ஆனந்த பவனின் ஆற்காட்டார்….!!!

….
….

….

….

ஒரு சுவாரஸ்யமான அரசியல் கட்டுரையைப் படித்தேன்.
விவேக் கணநாதன் எழுதியது. திமுக சார்புள்ள எழுத்தாளர்
என்றாலும் கூட, ஒரு நல்ல ஆழ்ந்த புரிதலுடன் கட்டுரை
எழுதப்பட்டுள்ளது.

கட்டுரையில் கூறப்பட்டுள்ள கருத்துகள் அனைத்துமே
எனக்கு ஏற்புடையவை என்று நான் சொல்ல மாட்டேன்.
இருந்தாலும எழுதப்பட்டிருக்கும் விதம் ரசனைக்குரியதாக
இருக்கிறது.

விவேக் கணநாதனுக்கு வாழ்த்துகளுடன்,
நன்றியையும் கூறிக்கொண்டு, நமது தள வாசகர்களின்
பார்வைக்காக அதனை கீழே பதிப்பிக்கிறேன்.

————————————————–

“அகமது பட்டேல் எடுக்கத்தவறிய 100 ரன்கள் !”
– விவேக் கணநாதன்

காங்கிரஸைத் தாங்கிக் கொண்டிருந்த அடிவேர் ஒன்று
நவம்பர் 25 ஆம் தேதி இறந்திருக்கிறது.

இந்த ஆண்டின் மிகப்பெரிய அரசியல் நிகழ்வு என ஆங்கில
ஏடுகள் வர்ணிக்கும் அளவுக்கு மிக முக்கியமான இழப்பு இது.

நேருவுக்கு மத்தாய் இருந்ததைவிட, இந்திராவுக்கு
ஆர்.கே.தவான் இருந்தைவிட முக்கியமானதோர் இடத்தில்
சோனியா காங்கிரசில் இருந்தவர் அகமது பட்டேல்.

ஒட்டுமொத்த இந்திய அரசியலுமே பேர நடைமுறையாக
மாறியுள்ள நிலையில், மேசைகளுக்கு கீழே நடக்கும் அசலான
அரசியலை மிக லாவகமாக கையாளக்கூடிய அகமது பட்டேல்
போன்ற ஒருவரின் மறைவு காங்கிரஸுக்கு பேரிழப்பு. பாஜகவுக்கு
எதிரான களத்தில், காங்கிரஸுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு.

அகமது பட்டேலுக்கான இரங்கல் குறிப்பில் காங்கிரஸ்
தலைவர்களிடம் அவ்வருத்தம் தெரிகிறது. ‘irreplaceable –
மறு ஈடே இல்லாதவர்’ என்கிறார் சோனியா. ‘Tremendous asset –
கட்சியின் மாபெரும் சொத்து’ என்கிறார் ராகுல். ‘இனி இப்படி
ஒருவரை எப்போது கண்டுபிடிக்கப் போகிறோம்?’
என்கிறார் ப.சிதம்பரம்.

குஜராத் குகையிலேயே…

ஆர்.எஸ்.எஸ் பரிவாரத்தின் வீழ்த்த முடியாத காங்கிரஸ்
தளகர்த்தர் என அகமது பட்டேலை வர்ணிக்கலாம்.

2017 குஜராத் ராஜ்யசபா தேர்தலின்போது அகமது பட்டேலை
வீழ்த்த பாஜகவின் ஒட்டுமொத்த மத்திய பேரதிகாரமும் வேலை
செய்தபோதும், மோடி – அமித் ஷாவின் சொந்தமாநிலமான
குஜராத்திலேயே அகமது பட்டேலை ஒன்றும் செய்ய
முடியவில்லை.

