….
….

நீரா ராடியா -ஞாபகம் வருதா; ஞாபகம் வருதா…?
….
அதிர வைத்த அதிருஷ்ட ஆரம்பம் –
Lucky beginning…
But – Unlucky for some ….
அதிருஷ்டம் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதத்தில் வரும்.
ஆனால், அரிச்சந்திர புத்ரனுக்கு வந்ததுபோல் இதுவரை
வேறு யாருக்கும் வந்ததில்லை;
அரிச்சந்திர புத்ரனின் “கிசு-கிசு” காவியம் ….(அத்தியாயம் -1)
——
முரசொலி மாறன் அவர்களின் மறைவிற்குப் பிறகு
(24 November 2003) , கலைஞர் மாறன் குடும்பத்தினருக்கு
திமுக-வில் முக்கிய இடம் கொடுக்க விரும்பி, 2004 தேர்தலில்
மாறனது இளைய மகன் தயாநிதி மாறனை முதலில்
எம்.பி.யாகவும் பின்னர் காங்கிரஸ்-திமுக கூட்டணி அரசான
மத்திய அமைச்சரவையில் எந்தவித பாராளுமன்ற முன்
அனுபவமும் இல்லாத நிலையிலேயே வளம் கொழிக்கக்கூடிய
தொலை தொடர்பு அமைச்சராகவும் ஆக்கினார்.
.
இதற்காக அவர் விசேஷமாக டெல்லி சென்றதும், திருமதி
சோனியா காந்தியிடம் வலியுறுத்திப் பேசியதும் வரலாறு.
திமுக-வில் கலைஞர் ஆக்டிவ்’ஆக இருந்த நேரம் அது.
திமுக-வில் அவருக்கு அடுத்தபடி அதிக செல்வாக்கு உடையவர்,
அவரது இடத்திற்கு வரக்கூடியவர் – மூத்த மகன் அழகிரியா,
அல்லது இளையவர் ஸ்டாலினா என்கிற பேச்சு பொதுவாக
அரசியல் உலகில் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருந்தது.
“தினகரன்” தமிழ் நாளிதழ், கலாநிதி-தயாநிதி குடும்பத்தினருக்கு
சொந்தமானது.
கலைஞரின் அடுத்த அரசியல் வாரிசாக ஸ்டாலின் தான்
உருவாக வாய்ப்பு என்று கணித்து, ஸ்டாலினுக்கு மிகவும்
வேண்டியவராக/நெருக்கமானவர்களாக தங்களை
காட்டிக்கொள்ள விரும்பினர் மாறன் சகோதரர்கள்.
2007 மே 9-ம் தேதி, அவர்களது ‘தினகரன்’ நாளிதழில்
ஒரு கருத்துக்கணிப்பு வெளியானது. அதில் ‘கருணாநிதிக்கு
அடுத்தபடியாக தி.மு.கவின் தலைமைப் பதவியை வகிக்கும்
தகுதி யாருக்கு இருக்கிறது?’
என்ற கேள்வி கேட்கப்பட்டு இருந்தது.
கருணாநிதியின் வாரிசுகளில் ஸ்டாலின் அதில் முதலிடத்தைப்
பிடித்தார். அழகிரி மிகக் குறைவான வாக்குகளையும்,
கனிமொழி அதற்கும் குறைவான வாக்குகளையும்
வாங்கியிருந்தார். கழகத்தின் தலைமைப் பதவியைக் கைப்பற்ற
ஸ்டாலின், அழகிரி ஆகிய இருவருக்கும் கடும் மோதல் நடந்து
வந்த சமயம் அது என்பதால், கட்சியில் அந்தக் கருத்துக்கணிப்பு
கடும் கொந்தளிப்பைக் கிளப்பியது.
அழகிரிக்கான செல்வாக்கைக் குறைத்து மதிப்பிட இது
பயன்பட்டுவிட்டது என்பதால், அவரது ஆதரவாளர்கள் மதுரையில்
பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களில்
ஈடுபட்டனர்.
உணர்ச்சியால் தூண்டப்பட்ட அழகிரி ஆதரவாளர்கள், மதுரையில்
இருக்கும் ‘தினகரன்’ மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டார்கள்.
உள்ளுக்குள் புகுந்து அடித்து நொறுக்கினார்கள். கட்டிடத்தில் தீ
வைக்கப்பட்டது. அந்தக் கலவரத்தின் முடிவில் தினகரனில்
பணிபுரிந்து வந்த மூன்று பேர் பலியாயினர்…
கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது நிகழ்ந்த சம்பவம் இது.
