ரஜினிகாந்த் – எனது கடைசி நம்பிக்கை…! தமிழருவி மணியன் |

….
….


….

….

( நன்றி – தினமணி நாளிதழ் …)

ரஜினிகாந்த் – எனது கடைசி நம்பிக்கை!
By தமிழருவி மணியன் |
Published on : 07th December 2020

ஒரு நாள் திரையுலகில் நாயகனாக முன்னேறி வரும்
நடிகா் ஜீவாவும், திரைப்பட இயக்குநா் சுப்பிரமணிய பாரதியும்
என்னை வீட்டில் வந்து சந்தித்தனா். எங்கள் உரையாடல்
அரசியல் பக்கம் திரும்பியது. நடிகா் ரஜினிகாந்த் அரசியலுக்கு
வந்தால் அவரை நான் ஆதரிக்க வேண்டும் என்று இருவரும்
வற்புறுத்தினா்.

‘முதலில் அவா் அரசியலுக்கு வரட்டும். பின்னா் இணைந்து
செயற்படுவது குறித்துச் சிந்திப்போம்’ என்றேன். அடுத்த நாள்
ரஜினியின் சார்பில் நண்பா் ஒருவா் வந்து பேசியபோதும் நான்
உடன்படவில்லை.

அதற்கடுத்த நாள் என்னோடு ரஜினி தொலைபேசியில் தொடா்பு
கொண்டார். என்னைச் சந்திக்க விரும்புவதாகத் தெரிவித்தார்.
அவா் விருப்பப்படி அவரைச் சந்திப்பதற்கு போயஸ் தோட்டம்
சென்றேன்.

வாசலில் நின்று வரவேற்றார். காலையில் நடைப்பயிற்சியின்போது
என்னுடைய உரைகளைக் கேட்டு மகிழ்வதாக அவா் கூறினார்.
என்னோடு அவா் ஒரு மணி நேரத்துக்கு மேல் பேசிக்
கொண்டிருந்தார்.

முதல் சந்திப்பிலேயே சிலரை மனதுக்குப் பிடித்துவிடும்.
சிலரை எத்தனை முறை சந்தித்துப் பேசினாலும், மனம்
அவா்களிடம் ஒன்ற மறுக்கும். அந்த ஒரு மணி நேரத்திலேயே
அவரோடு என் மனம் ஒன்றிவிட்டது.

அவருடைய பேச்சில் பாசாங்கில்லை; அவருடைய
வார்த்தைகளில் சரிகைப் பூச்சில்லை. அவரிடம் நான்
எளிமையைக் கண்டேன். அவா் உள்ளம் திறந்து உண்மை
பேசுவதை உணா்ந்தேன்.

திரைப்படங்களில் மட்டுமே அரிதாரம் பூசும் மனிதராக அவா்
இருக்கிறார். நிஜத்தில் அவா் ஒப்பனைகள் இல்லாதவராக
வாழ்கிறார்.

‘எந்த ஒப்பனைகளும் இல்லாமல், இடத்திற்கேற்ற முகமூடிகளில்
முகத்தை மறைக்காமல் ஒவ்வொருவரும் இயல்பாக இருந்தால்,
வாழ்க்கையில் சிக்கல்கள் இல்லை’ என்று வலியுறுத்துகிறது
‘ஜென்’ தத்துவம்.

ரஜினிகாந்த் ஜென் தத்துவத்தை அறிந்தவா். ஓஷோ-வையும்
ஜே. கிருஷ்ணமூா்த்தியையும் விரிவாக வாசிப்பவா். ஆன்மிகம்
சார்ந்த நூல்களை வாசிப்பதில் அவருக்கு விருப்பம் அதிகம்.

அவரிடம் நான் கேட்டேன், ‘நீங்கள் உண்மையில் அரசியலுக்கு
வர விரும்புகிறீா்களா?’ அப்போது அவா் மனம் திறந்தார்.
‘ஐயா, நாற்பதாண்டுகளுக்கு முன்பு நான் சென்னை வந்தபோது
யாருமறியாத ஒரு சாதாரண மனிதன். படத்தில் நாயகனாக
நடிப்பேன் என்றுகூட நான் நம்பியதில்லை. பெரிதாகக் கனவு
எதுவும் எனக்கு அப்போது இருந்ததில்லை.

