திரு.ஸ்டாலின் இப்படி பின்வாங்குவது சரியல்ல …விவாதம் அவசியம் தேவை…

….
….

….

தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டங்களில் பேசும்போது,
திரு.ஸ்டாலின் ஆளும் கட்சியின் மீதும், முதல் அமைச்சர்
உட்பட பல அமைச்சர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகளை
கூறினார். இத்தகைய ஊழல் குற்றச்சாட்டுகளை உள்ளடக்கிய
ஒரு புகாரை தமிழக கவர்னரிடம் கூட அளித்து, விசாரணை
கோரினார்.

தைரியம் இருந்தால் முதல்வர் எடப்பாடி இந்த
குற்றச்சாட்டுகளைப்பற்றி தன்னுடன் பொதுமேடையில்
விவாதிக்கத் தயாரா என்று சவாலும் விடுத்தார்.

நேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஸ்டாலினின்
இந்த சவாலை ஏற்றுக் கொண்டார். தான் விவாதத்திற்கு தயார்
என்றும் ஸ்டாலின் துண்டுச்சீட்டுகளின் துணையின்றி
விவாதத்திற்கு முன்வர வேண்டும் என்றும் கூறினார்.

ஆனால், இன்று ஸ்டாலின், தான் முன் விடுத்த சவாலிலிருந்து
பின் வாங்குகிறார். முதல்வரின் விவாதத்திற்கான சவாலை
தான் ஏற்கத்தயார் என்றும் ஆனால், அதற்கான முன்
நிபந்தனையாக, முதல்வர் நீதிமன்றங்களில் உள்ள
வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்று கூறி,
போகாத ஊருக்கு வழி தேடுகிறார்….

நீதிமன்றங்களில் உள்ள வழக்குகள் வேறு கோணங்களில்
போடப்பட்டவை. அவற்றிற்கும், பொதுமேடையில்
விவாதிக்கப்படும் முறைகளுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.
உண்மையில் தனது குற்றச்சாட்டுகளை பொதுமேடையில்
விவாதிக்க, மிகுந்த விளம்பரங்களுடன் ஒரு வாய்ப்பு
கிடைக்கும்போது ஸ்டாலின் உடனடியாக ஏற்றுக்கொண்டிருக்க
வேண்டும்.

ஆனால், ஸ்டாலின் இப்படி நிபந்தனைகளை விதிப்பது –
விவாதத்திலிருந்து அவர் பின்வாங்குவதையே குறிக்கிறது….

ஆளும் கட்சியின் மீது கூறப்படும் ஊழல் புகார்களை
பொதுமேடையில் விவாதிக்க முதல்வரே தயாராக
இருக்கும்போது,

ஸ்டாலின் தயங்குவதும், திசைதிருப்புவதும் ஏன்…?
ஏற்கெனவே ஸ்டாலின் கூறிவரும் குற்றச்சாட்டுகளை,
கவர்னரிடம் அவர் கொடுத்துள்ள புகார்களை, விரிவாக
பொதுவெளியில் சம்பந்தப்பட்டவருடனேயே விவாதிக்க
வாய்ப்பு கிடைக்கும்போது, ஸ்டாலின் இப்படி பின்வாங்குவது
ஏன் என்று யோசித்தால், ஒரே ஒரு காரணம் தான்
புலப்படுகிறது…

முன்னாள் திமுக அமைச்சர்கள், முக்கியஸ்தர்கள் என்று
பல திமுக-வினர் மீது தொடரப்பட்ட பல லஞ்ச ஊழல் வழக்குகள்
பல்வேறு நீதிமன்றங்களின் முன் நிலுவையில் இருக்கின்றன.
சாதாரண பொதுமக்கள் பலருக்கும் அத்தகைய வழக்குகளைப்
பற்றிய விவரங்கள் அதிகமாக தெரியாது. தமிழ் நாட்டின்
மீடியாக்களும் பொதுவாக திமுக ஆளுமைக்கு உட்பட்டதாகவே
இருப்பதால், அவை தேர்தல் சமயத்தில் அதிகம் விவாதிக்கப்பட
வாய்ப்பில்லை.

விவாதம் என்று வந்தால், அவற்றைப்பற்றியும் பொதுமேடையில்
முதல்வர் விவாதிக்க முன்வருவார். அவை தொலைக்காட்சிகளில்
நேரடியாக ஒளிபரப்பாகும்.