கலவரம் நடந்துகொண்டிருக்கும்போது, அப்போது மத்திய
அமைச்சராக இருந்த தயாநிதி மாறன், தானே நேரடியாக
தமிழக அரசின் தலைமைச் செயலாளரை தொடர்பு கொண்டு,
(திமுக)அரசின் இயலாமையை கண்டித்துப் பேசினார்.
மாறன் சகோதரர்களுக்கு சொந்தமான சன் டிவியில்,
திமுக அரசுக்கு விரோதமாக தலைப்புச் செய்திகள் வெளிவரத்
துவங்கின.
கருணாநிதியால் அரசியலுக்கு கொண்டு வரப்பட்டு,
எம்.பி. ஆக்கப்பட்டு, மத்திய அமைச்சராகவும் ஆக்கப்பட்ட
தயாநிதி மற்றும் அவரது மூத்த சகோதரர் கலாநிதி ஆகியோரின்
செயல்கள் கலைஞருக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தின.
துவக்க காலங்களில், தி.மு.க-வின் தயவால் வளர்ந்த கலாநிதி
மாறனுக்குச் சொந்தமான சன் தொலைக்காட்சியில்,
‘தி.மு.க ரவுடிகள் அராஜகம்’ என அழகிரிக்கு எதிராக நொடிக்கொரு
செய்தி ஒளிபரப்பானது.
இப்படி தன் மூத்த மகன் அழகிரிக்கு எதிராக தன் மருமகன்களான
மாறன் சகோதரர்கள் செயல்பட்டபோது,
கருணாநிதி, மகன் அழகிரியின் பக்கமே நின்றார்.
தி.மு.க தயாநிதி மாறனிடம் விளக்கம் கேட்டது;
தயாநிதி அவருடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய
வேண்டிய கட்டாயம் உருவாக்கப்பட்டது . கட்சியை விட்டே
அவர் விலக்கி வைக்கப்பட்டார். அதற்கு அடுத்து தி.மு.க-வில் பல
அரசியல் திருப்பங்கள் ஏற்பட்டன.
தயாநிதி வகித்த வளம்கொழிக்கும் தொலைத்தொடர்புத் துறை
தி.மு.க-வின் நாடாளுமன்ற உறுப்பினரான, ஏற்கெனவே
சுற்றுப்புற சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக இருந்த
ஆ.ராசாவுக்கு ஒதுக்கப்பட்டது.
மருமகன் தயாநிதியின் இடத்தை, ஆண்டிமுத்து ராசா
பிடித்துக்கொண்டார். அதுவரை மருமகன் தயாநிதியின்
தோள்களில் கையை போட்டுக்கொண்டு நடந்த கலைஞரின்
– புதிய மருமக’னாக அவதாரம் எடுத்தார் ஆ.ராசா.
தயாநிதியின் இடத்தில் நின்று கலைஞரைப் பற்றிக்கொண்டார்.
ஒருகட்டத்தில் கருணாநிதியின் ‘வளர்ப்பு மகன்’( மருமகன்..? )
போல ஆ.ராசா வலம்வரத் தொடங்கினார்.
அடுத்து, மே 16, 2007-ல் ஆ.ராசா, மத்திய அமைச்சரவையிலும்
தயாநிதியின் இடத்தை கைப்பற்றிக் கொண்டார். மத்திய
தொலைத்தொடர்புத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுக்
கொண்டார். ஆ.ராசா வருவதற்கு முன்பே, 2ஜி அலைக்கற்றை
ஏலத்துக்கு 150 விண்ணப்பங்கள் வந்திருந்தன. ஆனால், ஏலம்
நடத்தப்படவில்லை.
ஆ.ராசா தொலை தொடர்புத்துறை அமைச்சராகப் பதவி
ஏற்றதும் – அவரது அதிர வைக்கும் ஆட்டம் துவங்கியது….
உலகையே பிரமிக்க வைத்த ஆட்டம்…
அமெரிக்காவின் ‘டைம்’ இதழில் கவர் ஸ்டோரியாக
வெளிவரும் அளவிற்கு அசத்திய ஆட்டம்…!!!
இது தான் அரிச்சந்திர புத்ரன் அவதாரத்தின் துவக்கம்.
——————–
தொடர்கிறது….
.