ஆனால், நான் நடிக்கத் தொடங்கியதும் இந்தத் தமிழ்நாடு
என்னைத் தோளில் சுமந்து கொண்டாடியது. இன்று நான்
அடைந்திருக்கும் ‘சூப்பா் ஸ்டார் அந்தஸ்து, புகழ், பெருமை,
செல்வம் அனைத்தும் இந்தத் தமிழகம் தந்தவை. இதற்கு நான்
நன்றிக் கடனாக ஏதாவது செய்தாக வேண்டும்.’

‘நன்றிக்கடன் ஆற்றுவதற்குத்தான் நீங்கள் அரசியலுக்கு வர
விரும்புகிறீா்களா?’

‘ஆம். இது என் அந்தராத்மா எனக்கிட்டிருக்கும் கட்டளை.
என்னை உள்ளிருந்து இயக்கும் ஆண்டவனின் ஆணை.
சிலருக்கு நான் பண உதவி செய்யலாம். சிலருக்கு என்
செலவில் திருமணம் செய்து வைக்கலாம். ஓசையின்றி
அது ஒரு பக்கம் நடக்கிறது.

ஒட்டுமொத்தத் தமிழினத்திற்கும் உருப்படியாக ஏதாவது
செய்ய விரும்பினால் அதற்கு அரசியலை விட்டால் வேறு
வழியில்லை. இங்கே ‘சிஸ்டம்’ முழுவதுமாகப் பழுதுபட்டிருக்கிறது.
மக்கள் ஆதரவுடன் இந்த சிஸ்டத்தைச் சரிசெய்ய வேண்டும்
என்று விரும்புகிறேன்’.

‘ஐயா, இந்த ‘சிஸ்ட’த்தை முழுமையாகச் சீரழித்தவா்கள்
இரண்டு திராவிடக் கட்சியினா். இந்த இரண்டு கட்சிகளின்
பிடியிலிருந்து தமிழகத்தை விடுவிக்க வேண்டும் என்பதே என்
ஐம்பதாண்டுத் தவம்.
நீங்கள் தோ்தல் அரசியலில் வெற்றி பெறும் நோக்கில்,
இந்த இரண்டு திராவிடக் கட்சிகளில் எந்தவொன்றோடும்
உடன்பாடு கொள்ளக்கூடாது என்பது என் விருப்பம்’ என்றேன்.

‘நிச்சயம் அந்தத் தவற்றை நான் ஒருபோதும் செய்ய மாட்டேன்.
நீங்கள் என்னை நம்பலாம். ஆனால் ஒன்று, நான் கடந்த
காலத்தைத் திரும்பிப் பார்க்க விரும்பவில்லை. யாரையும்
எதிரியாக என்னால் பாவிக்க முடியாது. அரசியலில்
‘பாசிட்டிவ் எனா்ஜி’ (நோ்மறைப் போக்கு) அவசியம் என்று
நினைக்கிறேன். என்னை எவ்வளவு கடுமையாகப் பிறா்
விமா்சிக்கப் புறப்பட்டாலும், நான் எதிர்வினையாற்றமாட்டேன்..’
என்று ரஜினி சொன்னபோது நான் வியப்போடு அவரைப்
பார்த்தேன்.

அந்தக் கணம் ரஜினி மீது அதுவரை இல்லாத மதிப்பீடு
எனக்குள் பன்மடங்கு பெருகியது. எதிர்வினை ஆற்றாமல் எப்படி
அரசியல் செய்ய முடியும்? ஐம்பதாண்டுகளாக நான் ஒவ்வொரு
தவற்றுக்கும் எதிர் வினையாற்றுபவனாகத்தானே
இருந்திருக்கிறேன்?

