நாடகமே உலகம் – பகுதி -3 (சபாபதி’யிலிருந்து சில நகைச்சுவை காட்சிகள் ….)

….
….

திரைப்படமாக வெற்றி பெற்ற பம்மல் சம்பந்த முதலியாரின் முழுநீள நகைச்சுவை நாடகம்

….

முந்தைய இடுகையின் தொடர்ச்சி…

தமிழில் வெளிவந்த முதல் முழுநீள காமெடி படம் சபாபதி.

டி.ஆர். ராமச்சந்திரனும், காளி.என்.ரத்தினமும், ஆர்.பத்மாவும்
முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தனர்.

“சபாபதி” கதை முதலில் பம்மல் சம்பந்த முதலியார்
அவர்களால் நாடகமாக எழுதி மேடையேற்றப்பட்டு,

பின்னர் அது ஏவிஎம் செட்டியார் அவர்களுக்கு மிகவும்
பிடித்துப் போனதால், அவரால் திரைப்படமாக எடுக்கப்பட்டு,
வெற்றிகரமாக ஓடிய ஒரு படம்.

ஏற்கெனவே தொடர்ந்து 3 தோல்விப்படங்களை தயாரித்து,
வெளியிட்டு, நொந்து போயிருந்த ஏவிஎம் செட்டியார் தமிழ்
திரைப்படத்துறையில் தைரியமாக தொடர்ந்து செயல்பட
நம்பிக்கையூட்டிய அளவிற்கு மிகப்பெரிய வெற்றியைப்
பெற்றது சபாபதி.

(சம்பந்த முதலியார் அதை ஆங்கிலத்தில் சாமுவேல் லவர்
உருவாக்கியிருந்த ஹாண்டி-ஆண்டி என்கிற நகைச்சுவை
பாத்திரத்தின் தூண்டுதலில் தமிழில் உருவாக்கி நாடகவடிவில்
கொண்டு வந்தார்… அதுவே பின்னர் திரைப்படமாகவும்
வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றது.)

1941-ஆம் ஆண்டு, சுமார் 40,000 ரூபாய் செலவில்
எடுக்கப்பட்ட படம் சபாபதி ….!!!

இந்தப்படத்தில் நடிக்க டி.ஆர்.ராமச்சந்திரனுக்கு கொடுக்கப்பட்ட
சம்பளம் வெறும் 35 ரூபாய்…!!!

திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த டி.ஆர்.ராமச்சந்திரன் 5-வது
வகுப்பு வரை மட்டுமே பள்ளியில் படித்தவர்.
அவர் தந்தை வசதியான காண்டிராக்டராக இருந்தாலும்,
பையனுக்கு பள்ளிக்குச்செல்ல விருப்பம் இல்லாமல்
இருந்ததைப் பார்த்து நீ என்ன தான் செய்ய விரும்புகிறாய்
என்று கேட்டிருக்கிறார்.

அப்போதே டி.ஆர்.ஆர். நன்றாகப் பாடுவார். தான் நாடகங்களில்
நடிக்க விரும்புவதாகவும், தன்னை பாய்ஸ் கம்பெனியில்
சேர்த்து விடும்படியும் கேட்டார். அதைத்தொடர்ந்து,
பையனின் விருப்பப்படியே அவனை ‘மதுரை பால மோஹன
ரஞ்சிய சபா’ என்கிற பாய்ஸ் கம்பெனியில் சேர்த்து விட்டார்.

நாடகத்தில், டி.ஆர்.ஆர். பெண் வேடங்களில் நடித்து வந்தார்.

ஒரு சமயம் கர்நாடகத்திலுள்ள கோலாருக்கு நாடகம் போடப்
போனபோது, பையன்களை அம்போ’வென்று கைவிட்டு விட்டு,
நாடக கம்பெனி முதலாளி ஓடிப்போய் விட்டார்.

கையில் ஊர் திரும்பக்கூட காசில்லாத பையன்கள்
தெருக்களில் பாட்டுப்பாடி, சாப்பாட்டிற்கும், ஊர் திரும்பவும்
காசு சம்பாதித்தனர்.

