(அத்தியாயம் -4) – அரிச்சந்திர புத்ரனின் “கிசு-கிசு” -நானே ராஜா -நானே மந்திரி ……….

….
….

….

மே 2007 – ஆ.ராசா மந்திரி ஆகிறார் – சுற்றுசூழல் மற்றும்
வனத்துறையிலிருந்து -தொலைத் தொடர்புத் துறைக்கு …!

ராசா மந்திரி ஆனபோதே அவர் மனோநிலை –

மந்திரி என்பவர் ஆணைகளுக்கு கட்டுப்பட வேண்டியவர்.
ஆணைகளை செயல்படுத்த வேண்டியவர்…

ஆனால் ராஜாவோ – ஆணை இடும் இடத்தில்,
ஆணைகளை பிறப்பிக்கின்ற இடத்தில் இருப்பவர்….

ஆணைகளை பிறப்பிக்கின்றவரை
வேறு யாருடைய ஆணைகள் கட்டுப்படுத்த முடியும்…?

எனவே, மந்திரியாக அழைக்கப்பட்டாலும், நான் – ராஜா தான்.
நானே ராஜா -நானே மந்திரி…!!!

(அத்தியாயம் -3) – அரிச்சந்திர புத்ரனின் கிசு-கிசு …..உள்ளே-வெளியே

புதிய இடத்தில் தனக்கேற்ற,
நம்பிக்கையான ஆட்கள் மிக மிக அவசியம்…
அரிச்சந்திர புத்ரன் வந்த அதே நேரத்தில்,

ஆர்.கே.சந்தோலியா
என்று அழைக்கப்படும் ரவீந்தர குமார் சந்தோலியா, ராசாவின்
தனிச் செயலாளராக( ஐஏஎஸ் ) பொறுப்பேற்கிறார்.

தனது பழைய அமைச்சகத்தில் உதவியாளராக பணியாற்றி
வந்த ஆசிர்வாதம் ஆச்சாரியையும் இங்கே அழைத்துக்
கொண்டார். (பிற்பாடு இந்த ஆசிர்வாதம், டாக்டர் சு.சுவாமியின்
ஆசிர்வாதத்துடன், ராசாவுக்கு எதிராக சாட்சி சொன்னார்…)

சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் என்பது வளம் கொழிக்கும்
ஒரு இடம். ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு, ரோடு போடும்
நிறுவனங்களுக்கு, சுரங்கத்துறையில் ஈடுபடுவோர்க்கு –
முதலில் தேவைப்படுவது சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் NOC –
No Objection Certificate – அதாவது தடையில்லா சான்றிதழ்.
நாட்டில் ஆயிரக்கணக்கில் ப்ராஜக்டுகள். அத்தனையும்
சுற்றிச்சுற்றி வந்தன சுற்றுச்சூழல் அமைச்சகத்தில்….
வேட்டை தான்… பசுமையான வேட்டை…!!!

தொலை தொடர்புத் துறையையும் பசுமைக்காடாக்க வேண்டும்.
அதற்கு என்ன செய்யலாம்….? தனது ஆராய்ச்சியை,
பரிசோதனைகளைத் துவக்கினார்.

தனக்கு தோன்றுவதையெல்லாம் செய்து பார்க்கத்
துணிந்தார் அ.புத்ரன்.

சிபிஐ-ஆல், 2ஜி வழக்கில் குற்றம் சாட்டப் பட்ட
டிபி ரியாலிட்டீஸின் ஷாகீத் பல்வா, வினோத் கோயங்கா,
சஞ்சய் சந்திரா, ஆகிய தொழில் அதிபர்களோடு, ராசாவுக்கு
ஏற்பட்ட நெருக்கம், புதிதாக ஏற்பட்டதல்ல…

சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக இருந்த போது,
டிபி ரியாலிட்டீஸ் மற்றும் யூனிடெக் நிறுவனங்களின் பல்வேறு
ப்ராஜெக்டுகளுக்கு அத்துறை அமைச்சகத்தின் தடையில்லா
சான்று பெறுவதற்காக ராசாவை சந்தித்த வகையில் நல்ல
நெருக்கம் இருந்திருக்கிறது.

