அசோகமித்திரனின் அற்புதமான இசை நினைவுகள் –

….
….

….

இசையைப்பற்றி ரசனையோடு விவரிக்கும்
இதைவிடச் சிறப்பான ஒரு கட்டுரையை நான் இதுவரை
படித்ததில்லை….

அவசியம் படிக்க வேண்டிய –

அசோகமித்திரனின் இசை நினைவுகள் ….

———————————————————————

சிகந்தராபாத் மார்க்கெட் தெருவில் ஜம்ஷட் ஹால் எப்படி வந்தது?
மார்க்கெட் தெரு சிகந்தராபாத் மார்க்கெட்டையும் ‘கிளாக் டவர்’
என்னும் கடிகாரத் தூண் பூங்காவையும் இணைப்பது. இரண்டாம்
உலக யுத்தக் காலத்தில் ஏற்கெனவே மங்கலாக எரியும் தெரு
விளக்குகளுக்குப் பாவாடை போன்றதைப் பொருத்தி வெளிச்சமே
தெரியாது செய்துவிட்டார்கள். காரணம், ஜப்பான் எந்த நேரமும்
எந்த இடத்திலும் குண்டு வீசக்கூடும்.

மார்க்கெட் தெருவில் முதல் ஐம்பது அடிகளுக்கு இருபக்கமும்
கடைகள். அதன் பிறகு வீடுகள்தான். கடிகாரத் தூண் அருகே
ஒரு ஹால் இருந்தது. அது மஹபூப் காலேஜைச் சேர்ந்தது.
அங்கே எப்போதாவது உரை நிகழ்த்தப்படும்.

ஜம்ஷட் ஹால், மார்க்கெட் தெருவில் வீடுகளுக்கு நடுவே இருந்தது.
அந்தக் கட்டடத்துக்கு நீலவண்ணம் அடித்திருப்பார்கள். கீழே
என்ன இருந்தது என்று தெரியாது. மாடியில் சுமார் இருநூறு பேர் உட்காரக்கூடிய பெரிய அறை. அந்த அறையின் முக்கியச் சங்கடம்
நான்கு பெரிய தூண்கள். அந்த அறையில் நிகழ்த்தப்படும்
நாடகத்துக்கோ இசைக் கச்சேரிக்கோ சற்றுத் தாமதமாக
வருபவர்களுக்குத் தூண்களுக்கு பின்னால் இருக்கும் நாற்காலிகள்
தான் கிடைக்கும். நிகழ்ச்சி முடியும்வரை அவர்கள் இப்பக்கமும்
அப்பக்கமுமாக எட்டிப் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும்.

அப்படித்தான் நானும் என் அப்பாவும் தண்டபாணி தேசிகர்
கச்சேரியைக் கேட்டோம். ஜகந்நாத பக்த சபா என்ற அமைப்பு,
அக்கச்சேரிக்கு ஏற்பாடு செய்திருந்தது. ஆண்டுக்கு இரண்டு ரூபாயோ
ஐந்தோ சந்தா. அது ஏழைகள் சபா என்று அறியப்பட்டது.
பெரிய மனிதர்கள் சபா கிருஷ்ண கான சபா என்று ஹைதராபாத்தில்
இருந்தது. அவர்கள் வருடாவருடம் ஒரு வாரம் அல்லது
பத்து நாட்கள் பெரிய கச்சேரிகள் நிகழ்த்துவார்கள். அங்கு
எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்கள் கச்சேரி செய்ய வருவார்கள்.
அவருக்கு மட்டும் ஆயிரம் ரூபாய்.

