….
….
….
….
” நாடகமே உலகம்…
நாமெல்லாரும் அதில் நடிகர்கள்”
– இந்த புகழ்பெற்ற வார்த்தைகளைச் சொன்னவர் பிரபல
ஆங்கில இலக்கியகர்த்தா-நாடகாசிரியர் ஷேக்ஸ்பியர்…
” All the world’s a stage,
And all the men and women merely players;
They have their exits and their entrances;
And one man in his time plays many parts,”
– “As You Like It “- WILLIAM SHAKESPEARE
—–
இந்த விமரிசனம் தளத்தில் நாம் இதுவரை பார்க்காத
ஒரு பகுதி- நாடக உலகம்.
இங்கே தமிழ் நாட்டின் நாடகத்துறையைப்பற்றி கொஞ்சம்
விவரமாகவும், முடிந்த வரை சுவாரஸ்யமாகவும்
எழுதவேண்டும் என்பதற்காக கொஞ்சம் விசேஷ முயற்சிகளை மேற்கொண்டு, பல விவரங்களைச் சேகரித்திருக்கிறேன்.
இதையொட்டி, இந்த தலைப்பையொட்டிய செய்திகள்
நிறையவற்றை வலைத்தளத்தில் தேடிப்படிக்கக்கூடிய வாய்ப்பு
கிடைத்தது.
நான் படித்தவற்றிலிருந்து, முடிந்தவரை சுவாரஸ்யமானவற்றை
வடிகட்டியெடுத்து, என் எழுத்தில் ஒரு இடுகைத் தொடராக
இங்கே தர விரும்புகிறேன்.
பல வலைத்தளங்களின் உதவியோடு தான் நான் இவற்றை
சேகரிக்க முடிந்தது. சம்பந்தப்பட்ட வலைத்தளங்களுக்கு
இந்த வலைத்தளத்தின் சார்பாக என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மஹாபாரத, ராமாயண காலங்களில் இருந்தே
நமக்கு அறிமுகமானது தான் தெருக்கூத்து.
அதற்கு அடுத்த நிலை கிராமங்களில் நெடுங்காலமாக
கோவில் திருவிழாக்களில் இரவு முழுவதும்
நடந்துகொண்டிருந்த புராண, இதிகாச நாடகங்கள்…
பின்னர், 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் தமிழ்நாட்டில்
வடிவெடுத்தது தொழில்முறை நாடகங்கள்…
சர்க்கஸ் கம்பெனிகளைப் போல் ஊர் ஊராகச் சென்று சில
மாதங்கள் வரை அங்கேயே தங்கியிருந்து நாடகங்களை
நடத்திவந்த தனி முதலாளிகளால் நடத்திவரப்பட்ட
பாய்ஸ் கம்பெனிகள்…
பெரும்பாலும் சிறு வயதுப் பிள்ளைகளைக் கொண்டு
8 வயது முதல் 15 வயது வரையிலான, (வறுமையான
குடும்பங்களைச் சேர்ந்த பையன்கள்) கம்பெனி வாத்தியார்
என்று நடிப்பு, வசனம் பேச சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர்கள்
உதவியோடு நாடகங்கள் நடத்தப்பட்டன.
இந்த பாய்ஸ் கம்பெனி நாடகங்கள் பெரும்பாலும் மக்கள்
ஏற்கெனவே ஓரளவு அறிந்திருந்த புராணக் கதைகளையே
நாடகங்களாக அரங்கேற்றி வந்தன. இங்கே நடிப்பவர்களுக்கு
முகபாவங்களோ, முகலட்சணமோ முக்கியமில்லை;
மனப்பாடம் பண்ண வேண்டும், சத்தமாக வசனங்கள்
பேச வேண்டும் (மைக் கிடையாது….)
நன்றாகப் பாடத்தெரிய வேண்டும்.
14-15 வயதில் பையன்களுக்கு மகரக்கட்டு -தொண்டைக்கட்டு –
உடைந்து, குரல் மாறி விட்டால் – வாய்ப்புகள் பறிபோய்விடும்.