2018ல் மீண்டும் பொருளாளராக பொறுப்பேற்றுக்கொண்ட
அகமது பட்டேல்தான், 2019 தேர்தலுக்கு முன்பு காங்கிரஸ் பெற்ற
மாநில வெற்றிகளுக்கு முக்கிய சூத்திரதாரி. அகமது பட்டேலின்
தொடர்பு வெளிக்கு உட்பட்டு நடந்த ராஜஸ்தான், மகாராஷ்டிர
ஆட்சி அமைப்பு பேரங்களில் பாஜக வீழ்த்தப்பட்டது;

அவரின் தொடர்பு எல்லைக்கு அப்பால் நிகழ்ந்த மத்திய பிரதேச
பேரத்தில் காங்கிரஸ் வீழ்ந்தது என் நிகழ்கால சாட்சியங்கள்
ஒன்றே போதும், பட்டேல் காங்கிரஸுக்கு எவ்வளவு
முக்கியமானவர் என்பதை உணர்த்த.

பிரதமராகும் வாய்ப்பு

ஒரு இசுலாமியர் என்கிற அடிப்படையிலும், இந்திய அரசியலில்
அகமது பட்டேல் வகித்த இடம் மிக மிக சுவாரசியமானது.
பிரதமராக உருவெடுப்பதற்கு எல்லாவிதமான தகுதியும் இருந்தும், இசுலாமியர் என்கிற ஒரே காரணத்தால் பிரதமராக வாய்ப்புள்ளவர் பட்டியலில் கூட இடம்பெறாமல் போனவர் அவர். ஆனால்,
அதையே தனக்கான வலிமையாக மாற்றிக்கொண்டு கட்சியின்
நரம்பு மண்டலத்தின் இயக்கவிசையாக தன்னை இறுத்திக்
கொண்டவர் அவர். இனி ஒரு இசுலாமியர் அவ்வளவு உயரத்திற்கு
செல்வது எளிதல்ல.

பட்டேல்-மாறன்- யுகத்தின் முடிவு

இவற்றைவிட முக்கியமானது, அகமது பட்டேலின் மரணத்தோடு
காங்கிரஸில் ஒரு யுகம் முற்றாய் முடிகிறது. சோனியா காந்தியின்
யுகம்.

இதுவரை நீடித்துவந்த ராகுல் காங்கிரஸ் vs சோனியா காங்கிரஸ்
என்ற பனிப் போர் யுகத்தின் தலையாய பாறை கரைந்துவிட்டது என்றே அகமது பட்டேலின் மரணத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்

பட்டேலின் மரணத்துக்குப் பிறகான மாற்றங்களை, மாறனின்
மரணத்துக்குப் பிறகு திமுகவில் நடந்த மாற்றங்களுக்கு நிகராக
உற்றுக் கவனிக்க வேண்டும்.

மாறன் இருந்தவரை, மாவட்டச் செயலாளர்கள் முதல் திமுகவின்
மிக உயர்ந்த தலைவர்கள் வரை, தாங்கள் என்னசொன்னாலும்
மாறனின் இறுதி சொல்தான் கலைஞரிடம் எடுபடும் என்ற விமர்சனம் திமுகவுக்குள் இருந்தது. கூட்டணி முடிவுகள் முதல், திமுகவின் அமைச்சரவை பட்டியலை திருத்தும் அளவுக்கு சர்வ செல்வாக்கு
கொண்ட ஒரு தலைவராக விளங்கியவர் மாறன்.

கலைஞர் தன் வாழ்நாளில் ஒருவருக்கு அளித்த அதிகபட்ச
முக்கியத்துவமாக, ‘மாறன் என் மனசாட்சி’ என்ற சொற்கள் நிலைத்து
நின்றன. கலைஞரையும், திமுகவையும் குறிப்பிட்ட முடிவுகளை
எடுப்பதை நோக்கி அழுத்தி நகர்த்துவது மட்டுமல்ல, மிக முக்கியமான
முடிவுகளைக்கூட ஒத்திப்போடவைக்கும், கைவிடவைக்கும் ஆற்றல்
மாறனுக்கு இருந்தது.

