இருக்குமா… இருக்காதா…? ஒரு இரண்டாங்கெட்டான் தகவல்…!!!….
….

….

இதை எவ்வளவு தூரம் நம்பலாம் என்பது குறித்து
என்னால் எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை; 2 நாட்களுக்கு
முன்னர் திடீரென்று திமுக தலைவர் ஸ்டாலின், கவர்னரை
சந்திக்கப் போனார்.

வெளியே வந்தபிறகு, செய்தியாளர்களிடையே,
ராஜீவ் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட அந்த 7 பேரை விடுவிக்க
கவர்னர் தனது ஒப்புதலை அளிக்க வேண்டும் என்று
வலியுறுத்துவதற்காக கவர்னரை சந்திக்கச் சென்றதாக சொன்னார்.
கூடவே வேறு சில விஷயங்களைப் பற்றியும் பேசியதாகவும், மற்றவற்றைப்பற்றி செய்தியாளர்களிடம் சொல்வதற்கு
ஒன்றும் இல்லை என்றும் சொல்லி விட்டார்.

இது குறித்து, காங்கிரஸ் வட்டாரங்களில் ஒரு பலமான செய்தி அடிபடுகிறது… திமுக கூட்டணியிலிருந்து காங்கிரசை வெளியேற்ற வேண்டும் என்று பாஜக தலைமை கவர்னர் மூலமாக வலியுறுத்துகிறதாம். அண்மையில் பாஜக தலைவர் சென்னை வந்து சென்ற பிறகு கவர்னர் மூலம் இந்த தகவல் சொல்லப்பட்டதாம்.

உண்மையில், இந்த ஸ்டாலின்+கவர்னர் சந்திப்பே ஸ்டாலின்
ஏற்பாட்டால் நடந்ததல்ல; கவர்னர் தரப்பிலிருந்து தன்னை
நேரில் வந்து சந்திக்கும்படி தகவல் சென்றதாகவும், அதையொட்டி,
கவர்னர் விருப்பப்படியே ஸ்டாலின் அவரை சந்தித்ததாகவும்
அந்த செய்திகள் சொல்கின்றன. அஜெண்டாவாக கூட,
வேண்டுமென்றே காங்கிரசுக்கு பிடிக்காத அந்த 7 பேர் ரிலீஸ்
வலியுறுத்தல் அதற்காகவே சேர்க்கப்பட்டு, செய்தியாளர்
சந்திப்பிலும் சொல்லப்பட்டதாம்.

காங்கிரசை திமுக கூட்டணியிலிருந்து கழற்றி விடாவிட்டால் –
தேர்தல் நேரத்தில், திமுக பல சங்கடங்களை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என்றும் சொல்லப்பட்டதாம். காங்கிரஸை
கழற்றி விட்டு விட்டால் – தேர்தல் வரை திமுகவுக்கு மத்திய தரப்பிலிருந்து தொல்லை ஏதும் இருக்காது என்றும் சொல்லப்பட்டிருக்கிறதாம்….

இந்த யோசனையை (…? ) ஏற்பது தனக்கும் நல்லது என்று ஸ்டாலினுக்கும் தோன்றி இருக்கிறது. எனவே, எதாவது ஒரு
வடிவில், ஏதேனும் ஒரு காரணத்தை முன் வைத்து
கூட்டணியிலிருந்து காங்கிரஸ் வெளியேற வேண்டிய சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும்…!!!

இதற்கெல்லாம் வாய்ப்பு கொடுப்பதற்காகத் தானோ கமல் ஹாசன் கட்சி ஆரம்பித்து காத்திருக்கிறார் ……??? .

————-

இந்த மாதிரி – வந்ததாம், போனதாம், சொல்லப்பட்டதாம்…
செய்திகளை எல்லாம் நான் சீரியசாக எடுத்துக்கொள்வதில்லை;
ஆனால், இந்த செய்திகளின் அடிப்படையில் ஒரு
பலமான உண்மை பொதிந்திருக்கிறது; அதை நான் ஏற்கிறேன்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் நண்பர்களே…?