————————————————————————————————————————————
I am waiting!
ஸ்டாலினுக்கு 70%, மு.க.அழகிரிக்கு 2%, கனிமொழிக்கு 2%க்கும் குறைவு..இந்த கருத்துக்கணிப்பில் தயாநிதிக்கும் இவர்களைவிட அதிகமான% வந்திருந்ததே (16%?). அந்தச் சம்பவத்தில் கலாநிதிமாறன், தயாநிதி மாறன் எவ்வாறு நடந்துகொண்டார்கள் என்பதைக் குறிப்பிடவில்லையே. தயாநிதி மத்திய அமைச்சர் என்ற முறையில் தமிழக உள்துறைச் செயலாளரைக் கூப்பிட்டு, தமிழக அரசு செயல்படாத அரசு (அப்போது கருணாநிதி முதலமைச்சர்) என்று சொல்லிக் கண்டித்தார். கலாநிதி மாறன் மதுரைக்குச் சென்று தினகரன் அலுவலகத்தின் முன்பாக, இந்தக் கொலைக்கு முக அழகிரி காரணம், அவர் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும், மூவர் பலிக்கு உரிய நீதியைப் பெறாமல் விடமாட்டோம் என்றெல்லாம் பேசினார். அப்போது சன் தொலைக்காட்சியில் தமிழக அரசு பற்றி நிறைய நெகடிவ் செய்திகளும், திமுக ரவுடிகள் என்று அடிக்கடி சொல்லியும் செய்திகள் வந்தன.
இந்தப் பின்னணியில்தான் தயாநிதி பதவி பறிக்கப்பட்டது.
தயாநிதி மாறன் கலைஞரின் மருமகன் அல்ல. பேரன்
கோகுல்,
நீங்கள் சொல்வது சரி.
முரசொலி மாறன் தான் கலைஞரின்
மருமகன்.( மூத்த சகோதரியின் மகன்.)
தயாநிதியும், கலாநிதியும்
முரசோலி மாறனின் மகன்கள்.
கலைஞரின் மருமகனின் மகன்கள்
என்கிற வகையில் பேரன்கள் என்பதே சரி.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
//“தினகரன்” தமிழ் நாளிதழ், கலாநிதி-தயாநிதி குடும்பத்தினருக்கு
சொந்தமானது.// – இதுல ஒரு செய்தியும் இருக்கு. தினகரனை கேடி பிரதர்ஸுக்கு விற்றதற்காக, விற்றவருக்கு (கேபிகே குமரன் என்று நினைவு) திமுக எம்பி வாய்ப்பு/பதவி கொடுத்தாங்க. Can you imagine the reason and background of this? மருமகனுக்கு பத்திரிகை விற்றதற்கும் கருணாநிதி/திமுகவுக்கு என்ன சம்பந்தம்?
புதியவன்,
கேடி பிரதர்சுக்கு கொடுத்தால், கலைஞருக்கு
கொடுத்ததாகவே தானே அர்த்தம். நீங்கள்
ஏன் அநியாயத்துக்கு கலைஞரையும்
மாறன் குடும்பத்தையும் பிரிக்கப் பார்க்கிறீர்கள்… ? !!!
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
தினகரன் இதழ் கே பி கந்தசாமி ஆரம்பித்தது . இவர்
சி பா ஆதித்தனாரின் மருமகன் . 1977 ல் தினத்தந்தி
அ தி மு க சார்பு எடுத்த போது தி மு க இதழாக வந்தது .
கே பி கே குமரன் அவர் மகன் .
தினகரன் செய்தித்தாள் தி மு க விரோத போக்கை
மாறன் சகோதர்கள் வாங்கிய பின் ஆரம்பித்தது .
அமெரிக்காவில் உள்ள ஒரு குரங்கு பிறந்த நாள்
கொண்டாடிய செய்தி ஒன்று இருந்தது .
2007 மார்ச் மாதத்தில் ஸ்டாலின் பிறந்த தின விழா
நடந்தபோது, “இன்று குரங்கின் பிறந்த நாள்’ என்று
முதல் பக்கத்தில் எழுதியது உள் பக்கத்தில் “தனது பேரன்
பேத்திகளுடன் குரங்கு , கேக் வெட்டியது குரங்கு ‘ போன்ற
படங்களும் வெளிவந்தன .
அதன் பிறகு வந்த செய்திதான் கருத்து கணிப்பு !