கலைஞரின் மருமகன் என்ற உறவைத் தாண்டி, மாறனுக்கு இருந்த
அரசியல் ஞானம், அவரது நுணுக்கமான தத்துவப் புரிதல்,
கள அரசியலை தத்துவக்கோவையிலிருந்து நழுவாமல் கையொழுகும் லாவகம், டெல்லி அரசியலுக்கான சூதாட்ட காய்களை நிர்வகிக்கத்
தெரிந்த ராஜதந்திரம் போன்றவை கம்பீரமான பிம்பத்தையும்,
கட்சிக்குள் உயர்ந்த செல்வாக்கையும் அவருக்கு அளித்திருந்தது.

இத்தகைய ஓர் இடம், இந்திய ஜனநாயக மரபின் எதார்த்த
சிக்கல்களுக்கு மத்தியில் ஓர் தலைமைத்துவத்தை காத்திரப்படுத்த
மிக அவசியமாக தேவைப்படுகின்றன. மிகக்குறிப்பாக, மிக நீண்ட
காலம் ஒரே தலைமையின் கீழ் செயல்படக்கூடிய இயக்கங்களில், லட்சியவாத பின்புலம் கொண்ட கட்சிகளிலும் இந்த இடம் மிக அவசியமானதாகிறது.

இந்தியாவின் மிக செல்வாக்கு வாய்ந்த தலைவரான நேருவுக்கே,
அவர் கட்சிக்குள் மாற்றங்களை முன்னிறுத்த நம்பிக்கையும்,
விசுவாசமும் மிக்க ஒரு காமராஜ் தேவைப்பட்டார். ஆனால், நேரு – காமராஜ் உறவு நிகழ்ந்த காலகட்டம் என்பது லட்சியவாத உணர்வுகள் அரசியலில் தேய்ந்துவிடாத காலம். காலனிய ஆதிக்கம் மற்றும் சுதந்திரத்தின் தாக்கம் அகலாத காலம். எனவே, நேரடியாக
அதிகாரத்தை எடுத்துக் கொண்டு அதை செயல்படுத்திக் காட்டக்கூடிய காமராஜ் போன்ற தலைமைகள் நேருவுக்கு கிடைத்தனர். இதற்கு
பின்னர் வந்த காலக்கட்டங்களில் காமராஜ் போன்ற ஆளுமை உருவாக்கங்கள் நிகழவில்லை. மாறாக, தலைமைகளின்
‘சார்பாக’, ‘குரலாக’, ‘பதிலீடாக’ கட்சியை கண்காணிப்பு செய்யும்
மேசை நிர்வாகிகள் அவசியமாகினர்.

இந்துத்துவ அரசியலுக்கேக்கூட, வாஜ்பாய்க்கு அத்வானியும்,
மோடிக்கு அமித் ஷாவும் தேவைப்பட்டனர். மோடி யுகத்தில் அமித்
ஷா ஆற்றிவரும் அரசியல் பங்களிப்பை, நேரு காலத்தில் காமராஜ்
ஆற்றிய பங்களிப்போடு ஒப்பிட்டு மூத்த பத்திரிகையாளர்
சேகர் குப்தா ஒருகட்டுரையே எழுதினார்.

வெளிப்படைத்தன்மையான அதிகாரப் பகிர்தலோடு நடக்கும்
இத்தகைய ‘No.2 அரசியல்’, No.1 ஆக இருக்கும் மோடியின்
வெற்றிச் சாத்தியத்தை அதிகப்படுத்துகிறது. இந்த நிகழ்த்தல்தான், ‘தலைமைத்துவத்தை காத்திரப்படுத்தல்’.

நேருவுக்கு காமராஜ் கிடைத்த காலத்தில் காங்கிரஸுக்கு
தேசியத்துவம் என்கிற வலுவான ஒரு தத்துவ அடித்தளம் இருந்தது. ஆனால், அந்த அடித்தளம் வலுவிழுந்த பிறகு, மேசை நிர்வகிப்பு மேலாண்மையாக No.2க்கான இடம் காங்கிரசில் மாற்றப்பட்டுவிட்டது. தத்துவ அடித்தளமிக்க பாஜகவில், இன்றைக்கும் நேரடியான அதிகாரப் பகிர்வோடு No.2-க்கான இடம் தொடர்கிறது.