தண்டபாணி தேசிகருக்குச் சில நூறு ரூபாய்தான் கொடுத்திருப்பார்கள்.
அதற்கு ஈடுசெய்வதுபோல்

மஹபூப் காலேஜ் பிரின்சிபால் கோடீசுவரன் அழகாக அறிமுகம் செய்து பாடகர்களைக் கௌரவிப்பார். நான் அவர் கண்ணில் பட்டுவிடக் கூடாது
என்று எப்படி எப்படியோ நெளிவேன். ஆனால் அவர் பார்த்துவிடுவார்.
திடீர் திடீரென்று பொது இடங்களில் என்னைப் பாடச் சொல்லி என்னை நடுநடுங்க வைப்பது அவருக்குப் பிடித்தமான செயல்.

அந்த 1944ஆம் ஆண்டு தண்டபாணி தேசிகர் புகழேணியின் உச்சியில்
இருந்தார். சிகந்தராபாத்தில்கூட அவருடைய ‘நந்தனார்’ திரைப்படம்
ஒரு மாதம் ஓடிற்று. திரைப்படத்தில் மூன்று சிறந்த பாடல்களைத் தேர்ந்தெடுக்க ‘ஆனந்த விகடன்’ ஒரு போட்டி அறிவித்திருந்தது.
முதல் பரிசு பத்தாயிரம் ரூபாய்.

தண்டபாணி தேசிகர் உரத்தே பாடமாட்டார். செம்பை, மகாராஜபுரம்
போல உடலையும் தலையையும் ஆட்ட மாட்டார். மிகத் தெளிவான
தண்ணீர் ஓடைபோல அவரிடமிருந்து இசை பொழியும். அவரும் ராக ஆலாபனம், சுவரம் எல்லாம் பாடுவார். ஆனால்
அலட்டலே கிடையாது.

அன்று ஜம்ஷட் ஹாலில் அவருடைய கச்சேரியைக் கேட்டவர்கள் கொடுத்துவைத்தவர்கள். பல சம்பிரதாயக் கீர்த்தனைகளை எல்லாம்
பாடிவிட்டு அவர் ‘ஐயே மெத்தக் கடினம்’ பாடினார். அந்தப்
பாட்டைக் கேட்டு உருகாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள்.

கச்சேரி முடியப்போகும் தருணத்தில் கோடீசுவரன் பேச வந்தார்.
அவர் பரம பக்தர். நல்ல ரசிகர். சுருக்கமாக, ஆனால் மனநிறைவு
ஏற்படும் வகையில் பேசித் தேசிகருக்கும் இதர இசைக்
கலைஞர்களுக்கும் மாலை அணிவித்தார்.

இன்றைக்கு அறுபத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கோடீசுவரன்
தேசிகருக்குப் பின்பாட்டுப் பாடிய இளைஞரை விசேஷமாகப்
பாராட்டினார். அடுத்தமுறை அந்த இளைஞரே தனிக் கச்சேரி
செய்பவராக இருப்பார் என்றார். அந்த இளைஞர் மதுரை சோமு.

நான் இதெல்லாம் மறந்துவிட்டேன். தேசிகர் கச்சேரி நடந்து
முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு சார்லஸ் ரயர்ஸன் என்ற அமெரிக்க
ஆய்வாளர், தான் உடன் அழைத்துவந்த அமெரிக்க மாணவர்களுக்கு,
மதுரை சோமு கச்சேரிக்கு ஏற்பாடுசெய்திருந்தார்.

அன்று எவ்வளவோ பாடகர்கள் சோமுவைவிடப் புகழ்பெற்று
இருந்தார்கள். ஆனால் சார்லஸ் ரயர்ஸன் அந்த ஆண்டு என்றல்ல,
ஒவ்வொரு ஆண்டும் அவர் அழைத்துவரும் ஆய்வாளர் குழுவுக்கு
மதுரை சோமு கச்சேரிதான் ஏற்பாடுசெய்தார்.
நானும் போயிருந்தேன். ஒரு விஷயத்தை அமெரிக்கர்கள்
கவனித்தார்களா என்று தெரியாது. சோமு பாடும்போது அவர்
உடல் அனைத்தும் அப்பாட்டில் ஈடுபட்டிருக்கும். “அவருடைய
கச்சேரியைக் கேட்பது ஓர் உணர்ச்சிகரமான அனுபவம்” என்று
சார்லஸ் ரயர்ஸன் கூறுவார். சோமு பாடும்போது என் நண்பர்
உடலெல்லாம் சிவந்துவிடும். அப்படி ஒரு உறவு அவருக்குச்
சோமுவின் இசையோடு இருந்தது.

