….
….
….
டெக்னாலஜியை எதற்குத்தான் பயன்படுத்த வேண்டுமென்று
விதி எதாவது இருக்கிறதா என்ன….?
ஒரு புத்திசாலி மூளையில் இப்படிக்கூட பயன்படுத்தலாமென்று
தோன்றி இருக்கிறது ..!!!
—————-
இந்தக் காலங்களில், திருமணங்களில் விருந்து சாப்பாடு,
ஒருநபருக்கு குறைந்த பட்சமாக 300 ரூபாய் வரை ஆகிறது.
ஒரு வீட்டில் – கணவன், மனைவி, மகன்-மகள் என்று 3 பேர்
வந்தால் கூட, குறைந்த பட்சம் அவர்களுக்காக செலவாவது
900 ரூபாய்.
கல்யாணங்களுக்கு நண்பர்களை, தெரிந்தவர்களை
அழைப்பவர்கள் எதற்காக அழைக்கிறார்கள் என்பதை
முதலில் புரிந்துகொள்ள வேண்டும்…. வெறுமனே வாழ்த்த
மட்டுமே என்றால், வாழ்த்தி விட்டு, லைட்டாக எதாவது
பானம் கொடுத்தால் அருந்தி விட்டு, கம்’முன்னு
வெளியேறி விட வேண்டும்.
மாறாக குடும்பத்தோடு, விருந்துக்கு உட்கார வேண்டும்
என்றால் – அதற்கு ஈடாக பரிசுப் பொருள் கொடுப்பது
அவசியம். இந்த நாகரிகத்தை பலர் உணரவதில்லை
என்பதால், அதற்கும் ஒரு டெக்னாலஜி….!!!
இந்த கார்ட்டூன் அழகாகவும், நகைச்சுவையோடும்
சித்தரிக்கிறது…. துட்டு/பரிசு கொடுத்தால் விருந்து.
இல்லையேல் வாழ்த்தி விட்டு போய்க்கிட்டே இருங்க….!!!
……………..
……………..
.
——————————————————————————————————-
இது சில நாட்கள் முன்பே எனக்கு வாட்சப்பில் வந்திருந்தது. இதில் அர்த்தமில்லை. மொய்ப்பணம் என்பதில் எதையும் ஈடுகட்ட முடியாது. திருமணத்துக்கு உறவினர்கள் வரணும், அவங்களுக்கு சாப்பாடு போடணும் என்றுதான் கூப்பிடுகிறார்கள். முன்பு, புடவை/வேஷ்டி பரிசாக கொடுக்க முடியாதவங்க ஆரம்பித்தது இந்த ‘மொய் வைப்பது’ என்ற வழக்கம். இது நிச்சயம், எந்தச் செலவையும் ஈடுகட்டாது. ஒரு வேளைக்கு ஒரு இலைக்கு இப்போதெல்லாம் 300-450 ரூபாய் வாங்கறாங்க (திருமணம் அன்று 300 ரூபாய், ரிசப்ஷன் 450 ரூபாய் என்பது போல). இதில் உண்பதைவிட வீணாவதும், உண்டார்கள் என்று கணக்கு காண்பிப்பதும்தான் அதிகம். திருமணம் நடத்துபவர்கள், அப்போது எந்த கம்ப்ளெயிண்டும் பண்ண முடியாது. ஒரு குறை சொன்னால்கூட, ஃபங்ஷன் முழுவதும் சாப்பாடு பரிமாறுதலோ இல்லை உணவு தயாரிப்போ குறையுடன் இருக்கும். திருமணச் செலவில் இதும் ஒன்று என்றுதான் இதனை ஏற்பாடு செய்பவர்கள் நினைத்துக்கொள்கின்றனர். ஒரு சாதாரண திருமணத்தில் மொய்ப்பணம் என்பது, 40,000-50,000 வரலாம். பலர், ரூபாய்க்குப் பதில் வேஸ்ட் பரிசுப்பொருட்களை (கடிகாரம், பூங்கொத்து போன்று) கொடுத்துவிடுவார்கள். ஆனால் உணவுச் செலவு என்பது குறைந்த பட்சம் 4 லட்சம்.
கேடரிங் தொழில் செய்து பலப் பல வீடுகளை வாங்கியவர்களை (சென்னையில்) நான் பார்த்திருக்கிறேன். அதில் உள்ள லாபம் நிறைய பல தொழில்களில் கிடையாது.
