….
….
….
முந்தைய பகுதியின்தொடர்ச்சி ….
ஷேக்ஸ்பியருக்கும் மனோகராவிற்கும் என்ன சம்பந்தம்…?
சம்பந்த முதலியார் தான் சம்பந்தம்…!!!
விசித்திரமான உலகம்… விந்தையான மனிதர்கள்…
பற்பல விதங்களில் உருமாற்றம் செய்யப்பட்டு,
மாபெரும் வெற்றி பெற்ற ஒரு நாடகம்….!!!
முதலில், 1906-ல், ஷேக்ஸ்பியரின் புகழ்பெற்ற நாடகமான
“ஹேம்லெட்”-ஐ நேரடியாகத் தமிழ்ப்பெயர்களுடன் “அமலாதித்யன்”
என்கிற தலைப்பில் தமிழில் நாடகமாக மொழி பெயர்த்தார் பம்மல்
சம்பந்த முதலியார். இதில் மேற்கத்திய பின்னணி அப்படியே
பிரதிபலித்ததால், அவ்வளவாக எடுபடவில்லை.
…..
அமலாதித்யன் புத்தகத்திலிருந்து –
அந்தக் காலத்திய கொடுமையான நாடகத்தமிழை
கொஞ்சம் அனுபவிக்க – சாம்பிள்….
பம்மல் சம்பந்த முதலியாரின் புத்தகத்திலிருந்து சில பக்கங்கள் –
…….
–
———–
வாசக நண்பர்கள் கவனிக்க —
———————————————-
கிரந்தகர்த்தாவின் ( ??? ) காப்பிரை உரிமைகள்…!!!
எந்த சபையாராவது – ஆட (!!!) வேண்டுமென்றால்….
ஒரு கிரந்தகர்த்தாவுக்குச் சேரவேண்டிய ராயல்டி
அவரது ஆயுசு பரியநமும், அதற்கு மேல்
50 வருஷகாலம் அவரது வார்சுதாரர்களுக்கும்,
உரித்தாயது என்பதை எல்லோரும் அறிவார்களாக..
———-
——–
————–
பின்னர் சில வருடங்கள் கழித்து, இதே கதையை, தமிழ்ப்
பின்னணி கொண்டதாக மாற்றி “மனோகரா” என்கிற நாடகத்தை
உருவாக்கி, அரங்கேற்றி, அவரே கதாநாயகனாகவும் நடித்தார்.
நாடகம் நல்ல வரவேற்பைப் பெற்றது…
நாடகம் பெற்ற வரவேற்பைத் தொடர்ந்து “மனோகரா” முதலில்
1936-ல் தமிழில் திரைப்படமாக எடுக்கப்பட்டது. இது எத்தகைய
வரவேற்பை பெற்றது என்பது தெரியவில்லை; எவ்வளவு
தேடியும் இதைப்பற்றிய விவரங்கள் கிடைக்கவில்லை;
அதன் பின், நடிகர் கே.ஆர்.ராமசாமி, மனோகரா நாடகத்தை
தனது நாடக குழுவின் சார்பில் நடத்தி வந்தார். அதில்
அவரே கதாநாயகன் மனோகரனாக நடித்திருந்தார்.
ஒரு வேடிக்கை என்னவென்றால், அந்த மேடை நாடகத்தில்,
மனோகரனின் தாய் ராணியாக (கண்ணாம்பா) பெண் வேடத்தில்
சிவாஜி கணேசன் நடித்து வந்தார்…(அப்போது அவர் இன்னும்
சிவாஜி ஆகவில்லை; )
இதை ஜுபிடர் பிக்சர்ஸ் சார்பில் இளங்கோவன் கதைவசனம்
எழுத, ஏ.எஸ்.ஏ.சாமி இயக்க, கே.ஆர்.ராமசாமி கதாநாயகன்
மனோகரனாக நடிக்க திரைப்படமாக எடுப்பதாக முயற்சி
துவங்கியது.
ஆனால், அது எப்படியெப்படியோ உருமாறி, இறுதியில்,
எல்.வி.பிரசாத் டைரக்ஷனில், மு.கருணாநிதி அவர்களின்
திரைக்கதை, வசனத்தில் – சிவாஜி கணேசன் மனோகரனாக
நடிப்பதாக முடிவடைந்தது.
இதனால், கே.ஆர்.ராமசாமி தன் வாய்ப்பு பறி போனது குறித்து
நீண்ட நாட்கள் வரை பெருங்கோபத்தில் இருந்ததாக எங்கோ
படித்திருக்கிறேன்.