அந்நிலை ஏற்படுமேயானால்,
திமுக-வினர் மீதான லஞ்ச ஊழல் புகார்கள், வழக்குகள்
விளம்பரத்திற்கு வரும்; அவற்றின் மீது வெளிச்சம் வீசப்படும்….
இது திமுகவுக்கு நல்லதல்ல. சும்மா இருந்த சங்கை
ஊதிக்கெடுத்தாற்போல் ஆகி விடும்.

தேர்தல்கள் நெருங்கி வரும் நிலையில், இரண்டு தரப்புகளைப்
பற்றியும், அதிகபட்ச உண்மை நிலவரங்களை அறிந்துகொள்ள
மக்கள் அவசியம் விரும்புவார்கள்…

காரணம் – இந்த விவாதங்களின் மூலம் வெளிவரப்போவது
எது “சுத்தமான” கட்சி என்கிற மாபெரும் உண்மையல்ல….

இரண்டு கட்சிகளில் எந்த ஆட்சியில் அதிக ஊழல்
நடைபெற்றிருக்கிறது; எதில் அதிக ஊழல்வாதிகள் இருக்கிறார்கள்
என்கிற RANK பட்டியல் தான் வெளிவரப்போகிறது….!!!

எனவே, விவாதம் நடைபெறுவது பொதுமக்களின் பார்வையில்
நல்லது; அவசியமானது.

விவாதத்திலிருந்து “ஜகா” வாங்கினால்,
ஸ்டாலின் – திமுகவினர் மீதான லஞ்ச ஊழல் வழக்குகளுக்கு
விளம்பரம் கிடைத்துவிடுமே என்று பயப்படுகிறார் என்றே
பொருளாகி விடும்.
(இன்று-நேற்று : விளக்கம் – இந்த இடுகை நேற்றிரவு எழுதப்பட்டது…)

.
————————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to திரு.ஸ்டாலின் இப்படி பின்வாங்குவது சரியல்ல …விவாதம் அவசியம் தேவை…

  1. புதியவன் சொல்கிறார்:

    உங்களுக்கு என்னவோ ஸ்டாலின் மேல் கோபம்னு நினைக்கிறேன். துண்டுச் சீட்டு இல்லாமல் அவரால் எதையுமே பேச முடியாது. ‘திராவிட முன்னேற்றக் கழகம்’ என்று கூடச் சொல்லத் தெரியுமா என்று சந்தேகம். இதுலவேற, புதுச்சேரி முதலமைச்சரை, மறைந்த விவசாயி ‘நாராயணசாமி நாயுடு’ என்று சாதி மாற்றம் வேறு செய்துவிட்டார். அவரைப்போய்….துண்டுச் சீட்டு இல்லாம, விவாதத்துக்கு வா என்றால் என்ன பண்ணுவார் பாவம்?

    திமுகவோ, கருணாநிதி, ஸ்டாலினோ, எந்தக் கட்சியை ஊழல் கட்சி என்றாலும் அது மக்களிடையே எடுபடாது. உலக ஊழல் சக்கரவர்த்திகளான இவர்கள், மற்றவர்களைக் குற்றம் சாட்டுவது நகைப்பிற்குரியது. அதனால இந்த மாதிரி வெத்துச் சவடால் அடிச்சுவிடுவாரே தவிர, விவாதத்துக்கெல்லாம் இசுடாலின் வரவே தைரியம் கிடையாது.

  2. புதியவன் சொல்கிறார்:

    இந்தச் செய்தியை எந்த எந்தத் தளங்கள் இருட்டடிப்பு செய்துள்ளதோ அவங்கள்லாம் விலை போனவங்க, திமுக எதிர்ப்புச் செய்திகளை எழுத மாட்டாங்க, பாஜக எதிர்ப்புச் செய்திகளை ரொம்பவே அதிகமாக்கி எழுதுவாங்க. பத்திரிகையாளர் எழுதும் கட்டுரை என்று தங்கள் கருத்துக்களை அவர் மூலமாக வெளியிட்டு, இதை எழுதிய கட்டுரையாளர் so & so, இது அவர் கருத்து என்று போலி முலாம் பூசுவாங்க இந்த இரண்டு தளங்களின் ஓனர்களும். இந்த இரண்டு இணையச் செய்தித் தளங்களைப் பற்றி நான் எழுதும்போது, அப்படியெல்லாம் இல்லை, அவங்க நடுநிலைவாதிகள் என்று சொன்னவங்களையெல்லாம் இப்போ காணோமே.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.