அது சரி… நீங்கள் வேண்டாத ஆடம்பரத் திருமணச் செலவுகள் பற்றி எழுதணும். லட்சங்களில் பணம் தேவையில்லாமல் வீணடிக்கப்படுது. இதனால் யாருக்குமே பிரயோசனம் இல்லை என்பது என் எண்ணம். திருமணம் என்பது குறைந்தபட்சம் திருமணம் செய்துகொள்பவர்களின் வாழ்க்கைக்கு உபயோகமாக இருக்கணும். அப்படி இல்லாமல் மிகக் குறைந்த பட்சம் 10-20 லட்சங்களை (பல திருமணங்களில்-மிடில் கிளாஸில், இது 25-30 லட்சங்கள்) வீணடிப்பதில் யாருக்கு பிரயோசனம்?
புதியவன்,
மேலேயுள்ள கார்ட்டூன் படம் வெறும்
கிண்டலுக்காக உருவாக்கப்பட்டது.
சீரியசாக எதையும் சொல்வதற்கு அல்ல.
//நீங்கள் வேண்டாத ஆடம்பரத் திருமணச்
செலவுகள் பற்றி எழுதணும். லட்சங்களில்
பணம் தேவையில்லாமல் வீணடிக்கப்படுது. //
திருமணங்களில் எப்போதுமே இரண்டு
குடும்பங்கள் தான் முக்கிய முடிவுகளை
எடுக்கின்றன. பெண் வீடும், பிள்ளை வீடும்…
இவர்கள் இருவரும் ஒத்த கருத்து
கொண்டவராக இருந்தால் – இத்தகைய
வீண் செலவுகளை முற்றிலுமாக
தவிர்த்து விடலாம்.
என் நண்பர் ஒருவர் ; அவருடன் சம்பந்தம்
வைத்துக் கொண்டவரும் எனக்கு ஓரளவு
அறிமுகமானவரே. இருவரையும்
வைத்துக்கொண்டு ஒரு நாள் விவரமாகப்
பேசினேன். பல தவிர்க்கக்கூடிய செலவுகளை
சுட்டிக்காட்டினேன். அதற்காக ஒதுக்கப்பட்ட
பட்ஜெட்டை பெண்/மாப்பிள்ளை இருவரின்
பெயரிலும் joint account -ல் வங்கியில்
போடச்சொல்லி ஆலோசனை சொன்னேன்.
திருமணத்திற்குப் பிறகு, இல்வாழ்க்கையை
துவங்கும்போது, அவர்கள் தங்கள் புதிய
வாழ்க்கைக்கு தேவையானவற்றை
வாங்கிக்கொள்ள அது உதவும் என்று
சொன்னேன். இருவரும் சந்தோஷமாக
ஏற்றுக் கொண்டனர்.
இதற்கு இரு வீட்டாரின் புரிதல் தான்
முக்கியம்.
ஆனால், நடுத்தர வர்க்கத்து வீடுகளில்
மட்டும் தான் இது சாத்தியம்…
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
திருமணங்களில் நிறைய பணம் வீணாகின்றது .
சாப்பாடு மட்டுமல்ல ,மற்றவையும் கூட .
மணப்பெண்ணுக்கு ரூ 40 -50 ஆயிரம் கொடுத்து
புடவை எடுக்கிறார்கள் . இந்த சேலையை யாரும்
மறுபடி கட்டுவதே இல்லை . பெண் அலங்காரம்
செய்ய செலவை கேட்டால் தலை சுற்றும் .
அப்புறம் போட்டோ ,வீடியோ , ட்ரொன் மூலம்
படப்பிடிப்பு எல்லாம் Extra.
தமிழ்நாட்டில் மட்டும்தான் கல்யாண மண்டபம்
என்ற பிசினஸ் இருக்கின்றது . மற்ற ஊர்களில்
இவ்வளவு கிடையாது .
லஞ்சம் வாங்குபவர்கள் பணத்தை என்ன செய்வது
என்று தெரியாமல் தடபுடல் செய்கிறார்கள் .
மற்றவர்களுக்கு இது கட்டுபடியாகாது .
குஜராத்திகள் துட்டு இருந்த போதும் எளிமையாகவே
திருமணம் செய்கிறார்கள் . வசதி இல்லாதவர்கள்
அவர்கள் சமூகம் ஏற்பாடு செய்யும் கூட்டு
கல்யாணங்களில் திருமணம் செய்கிறார்கள் .
கல்யாண ஜோடிக்கு பாத்திரம் பண்டம் எல்லாம்
கொடுப்பார்கள் .
பெரும்பாலும் ஒரே வேளை சாப்பாடுதான் போடுவார்கள் .
சமூக சீர்திருத்தம் என்ற பெயரில் ஆடம்பர
திருமணங்களை தவிர்த்து விடுகிறார்கள் .