இந்த அவசியமாதல் உறவின் மிகச்சிறந்த உதாரணமாக, கலைஞர் –
மாறன் உறவைப் பார்க்கலாம். மாறன் மறைந்தபோது, ‘திமுகவின்
மூளை’ என மாறனை பத்திரிகைகள் வர்ணித்தது முக்கியமானது.
….

….

மாறன் மறையும்வரை என்னென்ன விமர்சனங்கள் – பார்வைகள்
மாறனின் இடம் மீது முன்வைக்கப்பட்டதோ, மாறன் மறைவுக்குப்
பிறகு அதே விமர்சனங்களின் மூலகாரணங்களில் திமுக வழுக்கி
விழுந்தது.

புதிய பண்பாட்டு மாற்றம் தரைதட்டி நின்றது. தலைமைக்கும் –
நிர்வாகிகளுக்குமான ‘தகவல் தொடர்பு சிக்கல்கள்’ தலையெடுத்தன.

இரண்டாம் கட்டத் தலைவர்கள் மீதான கட்டுப்பாட்டு லகானை
செலுத்துவதற்கு கரமற்றுப்போனது. வரலாற்றின் வினோதமாக,
மத்தியில் ஆட்சியில் பங்கில் இருக்கும்போதே திமுக டெல்லி
அரசியலில் சறுக்கி விழுந்தது. மிகக்குறிப்பாக, கலைஞரின் தலைமைத்துவம் மீதான பிம்பம் குலைவைச் சந்தித்தது.

மாறன் இடத்தில் அகமது பட்டேலே முழுமையாக பொருத்திப் பார்க்க
இடமில்லை. அதற்கு நிகர் புரிதலுக்காக, அகமது பட்டேலின்
இடத்தை, திமுகவில் ஆற்காடு வீராசாமி வகித்த இடத்தோடு
ஒப்பிடலாம்.

நேர்மையைவிட அதிகமான விசுவாசம், பேர அரசியலில்
நிபுணத்துவம், கட்சியின் நரம்பு நாளங்கள் குறித்த ஆழமான அறிவு,
மேலே இருந்து அடிமட்டத்தில் நிகழ்த்த வேண்டியவற்றை
நிறைவேற்றித் தரும் தூது தலைமை என சகல இடங்களையும்
இட்டு நிரப்பியவர் அகமது பட்டேல்.

சாதி, சமூக அந்தஸ்து, வியாபார உலகோடான தொடர்பு என பல
காரணிகளில் திமுகவுக்குள் ஆற்காடு வீராசாமியும், காங்கிரஸில்
அகமது பட்டேலும் வகித்த இடங்கள் சமமானவை.

ஆனால், ஓர் இயக்கத்தின் தலைமைத்துவத்தை காத்திரப்படுத்தும்
ஓர் இரண்டாம் கட்டத் தலைமை என்கிற நோக்கில், அகமது
பட்டேலுக்கு பிறகான காங்கிரஸை, மாறனுக்கு பிறகான
திமுகவோடே ஒப்பிட வேண்டும்.

அகமது பட்டேல் மீதும் ஏராளமான விமர்சனங்கள் இருக்கிறது.

காங்கிரஸில் மாநிலத் தலைமைகள் வலுவிழந்தற்கும், மக்கள்
செல்வாக்கு மிக்க தலைவர்கள் உருவாகாமல் போனதற்கும் அகமது பட்டேலின் ‘மேலிட விசுவாச கண்காணிப்பு அரசியல்’ முக்கிய
காரணம் என்ற விமர்சனம் அதில் முக்கியமானது. ஆனால், அதில்
அகமது பட்டேல் என்கிற தனிமனிதரைத் தாண்டி, கடந்த
100 ஆண்டுகளில் காங்கிரஸ் சந்தித்திருக்கும் இயக்க நசிவின்
விளைவே அக்கண்காணிப்பு அரசியல் என்பதை உணரும்போது, அந்நசிவுக்கான விடையும் அகமது பட்டேல் வாழ்வில் இருக்கிறது.

