(அத்தியாயம் -5) – அரிச்சந்திர புத்ரனின் –ஏச்சுப் பிழைக்கும் தொழிலே சரிதானா…?

…..
…..

…..

ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் வழங்குவதற்கான கடைசித் தேதியை
25.09.2007 என நிர்ணயிக்க வேண்டுமென்று, ராசா முடிவெடுத்த
உடனேயே, பல்வேறு நகரங்களுக்கு வழங்க வேண்டிய
ஸ்பெக்ட்ரம், சில இடங்களில் மிகக் குறைந்த அளவே
இருப்பதாலும்,

தொலைத் தொடர்புத் துறை கொள்கை 99க்கு எதிராக
இருக்கும் என்பதாலுமே, தொலைத் தொடர்பு அலுவலர்கள்
ஸ்பெக்ட்ரம் இருப்பை பரிசீலிக்க வேண்டும் என்று ராசாவிடம்
சுட்டிக் காட்டினர்.

அவர்கள் அவ்வாறு கவலை தெரிவித்ததற்கான காரணம், பல
மாநிலங்களில் புதிய விண்ணப்ப தாரர்களுக்கு வழங்குவதற்கான
ஸ்பெக்ட்ரம் இருப்பில் இல்லை என்பதே.

(அத்தியாயம் -4) – அரிச்சந்திர புத்ரனின் “கிசு-கிசு” -நானே ராஜா -நானே மந்திரி ……….

25.10.2007 அன்று, அப்போதைய தொலைத் தொடர்புத் துறைச்
செயலர், குறைந்த பட்சம், ட்ராயின் கருத்தைக் கேட்டாவது
முடிவெடுக்கலாம் என்றும், ஒவ்வொரு மாநிலத்திலும்,
ஸ்பெக்ட்ரம் எவ்வளவு உள்ளது என்பதையும்,
பல மாநிலங்களில் கையிருப்பு மிகக் குறைவாக உள்ளது
என்பதையும் ராசாவின் பார்வைக்கு, சுட்டிக் காட்டி அலுவலகக்
குறிப்பு ஒன்றை வைக்கிறார்.

பின்னாளில் அளித்த ஒரு பேட்டியில்,
அப்போதைய தொலைத் தொடர்புத் துறைச் செயலாளராக இருந்த
டி.எஸ்.மாத்தூர் இது குறித்து தெரிவித்தது –

“மே 2007ல் மந்திரியாக ஆனதும், ராசா என்னை அழைத்தார்.
‘சார் குறைஞ்சது 500 லைசென்ஸாவது குடுக்கனும். என்ன
பண்ணலாம்னு சொல்லுங்க’ என்று கூறினார்.

அதற்கு மாத்தூர், ஸ்பெக்ட்ரம் அந்த அளவுக்கு இல்லை.
கொடுக்க இயலாது என்று தெரிவிக்கிறார். உடனே ராசா
‘லாஸ்ட் டேட்ட மாத்திட்டா குடுக்கலாம்ல ?’ என்று எதிர்க்
கேள்வி போடுகிறார். அதற்கு மாத்தூர், இது இயற்கை நீதிக்கு
எதிரானது.

1 அக்டோபர் 2007 வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்து
விட்டு, சொல்லாமல் கொள்ளாமல் கடைசித் தேதியை
மாற்றுவது என்பது தவறானது அதனால் அவ்வாறு செய்ய
இயலாது” என்று கூறுகிறார்.

மாத்தூர் இவ்வாறு மறுத்ததும்,
அவர் விடுப்பில் சென்ற ஒரு நாள் அன்று, தொலைத்
தொடர்புத் துறை கமிஷனின், தொழில்நுட்ப உறுப்பினராக
இருந்த (தனக்கு வேண்டப்பட்ட )ஸ்ரீதரன் என்பரிடம்
கையெழுத்து வாங்கி விடுகிறார் ராசா….

இது போல ராசாவுக்கு, பல்வேறு எச்சரிக்கைகள் விடப்பட்டன.
பல்வேறு மட்டங்களில் அதிகாரிகள், ராசாவின் திட்டத்துக்கு
முட்டுக்கட்டை போட்டே வந்தனர்.

ராசா ஆயிற்றே… இந்த எச்சரிக்கைகள் எல்லாம் அவரை
மாற்றுமா என்ன…? பெயருக்கேற்றார் போல எதேச்சதிகாரமாக
செயல்பட்டார்.

