….
அண்மையில் 2-ஆம் உலகப்போர் பற்றிய புத்தகம்
ஒன்றை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அதைப் படித்துக்கொண்டிருக்கும்போது, நான் முன்பொரு
தடவை, இரண்டாம் உலகப்போரின் போது,
தமிழர்களையும், இதர போர்க்கைதிகளையும்
கொடூரமாக சித்திரவதை செய்து, ஜப்பானிய ராணுவம்
ரெயில்வே லைன் ஒன்றைப்போட்டதைப்பற்றி
இதே தளத்தில் எழுதியிருந்தது நினைவிற்கு வந்தது.
3 பகுதிகளாக வெளிவந்த அந்த இடுகையை
மீண்டும் படிக்கத் தோன்றியது.
தேடி, படித்தபிறகு-
முன்னர், இந்த இடுகையை தயாரிப்பதற்கு
கூடுதல் முயற்சிகள் தேவைப்பட்டன. நிறைய
தளங்களைத் தேடிக்கண்டு பிடித்து, படிக்க வேண்டி
இருந்தது.
நிறைய ஆவணங்களை, புகைப்படங்களை
சேகரிக்க வேண்டி இருந்தது. எனவே, கூடுதல்
முயற்சிகளுடன் தயாரிக்கப்பட்ட இந்த
இடுகையை இப்போது மீண்டும் ஒரு முறை
மறு பதிவு செய்தால், புதிய வாசக நண்பர்கள்
படிக்க உதவியாக இருக்குமே என்று தோன்றியது…
விளவு,
முதல் பகுதியுடன் அந்த இடுகை இங்கே துவங்குகிறது….!!!
——————————————————————

மலேசிய தமிழர்கள் – கூலிகளாக
அண்மையில் – ” சயாம்-பர்மா மரண ரயில் பாதை ”
என்கிற தலைப்பில் தயாரிக்கப்பட்டுள்ள ஒரு ஆவணப்படம்
தொடர்பாக சில செய்திகள் வெளிவந்தன…
ஆனால், இந்த இடுகையில் நான் எழுதும் செய்திகள், விஷயங்கள், புகைப்படங்கள் எதுவும்,
அந்த ஆவணப்படத்திலிருந்து எடுக்கப்படவில்லை.
அந்த ஆவணப்படத்தை நான் இன்னும் பார்க்கவே
இயலவில்லை. ( அதைப்பற்றி இடுகையின் கடைசியில் பேசலாம்….)
இவை அனைத்தும், நான் வெவ்வேறு இடங்களிலிருந்து
சேகரித்த செய்திகள், புகைப்படங்கள், வீடியோக்கள் …
( ஆஸ்திரேலியா, பிரிட்டிஷ் ஆவணக் காப்பகங்கள்,
theprisonerlist – வலைத்தளம்,
story of photo frame of lt.col.A.E.Coates,
மலேசிய எழுத்தாளர் சண்முகம் அவர்களின்
சயாம் மரண ரயில் – நூல் விமரிசனங்கள்
மற்றும் பல்வேறு தளங்கள்…)
நிஜக் கதைக்குள் வருவோம் –
பர்மா ரயில்பாதை (Burma Railway),
மரண இரயில்பாதை (Death Railway), என்றெல்லாம்
கூறப்படும் பர்மா-சயாம் இரயில்பாதை (Burma–Siam Railway), அல்லது தாய்லாந்து–பர்மா இரயில்பாதை என்பது
இரண்டாம் உலகப்போரின் போது உருவாக்கப்பட்ட,
415 கி.மீ (258 மைல்கள்) தொலைவு கொண்ட ஒரு
புகைவண்டித் தொடர் பாலம்.
கிழக்கு ஆசியா முழுவதையும் தனது ஆதிக்கத்தின் கீழ்
கொண்டு வர முயன்ற ஜப்பான் பர்மா வரை வந்து விட்டது. சிங்கப்பூர், மலேயா, தாய்லாந்து, பர்மா வழியாக தனது படைகளையும், ஆயுதங்களையும், உணவுப் பொருட்களையும் தங்களது படைகள் போகும் இடத்திற்கு எல்லாம்
கொண்டு போக என்று உருவாக்கப்பட்டது இந்த பாலம்….
இதன் மூலம் ஒரு நாளைக்கு 3000 டன் பொருட்களை
ஜப்பானிய ராணுவம் பர்மாவுக்கு எடுத்துச் சென்றது.
இந்த நிலப்பரப்பு முன்னதாக பிரிட்டிஷ் அரசின் வசம்
இருந்தபோது, 20-ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலேயே,
இப்படி ஒரு ரயில் பாதையை அமைக்க பிரிட்டன்
திட்டமிட்டது. ஆனால், ஏராளமான பொருள்செலவும்,
மனித உழைப்பும் தேவைப்படும் என்பதால், அப்போதைக்கு
அதை மேலெடுத்துச் செல்லவில்லை.
2-ஆம் உலகப்போரில் ஜப்பான் கிழக்கு ஆசியாவை
கொஞ்சம் கொஞ்சமாக தனது வசம் கொண்டு வரத்
துவங்கியதும் தாய்லாந்தையும் பர்மாவையும் இணைக்கும் முயற்சியில் இந்த ரயில் பாதையை நிர்மாணிக்கும் பணி ஜப்பானியர்களால் மேற்கொள்ளப்பட்டது…..

