‘சுறில்’ ஒரு வார்த்தையில், ஒரு உபதேச மந்த்ரம்

….
….

….

‘சுறில்’ – ஒரு பொறி – லா.ச.ரா சிறுகதை

‘சுறில்’ – ஒரு பொறி
– ஒரு முள் தைப்பு
– ஒரு பாம்புப் பிடுங்கல்

– ஒரு வார்த்தையில், ஒரு சைகையில், ஒரு திருப்பத்தையே
ஏற்படுத்தக் கூடிய உபதேச மந்த்ரம் இப்படித்தான் அமையுமோ?

–லா.ச.ரா

———————————————–

அப்போ நாங்கள், பைக்ராப்ட்ஸ் ரோடு, ஜாம்பஜார்
மார்க்கெட்டுக் கெதிரே, ஆயில் மாங்கர் தெருவிலே
குடியிருந்தோம். கிழக்கில் அதே பைக்ராப்ட்ஸ்
ரோடில் கலக்கும் நல்ல தம்பி முதலித் தெருவில்
என் தங்கை மகளின் புக்ககம். நடை தூரம்தான்.

என் மருமாள் மாதம் ஒருமுறை, இரு முறை பாட்டியை
மாமாவைப் பார்க்க வருவாள்.

ஆபீஸ் விட்டு, பஸ்ஸில் திரும்புகையில் அவள் தெரு
முனையில்தான், நான் இறங்கணும். வாரம்
ஒரு முறையேனும் எட்டிப் பார்த்துவிட்டு வருவேன்.

என் வீட்டுக்கு நான்கு வீடுகளே தாண்டி, எதிர்ச் சாரியில்
எங்களுடைய வாடிக்கை மளிகைக்கடை.
முதலாளி செட்டியார். பிதுங்கிய பெரும் வண்டு விழிகள்.
கடை பார்க்கச் சிறியது ஆயினும், ‘ஜே ஜே’.
தொப்புளடியிலிருந்து கத்தியவண்ணம்,
செட்டியார் சிப்பந்திகளைக் கார்வார் பண்ணுகையில்,
எங்கள் வீட்டுக் கூடத்தில் கேட்கும்.

நான் எப்பவோ ஒப்புக்கொள்ள வேண்டிய விவரம், இனியும்
ஒத்திப்போட முடியாது. என் பாடும் ‘பற்று’த் தான்.
நாடு விடுதலை பெற்று எத்தனை வருடமானாலும் சரி,
எந்தக் கட்சி ஆண்டாலும் சரி, உற்பத்திப் பெருக்கு எத்தனை
ஆனாலும் சரி, இந்த நடுத்தரக் குடும்பம் இருக்கிறதே,
இதற்கு விமோசனம் கிடையாது. எல்லோருடனும் சேர்ந்து
கும்மி அடிக்கிறேனா? அடித்து விட்டுப் போகிறேன்.

நாங்கள் குடியேறின ஆறு மாதங்களுக்குள் முழியான்
செட்டியார், எங்களைத் தன் கணக்குப் புத்தகத்துள் இழுத்து
விட்டார். சிறுகச் சிறுக ஆரம்பித்து,
ஒரு நாள் முழுக்க. அப்புறம் முதலை வாய்தான்.

சம்பளத்துக்கு ஒரு வாரம் முன்னரே, லிஸ்டைக்
கொடுத்துவிட்டால், அன்று மாலையே, மறக்காமல்
கொசிர்ப் பொட்டலத்துடன் (அதைச் சொல்லு), பெரிய
அட்டைப் பெட்டியில் சாமான்கள் வந்து இறங்கிவிடும்.

லிஸ்டைத் தவிர, தனித் தனியா வேற அப்பப்போ,
பெண்டிருக்கு வெகு செளகர்யம். அம்மியில்
தேங்காய்த் துருவலையும் பச்சை மிளகாயையும்
வைத்துக்கொண்டு, உடைத்த கடலைக்கு,
கடைக்குட்டியைக் கடைக்கு அனுப்பலாம்.

சின்னப் பையனிடம்கூட செட்டியாரின் கவனமும்
மரியாதையும் குறிப்பிடத் தக்கதாயிருக்கும்.

“இந்த மாதம் சாமான் கூட ஆயிடுத்து செட்டியார்….”

“ஆவட்டும், ஆவட்டும். பிள்ளைங்க நல்லாச் சாப்பிட்டு
நல்லா வளரட்டும்.”

“பணம், செட்டியார்-”

“என்ன சாமி, பணம், பணம் ? நான் வாயைத் துறந்து
கேட்டேனா? வசூலுக்கு இதுவரை உங்கள் வாசப்படி
மிதிச்சிருப்பேனா பணம் எங்கே ஒடிப் போவுது?
மனுஷாள்தான் முக்கியம் சாமி!”

