அவ்வளவு ஆழமான தொடர்பா… கனவுக்கும், நனவுக்கும்….?

….
….

….

நம் நினைவுகளுக்கும் அதாவது நடப்புகளுக்கும்,
கனவுக்கும் உள்ள தொடர்பு என்ன…?

பகலில் நடப்பவை / நினைப்பவைகளின் தொடர்ச்சியாக
சில கனவுகள் இரவில் வரும் அனுபவம் பலருக்கும்
கிடைத்திருக்கும்.

ஆனால், இந்த இரண்டிற்கும் உள்ள
தொடர்பு எத்தகையது…? எவ்வளவு ஆழமானது என்பதை
உணரக்கூடிய ஒரு விசித்திரமான அனுபவம் எனக்கு கிடைத்தது
இரண்டு நாட்களுக்கு முன்னர். அந்த அனுபவத்தைப்பற்றி,
நினைத்தாலே ஆச்சரியமாக இருக்கிறது.

அன்று பகலில், நானும் என் மனைவியும் வீட்டில்
உணவருந்திக்கொண்டிருக்கும்போது, ஏதேதோ, பழைய
விஷயங்களைப்பற்றி எல்லாம் பேச்சு வந்தது. எங்களுக்கு
திருமணம் முடிந்து 2 வருடங்களுக்குள் என் அம்மா காலமாகி
விட்டார். அந்த 2 வருடங்களும் கூட நான் வேறு எங்கோ
வெளியூரில் பணிபுரிந்து கொண்டிருந்ததால், என் மனைவிக்கு –
என் அம்மாவுடன் அதிகம் பழக வாய்ப்பு கிடைக்கவில்லை;

என் அம்மா தன் வாழ்நாள் முழுவதும் கஷ்டப்பட்டவர்.
11 பேர் கொண்ட மிகப்பெரிய குடும்பம்; குறைந்த வருமானம்;
நிறைய குழந்தைகள், மாமியார் எல்லாரையும் வைத்துக்கொண்டு
சமாளிக்க மிகவும் சிரமப்பட்டார். எனக்கு, வளர்ந்து பெரியவனான
பிறகு, நன்றாகச் சம்பாதித்து, என் அம்மாவை எந்தவிதக்
கவலைகளுக்கும் இடமின்றி சந்தோஷமாக வைத்துக்கொள்ள
வேண்டுமென்று மனதில் மிகுந்த விருப்பம். 18 வயதிலிருந்தே
சம்பாதிக்கத் தொடங்கி, குடும்பத்திற்கு நான் உதவினாலும்,
அம்மாவின் கவலைகளையும், கஷ்டங்களையும் போக்கும்
அளவிற்கு பெரிய அளவில் எனக்கு வசதிகள் ஏற்படவில்லை;
அந்த வயதில் வெளியூரில் பணியாற்றிக்கொண்டு, என் சாப்பாட்டு
செலவுகளையும் பார்த்துக்கொண்டு, என்னத்தை பெரிதாக
அனுப்பியிருக்க முடியும்.

நான் ஓரளவு நன்றாக வருவதற்குள் என் அம்மா மறைந்து
விட்டார்(என் 33-வது வயதிலேயே ). என் மனதில் இந்தக்குறை எப்போதுமே உண்டு.

அன்று மதியம் – நான் மனைவியிடம் சொல்லிக்கொண்டிருந்தேன்.
கடவுள் அருளால், இப்போது நாம் ஓரளவு வசதியோடு
இருக்கிறோம். இப்போது மட்டும் அம்மா இருந்திருந்தால், அவரை
எவ்வளவோ சந்தோஷமாக வைத்துகொண்டிருக்கலாம்.
பாவம் அம்மாவுக்கு கொடுப்பினை இல்லை; வாழ்நாள் முழுவதும்
கஷ்டத்திலேயே உழன்று விட்டு சந்தோஷத்தைப் பார்க்காமலே
போய் விட்டார்; அவரை நல்லபடியாக வைத்திருக்கும் அதிருஷ்டம்
நமக்கும் அமையவில்லையே என்று.

அன்றிரவு ஒரு கனவு… பொதுவாக கனவுகளை ஓரளவு நினைவு
படுத்திக்கொள்ள ஒரு வழி உண்டு. இதை படிப்பவர்கள் கூட
முயன்று பார்க்கலாம்.