காடு, மலைகளுக்கு ஊடாக –
அடர்ந்த காட்டுக்குள்ளேயும்,
மலைகளைக் குடைந்தும்,
ஆறுகளைத் தாண்டியும் –
பாதை செல்ல வேண்டி இருந்ததால்,
இதை உருவாக்குவது மிகவும் ஆபத்தாகவும், கடினமாகவும்
இருந்தது. ஏகப்பட்ட உயிர்களை பலி கொண்டது.
ஆனால், சுமார் 24 மாதங்களில் கட்டி முடிக்கலாம் என்று
நினைத்து துவங்கப்பட்ட இந்த பணி, ஜப்பானியர்
மேற்கொண்ட கொடுமையான வழிகளால், பதினைந்தே
மாதங்களில் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு
வரப்பட்டது..
இதைச் செய்து முடிக்க கொடுக்க வேண்டியிருந்த
விலை தான் மிக மிக அதிகமாக இருந்தது. அந்த
விலையை ஜப்பானியர் கொடுக்கவில்லை….
வேறு யார் கொடுத்தார்கள்…?
அப்படி என்ன பெரிய விலை….?
பணி நிகழ்ந்த காலம் 22 ஜுன் 1942 முதல்
17 அக்டோபர் 1943 வரை …
சரியாகச் சொல்ல வேண்டுமானால் –
தாய்லாந்தில் உள்ள பான் போங் எனும் இடத்திலிருந்து
பர்மாவில் உள்ள தான்பியுசாயாட் வரை ரயில் பாதை
அமைக்கும் இந்த மாபெரும் திட்டம் இரண்டு பிரிவுகளாக உருவாகத் தொடங்கியது.
தளவாடப்பொருட்களைப் பொருத்த வரையில்,
மலாக்கா, சிங்கப்பூர், கோத்தாபாரு, கோலா லிப்பிஸ்
போன்ற பகுதிகளில் ஏற்கெனவே போடப்பட்டிருந்த ரயில் தண்டவாளங்கள் பெயர்த்து எடுக்கப்பட்டு புதிய
ரயில் பாதைக்கு பயன்படுத்தப்பட்டன.
சயாம் மரண ரயில்வே கட்டுமானத்திற்கு கொண்டு வரப்பட்டவர்கள் அத்தனை பேரும் –
– ஜப்பான் வசமிருந்த போர்க்கைதிகள் அல்லது
கட்டாயப்படுத்தி, ஏமாற்றி அழைத்து வரப்பட்டவர்கள்.
ஜப்பான் வசமிருந்த ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த
போர்க்கைதிகள் “டெக்னிகல்” வேலைகளுக்கு
பயன்படுத்தப்பட்டனர்.
மீதி அத்தனை பேரும், ( மலேசியர், சயாமியர், பர்மியர்
சீனர், மற்றும் மலேசிய தோட்டங்களில் வேலை
செய்து கொண்டிருந்த தமிழர்கள் ஆகியோர் ) மலைகளைக் குடைதல், பள்ளம் தோண்டுதல், தரைதளத்தை சீரமைத்தல்,
இரும்பு தளவாடங்களை தூக்கிச் செல்லுதல் போன்ற
கடுமையான உடல் உழைப்பில் ஈடுபடுத்தப்பட்டனர்.