02.11.2007 அன்று, ஒரு முடிவு எடுக்கிறார்….
25.09.2007 அன்று வரை பெறப்பட்ட விண்ணப்பங்களை மட்டுமே
பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப் படும். அதுதான் கடைசித்
தேதி என்று முடிவெடுக்கிறார். இந்த முடிவின் முக்கியப்
பின்னணி, 25.09.2007 அன்று கடைசி தேதி என்று முடிவெடுத்தால்
தான், டெல்லியில் உள்ள ஒரே ஒரு நிறுவனத்துக்கான
ஸ்பெக்ட்ரம், ராசாவுக்கு நெருக்கமான ஸ்வான் டெலிகாம்
நிறுவனத்துக்கு கொடுக்க இயலும்.

இப்படி சட்ட திட்டங்களை மீறி, இஷ்டத்துக்கு தேசத்தின் சொத்தை
விற்ற ராசா, பல கோடிகளுக்கு அதிபதியாக மாறி இருந்த ராசா,
டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் யுனிடெக் மற்றும் ரிலையன்ஸ்
நிறுவன அதிகாரிகளின் பிணை மனு விசாரணையில்
இருந்த அன்று,

இரண்டு மாதம் சிறை உணவை உண்டு நாக்கு செத்துப்
போனதால், தனது வக்கீல்கள் சிக்கன் கபாப் வாங்கி
வந்திருக்கிறார்கள் என்பதை அறிந்ததும், விசாரணை நடந்து
கொண்டிருக்கும் போதே, மூச்சு முட்டுகிறது என்று காரணம்
கூறி, நீதிபதியிடம் அனுமதி வாங்கி, வெளியில் வந்து,
வழக்கறிஞர்கள் கொடுத்த அந்த சிக்கன் கபாபை ஆசையோடு
சாப்பிட்டார் என்று செய்தி அப்போது ஊடகங்களில் வெளியாகி
ராசாவின் மானம் சந்தி சிரித்தது.

அப்படி சிறையில் தண்டனையை எதிர்நோக்கி இருந்தவர் தான்,
கொடுக்க வேண்டியதை கொடுத்து, பெற வேண்டியதைப்பெற்று,
இன்று தன்னை ராசாதி ராசா… வீராதி வீரன்… அரிச்சந்திர புத்ரன்
தானொரு பெரிய புரட்சியாளராக்கும் என்று சவால் விடுகிறார்….

நான் எடுத்ததுதான் முடிவு என்று தனது தொலைத் தொடர்புத்
துறை அதிகாரிகளுக்கு சொல்லி விட்டார்.
ட்ராய் அமைப்புக்கு கூட தகவல் தெரிவிக்க மாட்டேன், என்றும்
சொல்லி விட்டார்.

ஆனால், என்னதான் ராசா ஆனாலும், இவருக்கு மேல்
பெயருக்காவது பிரதம மந்திரி என்று ஒருத்தர் இருந்தாரே…
மிஸ்டர் மன்மோகன் சிங் – அவருக்கு சொல்லியாக வேண்டுமே…!

முடிவெடுத்த அதே நாள் – 2.11.2007 அன்று, ராசா பிரதமர்
மன்மோகன் சிங்குக்கு ஒரு கடிதம் எழுதுகிறார்.

அந்தக் கடிதத்தில், 25.09.2007 – தான், விண்ணப்பம் அளிக்க
கடைசி தேதி என்ற விபரம் பத்திரிக்கைகளில் அறிவிப்பாக
வந்ததாக கூசாமல் ஒரு பொய்யான தகவலையும் கொடுக்கிறார்.

இதுவும், கிசு-கிசு, வதந்தி என்று சொல்லி விட முடியாது.
ரெக்கார்டில் இன்றும் இருக்கிறது….தீர்ப்பளித்தவர் இந்தக்
கடிதத்தை மறந்து விட்டார் போலும்.(மறக்க வைத்திருப்பார்கள்…)

பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், கூடவே, சட்டம் மற்றும்
நீதித் துறை அமைச்சகம், ஸ்பெக்ட்ரம் விண்ணப்பம்
பெறுவதற்கான கடைசி நாளை நிர்மாணிப்பது தொடர்பான
விவகாரத்தை அமைச்சரவைக் குழுவுக்கு அனுப்ப வேண்டும்
என்று கூறிய கருத்து, தவறானது என்றும் குறிப்பிடுகிறார்.

சட்டத்துறை அமைச்சகம் தவறாக கூறியதாம்.
இவர் சரியாகச் சொல்கிறாராம்.