சார்லஸ் ரயர்ஸன் பற்றிச் சில வார்த்தைகள் கூற வேண்டும்.
அவர் அங்கி அணியாத மதப் போதகர். (இதற்குப் பட்டப் படிப்பு,
உயர் பட்டப் படிப்பு எல்லாம் உண்டு.) இந்தியாவில் அவருக்கு
நங்கூரமாக இருந்தது மதுரை அமெரிக்கன் கல்லூரி. அவருடைய
ஆய்வுத் தலைப்பு ‘தமிழகத்தில் எதிர்ப் போக்குகள்’. அவருடைய
முதல் வழிகாட்டி திராவிடக் கழகத் தலைவர் கி. வீரமணி.

சார்லஸ§க்கு அவரோடு ஆங்கிலத்தில் விவாதம் புரியக்
கிடைத்தவர்கள் நானும் என் போன்ற ஐந்தாறு பேரும். நட்பு
தோன்றவும் இருப்பார், நம்பவும்மாட்டார். இப்போது அவருக்கும்
வயது எழுபதுக்கு மேலாகிவிட்டது. அவருடைய வீட்டைவிட்டு
நகர முடியாதபடி பருமனாகிவிட்டார். இப்போதும் ஆண்டுக்கு
இரு முறையாவது கடிதம் கையெழுத்தில் எழுதுவார். அவருக்கு
இன்னும் இரு நண்பர்கள் – தியடோர் பாஸ்கரன்,
எஸ்.வி. ராஜதுரை – உள்ளார்கள்.

உணர்ச்சிகரமான இசை என்பதை ஓரளவு நான் சோமுவின்
முதிர்ந்த காலக் கச்சேரிகளைக் கேட்டுத்தான் ஒருமாதிரி
புரிந்துகொண்டேன். தென்னிந்திய முன்னணிக் கலைஞர்கள்
மிகவும் சிறப்பாகப் பாடுவார்கள். ஆனால் அநேகமாக எல்லாருமே
சபையையும் பக்கவாத்தியக்காரர்களையும் கவனத்தில் இருத்தியே
பாடுவார்கள். இவ்வளவு ஏன் புன்சிரிப்பு செய்ய வேண்டும்
என்றுகூட நான் நினைத்திருக்கிறேன். அது கர்நாடக இசையின்
இயல்போ என்று தோன்றுகிறது.

இப்போது சோமு பாட்டைக் கேட்க முடியாது. ஆனால் பாடும்போது
தன் முழு உடலுடன் பாடுபவர்கள் இருக்கிறார்களோ? வேப்பத்தூர்
கிட்டு என்று எனக்கொரு நண்பர் இருந்தார். ஒருமுறை
இரு நடிகைகள் பற்றிப் பேச்சு வந்தது. இந்தியில் நடித்த
தென்னிந்திய நடிகை பற்றி அவர் சொன்னார். “பாருங்கள், அவர்
தன் வருங்கால மாமனாரைப் பார்க்க வருகிறார். முகம் மட்டுமல்ல, உடலெல்லாம் அந்த உணர்வைக் காட்டும், பாருங்கள்,” என்றார்.

உடலெல்லாம் உருகப் பாடுபவர்கள் பஜனைத் துறையில்
இருக்கிறார்கள். “பாண்டுரங்கா, பாண்டுரங்கா” என்று அவர்கள்
உடலெல்லாம் அந்த விட்டலனைக் கோரி உருகும்.

