அச்சச்சோ – மாலன்-ஜீ அமீத்ஜீயை எதிர்க்கிறாரே….!!!

….
….


….

….

கடந்த வாரம் சென்னைக்கு வந்து தமிழக அரசின் விழாவில்
கலந்து கொண்ட அமீத்ஜீ முழுக்க முழுக்க ஹிந்தியில் தான்
பேசினார்.

அமீத்ஜீக்கு தாய் மொழி குஜராத்தி….
தமிழ் தெரியாது.
தமிழக மக்களுக்கு தாய் மொழி தமிழ்..
குஜராத்தி தெரியாது.

எனவே, தமிழ்நாட்டுக்கு வந்து, தமிழக மக்களிடம் பேசும்போது,
இருவருக்கும் தெரிந்த, புரியக்கூடிய மொழியில் தான்
பேச வேண்டும்….அதாவது ஆங்கிலத்தில்.

ஆங்கிலம் தெரியவில்லையென்றால், தன் தாய்மொழியான
குஜராத்தியிலேயே பேசி இருக்கலாம். அதில் நமக்கு
ஆட்சேபம் ஏதுமில்லை;

ஆனால், அவருக்கு ஆங்கிலம் தெரிந்திருந்தும் –
நமக்கு ஹிந்தி புரியாது என்று தெரிந்திருந்தும்
ஹிந்தியிலேயே பேசினார்.

ஏன்….?

நமது மூத்த பத்திரிகையாளர் மாலன் அவர்கள் இத்தகைய
செயலை கடுமையாக கண்டித்து எழுதி இருக்கிறார்….
பார்க்கிறீர்களா…?

அச்சச்சோ, மாலன் சார் பாஜகவுக்கு ஆதரவாக
செயல்படக்கூடியவர் ஆயிற்றே…

அவரா சொன்னார் ? – என்று சந்தேகப்படுகிறீர்களா…?

பாருங்களேன்… என்ன சொல்லி இருக்கிறாரென்று –

——————–

இரண்டு மொழிக்காரர்கள் சந்திக்கும் போது,
எனது மொழி உனக்குத் தெரியாதென்றால்,
உனது மொழி எனக்குத் தெரியாதென்றால்
இருவரும் அறிந்த பொது மொழியில்
உரையாடுவதுதான் பண்பாடு.

இந்தப் பண்பாடு தில்லியில் இருக்கும் பலருக்கு இல்லை
என்பதுதான் வருத்தத்திற்குரியது.
நாட்டில் நிலவும் மொழிப் பிரசினைகளுக்கு
அதுவும் ஒரு காரணமாக,

– சில நேரங்களில்
அதுவே முக்கியக் காரணமாக இருக்கிறது.

…………………(ஒரு முறை) ஊடக உலகின் தலைமைச்
செயலகமான தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் அலுவலகம்
அமைந்திருந்த சாஸ்திரி பவனுக்குச் சென்றிருந்தேன்.

அதிகாரிகளைச் சந்திக்க வேண்டுமானால் நுழைவாயிலில்
ஓர் அனுமதிச் சீட்டுப் பெற வேண்டும். வரிசையில் காத்திருந்து
என் முறை வந்ததும் அனுமதிச் சீட்டு வழங்கும் அலுவலர்
மேசை அருகே போனேன்.

அவர் என்னிடம் ஏதோ இந்தியில் கேட்டார். “என்ன?” எனக்
கேட்டேன். அவர் சொன்னதையே மீண்டும் அதே இந்தியில்
சொன்னார். தயவு செய்து ஆங்கிலத்தில் சொல்லுங்கள்
என்று கேட்டுக் கொண்டேன்.

”ராஷ்ட்ர பாஷா பத்தா நை?”
(தேசிய மொழியில் பேசமாட்டாயா?) என்று அவர் வினவினார்.
“ நமக்கு தேசிய மொழி என ஒன்று இல்லையே” என்றேன்

(இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல என்ற குஜராத்
உயர்நீதிமன்றத் தீர்ப்பு அப்போது வந்திருக்கவில்லை.
ஆனால் நம் அரசமைப்புச் சட்டத்தில் தேசிய மொழி என்று
எதுவும் குறிப்படப்படவில்லை என்பதை நான் அறிவேன்)

“என்ன?” என்றார் அவர். அவர் கண்களில் சினம் தெரிந்தது.

