….
….
….
-நாகர்கோயிலில் ஒரு நண்பர் வீட்டில், நான் குடும்பத்துடன்
தங்க நேரிட்டது. சென்னையில், ஒரிரண்டு இலக்கியக்
கூட்டங்களில் அவரைச் சந்தித்ததோடு எங்கள் பரிசயம்
அப்போது நின்றது. ஆனாலும் அந்த வீட்டாரின் வரவேற்பு,
விருந்தோம்பலின் சிறப்பு பற்றி எள்ளளவும் சந்தேகமில்லை.
என்றாலும் ஒரு சங்கோசம் எங்களுக்கிடையே இடறிற்று.
ஆனால் நண்பரின் தாயாரைச் சந்திக்கும் பெரும் பேறு
எனக்கு கிடைத்தது. அந்த அம்மா என் நாவல்’புத்ர’ வைப்
படித்திருந்தார்; என்று சொன்னால் மட்டும் போதாது.
ஆங்காங்கே வாக்கியங்களை ஒப்பித்து ரசித்து மகிழ்ந்தார்.
அதுவும் பெரிதல்ல. புத்தி பூர்வமாக இலக்கிய ரீதியில்
வாழ்க்கையையே நோக்கப் பழகிக்கொண்ட பக்குவ மனம்
அதுவும் பெண்டிரில் காண்பது மிக மிக அரிது என்று
என் கருத்து. அந்த மூன்று நாட்களும் எனக்கு
மிக்க சந்தோஷமான நாட்கள்.
கன்யாகுமரியின் காந்தம் சாதாரணமன்று; மறு வருடமும்,
ஆனால் நான் மட்டும் தனியாக தஞ்சை, திருச்சி, மதுரை
என்று ஆங்காங்கே தங்கி, ரசிக நண்பர்களுடன் அளாவி…
அது தனிக் குஷிதான்.
தென்காசியில் ஒரு நண்பர் வீட்டில் மூன்று நாட்கள் டேரா.
ஜாலி டைம். அவர் பேச்சுவாக்கில் நாகர்கோயிலில்,
என் நண்பரின் தாயார் தவறி நான்கு மாதங்களாயின
என்று சொன்னபோது நான் பெரும் அதிர்ச்சி அடைந்தேன்.
என் பிரயாணமே நாகர்கோயிலை நோக்கி அந்த
அம்மாவுடன் சந்திப்பை எதிர்நோக்கித்தான். ஆனால்
அவர் மறைவு பற்றி எனக்கு ஏன் தெரிவிக்க வில்லை?
எனக்கு மன வருத்தம்தான்.
மறுநாள். நாகர்கோயிலில் நண்பர் வீட்டை அடைந்த போது,
பிற்பகல் 3 மணி இருக்கும். என்னைக் கண்டதும்
எல்லாருக்கும் எவ்வளவு சந்தோஷம்! அந்த உணர்ச்சியின்
பரஸ்பரத்தை விஸ்தரிக்க இயலாது.
வாசல் அறையில், நண்பரும் நானும் பேசினோமோ
பேசினோமோ நேரம் போய்க் கொண்டிருந்ததே தெரியவில்லை.
அவர், தரையில் பாயில் படுத்த வண்ணம். எதிரே
விசுப் பலகையில், தலையணையில் சாய்ந்தபடி நான்.
என்ன பேசினோம் ? எல்லாவற்றையும் பற்றித்தான் –
மேனாட்டு இலக்கியம், நம் நாட்டு இலக்கியம், புதுக் கவிதை,
புது வசனம், எழுத்தின் நுணுக்கங்கள், பங்சுவேஷனின்
தனி பாஷை, மனிதர்கள், புவனம், வாழ்க்கை.
சினிமாவைத் தவிர, இந்நாளில், தடுக்கி விழுந்தால்,
பேசுவதற்கும், கடிதங்களில் பரிமாறிக்கொள்ளவும்
அது தானே சப்ஜெக்டே!