ஸ்பெக்ட்ரம் விவகாரம் வெளியில் வந்ததனால்,
மற்ற விஷயங்கள் குறித்து யாரும் அக்கறை கொள்ளவில்லை.
அரிச்சந்திர புத்ரன் சுற்றுச் சூழல் அமைச்சராக இருந்த காலத்தில்
அவர் அளித்த தடையில்லா சான்றுகளை ஆராய்ந்திருந்தால் –
ஏகப்பட்ட பூதங்கள் வெளிவந்திருக்கும்.

——-

முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற கொள்கையின்படி,
முதலில் விண்ணப்பம் அளிப்பவர்களுக்கு, அனுமதி கடிதம்
(Letter of Intent) கொடுக்கப்படும். அந்தக் கடிதத்தில்,
7 நாட்களுக்குள் லைசென்ஸ் பெறுவதற்கு சம்மதம் தெரிவிக்க
வேண்டும் என்றும்,

15 நாட்களுக்குள், நுழைவு கட்டணம், வங்கி உத்தரவாதம்
ஆகிவற்றை சமர்ப்பித்து லைசென்ஸ் பெற்றுக் கொள்ளலாம்
என்பது தான் விதி. ஆனால், ராஜாவாகப்பட்டவருக்கு
இந்த விதிகள் எப்படிப் பொருந்தும்…?

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு கோரி, தொலைத் தொடர்பு
நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் அளிப்பதற்கு கடைசி
நாள் என்று எதுவும் இல்லாததால்,

ராசா வந்த பிறகும், இது போன்ற விண்ணப்பங்கள் தொடர்ந்து
வந்த வண்ணம் இருந்தன. இவ்வாறு வந்து கொண்டிருந்த
விண்ணப்பங்கள், ராசா பதவியேற்றதும், அதிக அளவில் வரத்
தொடங்கின.

யூனிடெக் என்ற நிறுவனத்தின் பிரதான தொழில்,
ரியல் எஸ்டேட். மும்பை மற்றும் இந்தியாவில் பல்வேறு
இடங்களில் கட்டுமானத் தொழிலில் ஈடுபடுவதுதான்
யூனிடெக்கின் அடிப்படைத் தொழில்.

இப்படிப்பட்ட ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம், எதற்காக
தொலைத் தொடர்புத் தொழிலில் ஈடுபட வேண்டும் ?

ராசாவைப் போன்ற, தங்களுக்கு எல்லா விதங்களிலும்
உதவக்கூடிய ஒரு நபர் தொலைத் தொடர்புத் துறை
அமைச்சராகும் போது, யூனிடெக் எப்படி ரியல் எஸ்டேட்
துறையுடன் திருப்தி அடையமுடியும்…?

அவர்கள் தேர்ந்த, புத்திசாலியான வியாபாரிகள்… எனவே,
ராசா போகும் அமைச்சகங்களுக்கெல்லாம் கூடவே போய்,
அவரையும், தங்களையும் வளப்படுத்திக் கொள்ளும் முயற்சிகளில்
அவர்கள் இறங்கினார்கள்.

ராசாவின் ஆணைப்படி, ராசாவின் தனிச் செயலர் சந்தோலியா,
இந்த விண்ணப்பங்களின் மீது தனிக் கவனத்தை செலுத்தத்
தொடங்கினார். ஒவ்வொரு நாளும் அன்று எத்தனை
விண்ணப்பங்கள் வந்துள்ளன என்பதை கவனமாக பரிசீலித்தார்.