கனவுக்குப் பின், எப்போது விழித்துக் கொண்டாலும்,
உடனடியாக படுக்கையை விட்டு எழுந்து அடுத்த வேலையை
பார்க்கப்போகாமல், ஒரு சில நிமிடங்கள் படுக்கையிலேயே
அமர்ந்து, அன்றிரவு கனவில் வந்தவற்றைப்பற்றி
ஒரு முறை யோசித்தால், (re-winding) பின்னர் அவை மறக்காமல்
நினைவில் இருக்கும். முழுகனவும் சாத்தியமில்லை என்றாலும்,
ஓரளவு நிச்சயம் நினைவில் நிற்கும்.

அன்றிரவு என் கனவில் வந்தது ஒரு அதிசயம்…

1966-ஆம் ஆண்டு, நான் மத்தியப்பிரதேசத்தில், ஜபல்பூரில்
பணியாற்றி வந்தேன். அப்போதெல்லாம் நிறைய ஹிந்தி படங்கள்
பார்ப்பேன். அப்போது வெளிவந்த ஒரு படம்
“தாதி மா “… புகழ்பெற்ற ஹீரோக்கள் யாரும் இல்லை;
குடும்பப்படம். சுமாராக ஓடியது. அந்தப்படத்தை நான் ஜபல்பூரில்
பார்த்தேன்… படத்தில் ஒரு பாடல் மிகவும் நன்றாக இருந்தது.
முக்கியமான காரணம் – ஹிந்தி தெரிந்தவர்கள் அதன் வார்த்தை
அமைப்பை மிகவும் ரசிப்பார்கள். அதன் துவக்க வரிகளின் அமைப்பே
என்னை மிகவும் கவர்ந்தன….

“உஸுகோ நஹி தேகா ஹம்னே கபி –
(அவரை நாங்கள் என்றும் பார்த்ததில்லை; )

ஹே மா, தெரி சூரத் கி தரஃப் பகவான் கி
சூரத் க்யா ஹோகா ?

(ஆனால், அம்மா – உன் வசீகரத்திற்கு முன்
அந்த ஆண்டவனின் வசீகரம் எப்படி உயர்ந்ததாக
இருக்க முடியும்…? )

இந்தப் பாடலை, திரைப்படத்தைப்பார்க்கும்போது ஒருமுறை
கேட்டேன். அப்போதே மிகவும் பிடித்துப்போனது. அதன் பிறகு
2-3 தடவைகள் டீக்கடைகளில் கேட்டிருக்கிறேன். அதன் பிறகு
இதை கேட்கும் வாய்ப்பே கிடைக்கவில்லை; ஆனால் இந்த
பாடல் என் ஆழ்மனதில் பதிந்திருக்கிறது. கிட்டத்தட்ட
54 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தப்பாடல் என் கனவில்
வந்தது. அன்று காலை கண்விழித்ததும், மனதில் பதிவு
செய்துகொண்டேன்..

“உஸுகோ நஹி தேகா ஹம்னே கபி ”

பிறகு கணிணியில் வந்து தேடினேன். அதிருஷ்டவசமாக
சுலபமாகவே கிடைத்தது. “தாதி மா” ஹிந்தி படத்தில்
மஹேந்திர கபூரும், மன்னா டே-யும் இணைந்து பாடியது.
ரோஷன் இசையமைப்பு. அந்தப்பாடல் காட்சியை கீழே பதிவு
செய்திருக்கிறேன்….

பாருங்களேன் – உங்களுக்கே புரியும் –
நினைவுகளுக்கும், கனவுகளுக்கு எந்த அளவு ஆழமான
தொடர்பு இருக்கிறதென்பது. பல சமயங்களில் நடப்புகளுக்கு
தொடர்புள்ளதாக கனவுகள் வருவது சகஜம் தான்.

ஆனால், இப்படி 54 ஆண்டுகள் ஆழ்மனதில் உறங்கி விட்டு,
அதற்குரிய சமயம் வரும்போது என் முன் இந்தப்பாடல்
வந்திருப்பதை இப்போது நினைத்தாலும் ஆச்சரியமாக இருக்கிறது.