——————————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

12 Responses to இருக்குமா… இருக்காதா…? ஒரு இரண்டாங்கெட்டான் தகவல்…!!!

 1. புதியவன் சொல்கிறார்:

  பொதுவா ‘ஆமாம் சாமி’ போடும் காங்கிரஸ் தலைவர் (யாராக இருந்தாலும், திமுகவுடன் கூட்டணி இருக்கும்போது) இப்போது அப்படி இருப்பதுபோலத் தெரியவில்லை. 1. தினேஷ் குண்டுராவ் தமிழகப் பொறுப்பாளர் என்ற முறையில் திமுகவை எரிச்சலூட்டும் வகையில் பேசுகிறார். என்னடா பழைய கெத்துல பேசறாரே என்று தோன்றியது. பிறகு அதற்கு விளக்கம் கொடுத்து அமைதிப்படுத்துகின்றனர். 2. தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி, 7 பேர் விடுதலையை கடுமையாக எதிர்க்கிறார். இது நிச்சயமாக மேலிடத்தின் நோட் இல்லாமல் நடக்க வாய்ப்பில்லை. 3. விவசாயிகளுக்காக அழகிரி, காங்கிரஸ் பேரணி நடத்துகிறார். . நிறைய ஆட்களைத் திரட்டுகிறார். இதுமாதிரி நடந்ததே இல்லை. 4. தினேஷ் குண்டுராவ், பீகார் தேர்தல் முடிவுக்கு அடுத்து, திமுக பார்த்து, எதைக் கொடுத்தாலும் வாங்கிக்கொள்வோம் ஆண்டான் என்கிறார். 5. அழகிரி, கெளரவமான சீட்டுகளைப் பெறுவோம் என்கிறார்.

  பாராளுமன்றத் தேர்தல் சமயத்தில், ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்து, பெரிய உந்துதலாக இருந்தார் ஸ்டாலின். இப்போ உள்ள நிலைமை, ராகுலுக்கு அவ்வளவு நன்றாக இல்லை. ஆதரவுத் தளம் குறைந்துகொண்டே வருகிறது. மூத்த தலைவர்கள், பழைய காங்கிரஸ் மாதிரி தலைமைக்கு அடிமையாக இருக்கத் தயாராக இல்லை (அதற்குக் காரணம் ராகுல் காந்தியிடம் ஸ்டஃப் இல்லை என்பதுதான் என நான் உணர்கிறேன்). ராகுல் காந்தியோ (காங்கிரஸ் தலைமையோ) பிரச்சனைகளை சரி செய்ய எண்ணாமல், தலைவரைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் கொண்ட 1500+ பேரில் ஜால்ராக்களைப் போட்டு நிரப்புகிறார், அதாவது working towards keeping the family grip on Congress. பிரதான மாநிலங்களில், காங்கிரஸ் மட்டும்தான் எதிர்கட்சி அல்லது ஆளும்கட்சி என்பது மெதுமெதுவாக கூட்டணி ஆட்சி என்பதை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது. Already மாநிலக் கட்சிகள்தான் ஆளும்/எதிர் கட்சி என்ற நிலையில் நிறைய மாநிலங்கள் இருக்கின்றன. காங்கிரஸ் 150 எம்.பி. சீட்டுகள் பெறுவதற்கே இப்போதைக்கு வாய்ப்பு இல்லாத நிலைமைதான் இருக்கிறது (அடுத்த பார்லிமெண்ட் எலெக்‌ஷனில்). ஸ்டாலின், தான் சுலபமாக வெற்றி பெறுவோம் என்பதை உணர்ந்திருக்கிறார். மத்திய அரசு, கவர்னர் இவர்களுடன் அவர் ஆட்சி நடத்தியாக வேண்டும், குறைந்த பட்சம் அடுத்த 3-4 ஆண்டுகளுக்கு. இதெல்லாம் அவர் மனதில் ஓடத்தான் செய்யும்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   புதியவன்,

   ஒரு முக்கியமான பாயிண்டை
   விட்டு விட்டீர்களே..

   கொடுக்கப்பட்ட வாக்குறுதி –
   ” தேர்தல் முடியும் வரை
   திமுக பிரமுகர்கள் மீது ரெய்டு
   இருக்காது….!!!”

   இது தானே மிக முக்கியமான
   காரணமாக இருக்கும்…?

   .
   வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

  • புதியவன் சொல்கிறார்:

   சார்… அந்த டாப்பிக்குக்குள் நான் போகலை. எப்போதுமே போர் (அரசியல்) என்பதில், நட்பைப் பிளப்பது, ஆசை காட்டுவது, மோசம் செய்வது என்பதெல்லாம் மோசமான தந்திரத்தில் வரும். அரசியல் கூட்டணியில் விசுவாசம் இல்லை என்றால் அது நீண்டகாலத்தில் பலனளிக்காது. என்னுடைய எண்ணம் பாஜக விசுவாசமான கட்சி இல்லை.