24.09.2007 அன்று விண்ணப்பங்களை பெறும் அதிகாரியிடம்,
(ராசாவின் கூட்டாளிகளான) யூனிடெக் நிறுவனத்திடமிருந்து
விண்ணப்பம் வந்து விட்டதா என்று கேட்டறிந்தார். யூனிடெக்
நிறுவனத்தின் விண்ணப்பம் வந்து விட்டது என்பதை
உறுதி செய்து கொண்டார்.

தனக்கு வேண்டியவர்கள் உள்ளே வந்தாகி விட்டது.
இனியும் கூட்டம் சேர்ந்தால், இவர்கள் விளையாட
இடம் குறைந்து விடுமே…. எனவே மற்ற போட்டியாளர்கள்
களத்தின் உள்ளே நுழைவது நிறுத்தப்பட வேண்டும்.

மேற்கொண்டு விண்ணப்பங்கள் வாங்குவதை உடனே
நிறுத்துங்கள் என்று ஆணையிடுகிறார் அரசர்.

ஆனால் தொலைத் தொடர்புத் துறை அதிகாரிகளோ,
“சார் அப்படியெல்லாம் திடீரென்று நிறுத்த முடியாது“
உரிய முறையில் அறிவிப்புச் செய்த பிறகு தான் நிறுத்த முடியும்
என்ற கூறியதும், “சரி, எப்படி நிறுத்தலாம் என்பதை
விளக்கி ஒரு நோட்டிங் போட்டு அனுப்புங்கள்“ என்று கூறுகிறார்.

அதிகாரிகளும், உத்தேசமாக ஒரு தேதியை நிர்ணயித்து
10.10.2007 வரை விண்ணப்பங்களை வாங்கலாம் என்று நோட்
போட்டு அனுப்புகிறார்கள். அதுவே அதிகம். நிறைய பேர்
நுழைந்து விடுவார்கள். சரி 01.10.2007 என்று தீர்மானிக்கலாம்…

இதற்குள், யூனிடெக் நிறுவனம் அவசர அவசரமாக
ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் பெறுவதற்காக 8 புதிய நிறுவனங்களை
தொடங்குகிறது.

ஒரே நாளில் எப்படி எட்டு நிறுவனங்கள் தொடங்கப் படுகின்றன
என்றெல்லாம் அசந்து போய் நின்றுவிடக்கூடாது. ஆயிரக்கணக்கான
கோடிகளை புழக்கத்தில் வைத்துக் கொண்டு மேலும் அவற்றை
எப்படி எல்லாம் பெருக்கலாம் என்று துடிப்பவர்களுக்கு
எட்டு நிறுவனங்களை தொடங்குவது பெரிய வேலையா என்ன ?

அஸ்க்கா ப்ராஜெக்ட்ஸ்,
நஹான் ப்ராப்பர்ட்டீஸ்,
யூனிடெக் பில்டர்ஸ்; எஸ்டேட்ஸ்,
யூனிடெக் இன்ஃப்ராஸ்ட்ரக்சர்ஸ்,
ஆஸாரே ப்ராப்பர்டீஸ், அடானீஸ் ப்ராஜெக்ட்ஸ்,
ஹட்ஸன் ப்ராப்பர்டீஸ், மற்றும்
வோல்கா ப்ராப்பர்டீஸ் என்று எட்டு நிறுவனங்களை
தொடங்குகிறார்கள்.

இந்த நிறுவனங்களுக்கெல்லாம், ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ்
கிடைத்ததும் அத்தனை நிறுவனங்களும், யூனிடெக் வயர்லெஸ்
குழுமம் என்று பெயர் மாற்றம் செய்யப் பட்டன. ரியல் எஸ்டெட்
நிறுவனங்கள் எப்படி தொலைத் தொடர்பு நிறுவனங்களாக
ஒரே நாளில் மாறின என்றெல்லாம் கேட்கக்கூடாது….