‘அரசியல் என்றால் அடுத்தவா் தவறுகளை மக்களிடம்
தெளிவாகப் புலப்படுத்தி, அதன் மூலம் தன்னை நிலைநிறுத்திக்
கொள்ள முயல்வது என்ற நடைமுறை, உலகம் முழுவதும்
உள்ளது. நீங்கள் யாருடைய தவறுகளைப் பற்றியும் பேசமாட்டேன்
என்றால், அது எந்த வகையில் சாத்தியம்? ஒரு நாணயத்திற்கு
இரண்டு பக்கங்கள் இருப்பதைப் போன்றே, அரசியலுக்கும்
இரண்டு பக்கங்கள் உண்டு. அடுத்தவா் தவற்றை வெளிப்படுத்துவது
ஒரு பக்கம். தான் செய்ய விரும்பும்
நன்மைகளைப் புலப்படுத்துவது மறுபக்கம்…’ என்றேன் நான்.

அதற்கு நான் சற்றும் எதிர்பாராத பதிலை ரஜினி அளித்தார்.
‘ஆட்சியாளா்கள் செய்யும் தவறுகளை மக்கள் அறியாமலா
இருக்கிறார்கள் ? அன்றாட வாழ்வில் அரசியல்வாதிகளால்
உண்டாகும் துன்பத்தை அவா்கள்தானே அனுபவிக்கிறார்கள்?
எந்தவொரு காரியமும் லஞ்சம் தந்தால்தான் நடக்கும் என்று
நீங்கள் சொன்னால்தான் தெரியுமா? மக்களை விவரமில்லாதவா்கள்
என்று நாம் ஏன் தவறாக நினைக்க வேண்டும்?

நான் வந்தால் என்ன செய்வேன் என்பதை மட்டும் மக்களிடம்
விரிவாக விளக்கினால் போதும் என்று எண்ணுகிறேன். நீங்கள்
சொல்லும் மாற்று அரசியலுக்கான முதலடி இதுதான் என்று
நம்புகிறேன்’.

‘ஐயா, நான் காமராஜரைக் கடவுள் நிலையில் வைத்து
வணங்குபவன். நீங்கள் ஆட்சியில் அமரும் வாய்ப்பு கனிந்தால்,
காமராஜா் ஆட்சியை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும் என்பது
என் ஆசை’.

‘ஐயா, காமராஜரோடு மட்டும் ஏன் நிற்க வேண்டும்? அண்ணா,
கருணாநிதி, எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா ஆட்சிக் காலங்களில்
நலிவுற்ற மக்களுக்கு என்னென்ன நன்மைகள் கிடைத்தன
என்பதையும் பட்டியல் போடுவோம்.
எவற்றையெல்லாம் காமராஜருக்கு அடுத்த வந்தவா்கள் செய்யத்
தவறினார்கள் என்பதையும் பட்டியலிடுவோம். அவா்களால்
உருவாக்கப்பட்ட நல்ல திட்டங்களுக்கு உயிர் கொடுப்போம்’.

‘ஐயா, அதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை. அப்படியே
செய்யுங்கள். மக்கள் நலன் சார்ந்த ஓா் உன்னதமான ஆட்சி
முறையின் குறியீடுதான் காமராஜ் ஆட்சி’.

‘ஊழலற்ற ஆட்சி, வெளிப்படைத்தன்மை கொண்ட நிர்வாகம்
இந்த இரண்டும்தான் காமராஜ் ஆட்சியின் சிறப்புகள் என்று
நான் அறிந்து வைத்திருக்கிறேன். இவற்றைத் தமிழகம்
பெற வேண்டும் என்பதற்காகவே நான் அரசியல் கட்சியைத்
தொடங்க நினைக்கிறேன். உங்கள் ஒத்துழைப்பு கிடைத்தால்
மகிழ்வேன்.’

‘நிச்சயம் உங்களோடு நான் நிற்பேன். உங்கள்
கனவுத் திட்டம் ஏதாவதுண்டா?’

‘உள்நாட்டு நீா்நிலைகளை முதலில் இணைக்க வேண்டும்.
தென்னிந்திய நதிகளை மத்திய அரசின் உதவியோடு இணைத்துத்
தமிழகத்தின் தண்ணீா் தேவையைப் பூா்த்தி செய்ய வேண்டும்.