காங்கிரஸ் கிரிக்கெட்

1980களில் நடந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான
கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று விளையாடிய அகமது பட்டேல் 100
ரன்களை நெருங்கும் அளவுக்கு விளையாடிக் கொண்டிருக்கிறார்.

எதிர்முனையில் விக்கெட் மாறுகிறது. அகமது பட்டேல் உடன்
விளையாட குவாலியர் அரச வம்சத்தைச் சேர்ந்த சிந்தியா.

பட்டேல் 100 ரன்களை நெருங்கும் நேரத்தில்
ஸ்ட்ரைக்கை மாற்றாமல், தானே விளையாடிக் கொண்டிருக்கிறார்.
தனக்கு அதிகமான பந்துகள் வராததால் விரக்தியடைந்த அரசர்
சிந்தியா அகமது பட்டேலிடம் சென்று, ‘நீ ஆடியது போதும். மற்றவர்களுக்கு வாய்ப்பு கொடு’ என எரிசொல் வீசுகிறார்.
அடுத்த பந்தில் வேண்டுமென்றே விக்கெட்டை பறிகொடுத்து
வெளியேறினார் அகமது பட்டேல்.

சமீபத்தில் மத்திய பிரதேசத்தில் ஜோதிராவ் சிந்தியா பாஜகவில்
இணைந்திருந்த நேரம். இந்த நிகழ்ச்சியைக் குறித்து அகமது
பட்டேலிடம் மூத்த பத்திரிகையாளர் டி.கே.சிங் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பினார்.

‘நீங்கள் அன்றைக்கு 100 ரன்கள் அடித்துவிட்டுத்தானே
களத்தைவிட்டு சென்றிருக்க வேண்டும்’ என்ற டி.கே.சிங்
கேள்விக்கு,

‘என்னை வெளியேறச் சொன்னது சிந்தியா. நானோ வெறும்
சாமானியன்’ என பதில் அளித்திருந்தார்.

ராகுல் காங்கிரஸ் தேடிக்கொண்டிருக்கும்
மாற்றத்திற்கான விடைகள், சோனியா காங்கிரஸின்
தலைமைத் தளபதியான அகமது பட்டேலின்
விடைக்குள் தான் இருக்கின்றது

.
———————————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to ஆனந்த பவனின் ஆற்காட்டார்….!!!

  1. புதியவன் சொல்கிறார்:

    இடுகைத் தலைப்புதான் என்னைக் கவர்ந்தது.

    கட்டுரை பெரும்பாலும் திமுக ஜால்ரா. சிறந்த நகைச்சுவையை கட்டுரையில் திணித்திருக்கிறார் (மாறனுக்கு இருந்த அரசியல் ஞானம், அவரது நுணுக்கமான தத்துவப் புரிதல், கள அரசியலை தத்துவக்கோவையிலிருந்து நழுவாமல் கையொழுகும் லாவகம் – ஹாஹாஹா.)

    //பிரதமராக உருவெடுப்பதற்கு எல்லாவிதமான தகுதியும் இருந்தும்,// – இந்தியாவின் பிரதமராக எந்தத் தகுதியும் தேவையில்லை, சோனியா குடும்பத்திற்கு ஜால்ரா போடத் தெரிந்தால் போதும் வேறு எதுவுமே தேவையில்லை என்று சொல்கிறார் போலிருக்கிறது.

    கருணாநிதி செய்ததுபோல, ஆற்காட்டாரிடம் வேலை வாங்கி, அவரையும் சம்பாதிக்க விட்டு கடைசியில் கை கழுவினதுபோல அகமது படேலுக்கு கடைசி வரை ஆகவில்லை. அகமது படேல், எல்லாவித டீல்களிலும் சோனியா குடும்பத்திற்கு விசுவாசியாக இருந்தார்.