…..

…..

.
——————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

8 Responses to அவ்வளவு ஆழமான தொடர்பா… கனவுக்கும், நனவுக்கும்….?

 1. M.Subramanian சொல்கிறார்:

  Really Very interesting.

 2. புதியவன் சொல்கிறார்:

  ஒரு தடவை எனக்கு சொத்து சம்பந்தமா ஒரு மனவருத்தம் தம்பியுடன் இருந்தது. அப்பா என்னிடம் ஒரு வார்த்தை சொல்லலையே (சொல்லியிருந்தால் முழு மனதுடன் சம்மதித்திருப்பேன். அது என் இயல்பு) என்ற வருத்தமும் கூட. அவனிடம் பேசுவதை நான் நிறுத்தியிருந்தேன். என் அப்பா என் கனவில் வந்தார் (அதிகாலைக் கனவு). “அவனுக்கு முழுமையாக் கொடுத்தால் அதில் என்னடா தப்பு'” என்று காரணத்தை வெளிப்படையாச் சொன்னார். அவர் என்னிடம் கோபமாகப் பேசினார். அன்றிலிருந்து நான் தம்பியுடன் பேச ஆரம்பித்தேன். இதுபோல இன்னொரு சமயம் என் பெரியம்மா, உறவினர்களெல்லாம் அவரிடம் பணத்துக்காக மட்டும் அன்பு வைத்திருக்கிறார், எதற்கு தன்னிடம் அன்பு செலுத்தினாலோ அப்ரோச் செய்தாலோ அதற்கு பணம் மட்டும்தான் காரணம் என்றே தன் மனதில் எண்ணத்தை வளர்த்துக்கொண்டிருந்தார். நானெல்லாம் அவரிடம் வளர்ந்தவன். ஒரு நாள் என் கனவில் என் பெரியப்பா வந்து, ‘உன்னைப் பற்றி எனக்குத் தெரியும் என்று சிலவற்றைச் சொல்லிவிட்டு விருவிருவென நடந்துசென்றுவிட்டார்.”இந்த இரு நிகழ்வுகளும் நான் வெளிநாட்டில் இருந்தபோது நடந்தவை. கனவில் நடப்பது எல்லாம் நம் கற்பனையே என்பதில் எனக்கு நம்பிக்கை கிடையாது. சில, நம்மிடம் communicate செய்வதற்காக நிகழும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை.

  நிறைய தடவை நாளைக்கு எக்ஸாம்…இன்னும் சப்ஜெக்டைத் தொடவே இல்லை என்றெல்லாம் கனவு வந்து மனது ரொம்ப கஷ்டப்பட்டு முழிப்பு வரும்போது, ‘அப்பாடா…இப்போ வேலை னா பார்த்துக்கொண்டிருக்கிறோம். நமக்கென்ன எக்சாம்லாம்’ என்று ரொம்பவே ரிலாக்ஸ்டாகியிருக்கிறேன். இதற்கெல்லாம் ஆழ்மனது காரணங்கள் இருக்கும். நான் பறப்பதுபோல பலமுறை கனவு கண்டிருக்கிறேன், சொன்னால் சிரிப்பா இருக்கும், ஆனால் எனக்கு என்னால் பறக்க முடியும் என்ற நம்பிக்கை எப்போதும் உண்டு, பலப் பல முறை on my wish நான் பறந்திருக்கிறேன் (இந்த உடலோடு, கனவுலகில்). இந்தக் கனவு எனக்கு அவ்வப்போது வரும். இதற்குக் காரணம் முன் ஜென்மத்தில் எனக்கு பறக்கும் சக்தி இருந்திருக்கலாம் (பறவையாகப் பிறந்திருக்கலாம்) அல்லது ஏதோ ஒரு காரணத்தால் அந்தச் சக்தியை இந்த ஜென்மத்தில் என்னால் உபயோகிக்க முடியலை என்றே நான் நினைத்துக்கொள்கிறேன். (சிரிப்பாக இருக்கலாம்….ஆனால் நான் சீரியஸாக எழுதியிருக்கேன்). வெறும் ஆழ்மனது என்று இதனைக் கடந்துசென்றுவிட முடியாது.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   புதியவன்,

   உங்களுக்கு ஏற்பட்டது போன்ற அனுபவம்
   தங்களுக்கு ஏற்பட்டதாக என் நண்பர்கள் சிலர் கூட
   முன்னரே சொல்லி இருக்கிறார்கள்.