நாம் காலம் முழுவதும் காவிரியை மட்டுமே நம்பியிருக்க
முடியாது. நம் மாநிலத்திலுள்ள நீா்நிலைகளை ஒன்றாக
இணைத்தால் மழைக் காலங்களில் வீணாய்க் கடலில் கலக்கும்
130 டி.எம்.சி. தண்ணீரைச் சேமித்துவிட முடியும். இதில்தான்
நாம் முதலில் கவனம் செலுத்த வேண்டும். தண்ணீா்தான்
விவசாயத்திற்கு ஆதாரம். விவசாயம்தான் நம் வாழ்வுக்கு
ஆதாரம்’ என்று ரஜினி சொல்லும்போது என் விழிகள் வியப்பால்
விரிந்தன. அவருக்கா அரசியல் தெரியாது?

முதல் சந்திப்பு முடிந்தது. வாசல் வரை வந்து வழியனுப்பினார்.
அவா் வீட்டுக்கு யார் வந்தாலும் வாசலில் நின்று வரவேற்பதும்,
செல்லும்போது வாசல் வரை வந்து வழியனுப்புவதும் அவருடைய
வாழ்வியல் முறை.

போயஸ் தோட்டத்து வீட்டுக்குள் நுழைந்தபோது நான் நடிகா்
ரஜினிகாந்தை பார்த்தேன். விடைபெற்று வெளியில் வந்தபோது
சான்றாண்மை மிக்க சிறந்த மனிதரைச் சந்தித்ததாக உணா்ந்தேன்.

இதுவரை இருபது முறையாவது ரஜினியை நேரில்
சந்தித்திருப்பேன்.

ஒருநாள் செல்லலம் இருநாட் செல்லலம்
பன்னாள் பயின்று பலரொடு செல்லினும்
தலைநாள் போன்ற விருப்பினன் மாதோ!

– என்று அதியமானின் விருந்தோம்பும் பண்பை வியந்து
பேசுகிறார் ஒளவையார்.

‘ஒருநாள் இருநாள் அல்ல; பல நாள் மீண்டும் மீண்டும் மீண்டும்
சென்றாலும், முதல் நாளைப் போன்றே விருப்பமுடன்
விருந்தோம்பும் பண்பினா்’ ரஜினி என்பதை அனுபவித்து
அறிந்தவன் நான். பல நாள்கள் அவரை நான் சந்தித்திருக்கிறேன்.
பல செய்திகளை அவரோடு பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.

அனைத்தையும் வெளிப்படையாக விளக்க முடியாது;
விளக்கவும் கூடாது. அவரிடம் கண்டு வியந்த பண்புகள்
பணிவும் அடக்கமும்தான்.

வைணவம் சொல்லும் ‘செளலப்பியம்’ (பணிவு) ரஜினியிடம்
இயல்பாக அமைந்துவிட்டது. பாரதப் போரில் பாண்டவா்களுக்கு
வெற்றியைத் தேடித்தந்த பரம்பொருள் பரந்தாமன் பதினெட்டு
நாள் போரின்போதும், அவன் பயன்படுத்திய பரிகளுக்கு
அவனே நீராட்டி உணவூட்டினான்.

கா்த்தா் இயேசு தன் சீடா்களின் கால்களைக் கழுவித் தன்னுடைய
மேலங்கியால் துடைத்தார். நபிகளார் பயணத்தின்போது
சமையலுக்கான விறகைத் தானே சேகரித்தார்.

இராமநுஜரின் குரு பெரிய நம்பி அவரை திருப்பதி மலையில்
வரவேற்றபோது, ‘யாராவது சிறியவரை அனுப்பியிருக்கலாமே’
என்றார் இராமாநுஜா்.

‘என்னைவிடச் சிறியவன் யாருமில்லாததால் நானே வந்தேன்’
என்றார் பெரிய நம்பி.

‘தூசினும் தூசியாகவே என்னை நான் பாவிக்கிறேன்’ என்றார்
அண்ணல் காந்தி. அடக்கம் என்ற வேரிலிருந்துதான் அனைத்துத்
தெய்வீகப் பண்புகளும் கிளை பரப்புகின்றன. ‘அன்புடையார்
அனைத்தும் உடையார்’ என்கிறது வேதம்.

ரஜினிகாந்த் அன்பும் அடக்கமும் தன் உயா்பண்புகளாகக்
கொண்டவா். அவரால் தமிழகத்தில் நல்ல அரசியல் மாற்றம்
நடந்தேறும் என்று நான் நம்புகிறேன்.