   1. பாஜக வேறு கூட்டணி அமைத்து, தங்கள் அரசின்மீது நெருக்கடி கொடுத்து தேர்தல் சமயத்தில் நிர்பந்தங்களுக்கு ஆக்கிவிடக்கூடாது என்பதற்காகவும், ‘சமீப கால அமைச்சர்கள் பேச்சு சரியான திசையில் செல்லவில்லை, எங்களோட கூட்டணி உண்டு என்றால் அதை வெளிப்படையாக அறிவிக்கணும்’ என்று அழுத்தம் கொடுக்கப்பட்டதால், பாஜகவி நம்பி, உடன்பிறந்தே கொல்லும் வியாதி தன்னுடன் இருப்பதையும் எண்ணி, ஈபிஎஸ் கூட்டணியை அறிவித்துவிட்டார் என்றே நான் நம்புகிறேன். 2 சதவிகித வாக்குகள் கூட இல்லாத கட்சியை த்ராட்டில் விட்டிருக்கவேண்டும் என்பது என் எண்ணம். அதிமுகவின் வாக்கு வங்கியான கோவை பகுதிகளில் பாஜகவுக்கு தொகுதி கொடுத்து, அதிமுகவினால் பாஜக தன் வாக்கு வங்கியை அதிகரிக்க இடம் கொடுத்தாகிவிட்டது. இருந்தாலும் நான் ஈபிஎஸ் சாதுர்யம் மிக்கவர், அதிமுகவுக்கு விசுவாசமானவர் என்று நம்புகிறேன்.

   2. பாஜகவுக்கு நிச்சயம் தெரியும் திமுகதான் வெல்லப்போகிறது என்று. அதனால் ‘காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கும் மாநிலங்கள்’ என்ற பட்டியலில் தமிழ்நாடும் சேரக்கூடாது என்பதற்காகத்தான் காங்கிரஸை கழற்றிவிடும்படி பாஜக சொல்ல வாய்ப்பு இருக்கிறது. ஏற்கனவே ராகுல் காந்திக்கு திமுக பிடிக்காது, அரசியல் நிர்பந்தங்களுக்காகத்தான் நண்பனாக ஆகியிருக்கிறார். திமுக என் சஜஷன் கேட்டால், காங்கிரசை கழற்றிவிடுவது நல்லதல்ல. எத்தனையோ ஊழல்கள், சுருட்டல்கள் செய்து வளர்ந்த கட்சியை இப்போது பாஜக ரெய்டு காரணமாக மிரட்டி மக்களை நம்பவைக்க வாய்ப்பே கிடையாது. கையும் களவுமாக எந்தத் தீர்ப்பும் வந்தாலும், திமுகவுக்கு வாக்களிக்கும் முடிவில் இருப்பவர்கள், பாஜக செய்த தந்திரத்தால்தான் திமுகவை குற்றம் சாட்டுகின்றனர் என்றே நம்புவார்கள்/பேசுவார்கள்.

   பாஜகவின் எண்ணம், அதிமுகவை அழித்துவிட்டு தான் வளர்வது.
   திமுகவின் வாக்கு வங்கி – தீவிர நம்பிக்கைகள் உடைய சிறுபான்மையினர் (முஸ்லீம், கிறித்துவர்கள்), கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள், ரெளடித்தனத்தால் வளர்ந்தவர்கள், பழைய கொள்கைவாதிகள்
   அதிமுக வாக்குவங்கி – மென்மைப் போக்குள்ள இந்துக்கள், மற்ற மதத்தினர்.
   காங்கிரஸ் வாக்குவங்கி – சுதந்திரப் போராட்டம் போன்றவற்றை இன்னும் மறக்காதவர்கள், சுய லாபத்திற்காக ஆதரிக்கும் சிறுபான்மையினர்.
   பாஜக வாக்குவங்கி- தீவிர இந்துத்துவம் மனதில் கொண்ட இந்துக்கள். நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், பிராமணர்கள் அல்லர், இந்துச் சமூகத்தை பாஜக ஒருங்கிணைக்கிறது.
   மற்ற கட்சிகள் எல்லாம் திமுகவின் சமூகத்திற்குத் தீய கொள்கைகளைக் கொண்டவைதான். அவைகள் இருப்பதும் ஒன்று, திமுகவோடு கலந்துவிடுவதும் ஒன்று.

   இதில் தமிழகத்தைப் பொறுத்த வரையில் நாம், அதிமுக (அல்லது அந்த மாதிரி மனப்போக்குள்ள பெரிய கட்சியை) மட்டும்தான் வளர்க்கணும். இதுதான் தமிழகத்துக்கு நல்லது. திமுக எப்போதுமே பொதுச் சமூகத்தின் எதிரி. திமுகவும் பாஜகவும் மதத்தை வைத்தும் கடவுளை வைத்தும் மக்களைப் பிரிப்பவர்கள். அவர்களுக்கு வாக்களிப்பது தமிழகத்தின் நலனுக்குக் கேடு.