    I am deviating from this topic. காங்கிரஸ் கடலில் கரைத்த பெருங்காயம் போல மாறுவதற்கு என்ன காரணம்? இது இந்திராகாந்தி காலத்திலிருந்து காங்கிரஸுக்கு ஏற்பட்ட சறுக்கல். இந்திரா, மாநிலங்களில் யாருமே செல்வாக்குடன் இருக்கக்கூடாது, அப்படி ஒருவேளை செல்வாக்கு உடையவர்கள் இருந்தால், அவர்கள் தங்கள் அடிமையாகவும் முழுக்க முழுக்க விசுவாசிகளாகவும் இருக்கணும் என்று நினைத்தார். எந்த எந்த மாநிலத்தில் அவருக்கு லோக்கல் தலைவர்கள் மீது அச்சம் இருந்ததோ, அவர்களுக்குப் பதில் விசுவாசிகளுக்கு மட்டுமே பதவி வழங்கினார். உனக்கு என்ன தகுதி, திறமை இருக்கு என்பது எனக்குத் தேவையில்லை, நீ முழுக்க முழுக்க என் விசுவாசியாக இருந்தால் உன்னை ஜனாதிபதி பதவிக்குக் கூட நான் நியமிப்பேன் என்பதுதான் இந்திராவின் கொள்கையாக இருந்தது. அந்த ஆணவம், ஒரு சமயத்தில் தன் கட்சி ஒழிந்தாலும் பரவாயில்லை, தனக்கு ஆதரவாக மாநிலக் கட்சி இருந்தால் போதும் என்பதாக ஆகிவிட்டது. இந்திராவுடன் கூட இருக்கும் வாய்ப்புப் பெற்ற சோனியாகாந்தி அதனையே பின்பற்றினார். அதனால்தான் உத்திரப்பிரதேசம், பஞ்சாப், ஆந்திரா, தெலுங்கானா, மேற்கு வங்கம் போன்ற முக்கிய மாநிலங்களை இழந்தார். நான் ஏதோ பொதுவாகச் சொல்லுவதாக எண்ணக்கூடாது. ஒரு சில உதாரணங்கள் தருகிறேன்.
    1. ஜாஃபர் ஷெரீஃப் என்பவர், கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் நிஜலிங்கப்பாவின் கார் டிரைவர். தன் போட்டியாளர்களுக்கு இடம் கொடுத்துவிடக்கூடாது என்பதற்காக நிஜலிங்கப்பா, ஜாஃபர் ஷெரீஃபுக்கு எம்.பி. ஆகும் வாய்ப்பளித்தார். ஒரு சமயத்தில் ஜாஃபர் ஷெரீஃப், தான் கார் ஓட்டும்போது பின்பக்க சீட்டில் அமர்ந்திருந்த கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் பேசினதை இந்திராவிடம் போட்டுக்கொடுத்தார். அதற்குப் பரிசாக 80ல் மந்திரி பதவி பெற்று பிறகு அரசியலில் முன்னேறினார்.
    2. சம்பந்தமில்லாத பிரதீபா பாட்டீலை, அப்துல் கலாமை திரும்பவும் ஜனாதிபதியாக ஆக்கக்கூடாது என்பதற்காகவே ஜனாதிபதி பதவிக்கு முன்மொழிந்தார் சோனியா. அவர் செய்த இத்தகைய பல செயல்களை இங்கு எழுதலாம். விசுவாசிகளுக்கு மட்டுமே அரசியல் முன்னேற்றம் தருவது என்று செயல்பட்டதால், உண்மையாக கட்சி வளர்க்கும் ஆசையே யாருக்குமே இல்லாமல் போய்விட்டது. எல்லாரும் ஜால்ராவாக மாறி, grass root levelல் கட்சிப்பணியாற்ற விரும்புவதில்லை. மாநிலத்தில் பிரபலமான தலைவர்கள் தனிக்கட்சி கண்டனர். இப்படித்தான் தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, உத்திரப்பிரதேசம், மேற்குவங்கம், மகாராஷ்டிரா போன்றவற்றை காங்கிரஸ் இழந்தது. இன்று மாநிலக் கட்சி நடத்தி செல்வாக்குடன் இருப்பவர்கள் அனேகமாக முன்னாள் காங்கிரஸ் கட்சியைச்-இந்திரா காலத்தில், சேர்ந்தவர்கள்தாம்.