அவ்வளவுதான், தொப்புள்வரை ‘ஜில்’

ஒரு சமயம், ஆபீஸ் விட்டு, வழக்கம்போல் கலியாணி
வீட்டில் எட்டிப் பார்க்கையில், என்னைக் கண்டதும்
அவள் முகம் சட்டென இறங்கிற்று. என்னோடு முகம்
கொடுத்துப் பேசவும் இல்லை. எனக்குப் புரிய வில்லை.
வீட்டில் ஏதேனும் மசமசப்பா? நோ.நோ.நோ. அவளுக்கு
அங்கே ரொம்ப செல்லம். அதிர்ஷ்டசாலி தென் வாட்?
அடுத்த தடவையும் அப்படியே. நான் என்ன குற்றம் செய்தேன்?

மூன்றாம் ‘பீட்’டின்போது மாடியில் நான் தனியாக ஏதோ
பத்திரிகையைப் புரட்டிக்கொண்டிருக்கையில், மேலே வந்தாள்.

“மாமா, உங்களிடம் சொல்லலாமா வேண்டாமா,
இதுவரை யோசனை பண்ணிப் பண்ணி உங்களுக்குத்
தெரியப்படுத்துவது என் கடமைன்னு முடிவு பண்ணிட்டேன்.”

“என்ன? என்ன ஆச்சு?”

சுப்ரீம் பீடிகை வயிற்றில் புளியைக் கரைத்தது.

“அன்னிக்கு உங்காத்துக்கு வந்திருந்தேனா? திரும்பும்போது
வீட்டில் டீ தீர்ந்துபோச்சு ஞாபகம் வந்தது. எதிரே செட்டியார்
கடையேறி 50கி. பாக்கெட் ஒண்ணு கேட்டேன்.
கடையில் அவரைத் தவிர யாரும் இல்லை. சாப்பாட்டு
வேளையோ என்னவோ? செட்டியார் ஏதோ கணக்குப் பார்த்துக்
கொண்டிருந்தார். சாமானை எடுத்து வரக்
கடையின் உள் அறைக்குப் போனார்.

தற்செயலில் என் பார்வை, திறந்தபடி அப்படியே விட்டுப்
போயிருந்த கணக்கு நோட்டின் மேல் விழுந்தது.
கொட்டை எழுத்தில், தலைப்பில் உங்கள் பெயர்
பார்த்ததும், கவனம் சட்டுனு அங்கு ஊணித்து. ஐட்டங்களின்
நடுவிலிருந்து டீ-ஒத்தை எழுத்தோன்னோ- தனியாப் பிதுங்கித்து.

‘100. கி பாக், 2-50.’

“இந்தாம்மா டீ, A-1 சரக்கு-என்னம்மா பார்க்கறீங்க?”
குண்டுக் கண் கடுத்து உடனே கனிஞ்சதை டிக்கெட் கொடுத்துப்
பார்க்கலாம். புத்தகத்தைப் படக்’னு மூடினார்.

“என்ன செட்டியார்வாள், எனக்கு டீ விலை ரூ. 2.
அதே பொட்டலம், அதே ரகம் மாமாவுக்கு 2-50!”

ரோசத்தில் என் குரல் தேம்பித்தோ என்னவோ?

அவர் அமைதியா, “ஏம்மா, நீங்க காசைக் கொடுத்துட்டு டீ
சாப்பிடறீங்க, அவங்க குடிச்சிட்டுத்தானே கொடுக்கிறாங்க!”

அன்னியிலேருந்து எனக்கு மனசு சரியில்லே மாமா. அம்மாடி!
இன்னிக்கு சுமை இறங்கித்து, இனி உங்க பாடு.”

-துடித்துப் போனேன் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும்.
கஜகர்ணம் கோகர்ணம் போட்டு, எப்படியோ புரட்டி,
அடுத்த நாளே, செட்டியார் ‘பற்றைப்’ பூரா அடைத்தேன்
என்பது வேறு கதை.

அன்றிலிருந்து ரொக்கம். ‘காசில்லேன்னா அந்த சாமான்
இல்லாமலேயே நடக்கட்டும்’- உத்தரவு போட்டு விட்டேன். ஆச்சு,
முப்பது வருடங்களுக்கு மேல். இது எல்லாமே கிடக்கட்டும்.

அன்று செட்டியார் பேசினது நியாயமோ, நாணயமோ, கேலியோ-

ஆனால்
சந்தேகமில்லாமல் இலக்கியம். என்ன கச்சிதம், ஸ்வரக்கட்டு, லயம்,
என்ன அர்த்த வீச்சு!

இன்னும் வியக்கிறேன்.

செட்டியாரின் – “ஏம்மா, நீங்க காசைக் கொடுத்துட்டு டீ
சாப்பிடறீங்க, அவங்க குடிச்சிட்டுத்தானே கொடுக்கிறாங்க!”

‘சுரீல்’ -ஒரு பொறி

-ஒரு முள் தைப்பு

-ஒரு பாம்புப் பிடுங்கல்

-ஒரு வார்த்தையில், ஒரு சைகையில், ஒரு திருப்பத்தையே ஏற்படுத்தக்கூடிய
உபதேச மந்த்ரம் இப்படித்தான் அமையுமோ?

.
—————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s