“நமது நாட்டில் ராஜ்ய பாஷாதான் (அரசின் அலுவல் மொழி)
உண்டு ராஷ்ட்ர பாஷா (தேசிய மொழி) இல்லை. நான்
உங்களோடு ராஜ்ய பாஷாவில்தான் பேசிக் கொண்டிருக்கிறேன்
என்றேன். இந்திய அரசின் அலுவல் மொழிகளில் ஆங்கிலமும்
ஒன்று.

அவர் தொடர்ந்து ஏதோ படபடவென்று இந்தியில் சொன்னார்.
நான் நகரவில்லை.

எங்களோடு பயணம் செய்யவிருப்பதாகப் பட்டியலில் இருந்த
இன்னொரு பத்திரிகையாளர் வரிசையின் பின்னாலிருந்து
எட்டிப் பார்த்தார். நிற்பது நான் என்று தெரிந்ததும்
வரிசையிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு என்னை
நோக்கி வந்தார். அந்த அரசு ஊழியரிடம் என்னவோ பேசினார்,

இந்தியில்தான். இருவர் கையிலும் இரண்டு அனுமதிச்
சீட்டுக்கள் திணிக்கப்பட்டன. நான் என்னுடையதைத்
திறந்து பார்த்தேன். நான் சந்திக்கவிருந்த அதிகாரி பெயர்
உட்பட எல்லாம் இந்தியில் எழுதப்பட்டிருந்தது !

அரசு அறிவிப்புகள், வேலை வாய்ப்புக்கள் எல்லாம்
இந்தியிலும் வருவதால் அவர்களுக்கு நமக்கிருப்பதைப் போல
ஆங்கிலம் அறிந்து கொள்வதற்கான அவசியம் குறைவு.
இது ஒருவகையான தாழ்வு மனப்பான்மையைக் கூட
ஏற்படுத்தியிருக்குமோ என்பது என் சந்தேகம்.
….
….

ஆங்கிலத்தை எதிர்ப்பதற்கும், ஆங்கிலேயர்களை
எதிர்ப்பதற்கும் வித்தியாசம் உண்டு என்பதை நம் இந்தி
நண்பர்கள் அறியவில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது.

ஆங்கிலேயர்களின் அதிகாரத்தைக் கடுமையாக எதிர்த்தவர்
காந்தி. ஆனால் அவர் ஆங்கிலத்திலும் எழுதினார்.
நேரு தன் மகளுக்கு எழுதிய கடிதங்கள் ஆங்கிலத்திலேயே
அமைந்திருந்தன. செப்பும் மொழி பதினெட்டு உடையாள்
என்று சிலிர்த்து சிலாகித்த பாரதி தமிழிலும் ஆங்கிலத்திலுமே
எழுதினார். ஆங்கிலேயர்களை எதிர்த்தவர்கள் ஆங்கிலத்தை
எதிர்த்ததில்லை என்பது வரலாறு.

தமிழர்களுக்கு இந்தி மீது ஏதும் தனிப்பட்ட வெறுப்பில்லை.
ஆங்கிலத்தை எதிர்க்காத ஆனால் ஆங்கிலேயர்களின்
அதிகாரத்தை எதிர்த்த அவர்களது முன்னோர்களைப் போலவே,

– அவர்கள் இந்தியின் மூலம் தங்கள் மீது செலுத்தப்படும்
அதிகாரத்தை எதிர்க்கிறார்களேயன்றி இந்தி என்ற மொழியை
எதிர்க்கவில்லை.
….
….
ஆங்கிலம் பேசாத நாடுகள் பல உண்டு.
ஜப்பானில் ஆங்கிலம் பேசத் தெரிந்தவர்கள் குறைவு.
சீனத்திலும் அப்படித்தான்.
பிரான்சிலும் அப்படித்தான் இருக்கும்.
ஆனால் அவர்களது விமான நிலையங்களில்
ஆங்கிலத்திற்கு இடமுண்டு.
நம்முடைய விமானநிலையங்களில் தான்
இந்தி தெரியாத நீ இந்தியனா என்று கேட்கிறார்கள்.

அவர்களுக்குச் சொல்வேன்.
ஆம் நான் இந்தியன்தான்.
தமிழ்ப் பேசும் இந்தியன்.
இந்திய மொழிகளில் ஒன்றான தமிழைப் பேசும் இந்தியன்.
இன்று வரை இந்தியனாக இருந்து வரும் நான்
தமிழனாகக் குறுகி விடாதிருப்பது
என் கையில் இல்லை. உங்கள் கையில் இருக்கிறது

நாங்கள் உங்கள் மொழியைக் கற்றுக் கொள்ளத் தயார்.
நீங்கள் எப்போது பண்பாட்டைக் கற்றுக் கொள்வீர்கள்?