இந்த வழக்கின் முக்கிய சுவாரஸ்யமே money trail அதாவது கொள்ளை
அடிக்கப்பட்ட பணம் எங்கு எப்படி பதுக்கப்பட்டுள்ளது? இதைப்பற்றி
தங்களது விரிவான தகவல்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
நல்ல பதிவு..
இதில் சுவாரசியம் என்னவெனில், #சன்_டீவி, அப்போது #அறிவாலயத்தில் இருந்து தான் செயல்படுகிறது. (தயானிதி மீது இன்னும் வழக்கில் இருக்கும் BSNL அதி நவீன உயர்சக்தி இணைப்புகள் அப்போது இங்குள்ள சன் அலுவலத்தில் தான் கொடுக்கப்பட்டது)
கலைஞர் 80 என்கிற விழா சென்னைத் தீவுத்திடலில் நடக்க மேடை தயாராகிறது.
கருணானிதி யாரை ஆதரிப்பார்? மனச்சாட்சியின் மகனையா?
சொந்த மகனையா? என்ற குழப்பத்தில் இருந்ததால கட்சி தலைவர்கள் யாரும் வாயே திறக்கவில்லை இது பற்றி. பிற ஊடகங்களும் அடக்கியே வாசிக்கின்றன. சன் டீவி #அழகிரியாட்கள் ஆட்டத்தை திமுக_ரெளடிகள் அராஜகம் என்று திரும்ப திரும்ப விளம்பரம் செய்கிறது..
ஸ்டாலின் வாய் திறக்கவில்லை..
தீவுத்திடலில் உருவாகும் மேடையை பார்க்க வந்த கருணானிதி, “என்னதுக்கு மசுரு கருத்துக் கணிப்பு? எதையாவது பண்ணி இப்படி இழவு கூட்ட்டிட்டானுக!
பேப்பரு, டீவி நடத்துறானுகளாம்*” என்று அவர் அருகில் இருந்த அப்போதைய மின்சார அமைச்சரும், ஆற்காட்டு வீராசாமியும், அழகிரிக்கு ஆதரவாய் அறிக்கை விட்டார்கள், தயாநிதி பதவி விலகினார், அழகிரி 80 விழாவில் கலந்து கொண்டார்..
கலைஞர் டீவி தொடங்க அழகிரி அழுத்தம் கொடுத்தார்.. 200 கோடி வந்தது.. சன் டீவி #ஸ்பெக்ட்ரம்_ஊழல் என்ற செய்தியை ஓசியில் கிடைத்த கலைஞர் டீவியில், பணம் கொடுத்து சன் நெட்வொர்க் கேபிள் மூலம் கேட்டு அறிந்து கொண்டான்…
அப்புறம்
கண்கள் பனிக்க..இதயம் இனிக்க.
இரு குடும்ப இணைப்பு நடந்தது.. அவர்கள் கூடிக் கொண்டார்கள்.
இறந்த மூவர் குடும்பத்தினர் வாழ்க்கையின் வெறுமையை அந்த குடும்பங்கள் மட்டுமே அனுபவிக்கின்றன…
அந்த சாபங்கள் தான்
2-ஜி ஊழல், ஏர் செல்-மேக்சிஸ் ஊழல், கலைஞர் டீ.வி ஊழல், சாதிக் பாட்ஷா மரணம் என அந்த கட்சியின் தலைமைக்கு நெருங்கிய அனைவரையும் அமைதியின்றி அலைய விடுகிறது..
.
M S Vasan,
செய்திகளுடன் கூடிய நல்ல பின்னூட்டம்.
நீங்கள் இப்போது தான் முதல் தடவையாக
இங்கு எழுதுகிறீர்கள் என்று நினைக்கிறேன்.
வரவேற்கிறேன்.
என்னால் இயன்ற வரையில் நான் நடந்ததை
இங்கே தொகுத்துத் தருகிறேன். ஆனால்,
நான் படிக்காத, அறியாத அல்லது
மறந்து விட்ட நிறைய கிளைக் கதைகளும்
இந்த தலைப்பில் உண்டு என்பதை அறிவேன்.
எனவே, இது குறித்து நன்கு அறிந்த
நண்பர்களும், இந்த இடுகைக்கு துணைபுரிய
வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
அது இந்த இடுகைத் தொடருக்கு
கூடுதல் வலு கொடுக்கும். ஏற்கெனவே
புதியவன், மெய்ப்பொருள் போன்ற நண்பர்கள்
இது குறித்து நிறைய செய்திகள் தருகிறார்கள்.