ராஜா நினைத்தால் எதுவும் நடக்கும்.
பிறகு, யூனிடெக் வயர்லெஸ் (தமிழ்நாடு) ப்ரைவேட் லிமிட்டெட்
என்ற நிறுவனத்தோடு (?????? ) அத்தனை நிறுவனங்களும்
இணைக்கப் பட்டன.

யூனிடெக் நிறுவனத்தோடு சேர்ந்து இதில் பயன் பெற்ற
மற்றொரு நிறுவனம் ஸ்வான் டெலிகாம். ஸ்வான் டெலிகாம்
நிறுவனத்தை முழுக்க முழுக்க கட்டுப்படுத்துவது
டிபி ரியாலிட்டீஸ் எனப்படும் மற்றொரு ரியல் எஸ்டேட்
நிறுவனம்.

ஷாகீத் உஸ்மான் பல்வாவைப் பற்றி முதலில் பலருக்கும்
தெரிந்திருக்கவில்லை; 2009 நவம்பரில், போர்ப்ஸ் பத்திரிக்கை
இந்தியாவின் 50-வது பெரிய பணக்காரர் என்று செய்தி
வெளியிட்ட போது தான் – டிபி ரியாலிட்டீஸ் எனப்படும்
டைனமிக் பல்வாஸ் ரியாலிட்டீஸ் என்கிற மிகப் பெரிய
ரியல் எஸ்டேட் நிறுவனம் பற்றி பலருக்கும் தெரிய வந்தது….

யூனிடெக் நிறுவனத்தின் விண்ணப்பம் வந்து விட்டது.
ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் விண்ணப்பமும் வந்து விட்டது.

ஆனால் அவர்களோடு சேர்ந்து இன்னும் மற்ற பல நிறுவனங்களும்
விண்ணப்பித்துள்ளன.

மற்ற நிறுவனங்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளி விட்டு,

எப்படி யூனிடெக் நிறுவனத்துக்கும் ஸ்வான் டெலிகாம்
நிறுவனத்துக்கும் மட்டும் லைசென்ஸ் கொடுப்பது…. ?

அரிச்சந்திர புத்ரன் என்றால்
சும்மாவா…?

01.10.2007 தான் விண்ணப்பங்கள் பெறுவதற்கான கடைசி நாள்
என்று அறிவிக்கலாம் என்று இறுதியாக முடிவெடுக்கப் படுகிறது.
இதன்படி, 24.09.2007 அன்று பத்திரிக்கைகளுக்கு செய்தி ஒன்று
தொலைத் தொடர்புத் துறை அமைச்சகத்தால் அனுப்பப்படுகிறது.

அதன்படி, 1.10.2007 க்குப் பிறகு விண்ணப்பித்த நிறுவனங்களின்
கோரிக்கை பரிசீலிக்கப் படமாட்டாது என்று அறிவிக்கப் படுகிறது.

சரி இதன்படியே விண்ணப்பங்களை பரிசீலிக்கலாம் என்று
பார்த்தால், யூனிடெக் மற்றும் ஸ்வான் விண்ணப்பித்த
24.09.2007 முதல் 01.10.2007 வரை மேலும் பல நிறுவனங்கள்
விண்ணப்பித்திருந்த விபரம் தெரிய வந்தது.

ஓகே… இது ஒத்துவராது என்று முடிவெடுத்த அரிச்சந்திர புத்ரன்,

ஏற்கெனவே அறிவித்த தேதியை மாற்றி, 25.09.2007 தான்
கடைசி நாள், என்று முடிவெடுக்கிறார்.

இதையொட்டி, மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை
அமைச்சகத்துக்கு ஒரு கடிதம் அனுப்புகிறார் ராசா. தற்போது
தொலைத் தொடர்புத் துறை அமைச்சகத்தால் பெறப்பட்டுள்ள
விண்ணப்பங்களை பரிசீலிக்கையில்,

ஏராளமான விண்ணப்பங்கள் வந்துள்ளதும், விண்ணப்பித்த
அத்தனை நிறுவனங்களுக்கும் வழங்க போதுமான ஸ்பெக்ட்ரம்
இல்லை என்பதும் தெரிய வருகிறது …. அதனால், 25.09.20007
வரை பெறப்பட்ட விண்ணப்பங்களை மட்டும் பரிசீலிக்கலாம்
என்று எழுதுகிறார்.

