பத்தும் ஏழும் பதினெட்டு –

….
….

….

நல்ல காரியம் செய்யவேண்டுமென்றால் கூட,
அதை எப்படிச் செய்ய வேண்டும் என்று தெரிந்திருக்க
வேண்டும்… ஒரு சிறந்த உதாரணம் இங்கே…

—————————-

அரிமா மு.முரளிதரன் எழுதிய பத்தும் ஏழும் பதினெட்டு
என்ற நூலில் இருந்து ஒரு சிறு பகுதி –

………..

சுமார் 43 ஆண்டுகளுக்கு முன் சோழவரம் ஒன்றியம்
ஆண்டார்குப்பம் தொடக்கப்பள்ளியில் நான் தலைமை
ஆசிரியராகப் பொறுப்பேற்றேன். ஆண்டார்குப்பம் முருகன்
கோயிலுக்குப் பின்புறம் உள்ள மாட்டுக் கொட்டகைதான்
அந்தத் தொடக்கப்பள்ளி !

பகல் பொழுது பள்ளிக்கூடம். இரவெல்லாம் மாட்டுக் கூடம் !
காலை 9 மணிக்குப் பள்ளி தொடங்கும். 40 மாணவர்களும்
ஆசிரியர்கள் இருவரும் மாட்டுக் கொட்டகையில் சாணியை
வாரிக் கூடையில் போட்டுவிட்டு துடைப்பங்களால் பெருக்கி
விடுவோம். தரைப் பலகைகளைப் போட்டு மாணவர்களை
அமரச் செய்வோம்.

எங்களுக்கு ஒரு பள்ளிக் கட்டடம் தேவை. ஆனால் அரசிடம்
போதிய நிதி வசதியில்லை. தாராள மனமுடையவராய்
ஏராளமாகப் பணம் இருப்போர் எவரும் இலர்.

ஊரில் இருந்த ஒரே பணக்கார விவசாயி ஜி.கே.நாயுடு என்பவர்.
அவரிடம் சென்று பள்ளிக்கு ஒரு கட்டடம் வேண்டும் என்று
கேட்டோம். “”நீங்கள் 3000 ரூபாய் கொடுங்கள் நான் தளம்
போட்ட கல் கட்டடமே கட்டித் தருகிறேன்” என்றார் அவர்.

நாங்கள் அவரிடம் நன்கொடை எதிர்பார்த்துச் சென்றோம்.
அவரே எங்களிடம் பணம் கேட்டதும் ஆடிப் போய்விட்டோம் !
“நாளை வருகிறோம்’ என்று சொல்லிவிட்டு ஆண்டார்குப்பம்
முருகனிடம் “இது என்ன சோதனை’ என்று புலம்பினோம்.

அப்போது அந்த மாட்டுக் கொட்டகை உரிமையாளர்
சாமிநாத அய்யர் “”இந்தாருங்கள் 100 ரூபாய்” என்று தன்
மடியிலிருந்து எடுத்துத் தந்துவிட்டு, “”நீங்களே வீடு வீடாய்ச்
சென்று ஒவ்வொருவர் வீட்டிலும் எவ்வளவு தர முடியுமோ
அதை வசூலித்து நாயுடுவிடம் கொடுங்கள். அவர் நிச்சயம்
கட்டிக் கொடுப்பார்” என்று யோசனை சொன்னார்.

நாங்களும் அப்படியே ஒவ்வொரு வீடாய்ப் போனோம்.
அவரவர் பங்கிற்கு நெல், புளி, மிளகாய், வேர்க்கடலை போன்று
எதைக் கொடுத்தாலும் வாங்கிக் கொண்டு அவற்றை
மளிகைக் கடை நாடார் ஒருவரிடம் கொடுத்துக் காசாக்கினோம்.
எங்கள் பங்கிற்கு ஒரு தொகை போட்டு நாயுடுவிடம்
கொடுத்தோம்.