——————————

பின் குறிப்பு – இங்கே ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டும்.
இந்த கட்டுரையை மாலன் சார் அமீத்ஜீ வந்து
ஹிந்தியில் பேசிவிட்டுப் போன பிறகு எழுதவில்லை;

வருவதற்கு 2 மாதங்களுக்கு முன்னர் குமுதம் வார இதழில்
எழுதி இருக்கிறார்….. அச்சில் வந்திருக்கிறது….!!!!

அதனாலென்ன; அமீத்ஜீ-க்கு பயந்து,
இந்த கட்டுரையில் தான் சொல்லியிருப்பதை மாலன்-ஜி
இல்லையென்று மறுக்கப் போகிறாரா என்ன….?

.
——————————————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

9 Responses to அச்சச்சோ – மாலன்-ஜீ அமீத்ஜீயை எதிர்க்கிறாரே….!!!

 1. Karthik சொல்கிறார்:

  “அதனாலென்ன; அமீத்ஜீ-க்கு பயந்து,
  இந்த கட்டுரையில் தான் சொல்லியிருப்பதை மாலன்-ஜி
  இல்லையென்று மறுக்கப் போகிறாரா என்ன….?”

  அய்யா முடிவு அருமை.

  • M.Subramanian சொல்கிறார்:

   கூடிய விரைவில் நேரில் சென்று
   “பத்து தோப்புக்கரணம்” போட்டாவது
   உறவை சரி செய்துகொள்ள
   வேண்டும்.

   • M.Subramanian சொல்கிறார்:

    உள்ளுக்குள்ளாக மாலன் நொந்து கொண்டிருப்பார் –
    திருவிளையாடல் தருமியைப் போல;

    ” வேண்டும் எனக்கு; இதுவும் வேண்டும்
    இன்னமும் வேண்டும்.
    அமீத்ஜீ, மோடிஜீ வருவார்கள்;இந்தியில் தானே
    பேசுவார்கள் என்று கொஞ்சம் கூட யோசிக்காமல்
    குமுதத்தில் பந்தா’வாக எழுதி விட்டேனே.”

    “தெப்பக்குள புலவா இப்போ என்ன செய்யறது;
    நேரில் போய் 10 தோப்புக்கரணம் போட்டால்
    விட்டு விடுவாரா ?” என்று தனக்குள்ளேயே
    புலம்பிக் கொண்டிருக்கக்கூடும்.

 2. புதியவன் சொல்கிறார்:

  பாஜக, ஆர்.எஸ்.எஸ் இவர்களின் கொள்கை, இந்திய மொழியில் மட்டும் பேசுவது என்பது. ஆங்கிலத்தை அவர்கள், இந்தியர் அல்லாத இடங்களில்தான் அல்லது வெளிநாட்டு மீடியாவில் வரவேண்டும் என்றால் மட்டும்தான் உபயோகிக்கிறார்கள் என்று நினைக்கிறேன். இதைப் பாராட்டணும், தமிழகத்துல இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு, பாஜகவை இந்த ஹிந்திவாலாக்களால் வளர்க்க முடியாது என்பதால்.

  தமிழகத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டும்தான் communication language ஆக இருக்கவேண்டும். மாலன் சொல்வதை நான் 2015லேயே அனுபவித்தேன். அதாவது மோதி அரசுக்கு வருவதற்கு முன் இருந்த நிலைமைக்கும் (மத்திய அரசு அலுவலகங்கள், வெளிநாட்டில் இருக்கும் தூதரகங்கள்) அவர் ஆட்சிக்கு வந்த பின் ஆரம்பித்த நிலைமைக்கும் ரொம்பவே வேறுபாடு. நாங்க போனால், ஹிந்திலதான் பேசறாங்க இந்த வெத்துப் பசங்க (இந்திய தூதரகத்தில் இருப்பவர்கள்தான். ஆங்கிலம் தெரியாதவனுக்கு அல்லது இந்தியாவைச் சேராதவனுக்கு எதுக்கு மரியாதை) இது யாருக்கு மிக உபயோகம் என்றால், வட இந்தியர்கள் பெரும்பாலானார்க்கு ஹிந்தி தவிர ஆங்கிலத்தில் பேசுவது கடினம். அவங்களுக்குத்தான் இந்தக் கொள்கை உபயோகம். நிச்சயம் இந்தியா என்னும் நாட்டிற்கு உபயோகம் இல்லை.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   புதியவன்,

   // பாஜக, ஆர்.எஸ்.எஸ் இவர்களின் கொள்கை,
   இந்திய மொழியில் மட்டும் பேசுவது என்பது. //

   மன்னிக்க வேண்டும் புதியவன். தெரிந்தோ
   தெரியாமலோ – நீங்கள் இங்கே ஒரு முக்கியமான
   விஷயத்தை மாற்றி எழுதுகிறீர்கள்..