வட இந்திய இசை உணர்ச்சிபூர்வமானது என்பார்கள்.
அது ஓரளவு உண்மை. எல்லாக் கலைஞர்களும் தம்மை மறந்து
தலை முதல் பாதம் வரை இசையில் கரைந்து பாடுவதில்லை.
நான் பார்த்து படேகுலாம் அலிகான் அப்படித்தான் மெழுகாக
உருகுவார். சாகித்யமென எடுத்துக்கொண்டால் அது ராதை,
கிருஷ்ணன், யமுனா தீரம் என்று இருக்கும். ஆனால் அவர்
ராதையாக முறையிடும்போது எங்கோ ஒரு மூலையில் அவருக்குக்
கண்ணன் தோன்றிக்கொண்டிருப்பார் என்றுதான் நினைக்கிறேன்.

பிஸ்மில்லாகான் அந்தக் கீச்சுக் கீக்சு ஷெனாய் வாத்தியத்தில்,
இதைச் சாத்தியமாக்கிவிடுவார். காசியில் வசித்த அவருக்குச்
சிவன், பார்வதி தோன்றிக் கொண்டிருப்பார்களோ?

மியூசிக் அகாடமி கட்டடம் கட்டிக் கச்சேரிகள் நடக்கத் தொடங்கிய பின், ஒவ்வொரு ஆண்டும் ரவி ஷங்கர் வருவார். எனக்குக் கிருஷ்ணானந்த் என்றொரு வட இந்திய இசைப் பாடகர் நண்பர். நான் அவர் மூலம்
ரவிஷங்கர் கக்சேரிக்கு வரிசையாக நான்கைந்து ஆண்டுகள்
சென்றிருக்கிறேன். இரவு பத்து மணிக்குக் கச்சேரி தொடங்கும்.
முதலில் ஒரு சுவரத்தைத் தாண்டி அடுத்ததற்கு வரப் பத்து
நிமிடங்களாவது ஆகும். ஒரு ராகத்தின் முழு சுவரங்களையும்
கொண்டு அவர் விஸ்தரிக்க ஒரு மணி நேரம் ஆகும்.

அதன் பிறகு உங்கள் மூளையே ஸ்தம்பித்துவிடும் வேகத்தில்
இசை பெருகி ஓடும். ‘கண்மூடி வாய் திறந்தே கேட்டிருப்போம்’
என்று சொல்லலாம். ஆனால் திடீரென்று ரவி ஷங்கர் நம்மைக் கீழே தள்ளிவிடுவார். சிதார் வாசிப்பதை நிறுத்தி, “நண்பர்களே, உங்கள் எல்லோருக்கும் என் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துகள்” என்று
அறிவிப்பார். டிசம்பர் முடிந்து ஜனவரி இரவு 12 மணிக்குப்
பிறந்திருக்கும். கொட்டகையில் அநேகமாக எல்லாரும் கரகோஷம் செய்வார்கள். எனக்கு ஏமாற்றமாக இருக்கும்.

அடுத்த ஆண்டு ரவிஷங்கர் கச்சேரிக்குப் போகக் கூடாது என்றுகூட நினைத்திருப்பேன். ஆனால் அடுத்த ஆண்டு நான் போகத்
தவறவில்லை. எனக்கு அவருடைய சினிமா நட்சத்திரப் போக்கு பிடிக்காமலிருக்கலாம். ஆனால் மகத்தான கலை அவரிடமிருந்தது.
எனக்குக் குறை என்று தோன்றியதை நான் ஏன் பெரிதுபடுத்த
வேண்டும்?

புளூட்மாலிக்கு எனக்குத் தெரிந்து இரு சிஷ்யர்கள். ஒருவர்
உலகமறிந்த ரமணி. இன்னொருவர் அகில இந்திய வானொலியில்
தன்னைக் கரைத்துக்கொண்ட ஸ்ரீனிவாசன். இருவரும் எனக்கு
நண்பர்கள் என்றாலும் ஸ்ரீனிவாசன் அநேகமாக என்னைத் தினமும்
பார்க்க வந்துவிடுவார். என்னுடைய ஆங்கில நாடகங்களை
அவர்தான் முதலில் படிப்பார். அப்போதுதான் டேப் ரிக்கார்டர்கள்
வர ஆரம்பித்த காலம். ஸ்ரீனிவாசனுக்கு அவரே புல்லாங்குழல்
வாசித்து அதற்கு அவரே மிருதங்கமும் வாசிக்க முடியுமா என்று
பரிசோதித்துப் பார்க்க ஆசை.