அந்தியிறங்கி, ஒருவருக்கொருவர் முகம் மறையுமளவிற்கு
அறையிருண்டுவிட்டது. விளக்கைப் போடத் தோன்றவில்லை.
பேசிக்கொண்டிருந்தோம். இருள் அடர அடர அது படிப்படியாக
எங்கள் பேச்சைத் தான் கழற்றிக் கொண்டது.
எப்போது மெளனமானோம் ஏதோ ஒரு உள் நிறைவின்
பொங்கலில், எங்களைப் பூரா வியாபித்துக் கொண்ட
இருளின் இதவில், ஒரு சின்னச் சம்புடத்தில் உருளும்
இரு ஜின்டான்மாத்திரைகள் போல், ஒரே கோசத்தில்
இரண்டு உயிர்த் தாதுக்கள் போல், பறவைக் கூடில்
இரு குஞ்சுகள் போல், எங்கள் உள்ளங்களின் நெருக்கத்தில்,
ஒரு தனிக் கதகதப்பில், அது தந்த மதோன்மத்தத்தில்
திளைத்துக் கொண்டிருந்தோம். இந்நிலை எங்கள் நட்பின்
தன்மையால் அல்ல. இது அந்த சமயத்தின் மஹிமை.
சிருஷ்டியின் ஓயாத நூற்பில், இரண்டு இழைகளாக
இழைத்து போய்விட்டோம். அல்லது அது தன் கோலத்தில்
எங்களை இழைத்து விட்டது என்று சொல்லட்டுமா?
ஆனால் இதுபோன்ற நேரங்கள், காய்ப்புக் காண
நினைவைச் சூடிவிட்டுப் போமே தவிர, நம்மோடு காயமாக
இருத்தி வைத்துக் கொள்ளற் பாலன்று.
சற்று நேரம் கழித்து-எந்நேரமோ?
அவர் புழக்கடைப் பக்கம் போனார்.
விளக்கைப் போடாமலே, நான் அந்த அறையுள் இன்னொரு
அறையுள்- இல்லை, அதன் வாசற்படியிலே நின்று
சுற்றி நோக்கினேன்.
கட்டில், ஜன்னலோரமாக, அதே மூலையில்தான் மெத்தையும்,
இரண்டு தலையணைகளும்- அவைகளும் அதே தாமோ?
மற்றப்படி பண்டங்கள், நாற்காலிகள், ஏற்கெனவே நான்
அவைகளைப் பார்த்திருந்த இடங்களும் நிலையும்
பெரிதும் கலைந்த மாதிரித் தெரியவில்லை.
“அம்மாவைத் தேடறேளா?” என் பின்னாலிருந்து,
என் செவியோரமாய், பேச்சே ஒரு மூச்சு.
தன் தாயாரின் மறைவை அவர் தெரிவிக்கும் விதமா?
எப்படியும் இந்தக் கேள்விக்கு என்ன பதில்?
இல்லை, அந்தக் கேள்வியை ஒரு பதிலாகவே நான்
படித்தேன். அதுவும் அந்தத் தருண விசேடம் தானா?
அம்மா என்றால் ஒரு அம்மாதான். உன் அம்மா,
என் அம்மா, தனித்தனி அம்மாக்கள் கிடையாது.
ஒரே அம்மா.
போன வருடம் இந்த வீட்டுக்கு நான் வந்திருந்த போது,
என் தாயின் முதல் வருடச் சடங்குகள் முடிந்த கையோடு.
ஆகவே, இங்கே, இப்போ நான் தேடியது அவர் தாயாரையா?
என் தாயாரையா?
பதிலை எதிர்பார்க்காமல், ஆனால் ஏதோ இன்ப ரகசியத்தில்,
சீண்டிக் கொண்டேயிருக்கும் கேள்வி.
….
.
————————————————————————————————–