நீங்களும் இதில் கலந்து கொள்ளலாம்.
இந்த இடுகைத் தொடரில், அந்தந்த
அத்தியாயத்தில் அடங்கியுள்ள விஷயங்களைக்
குறித்து, மேலும் விவரங்கள் தெரிந்த
மற்ற நண்பர்களும் – பின்னூட்டங்கள் மூலம்
அதனை தெரிவித்து, விவாதங்களிலும்
பங்கு கொள்ளலாம்.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
பிங்குபாக்: (அத்தியாயம் -3) – அரிச்சந்திர புத்ரனின் கிசு-கிசு …..உள்ளே-வெளியே | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன
வணக்கம், நலம், நலமுடன் இருக்க வேண்டுகிறேன். இப்போதெல்லாம் உங்கள் பதிவுகளை படிப்பதில் ஆர்மில்லை. வெறும் திமுக எதிர்ப்பை மட்டுமே கையில் எடுத்துக் கொண்டு இருக்கிறீர்கள். காலம் உங்களையும் மாற்றி விட்டது போல. இதே போல பதிவுகள் ஏற்கனவே எழுதி இருக்கிறீர்கள்.
ஒரு வழக்கு தீர்ப்பு வந்த பின் இந்த மோடிமைகள் கூறுவது போல நீங்களும் பதிவு செய்கிறீர்கள். அதிலும், ஒரு குறிப்பிட்ட சமூகம் சார்ந்த மனிதரை அடையாளப்படுத்தும் சொல்லுடன். ஆக, அடி ஆழ் மனதில் கொஞ்சம் புரையோடிப் போன எண்ணங்கள் மிச்சம் உங்களுக்குள்ளும் இருக்கிறது. திமுக எந்த விதத்திலும் ஆட்சிக்கு வந்து விட கூடாது. ஆனால், திருட்டு பாஜக மற்றொரு திருட்டு அதிமுக அல்லது நீங்கள் நல்லவர் வல்லவர் என நம்பும் ரஜினியுடன் (வேறு வழி இல்லாமல் இழுத்து வரப்படும்) கள்ளதனமாக கூட்டு சேர்த்துக் கொண்டு ஆட்சிக்கு வரலாம். உங்களின் நீண்ட கால வாசகன் நான், ஆனால் நீங்கள் பாதை மாறி விட்டீர்கள். இப்போதெல்லாம் உங்கள் பதிவிற்கு பின்னூட்டம் அளிப்பவர்கள் கூட உங்களுக்கு இசைவாகவே உள்ளனர். கடந்த ஒரு வருடத்தில் நீங்கள் எழுதிய பெரும்பாலான பதிவுகள் இப்படித்தான் உள்ளது. நான் எந்த கட்சியும் சார்ந்தவன் அல்ல. அந்த அம்மா வெற்றி பெறவைக்கப்பட்டு, பின் மரணிக்கபட்டு தமிழகத்தின் பாதையை ஆளும் கட்சியை அடிமை படுத்தி தமிழகத்தின் பலன்களை கொஞ்சம் கொஞ்சம் எடுத்து விட்டு, இந்த மக்களை இன்னும் ஏமாற்ற தமிழகத்தில் எந்த வழியிலாவது காலுன்ற நினைக்கும் அந்த கட்சியும், இந்த அடிமைகளும் மீண்டும் வந்தால் இந்த தமிழகத்தை அந்த ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது..
இரண்டு மரணங்கள், ஒன்று முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி, இது குறித்து நீங்கள் எழுதிய பதிவுகள் பொக்கிஷமாக நினைவில் உள்ளது. எய்தவன் அடையாளப்படுத்தப்பட்டான், ஏவி விட்டவன் நம்மோடு உயர்ந்த இடத்தில் அனுபவித்து கொண்டிருக்கிறான். அந்த மரணத்திற்கு பிறகு நடந்த மிக முக்கிய நிகழ்வுகள் இந்தியாவின் சமூக பாதையை மாற்றி அமைத்தது. அதே போல, அம்மையார் மரணமும்..தமிழகத்தின் பாதையை அவர்கள் மாற்றி அமைக்க போடப்பட்ட முதல் அஸ்திவாரம்…இரண்டு மரணமும் ஒரே நேர்கோட்டில் வரும்…உங்கள் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொண்ட… அனிஸ். (புதுவசந்தம்)
அனிஸ் (புது வசந்தம்),
உங்கள் கடிதத்திற்கு நன்றி.