 2. Vicky சொல்கிறார்:

  காங்கிரஸ் திமுகவுடன் கூட்டணி சேர்ந்து சொற்ப இடங்களில் வெற்றி பெற்றால் பாஜகவுக்கு என்ன நழ்டம்? இந்த கூட்டணியை தொடர விட்டால் காங்கிரஸ் தொகுதி பங்கீட்டால் திமுகவுக்கு சீட் குறையலாம். தேர்தலுக்கு பிறகு தனி பெரும்பான்மை கிடைக்காமல் போகலாம். மத்தியில் ஆட்சியில் இருப்பதால் அதுதான் பாஜகவுக்கு நன்மை.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   Vicky,

   பாஜக-வின் முக்கிய நோக்கம்
   காங்கிரசின் பலத்தை உடைப்பதே.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 3. R.Gopalakrishnan சொல்கிறார்:

  Sir, I have a long time doubt. In these sort of one to one high profile meeting, will there be anybody
  accompanying with the party head for translation into a known common language. will they
  understand each other’s accent and continue the conversation.

 4. R.Gopalakrishnan சொல்கிறார்:

  Sir,
  I have a long time doubt in which language they will talk in this type of one on one high profile meeting.
  Will anybody accompany the political head as a translator. Whether they can follow each others accent.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   கோபாலகிருஷ்ணன்,

   இந்த மாதிரி தலைவர்கள் எல்லாராலும்
   அரைகுறை ஆங்கிலம் (பட்லர் இங்கிலீஷ்..)
   பேசக்கூடியவர்கள். எனவே எந்த வித
   inferiority complex -உம் இல்லாமல்
   ஓட்டை இங்கிலீஷில் வெட்கமோ, தயக்கமோ
   இன்றி சகஜமாக பேசிக்கொள்ளலாம். அவர்கள்
   பேச்சைத்தான் வேறு யாரும் கவனிக்கப்
   போவதில்லையே…!

   ஸ்டாலின், லாலு பிரசாத் போன்றவர்கள்
   ஆங்கிலம் பேசிப் பார்த்ததில்லையே
   நீங்கள்…எனக்கு அந்த அனுபவம் உண்டு..!!!

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 5. selvam சொல்கிறார்:

  திமுக நல்ல கட்சியா? தீய கட்சியா? ஸ்டாலின் நல்லவரா ? கெட்டவரா ? என்பதையும் தாண்டி இந்த சம்பவம் உண்மையானதாக இருக்குமேயானால் இப்படி மிரட்டுவது ஜனநாயகத்திற்கு நல்லதா ? அல்லது கெட்டதா ? KM ஐயா எனக்காக கொஞ்சம் விளக்குங்கள்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   selvam,

   ” இப்படி மிரட்டுவது ஜனநாயகத்திற்கு நல்லதா ?
   அல்லது கெட்டதா ? ”

   – இந்த மாதிரி ஒரு சந்தேகமே
   உங்களுக்கு வரக்கூடாதே.

   எந்த விதத்திலும் நல்லதல்ல.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 6. மெய்ப்பொருள் சொல்கிறார்:

  பா ஜ க மிரட் டக் கூடும் – செய்ய கூடியவர்கள்தான் .

  தேர்தல் முடியும் வரை தி மு க வை மிரட்ட மாட்டோம்
  என ஏன் சொல்லவேண்டும் ?
  அப்ப தேர்தல் முடிந்த பிறகு மிரட்டுவார்களா ?

  தமிழக காங்கிரஸை பார்த்து பா ஜ க பயப்படுகிறதா ?
  அழகிரி அதிரடி – அமித் ஷா கதறல் – இது மாதிரி
  எதுவும் செய்தி வந்ததா ?

  இது யாரோ கட்டி விட்ட கதையாகத்தான் இருக்கும் .

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   மெய்ப்பொருள்,

   // தேர்தல் முடியும் வரை தி மு க வை
   மிரட்ட மாட்டோம் என ஏன் சொல்லவேண்டும் ?
   அப்ப தேர்தல் முடிந்த பிறகு மிரட்டுவார்களா ? //

   இப்போது யாருடனும் நடத்தப்படும் பேரமும்
   சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தானே…?

   // தமிழக காங்கிரஸை பார்த்து
   பா ஜ க பயப்படுகிறதா ? //

   அகில இந்திய காங்கிரசைக் கண்டு கூட
   பாஜக பயப்படாது; பயப்படவும் இல்லை.
   அப்புறம் அழகிரியை பார்த்தா பயப்படும் ..?

   முடிந்தவரை காங்கிரசை தனிமைப்படுத்த
   வேண்டும். அதன் ஆதரவாளர்களை,
   கூட்டணி கட்சிகளின் எண்ணிக்கையை
   குறைக்க வேண்டும்… இது தான்
   பாஜக-வின் நோக்கம்.
   நடத்தப்படும் பேரங்களின் அடிப்படையே
   இது தான்.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.