இதையொட்டி, புகழ்பெற்ற சில நடிகர்கள் நடத்திவந்த
ஸ்பெஷல் நாடகங்கள் உருவாயின…
இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய ஒரு சிறந்த கலை வடிவம்
ஸ்பெஷல் நாடகம்.
சங்கரதாஸ் சுவாமிகள் நாடகக் குழுவான – சமரச சன்மார்க்க
நாடக சபா, மதுரை ஸ்ரீ பால மீன ரஞ்சனி சங்கீத சபா,
(எம்.கே.ராதா அவர்களின் தந்தை) கந்தசாமி
முதலியாரின் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி,
ஸ்ரீ மங்கள பாலகான சபா, ஆலந்தூர் இந்து டிராமா கம்பெனி,
ஆரியகான சபா, தேவி நாடக சபா, டிகேஎஸ் சகோதரர்களின்
நாடக கம்பெனி போன்ற குழுக்களால் தமிழகத்தில் நாடகக்கலை
புத்துயிர் பெற்றது.
அந்தந்த பாய்ஸ் கம்பெனி குழுக்களில் பயிற்சி பெற்ற
பிரபலமான நாடக நடிகர்கள் சேர்ந்து ஸ்பெஷல் நாடக வடிவத்தை
உருவாக்கினார்கள். பின்பு நடிகர் நடிகையர்கள் ஒருவரோடு
ஒருவர் வெவ்வேறு இடங்களில் மாறி மாறி இணைந்து நடிப்பது
இத்தகைய நாடகங்களின் விசேஷ இயல்பானது.
குறிப்பிட்ட ஊரில் நாடகம் நடத்துவதற்கு அவ்வூர் மக்கள்
எந்தெந்த நடிகர்களை விரும்பி அழைக்கிறார்களோ அவர்களாக
வந்து நாடகத்தில் நடிப்பார்கள். நாடகத்திற்கென்று தனியாக
ஒத்திகை ஏதும் நடைபெறாது.
கலைஞர்கள் பாடல்களையும் வசனங்களையும் சூழ்நிலைக்கேற்ப நிகழ்த்துவார்கள். நடிகர்கள் எல்லோருக்கும் எல்லா நாடகங்களும் தெரிந்திருந்தால் தான் ஸ்பெஷல் நாடகத்தில் நடிக்க முடியும்.
அவரவர்கள் கற்ற வித்தையின் மூலம் ஒருவரை ஒருவர்
வெல்லும் நோக்கத்தில் நிகழ்ச்சியைப் பேசியும் பாடியும்
நிகழ்த்துவார்கள். அவை அவரவர் திறமையை முழு அளவில்
வெளிப்படுத்தக்கூடிய போட்டி நாடகங்களாகவே இருக்கும்…!
….
முக்கிய தகுதி – நன்றாக பாடத்தெரிந்திருக்க வேண்டும்.
கீழே சாம்பிளுக்கு –
புகழ்பெற்ற நாடக நடிகர் எஸ்.ஜி.கிட்டப்பாவின் பாடல்கள் இரண்டு –
—————–
…..
….
நகர்ப்புறங்களைவிட கிராமப்புறங்களில் ஸ்பெஷல் நாடகங்களுக்கு
மிகுந்த வரவேற்பும், செல்வாக்கும் உண்டு. மற்ற
நாடகங்களைப்போல் அல்லாமல் ஸ்பெஷல் நாடகங்களில்
சீன், செட்டுகள் அதிகம் இடம் பெறுவதில்லை.
முகப்புத் திரை (backdrops ), வீட்டுத்திரை, வீதித்திரை,
காடுதிரை என்று, பொதுவான திரைகளே அதுவும் மிகக்குறைந்த அளவில் பயன்படுத்தப்பட்டு வந்தன.