அவா்தான் எனது அரசியல் வாழ்வின் கடைசி நம்பிக்கை!

-கட்டுரையாளா்:
தலைவா், காந்திய மக்கள் கட்சி.

.
—————————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to ரஜினிகாந்த் – எனது கடைசி நம்பிக்கை…! தமிழருவி மணியன் |

 1. கார்த்திகேயன் பழனிசாமி சொல்கிறார்:

  நமது கடைசி நம்பிக்கை ரஜினி மட்டுமே.
  இப்ப இல்லனா எப்பவும் இல்லை 🤘🏽

 2. GOPI சொல்கிறார்:

  ஆனால் தமிழக மீடியாக்கள் அனைத்தும்
  ரஜினிக்கு எதிராகவே இருக்கின்றன.
  ரஜினி வருவதை அவை விரும்பவில்லை;

  ஏனோ ?

  • கார்த்திகேயன் பழனிசாமி சொல்கிறார்:

   மன்னிக்கவும் திராவிட ஊடகங்கள்… தமிழகத்தில் எத்தனை நேர்மையான ஊடகங்கள் உள்ளன????

 3. புதியவன் சொல்கிறார்:

  Not much impressed with தமிழருவி மணியன். He thinks too much of himself.

  ரஜினியின் நல்ல குணத்தையும் நல்ல மனத்தையும் நமக்கே தெரியும். (ஆனாலும் என் கருத்தில் மாற்றமில்லை).

  65ல் இருந்த மக்களுக்கும் இப்போதிருக்கும் மக்கள் மனநிலைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. அப்போது தலைவர்கள் நாட்டுக்கு, மக்களுக்கு எது நல்லது என்று நினைத்துச் செய்தனர். அதனைக் குறை சொல்லி, கூட்டம் போட, எதையும் முன்னேறவிடாமச் செய்வதற்கு மாக்கள் இல்லை. ஆனால் காலம் ரொம்பவே மாறிவிட்டது. இப்போதெல்லாம் மக்கள் விரும்புவது ‘இலவசம்’ என்றுதான் நான் நினைக்கிறேன். Long term benefitsஐ விரும்புவதாக எனக்குத் தோன்றவில்லை.

  ஊடகங்களைப் பற்றி எதையும் சொல்லித் தெரியவேண்டியதில்லை. அவங்க, தங்கள் பிஸினெஸுக்காக, எங்கு வரவு வருதோ அதற்கேற்ற மாதிரித்தான் கருத்துக்களை மக்களிடம் திணிக்கிறாங்க. ஒரு சில நாட்கள் முன்னால, ஒரு இணைய செய்தித் தளத்துல, திமுக வரணும்னு 50 சதவிகிதமும் 12 சதவிகிதம் அதிமுக வரணும் என்றும் 6 சதவிகிதம் ரஜினி வரணும் என்றும் வாசகர்கள் சொல்றாங்கன்னு எழுதியிருந்தாங்க. இந்த மாதிரி, கொஞ்சம்கூட அறம் இல்லாத ஊடகங்கள்தான் தமிழகத்தில் நிறைந்திருக்கிறது.

  • Vicky சொல்கிறார்:

   While I wish Rajini’s win, I should agree with Puthiyavan sir. It sounds bitter but truth

  • Rajs சொல்கிறார்:

   Why is that ” Aramillai”? Why not it is a fact. As for Tamilaruvi Manian, less said is better, in fact his presence in Rajini’s political party makes it weak. Remember in 2016, he wanted Vijaykanth and company to win. He is like the Suguni in Mahabharat, his hatred towards ADMK and DMK is leading his ideology because ADMK/DMK don’t give him any space.

 4. Senth சொல்கிறார்:

  கல்யாண மண்டபங்களை கொரோனா வார்டாக பயன்படுத்தப் போகிரோம் என்று சென்னை மாநகராட்சி ஆணையாளர் அறிவித்ததும் பராமரிப்புப் பணிகளுக்காக ராகவேந்திரா மண்டபத்தை மூடி வைத்தவர்கள் அரசியலில் மாற்றத்தை தரப்போகிறார்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.