன்னிச்சையாக வந்தவர்கள் என்பதால் அந்தக் கூட்டம்
பிரமாண்டமாகவும் பிரமிப்பூட்டுவதாகவும் தெரிந்தது. வழக்கமாக
இப்படியொரு பொதுக்கூட்டம் நடந்து திரும்பும்போது, அதில்
கட்சித்தலைவரின் பேச்சைப் பற்றிய விமர்சனங்களும்,
உணர்ச்சிப்பூர்வமான பகிர்வுகளையும் அதிகமாகக் கேட்க முடியும்.

ஆனால் கமலின் கூட்டம் முடிந்து திரும்பிய கூட்டம் ஏதோ மவுன
ஊர்வலத்தில் பங்கேற்றுத் திரும்பும் கூட்டம் போலவே நிசப்தமாகவே
கலைந்து சென்றதைப் பார்க்க முடிந்தது. கமலின் பேச்சைப் போலவே
அந்த மவுனத்தின் அர்த்தமும் புரியவேயில்லை.

மறுநாள் காலையில் கோவை ரேஸ்கோர்ஸ் நடைபாதையில், ஸ்டாலின்
பாணியில் ‘வாக்கிங்’ சென்று வாக்காளர்களைக் கவர்ந்தார் கமல். மீன்
மார்க்கெட், ஆவின் டீக்கடை என பல இடங்களிலும் அவர் நடந்தே
சென்று மக்களைச் சந்தித்தார். அவரைப் பார்க்கக் கூட்டம் கூடியது.

எல்லோரும் அவருடன் செல்பி எடுக்கவே பெரிதும் விரும்பினார்கள்.
அவர்களில் பலருக்கு அவர் அங்கு தேர்தலில் நிற்கிற விஷயம் கூடத்
தெரியவில்லை. இன்னும் 20 நாட்கள்தான் இருக்கின்றன. அதற்குள்
தமிழகம் முழுவதும் வலம் வந்து பரப்புரை செய்வதற்கு கமல் பறந்து
கொண்டே இருக்கப் போகிறார். மீண்டும் கோவை தெற்குத் தொகுதிக்குப்
போய் அவரால் வாக்குச்சேகரிக்க நேரமிருக்குமா என்பது
தெரியவில்லை.

வாக்குப்பதிவு நடப்பதற்குள் கோவைக்கு வந்து தான் சொன்ன
குற்றச்சாட்டையும், தமிழ்ச்சினிமாவை மாற்றியது போல மாற்றுவேன்
என்ற வாக்குறுதியையும் அவர் தெளிவாக விளக்கிச் சென்றால் கோவை
தெற்கு தொகுதியில் எல்லோரையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு அவர்
தேறுவதற்கு வாய்ப்புண்டு. இல்லாவிட்டால் சென்ற முறை வாங்கிய 23
ஆயிரத்துடன் இன்னொரு 23 ஆயிரம் வாக்குகள் கமலுக்குக்
கிடைக்கலாம். ஜெயிப்பது கஷ்டம்!

தமிழகம் நன்றாயிருக்க வேண்டுமென்று கமல் நினைத்தால்…
விதை போடலாம்; விடுகதை போடக் கூடாது!

–பாலசிங்கம்

.
—————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

1 Response to கமல்ஹாசனின் அரசியல் ….

 1. புதியவன் சொல்கிறார்:

  முதலில் திமுகவின் சார்பான இணையப் பத்திரிகையான மின்னம்பலத்தின் வரும் பெரும்பாலான கட்டுரைகளை நான் நம்புவதில்லை. அவைகள் எல்லாமே உள் நோக்கமுடையவை, திமுக சார்பாக எழுதப்படுபவை. இதற்கு ஏராளமான உதாரணங்கள் உண்டு. மின்னம்பலத்தில் எழுதும் எல்லோருமே திமுகவுடன் தொடர்பு உடையவர்கள், முன்பே நான் சொன்ன திமுக உறுப்பினர் ஜெயரஞ்சன் உட்பட. அவர்கள் சொல்லும் குற்றச்சாட்டுகளையும் விமர்சனங்களையும் மட்டும் பாருங்கள் என்று சொன்னால், என் பதில், அவற்றைப் பெரிதாக எடுத்துக்கொண்டு அதற்கு விளக்கம் எழுதத் தேவையில்லை என்பதுதான். லட்சம் கோடி கொள்ளையடித்தவர்களைப் பற்றி ஒன்றும் எழுதாமல், முட்டை வாங்கியதில் 3 லட்சம் இந்த அமைச்சர் வாங்கினார் என்பதைப்பற்றி பெரிதாக எழுதுபவர்களின் கருத்தைப் பற்றி நான் எதற்கு கவலைப்படணும்? இந்தக் கும்பல் தாங்கிப்பிடிப்பது ஊழல் சக்கரவர்த்திகளையும், அந்த ஊழல் பணத்தினால் தாங்கள் பெறும் லாபத்தையும்தான்.