   சில சமயங்களில் எனக்கே கூட வீட்டில்
   மறைந்து போன உறவினர்கள் தோன்றி
   நடப்பு நிகழ்ச்சிகளைப்பற்றி பேசிய அனுபவங்கள்
   உண்டு. நான் சுலபமாக விளக்கக்கூடிய
   ஒரு சம்பவத்தை மட்டும் தான் இங்கே தந்திருந்தேன்.

   விசித்திரம் தான்…!!!

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

  • Venkataramanan சொல்கிறார்:

   Sir, I am astonished that I too dream quite often about the two things you have mentioned, flying on will and greatly worrying about not prepared for exams. Plus I dream about finding money spread on the ground here & there.

  • புதியவன் சொல்கிறார்:

   @வெங்கடராமன் – நான் சின்ன வயதில் கனவில், பதின்ம வயதில் கனவில் நிறைய பணத்தை நான் செல்லும் இடங்களில் பார்த்திருக்கிறேன், நடந்துகொண்டே இருப்பேன்..அங்கொன்றும் இங்கொன்றுமாக நிறைய பணம் சிதறிக்கிடக்கும். கை வைத்த இடங்களிலெல்லாம் பழங்கால நாணயங்கள்… அவற்றை கலெக்ட் செய்திருக்கிறேன். என்னன்னவோ பழங்கால நாணயங்கள், அங்க அங்க சிதறிக்கிடக்கும், நான் பொறுக்கியிருக்கிறேன். (எல்லாம் கனவில்..ஆனால் உண்மையிலேயே நடந்ததுபோல) மிகச் சாதாரண பின்னணியில் இருந்த எனக்கு, பதின்ம வயதில் மற்றவர்கள் நோக்கில் கொஞ்சம் அவங்க என்னைத் தாழ்வாக எண்ணும் நிலையில் இருந்த எனக்கு (வீட்டில் பணம், நண்பர்களின் பெற்றோர்களைவிட அதிகம் இருந்தது, படித்தவர்கள்…ஆனால் we are custodian of funds என்ற கொள்கை உடையவர்கள்..கடவுள் தருவதால் நாம் செலவழிக்கவேண்டாம், சிக்கனமாகத்தான் இருக்கணும் என்ற கொள்கை. உணவு, உடையில் மிக மிக எளிமை.. 4-5 கிலோமீட்டர் நடந்துதான் பள்ளிக்குச் செல்லணும், பஸ்ஸை நாடக்கூடாது என்பது போல), இறைவன் அருளால் பாதை புலப்பட்டது….நல்ல நிலைக்கு உயர்ந்தேன்…வெளிநாட்டில் வேலை செய்தேன்..செய்த உழைப்பை விட அதிகச் சம்பளம், பல நாடுகளுக்குச் சென்றேன் (ஹா ஹா.. ஆனாலும் என் முன்னோர்களின் எண்ணவோட்டமே என்னிலும் நிறைந்திருந்தது.. We are custodian..) நல்ல நிலையில் இருந்தபோதுதான் எனக்கு வந்த கனவின் அர்த்தம் புரிந்தது (அதுதான் கனவின் அர்த்தம் என்று எடுத்துக்கொண்டேன்).

   உங்கள் பின்னூட்டம் இவற்றை நினைவுபடுத்தியது. நன்றி.

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    இந்த இடுகை சில நண்பர்களின் ஆழ்
    உணர்வுகளை, பழைய நினைவுகளைக்கிளறி
    இருப்பது குறித்து நான் மகிழ்வடைகிறேன்.

    மனந்திறந்து பல விஷயங்களை எழதியிருக்கும்
    புதியவன் அவர்களுக்கு பாராட்டுகள்.

    .
    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

 3. atpu555 சொல்கிறார்:

  ஆழ்மனதின் பதிவுகள் ஆச்சரியம்தான்! பகிர்வுக்கு நன்றி!

 4. PK சொல்கிறார்:

  Amazing…mind and thoughts!
  thanks for sharing, very interesting!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.