கலைஞர் கருணாநிதி, தனது கற்பனையோடு,
கைவண்ணத்தையும் கலந்து, திரைக்கதை, வசனம் எழுதி
மெருகூட்ட,
சிவாஜி கணேசனின் அற்புதமான தமிழ் உச்சரிப்போடு,
1954-ல் வெளியாகி பிரம்மாண்டமான வெற்றியை பெற்றது
2-வது மனோகரா. படத்தின் வெற்றிக்கு கண்ணாம்பாவின்உணர்ச்சிகரமான நடிப்பும், வசனமும், கூட ஒரு காரணமாக அமைந்தது.
மனோகராவின் அடித்தளம் ஷேக்ஸ்பியரின் ஹேம்லெட்
மட்டுமல்ல…. திரைக்கதை அமைக்கும் பொறுப்பு
கருணாநிதியிடம் வந்ததும், அவர் இறுதிக்காட்சியில்
(க்ளைமேக்ஸ்) சில அற்புதமான மாற்றங்களைச் செய்தார்.
மனோகரனை சங்கிலியால் பிணைத்து தூணில் கட்டி
சித்திரவதை செய்யும் காட்சியில், கலைஞர் ஆங்கிலப்படமான
சாம்ஸன் & டிலைலா படத்தைத்தழுவி சில மாற்றங்களைச்
செய்தார்.
இறுதிக்காட்சியில், ராணி(மனோகரனின் தாய்) ” பொறுத்தது
போதும் மகனே, பொங்கி எழு” என்று வீர வசனம் பேசுவதும்,
சங்கிலியை உடைத்துக் கொண்டு திமிறி வெளிவரும்
மனோகரன் எதிரிகளை துவம்சம் செய்வதும் 1949-ல் வெளியாகி
மாபெரும் வெற்றி பெற்ற சாம்சன் & டிலைலாவின் தாக்கம் தான்.
ஷேக்ஸ்பியர் எப்படியெல்லாம் உருவெடுத்து தமிழ்ப்படத்தில்
அவதரித்திருக்கிறார் என்பதை நினைத்தால் தமாஷாகத்தான்
இருக்கிறது…. ஒரு நாடகத்தின், ஒரு திரைப்படத்தின் வெற்றி
என்பது முழுக்க முழுக்க ரசிகர்களின் எதிர்பார்ப்பை
சரியாக எடைபோட்டு உருவாக்குவதில் தான் இருக்கிறது….
என்பதை இது உறுதிப்படுத்துகிறது.
சாம்பிளுக்கு – மனோகரா திரைப்படத்திலிருந்து ஒரு காட்சி –
( ப்ரிண்ட் தரமாக இல்லையென்றால் – அதற்கு
காவிரிமைந்தன் பொறுப்பல்ல என்பதை பார்ப்பவர்கள்
முன் கூட்டியே அறிவார்களாக ….!!! )
….
….
.
—————————————————————————————————————————–
காவிரிமைந்தன் சார்,
1906-ல் எழுதப்பட்ட ‘கூர்ஜரத்து இளவரசன்
அமலாதித்யன்’ என்கிற ஷேக்ஸ்பியரின்
தமிழ் ஹாம்லெட் ப்ரமாதம்.
என்னவொரு தமிழ் நடை !
” மானிடப் பிரகிர்திக்கு மனத்துயரடைதல்
சகஜமாயினும் விவேகத்தைக் கொண்டு
அதனை வென்று,
நாம் இறந்தார்க்கு துயர்றுதலுடன்,
இருந்தார் கடனையும் கருதலானோம்.
அதன் பொருட்டே இதுவரையில் தங்கை
முறையாயிருந்த கௌரீமணியைத்
தாரமாக்கி எந்நாளும் ஏதில ரஞ்சும்
இந்நாட்டி னரசியாக்கினோம்.”
முதல் நாடகம் ஏன் தோல்வியடைந்தது
என்று புரிகிறது.
இந்த தலைப்பில் நீங்கள் எழுத ஆரம்பித்தபோது
இவ்வளவு தகவல்கள் இதில் கிடைக்குமென்று
நான் நினைக்கவில்லை.
உண்மையிலேயே வெகு வித்தியாசமாக,
சுவாரஸ்யமாக இருக்கிறது. கடுமையாக
உழைத்திருக்கிறீர்கள் என்று தெரிகிறது.
வாழ்த்துக்கள். தொடருங்கள் சார்.
அடுத்த பகுதிக்கு ஆவலுடன் காத்திருப்பேன்.