நந்தகுமார் என்கிற படத்தில் ஒரு காமெடி ரோல் மூலம்
திரையுலகில் நுழைந்தார் டி.ஆர்.ராமச்சந்திரன்.
சபாபதி அவருடைய 2-வது படம் தான். ஆனால்,
அது பெற்ற மாபெரும் வெற்றி, அடுத்த பத்தாண்டுகளுக்கு
டி.ஆர்.ராமச்சந்திரனுக்கு தமிழ்த் திரையுலகில் பெரியதொரு
கதாநாயகனுக்கான இடத்தைத் தந்தது.

இவ்வாறு நாடகத்திலிருந்து திரையுலகிற்கு வந்து
பெரும் வெற்றி பெற்று, கதாநாயகனாக உருவெடுத்த
நடிகர் என்று டி.ஆர். ராமச்சந்திரனை சொல்லலாம்.
அவருடைய வெற்றி, பல நாடக நடிகர்களுக்கு எதிர்காலத்தைப்
பற்றிய நல்ல நம்பிக்கையை ஊட்டியது.

அதோ போல், நாடக ஆசிரியரான பம்மல் சம்பந்த முதலியாருக்கும்
சபாபதி ஒரு வெற்றிகரமான திரைக்கதாசிரியர் தோற்றத்தை
உருவாக்கிக் கொடுத்தது. அதற்குப் பிற்பட்ட காலத்தில்,
சம்பந்த முதலியாரின் மேலும் சில நாடகங்கள், திரைப்படங்களாக
உருவெடுக்கவும் அது காரணமாக இருந்தது.

சபாபதி படத்திலிருந்து டி.ஆர்.ராமச்சந்திரன் – காளி என்.ரத்தினம்
பங்கேற்கும் சில நகைச்சுவை காட்சிகளை கீழே தந்திருக்கிறேன்…!!!

அவற்றைப் பார்த்து ரசிக்கும் முன்னர், வாசக நண்பர்கள்
தங்கள் ரசனையையும், மனோநிலையையும்
கொஞ்சம் அட்ஜஸ்ட்…(!) செய்துகொள்ள வேண்டும்.

இது 1941-ஆம் ஆண்டில் வாழ்ந்த சமூகத்திற்கானது…
அப்போதைய சமூகத்தில் இருந்த பேச்சு வழக்குகளையும்,
பழக்க வழக்கங்களையும் பிரதிபலிக்கும் காட்சிகள் இவை.
அப்போது இருந்த தொழில் நுட்ப வசதிகளை வைத்துக்கொண்டு
உருவாக்கப்பட்ட படம் இது -என்பதை மனதில் கொண்டு
பார்த்தால், இந்த காட்சிகள் ரசிக்கும்…!!!

வாசக நண்பர்களின் நேர வசதியை மனதில் வைத்து,
சில நிமிடங்களுக்கு மட்டுமான காட்சிகளை தந்திருக்கிறேன்.

( மேலும் படத்தை பார்க்க ஆர்வமும், நேரமும் உள்ள
நண்பர்களுக்கு லிங்க் -https://youtu.be/7DEBP5BjGzU )

….

….

….

.
——————————————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to நாடகமே உலகம் – பகுதி -3 (சபாபதி’யிலிருந்து சில நகைச்சுவை காட்சிகள் ….)

  1. புதியவன் சொல்கிறார்:

    இந்தப் படத்தை நான் பலமுறை என்னிடம் இருந்த டி.வி.டியில் பார்த்திருக்கிறேன். அவங்க பேச்சுத் தமிழும், சென்னை முதலியார் சமூக பேச்சுவழக்காக இருக்கும். சில நகைச்சுவைகள் கொஞ்சம் கடித்தாலும், அந்தக் காலத்தில் ரொம்பவே ஹிட்டான நகைச்சுவைகள். படத்தையும் கொஞ்சம் முற்போக்கு எண்ணத்தில் எடுத்திருப்பார் (அல்லது அந்த சமூக பழக்கவழக்கங்களாக இருக்கும்). பெண் என்பவள் படித்தவள், ஆணை நெறிப்படுத்துபவள் என்பது போன்று.

    //நாடக ஆசிரியரான பம்மல் சம்பந்த முதலியாருக்கும் சபாபதி ஒரு வெற்றிகரமான திரைக்கதாசிரியர்// – சபாபதிக்கு முன்பும் சம்பந்த முதலியாரின் நாடகங்கள்/கதைகள் படமாக்கப்பட்டன. சபாபதிதான் மிகப் பெரிய வெற்றியினைப் பெற்றது.