இது மட்டுமல்லாமல், ஸ்பெக்ட்ரம் வழங்குவது தொடர்பான
விவகாரத்தில், தொலைத் தொடர்பு அமைச்சகம், சட்டத்திற்கு
உட்பட்டு, நூல் பிசகாமல் நடந்து கொள்வதாகவும் ராசா
தெரிவித்திருந்தார். சட்டத்துறை அமைச்சரவைக் குழுவுக்கு
அனுப்ப வேண்டும் என்று பரிந்துரைத்து, தனது அதிகாரத்தில்
குறுக்கிடுவதாகவும் புகார் செய்திருக்கிறார் ராசா.

99-ம் ஆண்டின் தேசிய தொலைத் தொடர்புக் கொள்கை
பாரா – 3.1.1ல் குறிப்பிட்டுள்ள விதிமுறைகளை தான் காற்றில்
பறக்க விட்டதை ராசா வசதியாக குறிப்பிட மறந்தார்….!!!

இந்தக் கடிதத்தை ராசா அனுப்பிய 02.11.2007 அன்றே,
பிரதமர் ராசாவுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார்.

அந்தக் கடிதத்தில்,

ஸ்பெக்ட்ரம் கொஞ்சமாகவே மீதி இருப்பதாலும்,
நிறைய விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட இருப்பதாலும்,
எதிர்காலத்தில் பல ஆண்டுகளுக்கு ஸ்பெக்ட்ரம் இருக்காது
என்பதாலும், நிறைய பேருக்கு கொடுக்க முடியாமல் போய்விடும்.

மேலும், டெலிகாம் பாலிசி(கொள்கை)ப்படி – கையில் இருப்பதை
அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் பகிர்ந்து கொடுக்க வேண்டும்
என்பதாலும்,

மீதி எவ்வளவு ஸ்பெக்ட்ரம் கையிருப்பில் இருக்கிறது என்பதை
உறுதி செய்துகொண்டு, பிறகு லைசென்ஸ் கொடுக்க வேண்டும்.
இல்லையென்றால், வெறும் லைசென்ஸை மட்டும்
வைத்துக்கொண்டு அவர்களால் செயல்பட முடியாமல்
போய் விடும் என்றும் – பிரதமர், ராசாவுக்கு எழுதுகிறார்.

அசந்துபோன ராசா, நாள் கடந்தால், தன் காரியம்
கெட்டு விடும்; தான் நினைப்பதை நடத்த முடியாத நிலை
உருவாகி விடும் என்று இரவோடு இரவாக இதற்கு பதில்
ஒன்றை தயார் செய்ய விரும்பினார்.

ஆக ஒரே நாளில் ராசா டு பிரதமர்,
பிரதமர் டு ராசா, மீண்டும்
ராசா டு பிரதமர் என்று ஆக மொத்தம் 3 கடிதங்கள்…

என்னே அவசரம்…!!!
விடுவதற்கு கொஞ்சம் நஞ்சமான பணமா என்ன…?

இரவே கடிதம் தயாரிக்க என்ன செய்வது…?
அலுவலகத்தில் யாரும் இருக்க மாட்டார்கள்…
வீட்டிலேயே தயாரிக்கலாமென்று முடிவுசெய்து,
தனது (நம்பகமான கூட்டாளியான) செயலாளர் சந்தோலியாவை
அழைக்கிறார். கூடவே டைப் அடிக்க ஆள் வேண்டுமே…!
சுற்றுச்சூழல் துறையிலிருந்தே தான் கூடவே கொண்டு வந்த –
2004-ஆம் ஆண்டு முதல் தன்னுடனேயே சுற்றிக்கொண்டிருக்கும் –
ஆசிர்வாதம் ஆச்சாரியையும் வீட்டுக்கு வரவழைக்கிறார்.
எல்லாரும் இரவு 8 மணிக்கு ராசாவின் வீட்டில் கூட முடிவு ….!!!

ஆசீர்வாதம் வீட்டுக்கு வந்ததும், ராசாவே அவரோடு அமர்ந்து
கடிதத்தை டிக்டேட் செய்கிறார்.
“டியர் மிஸ்டர் பிரைம் மினிஸ்டர்” என்று தொடங்கும் அந்த
சரித்திரப்புகழ் பெற்ற கடிதத்தில், ராசா,

“எல்லாம் சரியாத்தான் நடக்கிறது…. ஒரு தவறும் பண்ணவில்லை…
என் மாதிரி இந்த அளவு யாருமே வெளிப்படையா நடந்து
கொண்டிருக்க மாட்டார்கள். இப்போது மட்டும் இல்லை..
எதிர்காலத்திலும் கூட இதே மாதிரி (….!!! ) எல்லாமே
சட்டதிட்டங்களுக்கு உட்பட்டே நடக்கும். எனவே, நீங்கள்
கவலைப்படவே தேவையில்லை” என்று பதில் எழுதுகிறார்.

