அன்புள்ள ரஜினிகாந்த் ….

….
….

….

ரஜினிகாந்த அவர்கள் –

தான் நினைத்தபடி –
தான் ரசிகர்களுக்கும், மக்களுக்கும் கொடுத்த வாக்குறுதியின்படி
தன்னால் அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த
மனவேதனையுடன் தெரிவித்திருக்கிறார்….

பலவித உணர்ச்சிகளுக்கும், உளைச்சல்களுக்கும் அவர் உள்ளாகி
இருப்பது நமக்கு மிக நன்றாகப் புரிகிறது.

உளைச்சலுக்கு உள்ளானவர் ரஜினி மட்டுமல்ல…
அவரை விரும்பிய அத்தனை பேரும் தான்.

ஹைதராபாத் படப்பிடிப்பில் 4 நபர்களுக்கு கொரோனா அறிகுறிகள்
ஏற்பட்டதும், அதையடுத்து ரஜினி தன்னை தனிமைப்படுத்திக்
கொண்டதும், அவரை விரும்பும் அத்தனை உள்ளங்களுக்கும்
கவலையையும், பதட்டத்தையும் உண்டாக்கியது.

அன்று நான் சென்னையிலிருந்து திருச்சி நோக்கி காரில் பயணம்
சென்று கொண்டிருந்தேன். பயணத்தில் இருக்கும்போது,
சென்னையிலிருந்து தொலைபேசியில் பேசிய நண்பர் ஒருவர்
ரஜினி ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனையில் அட்மிட் ஆகி
இருக்கிறார் என்கிற செய்தியை தெரிவித்தார். மிகவும்
வேதனையாக இருந்தது…. ( முக்கியமாக, தானாகவே காரிலிருந்து
இறங்கி, நடந்துபோய் மருத்துவமனையில் அட்மிட் ஆன
எஸ்.பி.பாலசுப்ரமணியன் அவர்களின் நினைவு வந்து படுத்தியது;
வருத்தியது.)

பின்னர் – அவருக்கு கொரோனா இல்லையென்றும்
சீரற்ற ரத்த அழுத்தம் தான் பிரச்சினை என்றும் தெரியவந்தபோது
கொஞ்சம் நிம்மதி பிறந்தது.

உண்மையிலேயே அன்றிரவு, படுக்கப்போகும் முன்பு நான்,
ஆண்டவா – இவர் நல்லபடியாக வீடு திரும்ப அருள் புரி.
அரசியல் எக்கேடும் கெட்டுப்போகட்டும்….
அந்த நல்ல மனிதர் நலமாக இருந்தாலே போதும் என்று
ரஜினிக்கு உறவோ, நட்போ, நெருக்கமோ – இல்லாத நான்
உளமார வேண்டிக்கொண்டேன்…
என்னைப்போல் இன்னும் எத்தனை லட்சம் பேரோ…

ரஜினிகாந்த் ஒரு நல்ல மனிதர்… மிக நல்ல மனிதர்.
அவர் அரசியலுக்கு வந்தால் நல்லது என்று நாம் நினைத்தோம்.
அவரும் வந்து உருப்படியாக எதாவது செய்ய வேண்டுமென்று
ஆசைப்பட்டார். ஆனால், அவர் உடல்நிலை அதை அனுமதிக்காது
என்று இப்போது உறுதியாகத் தெரிகிறது….

நல்லவேளையாக இப்போதே இந்த விஷயம் உறுதியானது.
ஒருவேளை அவர் கட்சியைத் துவங்கி, 15 நாட்கள் கழித்து
மீண்டும் மருத்துவமனைக்கு செல்ல நேர்ந்தால் …?
நிலைமை எவ்வளவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்…?

எங்கோ இருக்கும், எப்போதோ பார்க்கும் நமக்கே இப்படி
என்றால், அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும்,
நெருங்கிய நண்பர்களுக்கும் – அவரை நம்பி இருக்கும்
பலருக்கும் எப்படி இருக்கும்…?

ஹைதராபாதிலிருந்து திரும்பி, சென்னை விமான
நிலையத்திலிருந்து அவர் வெளியே வந்தபோது எடுக்கப்பட்ட
வீடியோக்களை பார்த்தோம்… அவர் மிகவும் தளர்ந்து போயிருப்பது
நன்றாகவே தெரிகிறது.

ரஜினி அரசியலுக்கு வராதது நமக்கு நிச்சயமாக
ஏமாற்றம் தான்… ஆனால் வருத்தம் இல்லை;

ஏமாற்றம் வேறு. வருத்தம் வேறு…

ஒரு விதத்தில் அது ஒரு நிம்மதியைக்கூட கொடுக்கிறது.
அவர் நல்ல உடல்நலத்துடன் இருந்தால்,
எதிர்காலத்தில் இந்த சமூகத்திற்கு எவ்வளவோ செய்ய முடியும்…
அரசியலுக்கு வந்தால் தானா என்ன…?

தமிழ்நாட்டிற்கு என்ன விதிக்கப்பட்டிருக்கிறதோ –
அது நடக்கட்டும்.

ரஜினி அவர்களே – நீங்கள் கவலைப்பட வேண்டாம்.
உங்கள் முடிவு நிச்சயமாக எங்களுக்கு வருத்தத்தையோ,
வேதனையையோ தரவில்லை. ஏனென்றால் அதற்கான
பின்னணியும் காரணமும் நீங்கள் அல்ல;
முற்றிலும் உங்களை மீறிய சூழல் அது…

நீங்கள் சீக்கிரமே முழு உடல்நலம் பெற்று,
உற்சாகமாக செயல்பட இறைவன் அருள் புரிய வேண்டுகிறோம்.