    இந்த இடுகையைப் படிக்கும்போது, தயாரிப்பாளர்கள் கையில் இருந்த திரையுலகம் எப்படி நடிகர்கள் கைக்குச் சென்றது என்ற நினைவு எனக்கு வருகிறது. நான் முதல் போடுகிறேன், என் பணம், அதனால் அது எப்படி சம்பாதிக்கணும் என்று எனக்குத் தெரியும் என்றிருந்த தயாரிப்பாளர், நல்ல கதை, நல்ல டைரக்டர், கதைக்கேற்ற நடிகர்கள் என்று தேர்ந்தெடுத்தனர். சிவாஜி அவர்களின் காலத்திலும், கதைக்குத்தான் முக்கியத்துவம். எம்ஜிஆர், கதையின் பகுதிகளில் தலையிட்டு, தன் இமேஜ் கலையாமல் பார்த்துக்கொண்டார். தயாரிப்பாளர்களும், போட்ட முதலைவிட அதிகமாக நிச்சயம் சம்பாதிக்க முடியும் என்பதால் எம்ஜிஆர் செய்வதற்கெல்லாம் மறுபேச்சு பேசாமல், அவரிஷ்டப்படியே எல்லாவற்றையும் செய்யவைத்தனர் (சின்னவர் சொன்னா, கேள்வி கேட்காமல் அதனை நிறைவேற்றினர். உதாரணமா, சாதாரண ரோலில் நடித்த ஒரு ஸ்டண்ட் டூப்பிற்கு 2000 ரூபாய் கொடுத்திடுங்க என்று அவர் சொன்னார் என்றால், உடனே செட்டில் செய்தனர்). தயாரிப்பில் ரொம்ப கறாராக இருந்தவர்கள் முக்தா ஸ்ரீநிவாசன். இதுதான் சம்பளம், இதுதான் ஷெடியூல் என்று கறாராக ஒரு மாறுதலும் இல்லாமல் படமாக்கி, ஓரளவு லாபம் சம்பாதித்தனர். இந்த இருவருக்குப் பிறகான திரையுலகம், நடிகர்களை நம்ப ஆரம்பித்ததால், எல்லாமே கந்தர்கோளமாக இன்றைய நிலைக்கு சூதாட்டம் போல ஆகிவிட்டது. 70கள் வரை தயாரிப்பாளர் செட்டுக்குள் வந்தால் எல்லோரும் எழுந்து நிற்கும் சூழ்நிலை போய், இப்போ, தயாரிப்பாளர், செட்டுக்கு வருவதற்கே, கதாநாயகன் என்ன நினைப்பார், டைரக்டர் கோபித்துக்கொள்வாரோ என்ற நிலையில் திரையுலகம் பயணிக்கிறது. எல்லாவற்றையும் கதாநாயகன் அல்லது ஸ்டார் டைரக்டர் முடிவு செய்யும் நிலைமை. 70கள் வரை இருந்த திரையுலக தயாரிப்பாளர்கள் பற்றி நிறைய எழுதலாம், ஜெய்சங்கரைப் போன்ற சில நடிகர்கள் பற்றியும் எழுதலாம். 90களுக்குப் பிறகு திரையுலகில் எஸ்டாபிளிஸ்ட் தயாரிப்பாளர்கள், படம் தயாரிக்கும் சூழ்நிலையே இல்லை. இதனைக் கண்டு அஞ்சித்தான் ஏ.வி.எம், தயாரிப்புகளை நிறுத்திக்கொண்டது.

    கொஞ்சம் யோசித்தால், தயாரிப்பாளர், டைரக்டர், நடிகர், இசையமைப்பாளர் என்று நாம் பார்த்து படம் பார்க்க ஆரம்பித்தது, இப்போது, இந்த நடிகரா, நடிகையா, டைரக்டரா என்று மட்டும்தான் பார்த்து படம் பார்க்கிறோம். தயாரிப்பாளர்/நிறுவனத்தைச் சிறிதும் சட்டை செய்வதில்லை என்று ஆகிவிட்டது.

  2. பிங்குபாக்: ஷேக்ஸ்பியருக்கும் மனோகராவிற்கும் என்ன சம்பந்தம்…? ( நாடகமே உலகம் – பகுதி-4 ) | வி ம ரி ச ன ம் – க

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.