    அகமது படேலும், அத்தகைய விசுவாசிதான்.

  2. selvam சொல்கிறார்:

    மிகவும் நுணுக்கமாக எழுதியுள்ளீர்கள் புதியவன் அண்ணா . ஆனால் அவர்கள் எல்லாம் தலைமைக்கு கட்டுப்பட்டு விசுவாசியாகவே வாழ்ந்தார்கள். தலைமையை மீறிய தமிழ்நாட்டு அமாவாசையை பற்றியும் அதேபோல மத்திய அமாவாசையை பற்றியும் எழுதியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். இப்பொழுது மத்தியில் ஆளுபவர்களுக்கு விசுவாசியாக இல்லாமல் தன் முழு திறமையால் மாநில தலைவர்களாக இருப்பவர்களின் பட்டியலையும் சேர்த்து இருந்தால் உங்கள் பின்னூட்டம் முழுமை அடைந்து இருக்கும்

    • புதியவன் சொல்கிறார்:

      வெளிப்படையா எழுதுங்க. அப்போதான் என்னால சொல்லுவது இயலும். திறமையான மாநிலத் தலைவர்களை தேசியக் கட்சி ஊக்குவிக்கணும். ‘என் முகம்’ மட்டும் போதும் என்று இருக்கக்கூடாது. அதேபோல மாநிலக் கட்சித் தலைமையும், மாவட்டத்தில் செல்வாக்கு உள்ளவர்களை (தொண்டர்களிடையே) ஊக்குவிக்கணும். இங்க நான் சொல்வது அந்த அந்தக் கட்சி சம்பந்தப்பட்டதுதான்.

  3. selvam சொல்கிறார்:

    இந்திரா காந்தி காலத்திற்கு பின்பு, மத்தியில் ஆளும் கட்சி எதுவாக இருந்தாலும், அதன் தலைமை, மாநில தலைமையாக கார் ஓட்டுனரோ இல்லை வீட்டு வேலைக்காரனோ யாராக இருந்தாலும் தனது விசுவாசியாக பார்த்துதான் போடுவார்கள். அங்கு திறமைக்கு வேலையே இல்லை. இது காங்கிரஸ் கட்சியில் மட்டுமே நடப்பது அல்ல. இது வெற்றி கழிப்பில் இருப்பவர்களுக்கு வெளியில் தெரிவது இல்லை. நீங்கள் தீர்க்கதரிசி இயக்குனர் மணிவண்ணனின் அமைதி படை படம் பார்க்கவில்லை போல. அதனால்தான் விசுவாசி மாதிரி நடித்துவிட்டு பின்பு தலைமையை மீறிய அமாவாசைகளை பற்றி தெரிய வில்லை.

  4. மெய்ப்பொருள் சொல்கிறார்:

    இவர் கண்டிப்பாக அமாவாசை இல்லை

    திரு அகமத் படேல் 1977 ல் இருந்து டில்லி அரசியலில்
    இருந்திருக்கிறார் . அவர் மேல் யாரும் ஆவலாதி
    சொன்னதில்லை . நாற்பது ஆண்டுகளுக்கு மேல்
    ஆன போதும் எந்த சர்ச்சையிலும் சிக்கவில்லை .

    முதலில் இந்திரா , பிறகு ராஜீவ் , அப்புறம்
    சோனியா – இவர்கள் நம்பிக்கையை பெற்றவர் .
    அதற்கு விசுவாசமாக நடந்து கொண்டவர் .

    திருமதி சோனியா காந்திக்கு இந்தி தெரியாது .
    அவர் சார்பில் அகமத் பாய் பேசுவார் . அவர்
    போன் செய்தால் ” அம்மாவின் ஆணைக்கு இணங்க ”
    என எல்லோருக்கும் தெரியும் .

    இவர் இறந்தது காங்கிரஸ்க்கு குறிப்பாக
    அன்னை சோனியாவிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு .
    அநேகமாக சோனியா காந்தி பொறுப்பை விட்டு
    விலக நேரலாம் .

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.