உங்கள் கருத்துகளை வெளிப்படையாகச்
சொல்லி இருக்கிறீர்கள்… அதற்காக
பாராட்டுகிறேன்.
உங்களுக்கு சில விஷயங்களை
தெளிவுபடுத்த விரும்புகிறேன்….
நான் நம்புவதை, என் மனசாட்சி
சொல்வதைத் தான் என்னால் எழுத
முடியும். உங்களுக்கோ, உங்களைப் போன்ற
மற்றவர்களுக்கோ – பிடிக்கவில்லை
என்பதற்காக என் மனதிற்கு தோன்றும்
விஷயங்களை நான் மறைத்துக் கொள்ளவோ,
மாற்றிக்கொள்ளவோ முடியாது.
பாஜக-வை விமரிசனம் செய்வதற்காக
சில நல்ல நண்பர்கள் கோபித்துக்கொண்டு
என்னைவிட்டு ஏற்கெனவே நகர்ந்து விட்டார்கள்.
இப்போது திமுகவை குறை சொல்கிறேன்
என்பதற்காக நீங்களும் விலகிச்செல்வதாக
எழுதுகிறீர்கள்.
என் கருத்தில் –
திமுகவை விட அதிமுக நிச்சயம் பெட்டர்.
அதிமுக சுத்தமாக யோக்கியமா என்று
கேட்பீர்களானால் – இல்லையென்பதே
என் பதிலாக இருக்கும்.
இவை இரண்டையும் தாண்டி ரஜினி
வந்தால், நிலைமை மாற்றம் பெறுமோ
என்கிற நம்பிக்கையில் தான்
எழுதிக் கொண்டிருக்கிறேன்.
ரஜினி, அடிப்படையில் மிக நல்ல மனிதர்
என்பது என் கருத்து.
அவர் பாஜக-வுக்கு ஆதரவாக எதிர்காலத்தில்
செயல்படக்கூடும் என்பதும் சாத்தியமே.
மத்திய அரசுடன் நல்லுறவில் இருந்தால் தான்,
மாநிலத்திற்கு தேவைப்படுவதை நிறைவேற்றிக்
கொள்ள முடியும் என்பதே இதற்கான அடிப்படை
காரணமாக இருக்க முடியும்.
ஒருவேளை அடுத்த பாராளுமன்ற தேர்தலில்,
காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளின் ஆட்சி ‘
வந்தால், அவர்களுடனும் ரஜினி இதே மாதிரி
தான் உறவைப் பேணுவார்.
ரஜினி நிச்சயமாக ஒரு மதவாதி அல்ல.
அவர் எல்லாருக்கும் பொதுவானவர்…
இந்த ஒரு விஷயத்தில் நிச்சயமாக அவரிடம்
எந்த மாற்றமும் இருக்காது.
ஒருவர் சார்ந்திருக்கும் ஜாதி, மதம்
ஆகியவற்றை வைத்து தான் அவர் செய்துள்ள
குற்றங்களை மதிப்பிட வேண்டும் என்பது
உங்கள் எண்ணமாக இருந்தால் –
தயவுசெய்து அதை மாற்றிக் கொள்ளுங்கள்.
எவர் செய்தாலும், எந்த மதம், ஜாதியைச்
சேர்ந்தவராக இருந்தாலும் – குற்றம் குற்றம் தான்.
கிரிமினல் குற்றங்களை செய்துவிட்டு,
சவால் விட்டுத்திரியும் போக்கிரி அரசியல்வாதிகளை
என்னால் ஜீரணிக்க முடியவில்லை;
நீங்கள் எந்த கட்சியையும் சார்ந்தில்லை என்று
எழுதினாலும் கூட, அரிச்சந்திர புத்ரனைப்பற்றி
நான் எழுதுவது உங்களுக்கு பிடிக்காமல்
போனது ஏன்…?
நான் இவ்வளவு விவரமாக எழுதுவதற்கான
காரணம், நீங்களே உங்கள் கடிதத்தை மீண்டும்
ஒருமுறை படித்துப் பார்த்தால் –
இவ்வளவு நீண்ட இடைவெளிக்குப் பிறகு
உங்களை இந்த கடித்தத்தை, எழுதத்தூண்டியது
எது, ஏன் – என்பது உங்களுக்கே புரிய வரலாம்.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்