மக்கள் எல்லாருக்கும் தெரிந்த கதைகளே ஸ்பெஷல்
நாடகங்களில் இடம் பெறும்…வள்ளித் திருமணம், அரிச்சந்திரா, சத்தியவான் சாவித்திரி, கோவலன் கதை, அல்லி அரசாணி
மாலை, பவளக்கொடி போன்ற கதைகள் மக்களிடையே
செல்வாக்கு பெற்றவை. பாடல்களும், வசனங்களுமாக
இரவு முழுவதும் இத்தகைய நாடகங்கள் நடைபெறும்.
1930-ல் பேசும் படங்கள் அறிமுகமாகும் வரை, பாய்ஸ்
கம்பெனி நாடகங்கள் தான் தமிழக மக்களின் முக்கிய பொழுது
போக்காக இருந்தது.
தொடரும் …
.
————————————————————————————————————————————-
பெரிய சப்ஜெக்டைத் தொட்டிருக்கீங்க. கிளைக் கதைகளுக்குள் நுழைவீங்களா இல்லை வெறும்ன நாடகக் கலைஞர்கள், ஜெனரேஷன் கேப்பில் பாதிக்கப்பட்டு, திரைப்படங்கள் வர ஆரம்பித்தவுடன் நலிவுற்றனர் என்பதோடு முடிப்பீங்களான்னு தெரியவில்லை.
எம்.கே.ராதா – எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது ஒரு மேடையில் இவர் காலைத் தொட்டுக் கும்பிட்டார். அப்போதுதான் பலருக்கு எம்.கே.ராதா என்பவர் யார், அவரது வரலாறு என்ன என்பது புரிந்தது. பாய்ஸ் கம்பெனி பற்றி எம்.ஆர்.ராதா அவர்களைப் பற்றிய புத்தகத்திலும், எஸ்.ஜி.கிட்டப்பா பற்றி நாமக்கல் கவிஞர் எழுதிய தன் வரலாற்றிலும் (இராமலிங்கம் பிள்ளை, எஸ்.ஜி.கிட்டப்பாவின் மூத்த அண்ணன்களிடம் பழகியது, அப்போ எஸ்.ஜி.கிட்டப்பா விளையாட்டுப் பிள்ளை, எப்படி டெவலப் ஆனார் என்பது பற்றி), எஸ்.ஜி.கிட்டப்ப்பா-கேபிஎஸ் அவர்களின் வாழ்க்கை பற்றி கேபிஎஸ் கடைசி காலத்தில் அவர் வாயால் சொன்னவற்றை ஒரு புத்தகத்தில் படித்தேன்.
What is interesting is (I am not sure whether the data is correct), 21 வயது எஸ்.ஜி.கிட்டப்பா, கேபி சுந்தராம்பாளை மணந்துகொண்டதும், அதன் பிறகு 6 வருடங்களிலேயே மறைந்ததும்தான். குடிப்பழக்கம் காவு கொண்ட கலைஞர்களில் அவரும் ஒருவர்.
மகரக்கட்டு வரும்வரை ஸ்ரீபார்ட் போடுவதற்கு பையன்களை உபயோகப்படுத்துவார்கள். அதன் பிறகு, குரல் அடல்ட் குரல் ஆனபிறகுதான் பிற வேஷங்கள் கொடுக்க முடியும். நமக்குத் தெரிந்த வி.கே.ராமசாமி, இந்த மாதிரி நாடகக் குழுவில் தன் 20ம் வயதில், 60 வயது கிழவனாக நடித்தார். அந்த நாடகம் ஏ.வி.எம்.ஆல் ‘நாம் இருவர்’ என்ற பெயரில் படமாக்கப்பட்டபோது, அதே கிழவர்தான் அந்த பார்ட் நடிக்கவேண்டும் என்று ஏ.வி.எம் விரும்பி, அதைச் செய்தது தன் முன்னால் இருக்கும் 21 வயதுப் பையன் என்பதை அவரால் நம்பவே முடியவில்லையாம்….. Sorry… எந்தப் பாதையில் உங்கள் பகுதிகள் பயணிக்கப் போகிறது என்பதைத் தெரிந்துகொள்வதற்குமுன் இதனை எழுதியதற்கு.