தொலைத் தொடர்புத் துறை அதிகாரிகளோ, ராசாவிடம்,
தேசிய தொலைத் தொடர்புக் கொள்கையில் உள்ள பத்தி
3.1.1ஐ இப்போது சுட்டிக் காட்டுகிறார்கள்.

அதன் படி போதுமான அளவுக்கு ஸ்பெக்ட்ரம் இருப்பதை
உறுதி செய்ய வேண்டும். தற்போது லைசென்ஸ்
பெற்றுள்ளவர்களுக்கும், புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கும்,
போதுமான அளவுக்கு ஸ்பெக்ட்ரம் இருக்குமாறு பங்கீடு செய்து,
பிரித்துக் கொடுக்க வேண்டும் என்ற விதியையும்,

இது தொடர்பாக ட்ராய் பல்வேறு அறிவுரைகளை தொடர்ந்து
வழங்கியுள்ளதையும் சுட்டிக் காட்டினர்.

அதிகாரிகள் அதிகப்பிரசங்கிளாக இருப்பதை
அனுமதிக்கலாமா…?ராஜாவுக்கு தெரியாத விஷயமா…?

26.10.2007 அன்று ராசா, நிறைய விண்ணப்பங்கள் வந்திருக்கின்றன.
ஸ்பெக்ட்ரம் கொஞ்சம் தான் இருக்கிறது என்ன செய்யலாமென்று
ஆலோசனை சொல்லுங்கள் என்று என்று சட்டத்துறை
அமைச்சகத்துக்கு கடிதம் எழுதுகிறார்.

சட்டத்துறை அமைச்சகம் 01.11.2007 அன்று, ராசாவுக்கு பதில்
அனுப்புகிறது.

“இந்த விவகாரம் மிக மிக முக்கியமானது. அதனால்,
இந்த விவகாரத்தை ஒரு அமைச்சரவை குழுவுக்கு அனுப்பி
விவாதித்த பின் முடிவெடுக்கலாம்” என்று கூறுகிறார்கள்.

ஆலோசனை கேட்டதே தவறாகி விட்டதே….
நமக்கு சாதகமாக எதாவது பதில் கிடைக்கும் என்று நினைத்து
எழுதினால், சட்டத்துறை அடிமடியிலேயே கை வைத்து விட்டது.

என் துறையில் முடிவெடுக்க வேண்டியவன் நான் தான்…
நான் எதற்காக இன்னொரு அமைச்சர் குழுவிடம் அனுமதி
கேட்க வேண்டும் ..?
என்று தானாகவே ஒரு முடிவெடுக்கிறார் – அ.புத்ரன்….

இது கிசு-கிசு அல்ல;
வதந்தி அல்ல…
கற்பனையும் அல்ல….
அப்பட்டமான சட்டமீறலின் முதல் படி….

————-
தொடரும்….

.
——————————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

1 Response to (அத்தியாயம் -4) – அரிச்சந்திர புத்ரனின் “கிசு-கிசு” -நானே ராஜா -நானே மந்திரி ……….

  1. bandhu சொல்கிறார்:

    இது எல்லாமே ஆதார பூர்வமாக நிரூபிக்கப் பட்ட பின்னும், சிபிஐ எந்த ஆதாரத்தையும் தராமல் இருந்ததையும், அதை கேட்டு ‘நொந்து’ இவர்கள் சார்பாக தீர்ப்பு வழங்கப்பட்டதையும் பார்த்தால் பணம் எந்த அளவு பாயும் என்று தெரிகிறது!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.