அவர்களே கட்டிக் கொண்ட தங்குமிடம்

கை, கால்கள் இழந்து – முடமாகிப் போனவர்கள்
யுத்த காலம் ஆகையால் பலர் வேலையின்றி,
பொருட்களின் விலையுயர்ந்து, சாப்பாட்டிற்கே திண்டாடிக்
கொண்டிருந்தபோது, அவர்களை நல்ல வேலை,
நல்ல சாப்பாடு, தங்குமிடம், கூலி என்று ஆசை காட்டி
அழைத்து வந்தனர் கங்காணிகள். அப்படியும் வராதவர்களை,
பயமுறுத்தி, மிரட்டி, வலுக்கட்டாயமாக அழைத்து
வந்து ஈடுபடுத்தினர்…வந்தவர்களை மடக்கிப் பிடித்துக்
கொண்டனர். தப்பிச்செல்ல முயன்றவர்களை
தயவுதாட்சண்யமின்றி சுட்டுக் கொன்றனர்….
(மற்றவர்களை பயமுருத்தி, தங்க வைக்க…)
வேலை செய்யும் இடத்தில் –
போதிய உணவு இல்லாமலும்,
காலரா, வயிற்றுப்போக்கு மற்றும்
கடுமையான தொற்று நோய்களாலும்,
கொடிய மிருகங்களின் தாக்குதல்களாலும்,
ஜப்பானியரின் மிகக் கொடூரமான தண்டனைகளைச்
சகித்துக் கொள்ள முடியாமலும் –
பணியில் நடந்த காலத்தில் ஏற்பட்ட இழப்பு –
– 106,000 மனித உயிர்கள் …!
இந்த வேலையை மேற்பார்வை பொறுப்பை
ஏற்று நடத்தியவர்கள் –
சுமார் 10,000 ஜப்பானியர் மற்றும் மஞ்சூரியர்கள்
இதில் கட்டாயப்படுத்தி வேலை வாங்கப்பட்டவர்கள் –
3,30,000 ஆசியத் தொழிலாளர்கள்
( மலாய்க்காரர்கள், சீனர்கள், மலேசியத் தமிழர்கள்
சயாமியர்,பர்மியர், மற்றும் பிரித்தானிய /
மேற்கத்திய போர்க் கைதிகள் )

உணவுக்கு தட்டேந்தி நிற்கும் யுத்தக் கைதிகள்
பணி நடக்கும்போதே – ஒன்றே கால் வருடத்திற்குள்ளாக,
இறந்தவர்கள் மொத்தம்: 106,000 பேர்.
அதில் ஆசியத் தொழிலாளர்கள்: 90,000 பேர்.
( அதில் தமிழர்கள் :60,000 பேர் )
பிரித்தானியர்கள்: 6,318 பேர்.
ஆஸ்திரேலியர்கள்: 2,815 பேர்.
டச்சுக்காரர்கள்: 2,490 பேர்.
அமெரிக்கர்கள்: 356 பேர்.
100க்கும் குறைவான கனடியர்கள், நியூசிலாந்துக்காரர்கள். ஜப்பானியர்களின் உயிர் இழப்பு பற்றிய
புள்ளி விவரங்கள் இல்லை….
( தொடர்கிறது …2-ஆம் பகுதியில் )