அப்போது ஆர்.ஏ. பத்மநாபன் (ஆம். ‘சித்திர பாரதி’ பத்மநாபன்தான்) அமெரிக்கத் தூதரகத்தில் பணிபுரிந்து வந்தார். அங்கு டேப் ரிக்கார்டர்
உண்டு. நானும் ஸ்ரீனிவாசனுமாக அவரிடம் சென்று, எங்கள்
பரிசோதனை பற்றிச் சொன்னோம். அதாவது முதலில் ஸ்ரீனிவாசன்
குழல் வாசித்துவிடுவார். பிறகு அதே காஸட்டைத் திரும்பப் போட்டு மிருதங்கம் வாசிப்பது. உண்மையில் இந்த உத்தி திரைப்பட
ஒலிப்பதிவில் சாதாரணமாகப் பயன்படுத்துவது. ஆனால் டேப்
ரிக்கார்டரில் குழலொலி அழிக்கப்பட்டு, வெறும் மிருதங்க
வாசிப்புத்தான் கேட்டது.

இரண்டு டேப் ரிக்கார்டுகள் இருந்தால் அது சாத்தியம். ஆர். ஏ.
பத்மநாபன் அலுவலகத்தில் ஒரு கருவிதான் இருந்தது என்று
கூறிவிட்டார். ஸ்ரீனிவாசன் மூலம்தான் பி.எஸ். ஹைஸ்கூல்
என்பது பென்னத்தூர் சுப்பிரமணிய அய்யர் பள்ளி என்று
எனக்குத் தெரியவந்தது. ஸ்ரீனிவாசன், சுப்பிரமணிய அய்யருடைய
பேரன். அவர்கள் வீடு டி.டி.கே. சாலையில் மியூசிக் அகாடமிக்கு எதிர்ச்சாரியில் இருந்தது.

நடிகர் ரஞ்சனுடைய சகோதரர் வைத்தியநாதனும் புல்லாங்குழல்
வாசிப்பார். அவர் மேலைய சங்கீதத்திலும் குறிப்பாக, பியானோ
வாசிப்பதிலும் மிகுந்த தேர்ச்சிபெற்றவர். அவர் புல்லாங்குழலுக்கு
இணையாக இன்னொரு இசைக் கருவி கிடையாது என்பார்.
“எவ்வளவு எளிமையானது! ஓரடி மூங்கில், அவ்வளவுதான்.
மேலும் எங்கு வேண்டுமானாலும் ஒரு சிரமம் இல்லாது எடுத்துச்
செல்லலாம். பியானோவையோ வீணையையோ அப்படி
எடுத்துச்செல்ல முடியுமா? ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு
சுருதியில் ஒலியெழுப்பிச் சங்கடப்படுத்தும்” என்பார்.

இந்திய இசையில் பக்திதான் பிரதானம். இறையுணர்வுதான்
சிகரங்களை எட்டவைத்தது. எனக்குத் தெரிந்து அரசியல் சார்புடைய
இசை நிபுணர்களையும் கேட்டிருக்கிறேன். அவர்களும் தியாகய்யர்
கிருதி வாசிக்கும்போது அவர்கள் தோற்றமே மாறிவிடும்.