புதியவன்,
கவலையே வேண்டாம்…
உங்கள் நினைவிற்கு வருவதையெல்லாம்,
தெரிய வந்ததையெல்லாம், தாராளமாக
நீங்கள் இங்கே எழுதலாம்…
நான் ஜஸ்ட் ஒரு அவுட்லைன் மட்டும்
தான் யோசித்து வைத்திருக்கிறேன்.
அவ்வப்போது எழுதும்போது தான்
அது என்ன வடிவம் பெறுகிறது என்பது
உறுதியாகும். இந்த இடுகைத் தொடர்
நிறைய விஷயங்களைக் உள்ளடக்கியதாக
இருக்குமென்று மட்டும் சொல்ல முடியும்.
இந்த தளமே ஒரு அவியல் மாதிரி தான்.
நிறைய சமாச்சாரங்கள் சேர வேண்டும்.
அதிகம் சேரச்சேர சுவை அதிகமாகும்.
எனவே, உங்கள் பங்கிற்கு நீங்களும்
சுவையைக் கூட்டலாம்.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
//What is interesting is (I am not sure whether the data is correct), 21 வயது எஸ்.ஜி.கிட்டப்பா, கேபி சுந்தராம்பாளை மணந்துகொண்டதும், அதன் பிறகு 6 வருடங்களிலேயே மறைந்ததும்தான்//
கேபிஎஸ் சொன்னது, என்னை பாட்டினால் வெல்ல முடியாதுன்னு தெரிஞ்சுக்கிட்டு இந்த ஐயரு என்னைக் கல்யாணம் செஞ்சிக்கிட்டாரு என்று. இதைச் சொன்னது, அவர் மறைவதற்குச் சில மாதங்களுக்கு முன்பு. கேபிஎஸ்தான் தமிழ் திரையுலகில் லட்ச ரூபாய் வாங்கிய முதல் நடிகர் actor) (என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும். அவரது கடைசி காலத்திலும் எந்த உறவினராலும் அவருக்குப் பிரயோசனம் இல்லை. தனிமையில்தான் தங்கி, செய்வினை வைத்த உறவினர்களால் கொஞ்சம் கஷ்டப்பட்டு மறைந்தார்.
ஒரே ப்ரொஃபஷனில் இரு சக்சஸ்ஃபுல் ஆட்கள் (கணவன் மனைவி) இருப்பது ரொம்பக் கடினம். அதிலும் மனைவியும் தன்னைவிட புகழ் பெற ஆரம்பித்தால் அது பெரிய பிரச்சனைகளில் கொண்டுபோய்விடும் (சில விதிவிலக்குகளும் என் மனதில் வந்துபோகின்றன). குடும்பத்தை நடத்துவதும் கடினம். இதனால்தான் சில கர்நாடக இசைப் பாடகர்கள், தன் மனைவி தன்னைவிடத் திறமைசாலியாக இருந்தபோதும், நீ வீட்டைப் பார்த்துக்கொள், நான் கச்சேரி செய்கிறேன் என்று இறங்கிவிடுகிறார்கள்.
இந்த நாடகக் கம்பெனிகள் பற்றியும் நீங்க கொஞ்சம் துருவிப்பார்த்து எழுதுங்க. அங்க ஒருவன் சேர்ந்துவிட்டால், அது கிட்டத்தட்ட குருகுலம் மாதிரித்தான் அவங்கதான் அந்தப் பையனுக்குப் பொறுப்பு. உணவு, உடை, தங்குமிடம் எல்லாமே. லீவுக்கு சொந்த வீட்டுக்கு அனுப்புவதும் அவங்கதான். சிலர், அந்தச் சமயத்தில் அங்கிருந்து கிளம்பி இன்னொரு கம்பெனியில் சேர்ந்ததெல்லாம் நடந்திருக்கிறது.
பிங்குபாக்: நாடகமே உலகம் … பகுதி-2( ஷேக்ஸ்பியர் நாடகங்கள் தமிழில் …!!! ) | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்