   அவர்களது நோக்கம் “இந்திய மொழி” அல்ல.
   “ஹிந்தி” மட்டுமே.

   எங்கும், எதிலும், நாடு முழுவதும் ஹிந்தியை
   வலியுறுத்த வேண்டும். ஹிந்தி மட்டுமே…!!!

   ஹிந்தி தெரியாதவர்களுக்கு இங்கே இடமில்லை
   என்பதை ஹிந்தி தெரியாதவர்கள் உணர வேண்டும்.
   அதற்காகத்தான் ஒவ்வொரு இடத்திலும்
   ஹிந்தியிலேயே பேசுகிறார்கள். அரசாங்க
   திட்டங்கள் அனைத்திற்கும் ஹிந்தியிலேயே
   பெயர் வைக்கிறார்கள்.

   இந்திய மொழியில் பேசுவது தான் அவர்
   குறிக்கோள் என்றால், அவரது தாய்மொழியான
   குஜராத்தியில் பேசட்டுமே…
   யார் எதிர்க்கப் போகிறார்கள்…?

   காமராஜர் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக
   பதவியில் இருந்தபோது, போகும் இடங்களில்
   எல்லாம் தமிழில் தான் பேசினார் (வடக்கே கூட)
   அவர் தன் தாய்மொழியில் பேசியதை
   யாரும் எதிர்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 3. GOPI சொல்கிறார்:

  இங்கே தேர்தல் பிரச்சாரத்திற்கு வருவார்கள்.
  இந்தியில் பேசினால் ‘பாய்காட்’ செய்வோம்
  என்று அறிவித்தால் போதும்…
  அப்போதுமட்டும் ஆங்கிலத்திற்கு ஜம்’பி
  விடுவார்கள். காரியவாதிகள்.

 4. மெய்ப்பொருள் சொல்கிறார்:

  இந்தி திணிப்பு என்பது சுதந்திரத்திற்கு முன்பேயே
  ஆரம்பித்து விட்டது . உருது பாகிஸ்தான் மொழி .
  இந்தியில் உருது சொற்கள் இடம் பெறக்கூடாது
  என தீர்மானமாக இருக்கிறார்கள் .

  காங்கிரஸ் ஓரளவு பயந்து செய்தது . நாங்கள்
  அப்படித்தான் திணிப்போம் – உங்களால்
  என்ன செய்ய முடியும் ? என்ற மாதிரி கிடையாது .

  பா ஜ க அதை செய்கின்றது .

  இது எத்தனை நாள் ஓடும் ?

 5. GOPI சொல்கிறார்:

  மெய்ப்பொருள் –
  “அடுத்த 30 வருடங்கள் பாஜக ஆட்சி தான்”
  – சொன்னவர் அமீத் ஷா ஜி
  சொன்ன இடம் – சென்னை – ஹோட்டல் லீலா பேலஸ்
  காலம் – சென்ற வாரம்

  இதற்கு என்ன சொல்கிறீர்கள் ?

  • புதியவன் சொல்கிறார்:

   கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் கோலங்கள்

   நமக்கு நிச்சயமா நல்ல ஒரு எதிர்கட்சி தேவை. இது மாநிலக் கட்சிகளின் கூட்டணியாக இருக்கக்கூடாது, அப்புறம் அது பொருந்தாக் கூட்டணியாக ஆகிவிடும். காங்கிரஸுக்கு நல்ல ஒரு தலைவர் வந்து, மென்மையான போக்கைக் கடைபிடித்தால், அதுதான் இந்தியாவிற்கு நல்லது.

   பாஜக மக்களுக்கான திட்டங்களை நிறைவேறுவதாகத் தெரியவில்லை. எதிர்கட்சி என்று இன்றிருக்கும் காங்கிரஸ், ராகுல் – நாட்டைப் பற்றிக் கவலைப்படாமல், தங்களைப் பற்றி மட்டும் கவலைப்படுகின்றனர். நிச்சயம் சோனியா காலத்திற்கு அப்புறம் காங்கிரஸுக்கு ஒரு நல்ல தலைவர் வரவில்லை என்றால், காங்கிரஸ் கலைந்துவிடும்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.