.
————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to அன்புள்ள ரஜினிகாந்த் ….

 1. புதியவன் சொல்கிறார்:

  //தமிழ்நாட்டிற்கு என்ன விதிக்கப்பட்டிருக்கிறதோ – அது நடக்கட்டும்.//

  எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே
  செய்தற் கரிய செயல்.

  என்பதுதான் என் எண்ணம்.

  ரஜினிகாந்த் நல்ல உடல் நலத்துடன், அரசியல் உளைச்சல்கள் இல்லாமல் மீதி உள்ள காலத்தை நிம்மதியாகக் கழிக்கட்டும். மறந்தும் ‘அ….லோ’ போய்விட வேண்டாம். I assume இதில் ஏதும் சதிச்செயல் இல்லை என்று – எந்த படம், யார் தயாரிப்பது என்றெல்லாம் ஆராயாதீர்கள்.

 2. GOPI சொல்கிறார்:

  இது இயக்குநர் பாரதிராஜா எழுதி இருப்பது :

  திடீரென்று கட்சி ஆரம்பிக்கவில்லை என்று கொதித்துவிடுவார்களோ என நினைத்தேன். ஏனென்றால் அவன் வெறிபிடித்த ரசிகன். அனைவருடைய பேச்சையும் பார்த்தேன். எந்தவொரு எதிர்பார்ப்புமே இல்லாமல் பயணப்பட்டு இருக்கிறான். ரஜினி என்ன சொல்கிறாரோ அதுதான். எங்களுக்கு அவருடைய உயிர் முக்கியம், உடல் முக்கியம் என்றான். அவருடைய ரசிகர்களுக்குப் பாராட்டுகள். அப்படிப்பட்ட ரசிகர்கள் கிடைத்திருப்பது பெரிய விஷயம்.

  ஆன்மிகத்தின் உச்சத்தில் நீ ஜெயித்துள்ளாய். நல்ல முடிவு எடுத்திருக்கிறாய் ரஜினி. ஐ லவ் யூ. நீ எந்த மொழிக்கும் சொந்தக்காரன் அல்ல. தமிழக மக்கள் உன்னை விரும்பினார்கள். நீ மராட்டியன் அல்ல, நீ கன்னடன் அல்ல, நீ தமிழன். அதை இப்போது ஒப்புக்கொள்வேன். நான் முதல்வராக வரமாட்டேன் என்று சொன்னாய், தமிழன்தான் வருவான் என்று சொன்னதற்கு கை தட்டினேன். உனக்காக வேண்டிக் கொள்கிறேன். தனித்த முடிவு 3 நாளுக்கு முன்னால் உனக்காகக் கோயிலுக்குச் சென்று வேண்டினேன். போன் பண்ணினேன். அழுதுகொண்டே பேசினேன். ஏனென்றால் நீ எனக்கொரு நல்ல நண்பன். இது ஒரு சாக்கடை. நீ இங்கிருந்தே மக்களுக்கு நல்லது செய்யலாம். யாருடைய சொல்லையும் கேட்காமல், தனித்த முடிவு எடுப்பதில் நீ தலைவன். கொஞ்சம் முரட்டுத்தனம் இருக்கும். அந்த முரட்டுத்தனத்தில் எடுத்த முடிவை வரவேற்கிறேன். யார் என்ன சொன்னாலும் கேட்க வேண்டாம். நீ முக்கியம், உன் உயிர் முக்கியம், உன் உணர்வு முக்கியம். இந்த ரசிகர்களுக்கு நீ முக்கியம்”. இவ்வாறு பாரதிராஜா கூறியுள்ளார்.

 3. GOPI சொல்கிறார்:

  தலைவர் நினைத்திருந்தால் இன்னும்
  நான்கைந்து நாட்கள் மருத்துவமனையில்
  இருந்திருந்திருக்கலாம். உடல்நிலை படு மோசம் என்று நாடகமாடியிருந்திருக்கலாம். நாம் ஒட்டு மொத்தமாக ‘
  தலைவரே நீங்கள் அரசியலுக்கு வரவே தேவை இல்லை’ என்று சொல்லியிருந்திருப்போம்.
  அப்படியெல்லாம் கருணாநிதித்தனம் செய்யத்
  தெரியவில்லை. ‘என்னை மன்னியுங்கள்’ என்று
  மனம் திறந்து பேசியுள்ளார். அதனால்தான் அவர் மனிதப் புனிதர்.

  -மாயவரத்தான்.

 4. tamilmani சொல்கிறார்:

  தமிழகத்தின் தலைவிதி இதுதான் என்றால் யார் என்ன
  செய்யமுடியும். ஒரு நல்ல விடயம், இப்போதும் இருமுனை போட்டியே.
  ரஜினிக்கு விழ இருந்த ஓட்டுக்கள் ,அது ஒரு ஐந்து சதவீதம் ஆனாலும் அதிமுக பாஜக கூட்டணிக்கு வந்தால் பசியோடு காத்து இருக்கும் 2ஜி கொள்ளையர்கள் கையிலிருந்து தமிழ்நாட்டை
  காப்பாற்றலாம் .

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.