ராசா, சந்தோலியா, (ராசா சொல்படி கேட்கும்) தொலைத் தொடர்புக்
கமிஷன் உறுப்பினர் ஸ்ரீதர், ஆகியோர் சேர்ந்து இந்த கடிதத்தை
தயார் செய்கிறார்கள். இரவு 11 மணிக்கு வேலை முடிகிறது.
இரவோடு இரவாக, சிறப்புத் தூதுவர் மூலம், அந்தக் கடிதம்
பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப் படுகிறது.

( இதில் சொல்லியுள்ள ஆசீர்வாதம் ஆச்சாரி, பின்னர் நீதிமன்ற
விசாரணையின்போது, இவையெல்லாவற்றையும் உறுதி
செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது…)

(நீதிமன்றத்தில் விசாரித்த பெரியவரோ – அவ்வளவு அவசரமாக
இதில் செயல்பட வேண்டிய அவசியமென்ன என்று ஒரு
சின்னக்கேள்வி கூட கேட்டதாகத் தெரியவில்லை; ஆனால்,
வெகு சுலபமாக எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து,
கிசு-கிசு, வதந்தி என்று தீர்ப்பு எழுத மட்டும் அவருக்கு தெரிந்தது…! )

அப்போது, தொலைத் தொடர்பு கமிஷனின் நிதிக்கான
உறுப்பினராக இருந்த மஞ்சு மாதவன் என்பவர், இது வரை
லைசென்ஸ் கொடுத்து வந்தது 2001ல் உள்ள விலை.

இப்போது ஸ்பெக்ட்ரத்துக்கான தேவை (Demand) மிக
அதிகமாக உள்ளது. அதனால், ஏலம் விட்டால், அதிகத் தொகையை
ஏலத்தில் கேட்பவர்கள், ஸ்பெக்ட்ரம் பெற
இயலும், மேலும், அரசுக்கும் கூடுதல் வருவாய் கிடைக்கும்
என்று, சம்பந்தப் பட்ட கோப்பிலேயே எழுதுகிறார்.

ஆனால், அரிச்சந்திர புத்ரன் அந்த ஆலோசனையை
கண்டும் காணாமலும், அவ்வாறு எழுதப்பட்டதன் மீது,
எந்த முடிவும் எடுக்காமல், கண்டு கொள்ளாமல் கடந்து சென்று
தன் முடிவை அறிவித்து விடுகிறார்.

அப்போதைய தொலைத் தொடர்புத் துறைச் செயலர் மாத்தூர்,
சாட்சியம் அளிக்கும்போது –

“இது தொடர்பாக நடைபெற்ற கூட்டங்களில் விவாதிக்கும்
போதெல்லாம், ஏலமெல்லாம் விட முடியாது என்பதை
தீர்மானமாக ராசா கருத்து தெரிவித்தார். மேலும், 2001ல்
தீர்மானித்த விலைக்குத் தான் கொடுக்க முடியும்” என்றும்
ராசா உறுதியாகக்கூறினார்” என்றார்.

இது அரிச்சந்திர புத்ரன் தன்னை ராசாவாக அல்ல –
ராஜாவாகவே கருதி எடுத்த முடிவு.

ஆனால், இதை தெரிந்துகொண்ட பிரதமர் மன்மோகன் சிங்
அவர்கள் நடந்துகொண்ட விதம் மிகவும் கேவலமானது…

ராசாவை over rule செய்து, உறுதியாக –

“சட்ட அமைச்சகம் அமைச்சரவை குழுவுக்கு அனுப்பவும் என்று
தெரிவித்த கருத்தை மீறி,
நீங்கள் தன்னிச்சையாக முடிவெடுப்பது
சரியல்ல; அதனால் உங்கள் முடிவை நான்
நிறுத்தி வைத்து, அந்தக் கோப்பை அமைச்சரவைக் குழுவுக்கு
அனுப்புகிறேன்”- என்றல்லவா உத்தரவிட்டிருக்க வேண்டும்.

ஆனால், தானாக தன் சொந்த பலத்தில் ஒரு எம்.பி.யாக கூட
ஆக முடியாத ஒரு நபர் தான் பிரதமராக நீடிக்க வேண்டுமானால்,
அதற்கு விலையாக, கூட்டணி கட்சிகள் செய்யும் எந்த
அயோக்கியத்தனங்களையும் கண்டுகொள்ளக் கூடாது என்று
முடிவு செய்து –

ஆ.ராசாவுக்கு பதில் எழுதுகிறார்…. எப்படி…?