மேலைய சங்கீதத்தில் சில பிரிவுகளே இறையுணர்வோடு
தொடர்பு கொண்டவை. பதினெட்டு-பத்தொன்பதாம் நூற்றாண்டில் கொடூரமாகவும் ஈவிரக்க மற்றும் ஆப்பிரிக்கர்களை விலங்குகள்
போலக் கடத்திக் கூண்டிலடைத்து, அமெரிக்காவில் பெரிய
எஸ்டேட்டுகளில் அடிமைகளாக உழைக்கவைத்தார்கள்.
அவர்களைக் கிறித்துவர்களாக மதமாற்றி அவர்களுக்குத்
தனிச் சர்ச்சும் ஏற்படுத்திவிட்டார்கள். அந்த அடிமைகள் ஒரு
தனிப் பிரிவாக ஒரு இசையை உருவாக்கினார்கள். அது
‘புளூஸ்’ என்று பெயரிடப்பட்டது. அந்த ஆப்பிரிக்கர்கள் மனதார
ஏங்கிக் கதறுவார்கள். அந்தச் சோகம் வயிற்றைக் கலக்கும்.
இன்றும் ‘புளூஸ்’ இருக்கிறது. ஆனால் அந்தச் சோகம் இருக்குமா
என்று உறுதி கூற முடியாது.

.
—————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to அசோகமித்திரனின் அற்புதமான இசை நினைவுகள் –

 1. Geetha Sambasivam சொல்கிறார்:

  மிக அருமையானதும், அரிதானதும் ஆன இந்த விமரிசனத்தைப் பகிர்ந்தமைக்கு நன்றி. சித்தப்பாவும் அவர் ஒரே சகோதரர் மற்றும் மூன்று சகோதரிகளும் முறைப்படி கர்நாடக சங்கீதம் பயின்று அதில் மிகத் தேர்ச்சி பெற்றவர்கள். குழந்தைகளுக்குத் தாலாட்டாகச் சித்தப்பா தனக்குள் பாடிக்கொள்ளும் பாடல்களைப் பல முறை கேட்டிருக்கேன். அவர் தம்பி திரைப்படப் பாடல்களின் ரசிகர். அருமையாக உரத்த குரலில் பாடுவார். சகோதரிகளும் அப்படியே!

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   Geetha Sambasivam,

   அசோகமித்திரன் அவர்கள் உங்களுக்கு உறவு
   என்று அறிய மிகவும் சந்தோஷம்.

   எனக்கு அவர் எழுத்துக்கள் மிகவும் பிரியமானவை.
   தேடித்தேடி படிப்பேன்.

   அவர் எழுத்து, நடை – அடுத்த தலைமுறைக்கும்
   அறிமுகமாக வேண்டும் என்பது என் ஆவல்.
   அதனால் தான் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம்
   இது போன்ற நல்ல எழுத்துகளை பகிர்ந்து
   கொள்கிறேன்.

   இந்த தலைமுறை இவற்றையெல்லாம் தானாகவே
   தேடிப்படிக்காது…. நாம் தான் அவர்களிடம்
   கொண்டு சேர்க்க வேண்டும்.

   நீங்கள் ஒன்று செய்யலாம். உங்கள் தளத்தில்,
   உங்களுக்கு அறிமுகமான பிற தளங்களில்,
   இந்த இடுகையின் link-ஐ கொடுக்கலாம்.
   அசோகமித்திரனின் இந்த கட்டுரை அதிக மக்களை
   சென்றடைய அது உதவும்…. இது உங்களுக்கும்
   மகிழ்ச்சியை கொடுக்கும்…. எனக்கும் பயனுள்ள
   இடுகை ஒன்றை பதிவு செய்த திருப்தி இருக்கும்.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 2. புதியவன் சொல்கிறார்:

  வெறும் நாவல்களைவிட, இந்த மாதிரி எழுத்துக்கள்தான் காலம் கடந்தும் நிற்கும், அந்த அந்தக் காலத்தைக் காட்டும் கண்ணாடியாகவும் திகழும். அந்த எழுத்தே நம்மிடம் பேசும் பாவனையில் இருக்கிறது.

  அசோகமித்திரனின் எழுத்து அருமை. பகிர்ந்ததற்கு நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s