அதைப் பெற்றுக் கொண்டு அழகான தளம் போட்ட பள்ளிக்கூடம்
ஒன்றை 27,000 ரூபாய் மதிப்பில் கட்டித் தந்தார் நாயுடு.
இன்று சுமார் 600 மாணவர்களுடன் தரமான கல்வித் தேர்ச்சி
தரும் உயர்நிலைப் பள்ளியாய் அது உயர்ந்துள்ளது !

அப்போது நாயுடுகாரு சொன்னது என்ன தெரியுமா?

“”நானே மொத்தப் பணத்தையும் போட்டுப் பள்ளிக்கூடத்தைக்
கட்டிக் கொடுத்தால் ஒரு பலனும் இருக்காது. இப்போது,
இதிலுள்ள ஒவ்வொரு செங்கல்லும் எங்கள் தாத்தா பாட்டி
தந்தது என்று இங்கு படிக்கும் பிள்ளைகள் உணர்ந்து படிப்பார்கள்.
அப்போது இந்தக் கட்டடத்தைத் தூய்மையாகவும்,
பாதுகாப்பாகவும் வைத்துக் கொள்வார்கள். இல்லையேல்
பொதுமக்களே கண்டபடி பாழ்படுத்தி விடுவார்கள்!” என்றார்.
நியாயம்தானே!

.
———————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to பத்தும் ஏழும் பதினெட்டு –

 1. கார்த்திகேயன் பழனிசாமி சொல்கிறார்:

  ஆமாம் எங்க பள்ளியும் அப்படித்தான் கட்டபட்டது. KVS schools virudhunagar.

 2. புதியவன் சொல்கிறார்:

  உண்மைதான். எல்லோரும் கூடித் தேர் இழுத்தால்தான் அதற்கு மதிப்பு.

  சமீபத்தில் நான் கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு முன்பு படித்த பள்ளிக்குச் சென்றிருந்தேன். அது ஒரு மலை கிராம பள்ளிக்கூடம், (கன்னட நடிகர் ராஜ்குமார் பிறந்த ஊருக்கு வெகு அருகில் உள்ளது) ஆனால் பெரியது. நான் படித்த காலத்திலேயே 200 பேர்களுக்கும் அதிகமானவர்கள் படித்த பெரிய பள்ளிக்கூடம் அது. அங்கு புதிய ‘தலைமை ஆசிரியர்’ அலுவலகமாக ஒரு பெரிய அறையை மாற்றியிருந்தார்கள் (தனிக்கட்டிடத்தில்). அதற்கு அங்கு வேலை பார்த்த ஒவ்வொரு ஊழியரும்/ஆசிரியரும் தங்களால் முடிந்த 500,1000 ரூபாய் என்று நன்கொடை கொடுத்திருந்தார்கள் (இதனை அந்த அறை முகப்பில் எழுதிவைத்திருந்தனர்). எல்லோரும் சேர்ந்து நல்ல காரியத்தில் பங்குபெறும்போதுதான் அந்த ownership என்பது வரும்.

  நல்ல பகிர்வு.

 3. rathnavelnatarajan சொல்கிறார்:

  பத்தும் ஏழும் பதினெட்டு – “”நானே மொத்தப் பணத்தையும் போட்டுப் பள்ளிக்கூடத்தைக்
  கட்டிக் கொடுத்தால் ஒரு பலனும் இருக்காது. இப்போது,
  இதிலுள்ள ஒவ்வொரு செங்கல்லும் எங்கள் தாத்தா பாட்டி
  தந்தது என்று இங்கு படிக்கும் பிள்ளைகள் உணர்ந்து படிப்பார்கள்.
  அப்போது இந்தக் கட்டடத்தைத் தூய்மையாகவும்,
  பாதுகாப்பாகவும் வைத்துக் கொள்வார்கள். இல்லையேல்
  பொதுமக்களே கண்டபடி பாழ்படுத்தி விடுவார்கள்!” என்றார்.
  நியாயம்தானே! – அருமையான பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.