  இந்தக் கட்டுரையிலேயே, எடப்பாடி கூட்டத்திற்கு 200 ரூபாய் கொடுத்து ஆட்களைக் கூட்டி வந்தார் என்று எழுதும் பாலசிங்கம், ஸ்டாலின் கூட்டத்திற்கு ஆப்பிரிக்காவிலிருந்தெல்லாம் ஆட்கள் தானாகத் திரண்டார்கள் என்று எழுதாததுதான் ஆச்சர்யம். பாலசிங்கத்தின், மின்னம்பலத்தின் நோக்கம், கமலஹாசன் திமுகவிற்கான வாக்குகளைப் பிரிக்கக்கூடாது என்பதுதான். அது சரி.. அவர்கள் கவலை அவர்களுக்கு.

  1. //விதை போடலாம் விடுகதை போடக்கூடாது//- இந்த பாலசிங்கம், வேட்பாளர் பெயரே தெரியாமல், தன் கட்சிப் பெயரையே சொல்லத் தெரியாமல் பல இடங்களில் உளறிய ஸ்டாலினைப் பற்றி எப்போதாவது எழுதியிருக்கிறாரா? ஒவ்வொருவரின் பேச்சுத்திறன் அந்த மட்டுத்தான். கமலஹாசன் பேசுவதை மொழிபெயர்க்க ஒரு கோனார் நோட்ஸ் பத்தாது. ஆனால் அதைச் சொல்ல இந்த பாலசிங்கத்திற்குத் தகுதியில்லை.
  2. //வாக்குப் பதிவு நடப்பதற்குள் விளக்கிச் சென்றால்// – துணை முதலமைச்சராக இருந்து மீத்தேன், தூத்துக்குடி திட்டங்களைக் கொண்டுவந்த ஸ்டாலின், 100 நாட்களுக்குள் அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்ப்பேன் என்று சொன்னதை இந்த பாலசிங்கமோ இல்லை மின்னம்பலமோ கேள்வி கேட்டிருக்கிறதா? அவர்களின் கட்டுரைகளின் தலைப்பைப் பார்த்தாலே தெரியும், எந்த அளவு திமுகவிற்கு கொத்தடிமைகளாக இவர்கள் செயல்படுகிறார்கள் என்று.
  3. //எடப்பாடி பதவியைப் பிடித்ததற்கு அந்தப் பசைதான் காரணம்//-இதைச் சொல்லும் பாலசிங்கம்/மின்னம்பலம் அதற்கு ஆதாரமாக எதையாவது தரவுகளைக் காட்டியிருக்கிறதா இல்லை வழக்குப்போட்டிருக்கிறார்களா? சும்மா போகிற போக்கில் அதிமுகவைப் பற்றிக் குறை சொல்லி, திமுகவுக்கு வாக்கு சேகரிக்கணும் என்று கிளம்பிய நவீன ஜெயரஞ்சன்கள், முரசொலிகள் இவர்கள்.

  கமலஹாசனோ இல்லை சீமானோ, ஸ்டாலினையோ இல்லை எடப்பாடியையோ முதலமைச்சர் ஆக்குவதற்காக அரசியல் வியாபாரம் ஆரம்பிக்கவில்லை. அந்த மாதிரி அரசியல் வியாபாரம் செய்வது திருமா, வைகோ, வேல்முருகன், கருணாஸ், கம்யூனிஸ்டுகள், போன்ற கூட்டங்கள்தான். இவர்கள் எல்லோரும், தங்கள் பெயரைச் சொன்னால் ஒரு பயலும் வாக்களிக்க மாட்டார்கள் என்று புரிந்துகொண்டு திமுக சின்னத்தில் நிற்பவர்கள், அதற்கு திமுகவிடமிருந்து தேர்தல் நிதி என்ற நஷ்ட ஈடு பெறுபவர்கள். கமல், சீமான் இருவரும், தாங்கள் தனிப் பாதை போடப்போவதாகவும் தமிழகத்தைத் தலைமை தாங்கி தலைநிமிரச் செய்யப்போவதாகவும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இது நடக்கப்போகிறதோ இல்லையோ… ஆனால் இருவரும் பிரிக்கும் வாக்குகள், திமுக, அதிமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்று நினைக்கும் பொதுமக்கள்தாம் என்பதை நாம் நினைவில் கொண்டாலே போதுமானது, அதிலும் திமுக வரக்கூடாது என்று நினைக்கும் பொதுமக்கள்தாம் என்பது என் எண்ணம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s