உங்கள் முடிவு தவறு என்றும் சுட்டிக்காட்டாமல்,
உங்கள் முடிவின்படி நீங்கள் செய்யலாமென்றும் சொல்லாமல் –

“உங்களின் 02/11/2007 தேதியிட்ட கடிதத்தை வரப்பெற்றேன்..”
என்று ஒரு அக்னாலெட்ஜ்மெண்ட் (acknowledgement) மட்டும்
அனுப்புகிறார் முதுகெலும்பில்லாத அந்த கோழை.

இதை அரிச்சந்திர புத்ரன் பிற்காலத்தில் -(இன்று வரை -)
எப்படி பயன்படுத்தினார் தெரியுமா…?

“எல்லாம் பிரதமருக்கு தெரியும். அவரிடம் சொல்லி விட்டுத்தான்
செய்தோம்…”

கோர்ட்டில் கூட அரிச்சந்திர புத்ரன் நீதிபதியிடம் கூறியது
இதையே தான். “மன் மோகன் சிங்கை இந்த வழக்கில்
சாட்சியாக அழைத்து விசாரியுங்கள். அவரிடம் சொல்லிவிட்டு
தான் செய்தோமா -இல்லையா…?” என்று அவரையே
கேளுங்கள்…”

தான் ஊழல் செய்தால் தான் தவறு.
மற்றவர்கள் ஊழல் செய்வதை பார்த்துக் கொண்டிருந்தால்
அது தன் தவறு இல்லை; அது கூட்டணி தர்மம்…
என்று நினைத்து செயல்பட்ட உலகம் புகழும் ஒரு மாமேதை அவர் ….!!!

—————

தொடரும்…

.
————————————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to (அத்தியாயம் -5) – அரிச்சந்திர புத்ரனின் –ஏச்சுப் பிழைக்கும் தொழிலே சரிதானா…?

 1. GOPI சொல்கிறார்:

  மன்மோகன் சிங் கொஞ்சம் தைரியமாகவும்,
  பதவிப்பற்றை மறந்தும் செயல்பட்டிருந்தால்,
  இவ்வளவு பெரிய ஊழல் அப்போதே தவிர்க்கப்பட்டிருக்கும்.

  பயந்தாரா அல்லது சுயநலமா ?
  அவருக்கு மட்டும் தான் தெரியும்.

 2. புதியவன் சொல்கிறார்:

  நமக்கு இருந்ததிலேயே மன்மோகன்சிங்தான் கோழையான, பொம்மை பிரதம மந்திரி. அவரை அவரது ஆபீஸ் பியூன் கூட மதித்திருக்க மாட்டான். நாட்டைச் சூறையாடுங்கள், ஆனால் என் பதவிக்கு ஆபத்து இருக்கக்கூடாது என்று சுற்றறிக்கையை திமுகவுக்கும் காங்கிரஸுக்கும் அவர் அனுப்பியிருப்பாரோ? அவரும் சோனியாவும், திமுக சுருட்டல் கும்பலும்தான் காங்கிரஸை முழுமையாகச் சரித்ததற்குக் காரணம். அவங்க ஆட்சில நடந்த ஊழல்களை விசாரிக்க தி ஹேக் நீதிமன்றத்தாலும் முடியாது.

  இந்த மாதிரி அடிமையாக அவர் இருந்ததால்தான், நாட்டைச் சூறையாடும்படி எல்லா மந்திரிகளையும் ஆதரித்தனால்தான், அவர், பாஜக ஆட்சியைப் பற்றி என்ன சொன்னாலும், யாரும் காதுகொடுத்துக் கேட்பதாகக் காணோம். எவரொருவர் இயல்பான தலைவர் குணங்கள் கொண்டவர் இல்லையோ, அவர், அந்த மாதிரி தலைமைப் பண்பு தேவையான பதவிக்கு ஆசைப்படக்கூடாது. மன்மோகன்சிங் இயல்பான குமாஸ்தா குணங்கள் கொண்டவர். அதனால்தான் சாராய வியாபாரிகள் (நான் டி.ஆர்.பாலுவைக் குறிப்பிடவில்லை), ரியல் எஸ்டேட் ப்ரோக்கர் மற்றும் திமுக அல்லக்கைகளுக்கும் பயந்துகொண்டிருந்தார்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.